டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள்!

ஸ்டார்ட்அப்கள்...சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 22
ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி அதன் ஐடியாவில் மட்டுமே இருப்பதில்லை. அந்த ஐடியாவை செயல்படுத்தத் தேவையான மூலதனத்தைத் திரட்டுவது முதல் அதை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பது வரை பல விஷயங்களைப் பொறுத்து இருக்கிறது.

இன்று, ஸ்டார்ட்அப்களுக்குள் நுழைய விரும்பும் பல இளைஞர்கள் முதலீடு விஷயத்தில் திணறவே செய்கிறார்கள். ஸ்டார்ட்அப்களுக்கான முதலீட்டைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
நம்மிடமிருந்தே தொடங்கட்டும்
ஒரு ஸ்டார்ட்அப்பிற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதில் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. முதலில் முதலீட்டிற்கான மூலங்களைப் பார்ப்போம்.
1. சொந்த முதலீடு, 2. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கிரவுட் ஃபண்டிங், 3. வங்கிக் கடன்கள், 4. ஏஞ்சல் முதலீட்டாளர்கள், 5. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள்.
இவற்றில் வங்கிக் கடன் என்பது பாதுகாப்பான முதலீடு. ஆனால், கடன் பெறத் தேவையான ஆவணங்கள், எடுத்துக் கொள்ளும் காலஅளவு, வட்டி விகிதம் போன்றவை அனைத்தும் நம் பிசினஸுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். சில சமயங்களில், நாம் கேட்டதைவிடவும் குறைவாகத்தான் வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். இதுவும் சிக்கல்தான். எனவே, நம் பிசினஸைப் பொறுத்து வங்கிகளிடம் செல்லலாம். மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கும் இதே அம்சங்கள் பொருந்தும்.
ஆனால், ஸ்டார்ட்அப் தொடங்கும்முன் மேற்கொள்ள வேண்டிய சின்னச் சின்னப் பணிகளுக்காகச் சிறிய அளவிலான தொகை மட்டுமேதான் தேவைப்படுகிறது எனில், மைக்ரோ ஃபைனான்ஸ் மற்றும் பிற நிதி நிறுவனங்களை நாடலாம். அடுத்தது, சொந்த முதலீடு மற்றும் கிரவுட் ஃபண்டிங். பிசினஸின் ஆரம்பக் காலத்தில் நம் சொந்தப் பணத்தை மட்டுமே வைத்து நிறுவனத்தைத் தொடங்குவதற்கு ‘Bootstrapping’ என்று பெயர். எல்லா ஸ்டார்ட்அப் நிறுவனங்களுமே இந்தக் கட்டத்தைத் தாண்டி வந்தவையே.
நம்முடைய ஐடியாவின்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒரே சாட்சி, நம் சொந்த முதலீடுதான். எதிர் காலத்தில், முதலீட்டாளர்களிடம் பணம் கேட்டுச் செல்லும்போது, நிச்சயம் இதனைக் கவனிப்பார்கள். ஆனால், தேவையான அளவுக்கு நிதி நம்மிடம் இல்லாதபோது சிக்கல்தான். அதுபோன்ற சமயங்களில் குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் பணம் திரட்ட லாம். ஆனால், அதிக முதலீடு தேவைப்படும் ஸ்டார்ட்அப்கள் என்றால், இதுவும் முழுமையாகக் கைகொடுக்காது. அப்போது நமக்கிருக்கும் ஒரே வழி, ஏஞ்சல் முதலீட்டாளர்கள்.
இனிதான் ஆரம்பம்
ஒரு ஸ்டார்ட்அப்பானது ஐடியாவை மட்டும் வைத்துக் கொண்டு அப்படியே ஏஞ்சல் முதலீட்டாளரிடம் சென்றுவிடக் கூடாது. உதாரணமாக, தண்ணீர் கேன்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கு ஒரு ஆப் டெவலப் செய்வதுதான் ஐடியா என வைத்துக்கொள்வோம். முதலில், அந்த பிசினஸுக்கான சந்தை வாய்ப்புகள், தண்ணீர் கேன் பிசினஸின் மொத்தச் சந்தை, நம் பிசினஸின் பங்கு, பிற போட்டியாளர்கள், வருமான வாய்ப்பு என எல்லா விஷயங்களையும் ஆராய வேண்டும். இவற்றை எல்லாம் தாண்டியும், நம் ஐடியா வணிகரீதியாக வெற்றி அடையும் என நினைத்தால், அடுத்து அந்த ஆப்பை மேலும் வளர்க்கும் பணிகளில் இறங்கிவிடலாம்.

