
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்
ஜோஷ், ரெஃப்ரிஜிரேட்டரிலிருந்து கோக் கேன் ஒன்றை எடுத்துக்கொண்டு மீண்டும் அவனுடைய அறைக்குத் திரும்பினான். வரும் வழியில், அவன் ஸ்டானைப் பார்த்து சிரித்தான். அவன் அங்கே வந்ததிலிருந்து ஸ்டானுடன் அதிகமாகப் பேசவில்லை. அவன் செய்யும் தொழிலுக்கு ஆட்களைப் பரிட்சயம் செய்துகொள்வது சிக்கலை உருவாக்கும். தவிர்க்கமுடியாத சூழ்நிலை யில் மட்டும் அவன் வெளியே சென்றான். உணவை வரவழைத்தே சாப்பிட்டான். மிகச் சில சமயங்களில் மட்டுமே வாசல் வரை சென்றான்.

மேஜையில் சார்ஜருடன் பொருத்தப்பட்டி ருந்த லேப்டாப்பிலிருந்து வயரை எடுத்துவிட்டு, அதைத் தன்னோடு படுக்கைக்கு எடுத்துச் சென்றான். படுக்கை யில் உட்கார்ந்தவுடன் யாரோ ஒருவர் அபார்ட்மென்டின் கதவைத் திறந்து படிகளில் நடந்து செல்லும் சத்தம் கேட்டது. அவனது `ஆண்டெனா’ அலர்ட் ஆனாலும் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு அவன் எழுந்திருக்கவில்லை. காலடியோசை 60 விநாடிகளில் திரும்பியது. அவனுடைய அறைக்குமுன்னால் சில விநாடிகள் யாரோ ஒருவர் நிற்பதுபோல நிழலாடியதைக் கவனித்தான். சில விநாடிகளுக்குப்பிறகு அந்த இடுக்கின் வழியாக ஒரு கவர் தள்ளப்பட்டது.
‘`தாங்க்ஸ்!” என்று இவன் கத்தினான். அந்த கவரைப் பார்த்துத் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். பச்சை நிறத்திலிருந்த அந்த கவர் அடர்த்தியாகவும், துணி கலந்து செய்யப்பட்டதாகவும், முக்கியமான பேப்பர்களை அனுப்புவதற்கு வடிவமைக்கப் பட்டதாகவும் அது இருந்தது. யூஎஸ் போஸ்ட்டால் டெலிவரி செய்யப்பட்டிருந்தது.

அவன் அதை மிகவும் கவனமாகக் கிழித்தான். சில பில்கள் அதில் இருந்தன. நகரத்திலிருக்கும் ஒரு டிசைனர் ஸ்டோரின் விளம்பரமும் அதில் இருந்தது – அனைத்தும் உபயோகமற்ற பேப்பர்கள். அவன் கவரை அகலமாகத் திறந்து ஆழமாக உள்ளே பார்த்தான். கவரின் அடியில், இரண்டு இஞ்சுக்கு மூன்று இஞ்ச் என்கிற அளவில் ஒரு பிளாஸ்டிக் `பவுச்’ இருந்தது. அதை எடுத்து லேசாக முகர்ந்து பார்த்த அவன் தனது கண்களை சில விநாடிகள் மூடிக்கொண்டான். அந்த வாசனை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பின் அவன் அங்கிருந்த கப்போர்டை நோக்கிச் சென்று அதிலிருந்த லாக்கரில் பாதுகாப்பாக அந்த `பவுச்’சை வைத்தான். அதிலிருப்பது அவனுக்கு ஒரு வாரத்துக்குப் போதுமானதாக இருந்தது. அதை வைத்தபின் ஒரு கணம் யோசித்து, அந்த லாக்கரை மூடினான். இது தீர்வதற்குமுன்பே ஸ்டாக்கிற்கு ஆர்டர் செய்துவிடுவது நல்லது என நினைத்தான்.

