மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - முயற்சி... பயிற்சி... லாபம்! - 22

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டல் தொடர் - 21

தென்னை, சுருள்பாசி, சிறுதானியங்கள், கொய்யா, ஆவாரம்பூ, பப்பாளி, நெல்லிச்சாறு, எலுமிச்சை, வெட்டிவேர், பால், மஞ்சள், தேன், வேப்ப மரம், பனை மரம், முருங்கை மரம், நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு விவசாய விளை பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை  செய்வதன் மூலம் லாபத்தை எப்படி அதிகரிக்கலாம் எனக் கடந்த 20 வாரங்களாகப் பார்த்தோம். ஒவ்வொரு பொருளுக்குமான சந்தையின் தேவை, விற்பனை வாய்ப்பு, தொழில்நுட்பங்கள், முதலீடு, லாபம் குறித்துப் பல்வேறு தகவல்களை தொழில்முனை வர்களும், விவசாயிகளும் பகிர்ந்திருந்தனர்.  

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - முயற்சி... பயிற்சி... லாபம்! - 22

மதிப்புக்கூட்டல் தொழில் குறித்தும், அதற்கான பயிற்சிகளைப் பெறுவது குறித்தும் தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் இயங்கிவரும் இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் அனந்தராம கிருஷ்ணன் மதிப்புக் கூட்டல் சம்பந்தமான பயிற்சிகளைப் பகிர்ந்துகொண்டார்.

“விவசாயிகளுக்குப் பயன் தரக்கூடிய கருவிகளைக் கண்டுபிடிப்பதுடன், தொழில் முனைவோருக்குத் தேவையான மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங் களையும்  நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம். தொழில்முனை வர்களைவிட விவசாயிகள், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டினால் நல்ல லாபம் பார்க்க முடியும். அதேபோல, தன்னுடைய நிலத்தில் விளையும் பொருள்களை மதிப்புக் கூட்டிச் சந்தைப்படுத்தினால் கூடுதல் லாபமும் பெறலாம்.

மதிப்புக் கூட்டல் சம்பந்தமான விவசாயிகள் மற்றும் தொழில் முனைவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க ஒரு நாள் பயிற்சிகளை நாங்கள் நடத்து கிறோம். பல்வேறு கட்டணப் பயிற்சிகளும் இங்கு தரப்படு கின்றன. விவசாயிகளும், தொழில் முனைவர்களும்  மதிப்புக்கூட்டல் தொழிலை உடனே தொடங்கும் வகையில் பல நுட்பங்களையும் சொல்லித் தருகிறோம்.

உதாரணமாக, தக்காளி விலை குறையும்போது பல விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். இதற்கு எளியமுறையில் தீர்வைச் சொல்கிறோம். தக்காளி விலை குறையும்போது, எங்களிடம் தெரிவித்தால், நாங்களே நேரடியாக மெஷினைக் கொண்டுவந்து விவசாயிகளுடைய இடத்திலேயே மதிப்புக் கூட்டல் செய்து கொடுத்து விடுகிறோம். விவசாயிகள் எங்களிடம் பொருளை          ஒப்படைக்கும்பட்சத்தில்  விற்பனையும் செய்துதருகிறோம். 

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - முயற்சி... பயிற்சி... லாபம்! - 22

பொருள்களைத் தரம் பிரித்து விற்பனை செய்வதிலிருந்தே  மதிப்புக் கூட்டல் தொடங்குகிறது. வெங்காயம் பெரிய அளவில் இருப்பதையே எல்லோரும் விரும்புவர். ஆனால், சிறிய அளவி லான வெங்காயத்தை வாங்கினால் சற்று விலை குறைவாக இருக்கும். அதனை மூலப்பொருள்களாகவோ வாங்கி பவுடராகவோ, எண்ணெய்யாகவோ தயாரிக்கலாம். இவ்வாறு குறைந்த செலவில் பொருள்களைத் தயாரித்து லாபம் சம்பாதிக்கலாம்.