பின்னர், சோதனை ஓட்டமாக, தண்ணீர் கேன் நிறுவனங்களையும் ஆப்பில் இணைத்து, சிறிய அளவில் மாதிரியை (Beta version) தயார் செய்யவேண்டும். இதெல்லாம் முடித்ததற்குப்பின்புதான் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் செல்லவேண்டும். இதற்கெல்லாம் தேவைப்படும் பணத்திற்கு சீட் ஃபண்டிங் (Seed funding) என்று பெயர்.
இதிலும் மூன்று நிலைகள் உண்டு. 1. ப்ரீ சீட் (Pre seed) 2. சீட் (Seed) 3. போஸ்ட் சீட் (Post seed).இவை பொதுவான நிலைகளே தவிர, எல்லா நிறுவனங்களும் இந்த மூன்றையும் தாண்டிதான் வர வேண்டும் என்பதில்லை. நிறுவனத்தின் தன்மைக்கேற்ப இவற்றைப் பின்பற்றலாம். உதாரணமாக, மென்பொருள் நிறுவனம் ஒன்றிற்கு மிக அதிகமாக சீட் ஃபண்டிங் தேவையில்லை. தொடக்கத்தில் மிகக் குறைவான செலவிலேயே மென்பொருள்களை வடிவமைத்துவிட முடியும். ஆனால், ஒரு எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் ஸ்டார்ட்அப்பிற்கு அதிகமான சீட் ஃபண்டிங் தேவைப்படும். எனவே, அதற்கு நிறையப் பணம் தேவைப்படும்.
பொதுவாக, சீட் ஃபண்டிங் காலத்தில் சந்தை ஆராய்ச்சி, மாதிரி வடிவமைப்புகள், வருமானத்திற்கான வழிகள், நிறு வனத்தின் அடுத்தகட்ட திட்டங் கள் போன்ற பணிகளை யெல்லாம் நிறைவு செய்திருக்க வேண்டும். இன்னும் கூடுதலான பணம் இருந் தால், இவற்றை வெற்றி கரமாகச் சந்தைக்குக் கொண்டு சென்றுவிட லாம் என்ற நிலை வரும்போதுதான் ஏஞ்சல் முதலீட்டாளர்களின் தேவை வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, சீட் ஃபண்டிங்கிற்கான உதவி பெரியளவில் இல்லை என்பதால், சொந்த முதலீடுதான் ஒரே வழி.
கரம்தரும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள்
ஒரு நிறுவனத்தின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு உதவுவது, ஏஞ்சல் முதலீட்டாளர்தான். பொதுவாக, முதலீட்டைக் கடனாகவோ அல்லது நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமாகவோ வழங்குவார்கள். பின்னர், ஸ்டார்ட் அப் நன்கு வளர்ந்தபின்னர் தனது முதலீட்டை எடுத்துக்கொண்டு ஏஞ்சல் முதலீட்டாளர் வெளியேறி விடுவார். நிறுவனத்தில் அவரின் பங்குகளைப் பொறுத்து லாபம் இருக்கும். ஒருவேளை நிறுவனம் தோல்வி அடைந்துவிட்டால், அவருக்கும் நஷ்டம்தான். ஆனால், தொடர்ந்து ஸ்டார்ட்அப்களில் இயங்குபவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதால், நஷ்டத்தை ஈடுகட்டி விடுவார்கள்.
ஃபண்டிங் ரவுண்டுகள்
சந்தையில் நமக்கான இடத்தை நிலைநாட்டிய பிறகு, நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய நிலைவரும். வேறு நிறுவனத்தை வாங்கவேண்டி யிருக்கலாம்; நிறுவனத்தின் கிளைகளை அதிகரிக்க வேண்டியிருக்கலாம்; புதிதாக, நிறையப் பணியாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டியிருக்கலாம்; இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; இவற்றிற்குப் பணம் தேவைப்படுமல்லவா?