அவன் லேப்டாப் வைத்திருந்த இடத்திற்குச் சென்று அதில் சில பட்டன்களை அழுத்த `மின்னல்’ வேகத்தில் அவன் டி.ஓ.ஆர் (TOR) நெட்வொர்க் தளத்தில் இருந்தான். டி.ஓ.ஆர் புரோட்டோகால்களை (TOR protocol) எல்லாம் முடித்தபின் அவன் அந்த இணையத்தளத்தில் லாக்இன் செய்தான். அமேசானின் மின் வணிகதள பக்கம் போல, அந்த இணையத்தளம் தோற்றம் அளித்தது. அப்போது இரண்டு சொற்கள் ஃப்ளாஷ் ஆயின: `Cotton Trail’ (காட்டன் ட்ரையல்)
கடந்த ஆறு மாதங்களில் அவனுக்கும், அவனைப் போன்ற மற்றவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு நல்ல விஷயம் `காட்டன் ட்ரையல்’ ஆகும். இது அனைத்து விதமான போதைப் பொருள்கள், விபச்சாரம், தடை செய்யப்பட்ட விஷயங்கள், பீடோஃபிலியா (paedophilia) என்கிற குழந்தைகள் மீதான பாலியல் இச்சை போன்றவற்றிற் கான ஒரு சந்தைத் தளம் ஆகும். இங்கு அநாமதேய விற்பனை யாளர்கள் தங்களது பொருள் களையும், சேவைகளையும் விற்பனை செய்துவந்தார்கள். நிஜ உலகில் சட்டப்பூர்வமாக விற்கக் கூடாத அல்லது தடை செய்யப் பட்ட அத்தனை வஸ்துகளையும் இங்கு வாங்க முடியும். இங்கு கிடைக்கக்கூடிய பலவிதமான பொருள்களை நீங்கள் தேர்வு செய்து, ஆன்லைனில் புத்தகத்தை ஆர்டர் செய்வதுபோல செய்ய முடியும். இதுதவிர, வாங்குபவர் களுக்கு உதவி செய்யும் பொருட்டு விற்பனையாளரை மதிப்பீடு செய்யக்கூடிய வசதியும் அந்த இணையதளத்தில் இருந்தது. பொருள்கள் மெயில் மூலமாக உலகெங்கும் விற்கப்படுகிறது. கூரியரைவிட சாதாரணத் தபாலுக்கு அவ்வளவாகக் கண் காணிப்புக் கிடையாது என்பது மிகவும் சாதகமான விஷயம்.
ஜோஷ், தனக்குத் தேவையான போதை மருந்துக்கு ஆர்டர் செய்துவிட்டு, செக்-அவுட்டை தெரிவு செய்தபோது அவன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளுடன்கூடிய ஒரு விண்டோ திறந்தது. அவனுக்கு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது எல்லாம் மனப்பாடமாகியிருந்தது. மிகவும் முக்கியமான ஒன்று என்னவெனில், `நீங்கள் ஆர்டர் செய்த பொருள் தவறுதலாகக் காவல்துறையிடம் கிடைத்துவிட்டால், அதை நீங்கள் ஆர்டர் செய்யவில்லை எனக் சொல்லிவிடுங்கள். எங்களுடைய சிஸ்டம் மிகவும் பாதுகாப்பானது. நீங்கள்தான் அதை ஆர்டர் செய்தீர்கள் என யாராலும் நிரூபிக்க முடியாது’ என்பதுதான்.
ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், இரண்டே இரண்டு சூழ்நிலைகளில்தான் குறிப்பிட்ட பரிவர்த்தனையின் உரிமையாள ரையும், அதன் உண்மைத்தன்மையையும் ட்ராக் செய்ய முடியும். அந்த மின்பரிவர்த்தனையின் தடம் (trail) ஆர்டர் செய்த கணினியை நோக்கிச் செல்லும். அல்லது, ஓரளவுக்கு அவன் பணம் செலுத்திய தடத்தை நோக்கிச் செல்லும். ஆனால், அவனுடைய ஈடுபாட்டை யாராலும் நிரூபிக்க முடியாது.

