நடப்பு
தொடர்கள்
Published:Updated:

காக்க காக்க! - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...

காக்க காக்க! - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...
பிரீமியம் ஸ்டோரி
News
காக்க காக்க! - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...

ப.முகைதீன் சேக்தாவூது

மிழக அரசு ஊழியர்கள் பெற்றுள்ள ஓர் ஒப்பில்லா ஓய்வூதிய நிதியம், ஜி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி. 1.7.1960-ல் அமலாக்கம் பெற்று, இன்று வரை அரசு ஊழியர்களின் அற்புத விளக்காக விளங்குவது இந்த ஜி.பி.எஃப்-தான்.  

காக்க காக்க! - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...

ஜி.பி.எஃப் என்பது அரசு ஊழியருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எந்்த வகையில் பாதுகாப்பானது என்று பார்ப்போம்.

இதர வைப்பு நிதிகளைப் (Deposits) போல், டெபாசிட் செய்த தொகையைத் திரும்பப் பெறும் தடைக் காலம் (Lock in Period) ஜி.பி.எஃப்-க்குக் கிடையாது.

ஒரு சேமிப்புக் கணக்கில், பற்று-வரவு செய்வதைப்போல், ஒட்டுமொத்த சம்பளத்தையேகூட டெபாசிட் செய்யவும், நியாயமான தேவைக்குப் பணத்தை எடுத்துக் கொள்ளவும் அனுமதிப்பது.

அதேசமயம், இது ஓய்வுக்காலப் பயன் பாட்டுக்கான நிதியம். எனவே, இதன் பயன்பாடு முழுமையும் ஓய்வுக்காலத்துக்குரிய தாக இருக்க வேண்டும். ஓய்வுபெறும்முன் மரணித்துவிடும் ஊழியர் குடும்பத்துக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பு தரவேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்த பல பாதுகாப்பு அம்சங்கள் ஜி.பி.எஃப்-ல் உள்ளன. அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

வாரிசு நியமனப் படிவம்

ஜி.பி.எஃப் திட்டத்தில் ஒருவர் சேரும் போதே வாரிசு நியமனப் படிவம் மூன்று பிரதிகளில் பெறப்படும். மூலப்பிரதி மாநிலக் கணக்காயரிடமும், அடுத்த பிரதி ஊழியரின் பணிப் பதிவேட்டிலும் பாதுகாப்பாக இருக்க, மூன்றாம் பிரதி ஊழியரிடம் இருக்கும்.

காக்க காக்க! - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...மணமாகாத ஊழியர், மணமானபின் தனது குடும்ப உறுப்பினர்களை வாரிசுதாரர் களாக மாற்றுவது அவசியம். இதேபோல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாரிசுதாரர்களில் மாற்றமில்லையெனில், நடப்பில் உள்ள வாரிசு நியமனம் உறுதி செய்யப்பட வேண்டும். பிறப்பு, இறப்பு உண்டெனில், அவ்வப் போது சேர்க்கவும், நீக்கவும் வேண்டும்.

முன்பணமும் நிபந்தனைகளும்

ஜி.பி.எஃப் திட்டத்தில் சேர்ந்த ஒருவர், தனது சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் 50% - 75% வரை முன்பணமாகப் பெறலாம். இதில் 50% என்பது சாதாரணக் காரணங் களுக்கான முன்பணம். 75%  என்பது சிறப்புக் காரணங்களுக் கானது.
மாலைநேரப் படிப்பு,  திருமணம், ஈமச்சடங்கு மருத்துவச் செலவு, உயர் கல்விக்கான செலவு, வெளிநாட்டில் படிக்கும் பிள்ளை களுக்கான கல்விச்செலவு, போன்ற நிகழ்வுகள் முன்பணம் பெறுவதற்கான காரணங்கள். என்றாலும், விண்ணப்பித்த மாத்திரத்தில் முன்பணம் தந்துவிட வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.

முன்பணம் கோரப்படும் தொகை, கூறப்படும் காரணம், பணத்தைத் திரும்பச் செலுத்தும்  நிதி ஆதாரம் ஆகியவை குறித்து ஏற்பளிப்பு அலுவலர் (Sanction Autority) திருப்தி அடையும் பட்சத்தில் கேட்ட முன்பணம் வழங்கப்படலாம். எந்தக்  காரணத்துக்காக முன்பணம் கேட்கிறார் என ஏற்பளிப்பு அலுவலர் கேள்வி எழுப்ப வாய்ப்பு உண்டு. இதற்கு உரிய விளக்கம் தராதபட்சத்தில் முன்பணத்தைத் திரும்பச்  செலுத்த ஆணையிடலாம். எனவே, தேவையில்லாத காரணத்துக்காக ஜி.பி.எஃப்-ல் இருந்து முன்பணம் பெறுவது கூடாது.

இப்படிப் பெறும் முன்பணத்தை அடுத்த 36 மாதங்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

பகுதிப் பணத்தைத் திரும்பப் பெறுவது


தனது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேர்ந்துள்ள பணத்தில், அதிகபட்சமாக, 75% அல்லது ரூ.9 லட்சத்தை வாங்கிக் கொண்டு, வாங்கின தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்கிற நடைமுறையும் உண்டு.