இங்கேதான் வென்சர் கேப்பிடலிஸ்ட் கள் உள்ளே வருகிறார்கள். ஏஞ்சல் முதலீட்டாளர்கள் நம் நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்தில் மட்டும்தான் உதவுவார்கள். சில லட்சங்களிலிருந்து அதிகபட்சம் மூன்று கோடி ரூபாய் வரைக்கும்தான் ஏஞ்சல் முதலீட் டாளர்கள் முதலீடு செய்வார்கள். ஆனால், நிறுவனத்தை பெரியளவில் விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில், ரூ.10 கோடிகூட தேவைப்படலாம். அதற்கு உதவுபவர் கள்தான் வென்சர் கேப்பிடலிஸ்ட்கள்.
இவர்களிடம் முதலீடு பெறுவதற்கு நிறைய வழிமுறைகள் உண்டு. நம் நிறுவனத்தை விரிவாக்கம் செய்கிறோம் எனில், முதலில் நம் ஊரிலேயே நிறையக் கிளைகளை நிறுவுவோம்; அடுத்து, நாடு முழுக்கக் கிளைகள், ஃபிரான்ச்சைஸிகள் போன்றவை; அடுத்து, உலகளவில். இவை அனைத்தும் எப்படிப் படிப்படியாக நடக்கிறதோ, அதேபோல படிப்படியாக முதலீடு பெறுவதுதான் சிரீஸ் ஏ, பி, சி எல்லாம்.
இந்தக் கிளை விரிவாக்கம் என்பது வெறும் உதாரணம்தான். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு வகையில் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். இவையெல்லாம் நல்லபடியாக முடிந்து, நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாக நம் ஸ்டார்ட்அப் வளர்ந்துவிட்டது. தற்போது நம் சேவையை இன்னும் மேம்படுத்த வேண்டிய காலகட்டம்; நிறுவனத்தை மீண்டும் விரிவாக்கம் செய்யவேண்டும். தமிழகத்தில் ஒரு சின்ன நிறுவனமாக இருந்தபோது, விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.10 கோடி தேவைப்பட்டிருக்கும். தற்போது இந்திய அளவில் பெரும் நிறுவனமாக வளர்ந்துவிட்டோம். தற்போதும் ரூ.500 கோடியாவது வேண்டும் என்றால் என்ன செய்வது?
ஐ.பி.ஓ வருவதுதான். Initial Public Offer என்பதன் சுருக்கம்தான் ஐ.பி.ஓ. அதாவது, ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சில சதவிகிதப் பங்குகளைப் பங்குச் சந்தையில் வெளியிட்டு, மூலதனத்தைப் பெறுவது.
ஐ.பி.ஓ-வில் வெற்றிகரமாக மூலதனத்தைத் திரட்டிவிட்டால், பிற்பாடு தொழிலில் நன்றாகக் கவனம் செலுத்தினால் போதும், ஸ்டார்ட் அப்பாக தொடங்கிய நிறுவனம் பெரிய நிறுவனமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை!
(ஜெயிப்போம்)
-ஞா.சுதாகர்
வேலி ஆஃப் டெத்!
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏஞ்சல் ஃபண்டிங் தரும் முதலீடு அவசியம். ஏஞ்சல் முதலீட்டைக் கையாளும் காலம்தான், ஸ்டார்ட்அப்பின் வெற்றிக்கும், தோல்விக்கும் இடையேயான மிக முக்கியமான காலகட்டம். மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக வருமானம் ஈட்டும் வழிகளைக் கண்டறிய வேண்டும்; வாடிக்கையாளர்களை அதிகரித்து, அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்ல வேண்டும்; இவை அத்தனையும் ஓரிரு வருடங்களுக்குள் நடக்க வேண்டும். ஸ்டார்ட்அப்பின் வளர்ச்சிக்கான வரைபடத்தில் இந்தக் காலகட்டத்தை வேலி ஆஃப் டெத் (Valley of Death) என்பார்கள். இதனைக் கடந்துவிட்டாலே போதும், பின்னர் வெற்றிதான்.