காட்டன் ட்ரையலை டி.ஓ.ஆர் புரோட்டோகால்மூலம் மட்டுமே அணுக முடியும், எனவே, வாங்குபவருடைய கணினியின் அடையாளத்தை என்க்ரிப்ஷன் முற்றிலுமாக மறைத்துவிடும். காட்டன் ட்ரையல் பிட்காயினை மட்டுமே பணம் செலுத்துவதற்கு ஏற்றுக்கொள்வதால் வாங்குபவரின் அடையாளத்தை அணுக முடியாமல் தடுத்துவிடும்.
ஜோஷ் அவனுடைய ஆர்டருக்கு `பிட்காயினை’ செலுத்திவிட்டு, லாக்அவுட் செய்தான்.
வாடிக்கையாளர் யாரென்று தெரியாதவாறு டி.ஓ.ஆர் நெட்வொர்க்கும், பிட்காயினாக பணம் செலுத்துவதும் பாதுகாப்பு கொடுத்தாலும் இந்தச் செயல்பாட்டில் ஒரு பலவீனமான லிங்க் ஒன்று இருக்கிறது. வாங்குபவருக்கு விற்பவர் யாரென்றோ, எங்கேயிருந்து இயங்குகிறார் என்றோ, ஒருபோதும் தெரியாது. ஆனால், வாங்குபவர், பொருளைத் தன்னுடைய மெயில் பாக்ஸுக்கு ஆர்டர் செய்யாதிருந்தால், யாரென்று பெரும்பாலும் அவருக்குத் தெரியும். அப்படியிருக்கும்பட்சத்தில், அடையாளம் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் என்றாலும் முடியாததில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது விற்பவர் பிடிபட்டால் வாங்குபவர்கள் யாரென்று தெரிந்துவிடும் என்கிற ஒரே பயம்தான் அவர்களிடம் குடிகொண்டிருக்கும். ஆனால், நகரங்களின் இருட்டான, அபாயகரமான சந்துகளில் போதை மருந்து விற்பவர்களுடன் ஒப்பிடும்போது இதில் ரிஸ்க் என்பது ஒன்றுமேயில்லை.
ஜோஷ், லாக்-அவுட் செய்தபோது அவனுக்கு வந்திருந்த இ-மெயில் குறித்த ஒரு நோட்டிஃபிகேஷன் அவனுடைய கவனத்தை ஈர்த்தது. யாரோ ஒருவர், தான் செய்ய வேண்டிய வேலை குறித்து இவனைச் சந்திக்க விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்கான நேரமும், இடமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜோஷ் அங்கு வருவதாக அவருக்கு உறுதியளித்தபின் லாக்-அவுட் செய்தான்.
(பித்தலாட்டம் தொடரும்)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

முத்ரா... வாராக் கடன் வெறும் 4% மட்டுமே!
வங்கித் துறையின் வாராக் கடன் 10 சதவிகித மாக உச்சத்தில் இருக்கும் போது, பிரதமர் மோடி அரசாங்கம் ஆர்வத்துடன் செயல்படுத்திவரும் முத்ரா கடனில் வாராக் கடன் வெறும் 4 சதவிகிதம் என்கிற அளவிலேயே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2018 வரை ரூ.5,71,655 கோடி கடன் தரப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் அளித்த முத்ரா கடனின் மொத்த வாராக் கடன் 3-4% என்கிற அளவிலும், தனியார் வங்கிகள் அளித்த முத்ரா கடனின் மொத்த வாராக் கடன் 4.2 சதவிகித மாகவும் உள்ளது. இதற்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வங்கித்துறையினரின் கடமை!