
ஓவியங்கள்: ரமணன்
எந்தவொரு நாட்டின் பொருளாதாரத் துக்கும் முதுகெலும்பாக இருப்பது வங்கித் துறைதான். ஒரு நாட்டில் புழங்கும் அத்தனை பணத்தையும் பராமரிப்பது வங்கிகள்தான் என்பதால், பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் மிகப் பெரிது. நம் நாட்டில் அரசுடைமை ஆக்கப் பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால், அவற்றை மக்கள் நூறு சதவிகிதம் நம்புகின்றனர். இதனால்தான் பல லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் போட்டு வைத்திருக்கின்றனர்.

மேலும், பொருளாதாரம் வளரும்போது அதனால் நேரடியான பயனை அடைவது வங்கித் துறைதான். கடந்த இருபது ஆண்டுகளில் நமது இந்திய நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சியின் காரணமாகப் பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. அவற்றின் பங்குகளை வாங்கியவர்கள் மிகப் பெரிய லாபம் கண்டார்கள்.
ஆனால், வங்கித் துறையானது முன்பிருந்தது போல இப்போது இல்லை. பொதுத்துறை வங்கிகளும், தனியார் துறை வங்கிகளும் பல்வேறு பிரச்னையில் சிக்கி, அவற்றிலிருந்து வெளியேற முடியாமல் திணறுகின்றன.

இந்த நிலையில், வங்கித் துறை சார்ந்த பங்குகளை இனியும் வாங்கி முதலீடு செய்யலாமா, ஏற்கெனவே வாங்கிய பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது விற்றுவிடலாமா எனப் பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மனதில் எழுகின்றன. முதலீட்டாளர்களின் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன என்று பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.
‘‘இந்திய வங்கி அமைப்பு 27 பொதுத்துறை வங்கிகள், 26 தனியார் வங்கிகள், 46 வெளிநாட்டு வங்கிகள், 56 பிராந்தியக் கிராமப்புற வங்கிகள், 1,574 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 93,913 கிராமப்புறக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. நாட்டின் வங்கி அமைப்பின் சொத்துகளில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானவை பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவற்றுடன் ஒப்பிட்டால், வாராக் கடன் உருவாக்கிய தனியார் வங்கிகளின் பங்கு குறைவுதான்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வங்கிகளின் நான்காவது காலாண்டு முடிவைப் பார்த்தால் (பார்க்க, வங்கிகளின் லாப நஷ்ட அட்டவணை), பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் (இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி தவிர) இழப்பையே சந்தித்துள்ளன.
உச்சத்தில் வாராக்கடன்
பொதுத்துறை வங்கிகளின் காலாண்டு முடிவுகள் இந்த அளவுக்கு மோசமாக இருக்கக் காரணம், அவற்றின் வாராக் கடன்தான். பொதுத்துறை வங்கிகள், தங்களது வாராக் கடன்களில் இருந்து மீண்டுவரும் திறனைக் கொண்டு உள்ளதா என்பதை வங்கிகளின் காலாண்டு முடிவுகளை வைத்து நாம் கவனமாக ஆராய்வது அவசியம். எந்த வங்கி தனது வாராக் கடன் அளவைக் குறைக்கும் திறன் கொண்டதாக உள்ளதோ, அந்த வங்கியின் பங்குகளில் முதலீடு செய்ய லாம். அதேசமயம், வாராக் கடனை வசூலிப்பதில் அந்த வங்கி முன்னேற்றம் கண்டுள்ளதா அல்லது அதே நிலைமையில்தான் உள்ளதா என்பதையும் ஆராய்ந்தறிவது அவசியம்.