இவ்வாறு பணம் பெறுவதைப் பகுதிப் பணம் திரும்பப் பெறுவதல் (Part final withdrawal) என்று குறிப்பிடப்படும். பகுதி இறுதி வரைவு பெறுவதற்கான முக்கியத் தகுதி, ஒருவர் 15 ஆண்டு காலம் பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதே!

டிஸ்மிஸ் ஆனால்..?

இவ்வாறு திரும்பப் பெறப்படும் பகுதிப் பணம், உரிய காரணத்துக்காக இல்லாமல் வேறு காரணத்துக்காகப் பெறப்பட்டிருந்தால்,   அந்தத் தொகையும் சேமநிதிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, பணியிலிருந்து விலக்கப்பட்ட (Removed from service), பணியிலிருந்து நீக்கப்பட்ட (Dismissed) மற்றும் கட்டாய ஓய்வு தரப்பட்ட ஊழியர்களுக்கும்கூட வைப்பு நிதியில் உள்ள இறுதித்தொகை உடனடியாகத் தரப்பட மாட்டாது. ஏனெனில், அந்த ஊழியர்கள்     மேல்முறையீடு செய்து மீண்டும் பணிக்கு வரக்கூடும் என்பதால்தான் உடனடியாகத் தரப்படுவதில்லை. 

இதையும் மீறி நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட மற்றும் கட்டாய ஓய்வு தரப்பட்ட ஊழியருக்கு வைப்புத் தொகையின் இறுதித் தொகை வழங்கப்பட்ட பிறகு, அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்களேயானால், தாம் பெற்ற இறுதித் தொகையை வட்டியுடன் சேமநிதிக் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும். முறையாக ஓய்வுபெற்றபின் அந்தத் தொகை வழங்கப்படும்.

வட்டிக்குப் பாதுகாப்பு

பி.பி.எஃப் போன்ற நிதியத்தில், ஒவ்வொரு மாதத்துக்கும் செலுத்த வேண்டிய தொகையை அந்த மாதம் ஐந்தாம் தேதிக்குள் செலுத்தினால் மட்டுமே வட்டி தரப்படும். ஆனால், ஜி.பி.எஃப்-ல் வட்டியைப் பொறுத்தவரை, இரண்டு சிறப்புச் சலுகை உண்டு. அதாவது, மே 2018-க்கான சம்பளம் சில நிர்வாகக் காரணங்களால் தாமதமாகி, ஜூலை 2018-ல் தரப்பட்டால், மே மாதம் கட்ட வேண்டிய பணம் மற்றும் முன்பணமாக வாங்கியதைத் திரும்பச் செலுத்துவது ஆகிய இரண்டுமே ஜூலையில்தான் நடக்கும். ஆனாலும் அந்தத் தொகைக்கு மே மாதம் முதலே வட்டி கணக்கிடப்படும்.

இது மட்டுமல்ல, ஜி.பி.எஃப், பி.பி.எஃப் போன்ற பலவகையான சேமிப்பு இனங்களுக்கும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கப் படும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதமானது 4 சதவிகிதத்துக்கும் குறைவாக அமைய நேர்ந்தால்,  ஜி.பி.எஃப்-க்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் 4% மேல் இருக்கும் என்பது கூடுதல் சலுகை. ஆக, இதில் வட்டிக்குக் குறைந்தபட்ச உத்தரவாதமும் உண்டு.

முன்பணமாகப் பெறுவது கூடாது

36 தவணைகளில் செலுத்துவதாகப் பெறும் முன்பணத் தொகையில், ஆறு தவணை செலுத்தினாலே போதும்; அடுத்த முன்பணம் பெற்றுவிடலாம். இப்படி அடுத்தடுத்து முன்பணம் பெற்றால்..?

சேமித்த பணத்தைவிட, அதிலிருந்து எடுத்த செலவழித்த பணம் அதிகமாக இருக்கும்.                  ஜி.பி.எஃப்-லிருந்து முன்பணமாகப் பெற்ற பணம், ஓரளவுக்காவது திரும்பி வரக்கூடும்.

ஆனால், பகுதி அளவுக்குப் பெறும் பணத்தைத் திரும்பக் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதால், அந்தப் பணம் ஜி.பி.எஃப்-க்குத் திரும்ப வராது. இதனால் இறுதியில் நமக்குக் கிடைக்கும் தொகை கணிசமாகக் குறையும். இதனால் இறுதிக்காலத்தில் பாதிக்கப்படப் போவது நாம்தான் என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம்.

இவர் என் கணவரல்ல!

ஜி.பி.எஃப்-ல் உள்ள ஒரு சிறப்பம்சம், ஒரு ஆண் ஊழியர், தனது மனைவி சட்டப்படி தன்னை விட்டுப் பிரிந்து விட்டாலோ, சமுதாய வழக்குப்படி தனது பராமரிப்பிலிருந்து விடுபட்டுவிட்டாலோ, தனது மனைவி தனது குடும்ப உறுப்பினர் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், ஒரு பெண் ஊழியர், தனது கணவர் இன்ன தேதி முதல் எனது குடும்ப உறுப்பினரல்ல என்று எழுத்துப்பூர்வமாக மாநிலக் கணக்காயருக்குத் தெரிவித்துவிட்டாலே போதும்; அவரது கணவர் குடும்ப உறுப்பினரல்ல என்றாகிவிடுவார்.