உடைத்த கடலையை வறுத்து விற்பதுகூட அதற்கடுத்த கட்ட மதிப்புக்கூட்டல்தான். வறுத்தக் கடலை மூலம் கடலை மிட்டாய் தயாரித்தால் அதுவும் மதிப்புக் கூட்டல்தான். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அவரவருக்கு முடிந்த அளவில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, அறுவடை செய்த பொருள்களுக்குச் சந்தையில் கிடைக்கும் விலையைவிடக் கூடுதல் விலை கிடைக்கும்.

இங்கே கொடுக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்குத் தேவைப்படக் கூடியவை. எங்களிடம் பயிற்சி பெற்றாலும், பயிற்சி பெறாவிட்டாலும் மதிப்புக்கூட்டல் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்பவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தருகிறோம். அதிகபட்சமாக 35% மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடன் பெற்றுத் தருகிறோம்.

இவை தவிர, நாங்களே  பொருளுக்கான சந்தை வாய்ப்பையும் அமைத்துக்கொடுக்கிறோம். மதிப்புக் கூட்டலில் இன்றிருக்கும் சவால், சந்தை வாய்ப்புதான். முன்பெல்லாம் வீடுகளில் பொருள்களைத் தயாரித்து மக்கள் பயன்படுத்தினார்கள். இன்று பெரும்பாலான வீடுகளில் மதிப்புக் கூட்டல் செய்யப்பட்ட பொருள்களையே பயன்படுத்துகிறார்கள்.  

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - முயற்சி... பயிற்சி... லாபம்! - 22

மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பமானது விவசாயிகள், தொழில்முனைவர், வேலை தேடுவோர் எனப் பலருக்குமானது. ஒரு பொருளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பொருள்களை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். ஒரு விவசாயி ஒரு பொருளை உற்பத்தி செய்தால், அதைச் சந்தையில் கொண்டுபோய் விற்பனை செய்கிறார். அதனைத் தவிர்த்து அவரே நேரடியாக மதிப்புக் கூட்டல் செய்தால் குறைவான மூலப் பொருள்கள் செலவில் தனது பொருள்களை விற்பனை செய்ய முடியும்.

 உதாரணமாக, பாலிலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயார் செய்ய முடியும். விவசாயிகளிடமிருந்து வாங்கி விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், மதிப்புக் கூட்டலில் முக்கியமானது தரம். அதனை முழுமையாகக் கையாள்வதில்தான் மதிப்புக் கூட்டல் தொழிலின் வெற்றி ரகசியமே அடங்கியிருக்கிறது.

தொழில்முனைவருக்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தும் வருகிறோம். மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த 2017- 2020-ம் ஆண்டு வரை ரூ.6 ஆயிரம் கோடி  நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம், விளைபொருள்களைப் பாதுகாக்கும் குளிர்ப்பதன நிலையத்தை உருவாக்க 40 சதவிகித மானியமும், உணவினைப் பதப்படுத்தும் தொழில்களுக்கு 30%  மானியமும் வழங்கப்படும்.

இதுபோன்ற திட்டங்கள், பயிற்சிகள் குறித்த விவரங்கள் தேவைப்படும் விவசாயிகளும், தொழில்முனைவோர்களும் எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகலாம்” என்றார் அனந்தராமகிருஷ்ணன்.

மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பப் பயிற்சியானது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் வழங்கப் படுகின்றது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள கே.வி.கே மையங்களிலும் மதிப்புக் கூட்டல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தனது விளைபொருளை மதிப்புக் கூட்டுவதன் மூலம் ஒரு விவசாயி தன்னைத்தானே மதிப்புக்கூட்டல் செய்துகொள்கிறார். இந்தச் சமுதாயத்துக்கு அவர் செய்யும் பங்களிப்பும் கூடுகிறது. விவசாயத்தைவிடவும் கடினமான வேலை எதுவும் இல்லை. அதையே அழகாகச் செய்து முடிக்கும் விவசாயிகள் மதிப்புக் கூட்டலையும் தெரிந்துகொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகளைத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளைப் பின்பற்றி விவசாயிகள் அனைவரும் தொழில்முனைவர் என்கிற கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு!

(நிறைவு பெற்றது)

- துரை.நாகராஜன்