ஒரு வங்கியின் மொத்த வாராக்கடனில் 88.74% பொதுத்துறை வங்கிகளுடைய தாகவே இருக்கிறது. அந்த வரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள வங்கிகள், மொத்த வாராக் கடனில் 46.76 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. ஆனால், 21 தனியார் வங்கிகளின் வாராக் கடன் ரூ.93,044 கோடியாக உள்ளது. 21 தனியார் வங்கிகளில் 19 வங்கிகளின் மொத்த வாராக் கடன் சராசரியாக 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளன. இதே அளவுக்கு இருக்கும் வாராக் கடன் உள்ள பொதுத்துறை வங்கிகள் எவை என்று பார்த்தால், பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் மற்றும் விஜயா பேங்க் மட்டுமே.
விற்பனை மற்றும் நிகர வட்டி வரம்பு வளர்ச்சி
ஒரு வங்கியின் வளர்ச்சியும், லாபமும் அதிகரிக்க வேண்டு மெனில், புதிய கணக்குகளை அதிக அளவில் தொடங்க வேண்டும். கிரெடிட் மற்றும் டெபாசிட்டுகளின் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல, நிகர வட்டி வரம்பு வளர்ச்சி (Net Interest Margin) என்பது ஒரு வங்கியின் பங்கில் முதலீடு செய்வதற்கும், அந்தத் துறையின் வளர்ச்சியை அளப்பதற்கும் ஒரு முக்கியமான அளவுகோலாக உள்ளது.
ஒரு வங்கியின் நிகர வட்டி வரம்பு என்பது அந்த வங்கியின் கடன் வட்டி விகிதம் மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்துக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். இதுதான் ஒரு வங்கியானது எவ்வளவு வட்டி வருவாய் ஈட்டுகிறது என்பதைச் சொல்லும். இந்தக் கணக்கை, அந்தந்த வங்கிகள் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளை வெளியிடும்போதும் கட்டாயம் தெரிவிக்கும். இதனை அடிப்படையாக வைத்து, நாம் நமது முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.

பொதுத்துறை வங்கிகளின் நிகர வட்டி லாபத்தின் அடிப்படைக் கணக்குகள் மற்றும் நிகர வட்டிக்கும், லாபத்துக்கும் நிகரக் கடன்களுக்குமான விகிதம் ஆகியவை அட்டவணையாகத் தரப்பட்டுள்ளன. (பார்க்க, பொதுத்துறை வங்கிகளின் நிகர வட்டி லாபத்துக்கும், நிகரக் கடன்களுக்குமான விகிதம் )
வாராக் கடன் அதிகரித்ததினால், லாபம் சரிந்துள்ளதையே பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் மார்ச் காலாண்டு முடிவுகள் காட்டுகின்றன. இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, அந்த வங்கிகளின் பங்கு மதிப்பும் சரிந்துள்ளன. ஆனாலும், சந்தை அனலிஸ்ட்களின் பொதுவான எதிர்பார்ப்பு என்னவெனில், இனி வாராக் கடன்கள் படிப்படியாகக் குறைந்து, 2018-19-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் நல்ல முன்னேற்றம் காணப்படலாம் என்பதே. இந்த முன்னேற்றம் மிக மெதுவாக நடக்கலாம் என்பதால், வங்கிப் பங்குகள் மூலமான லாபத்துக்கு, அந்தப் பங்குகளை எதிர் பார்த்ததைவிட அதிக காலம் வைத்திருக்க வேண்டியிருக்கும்.
எந்தப் பங்குகளை வாங்கலாம்?
தற்போதைக்கு பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை நாம் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, உடனடி யாக வாங்குவது; மற்றொன்று, பொறுத்திருந்து வாங்குவது.
உடனடியாக வாங்க: வாராக் கடனிலிருந்து வெளியேறுவது, விற்பனை மற்றும் நிகர வட்டி வரம்பு வளர்ச்சி ஆகிய அளவீடு களின் அடிப்படையில், உடனடியாக முதலீடு செய்யக் கூடிய நிலையில் விஜயா பேங்க் மற்றும் இந்தியன் பேங்க் பங்குகள் உள்ளதால், இவற்றை வாங்கலாம்.
பொறுத்திருந்து வாங்க: இனிமேல் பெரிய அளவில் வாராக் கடன் வராதபடிக்குப் பார்த்துக் கொள்வதுடன், வாராக் கடனை வசூலிப்பதிலும் அதிக முனைப்புடன் செயல்படும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் மற்ற அனைத்துப் பொதுத் துறை வங்கிகளின் பங்குகளையும் வாங்கலாம். அடுத்த காலாண்டு முடிவு வரும்வரை இந்தப் பங்குகளில் மிகக் குறைந்த அளவுக்கு முதலீடு செய்து, காலாண்டு முடிவுகள் வந்தபின்னர் அவற்றின் செயல்பாட்டைப் பார்த்து, முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.
எந்தப் பங்குகளை வைத்திருக்கலாம்?
விஜயா வங்கி மற்றும் இந்தியன் பேங்க் பங்குகளை ஏற்கெனவே வாங்கியிருந்தால், அவற்றைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். அதேபோன்று, சற்று ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் காலாண்டு முடிவின் செயல்பாடுகளின் அடிப்படையில் சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை வைத்திருக்கலாம்.
எந்தப் பங்குகளை விற்கலாம்?
விஜயா பேங்க் மற்றும் இந்தியன் பேங்க் பங்குகளைத் தவிர்த்து, மற்ற பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் இப்போதைக்கு உடனடியாக லாபம் தருவது நிச்சயமில்லை. மார்ச் காலாண்டில் எஸ்.பி.ஐ போன்ற வங்கிகூட இழப்பைச் சந்தித்துள்ளன. என்றாலும், பெரிய மற்றும் மதிப்புமிக்க வங்கிப் பங்குகள் என்ற அடிப்படையில் அவற்றை விற்பதற்குச் சிலர் தயங்குவார்கள். ஆனால், இன்னும் ஒன்றிரண்டு காலாண்டு முடிவுகளைப் பார்த்தபின்னரே அவற்றின் செயல்பாடுகளைக் கணிக்க முடியும். எனவே, அதுவரை பொறுத்திருக்க முடியாத மற்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இத்தகைய வங்கிகளின் பங்குகளை வைத்திருந்தால், அவற்றை விற்றுவிட்டு வெளியேறலாம். குறிப்பாக, கடந்த மார்ச் காலாண்டில் அதிக இழப்பைச் சந்தித்துள்ள பொதுத்துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐ.டி.பி.ஐ, கனரா போன்ற வங்கிகளின் பங்குகளை ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லாதவர்கள் விற்றுவிடலாம்.
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தங்களது போர்ட்ஃபோலி யோவில் அதிகம் வைத்திருப்பவர்கள் நஷ்டத்திலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் ஆகும். அதுவரை பொறுமையாகக் காத்திருக்க முடியும் என்பவர்கள் மட்டுமே வங்கித் துறை சார்ந்த பங்குகளை வாங்கி வைத்திருப்பது நல்லது’’ என்று முடித்தார் ரெஜி தாமஸ்.
வங்கித் துறை பொன் முட்டை இடும் வாத்துதான். பொறுமையாக இருப்பவர்களுக்கு மட்டுமே முட்டையின் பலனை அனுபவிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம்.
-பா.முகிலன்

‘‘6 - 8 காலாண்டுகளில் வங்கித் துறை லாபத்துக்குத் திரும்பும்!’’
அண்மையில் தனது நான்காம் காலாண்டு முடிவை வெளியிட்டது சிட்டி யூனியன் பேங்க். இந்த வங்கியின் லாபம் 18% உயர்ந்திருக்கிறது. காலாண்டு முடிவை வெளியிட்ட கையுடன், இந்த வங்கியின் சி.இ.ஓ மற்றும் எம்.டி-யான டாக்டர் என்.காமகோடியைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். இனி அவர் நமக்களித்த பேட்டி...
பொதுத்துறை வங்கிகளில் சில வரலாறு காணாத நஷ்டம் கண்டுள்ளதே!
‘‘இன்ஃப்ரா நிறுவனங்களுக்கு அதிகம் கடன் தந்ததும், வங்கிகள் கூட்டாகச் சேர்ந்து பெரிய நிறுவனங்களுக்குக் கடன் தந்ததும்தான் வாராக் கடனுக்கு முக்கியமான காரணம். கிட்டத்தட்ட 300 நிறுவனங்களின் கடன் பிரச்னைதான் 90 சதவிகித வாராக் கடன் பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறது. இந்த 300 நிறுவனங்கள் தவிர, மற்ற நிறுவனங்களுக்குத் தந்த கடனில் எந்தப் பிரச்னையும் இல்லை.
வங்கித் துறையில் என்ன பிரச்னை என்பது இப்போது நன்றாகத் தெரிந்துவிட்டது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டபின், அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி வங்கித் துறை செல்லத் தொடங்கிவிடும்.’’
ஆர்.பி.ஐ-யின் சமீபத்திய சில நடவடிக்கைகளால் வாராக் கடன் பிரச்னை இப்போது அதிகம் வெளிவருகிறதா?
‘‘பொருளாதார வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது எடுக்கப்படும் கொள்கை மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். சில ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு (Restructuring) என்கிற விஷயத்தைக் கொண்டுவந்தார்கள். ஒரு நிறுவனம், சில காலாண்டுகள் கடனைத் திரும்பச் செலுத்த வில்லை என்றால், அவர்கள் கடனைத் திரும்பச் செலுத்துகிற மாதிரி சில விஷயங்களைச் செய்துதந்தனர். ஆனால், தொடர்ந்து ஐந்தாறு ஆண்டுகளாகியும் இந்தக் கடன் பணத்தைத் திரும்பச் செலுத்தவில்லை எனில், மறுசீரமைப்பு நடவடிக்கையைத் தொடர்வதில் பிரயோஜனமில்லை என்கிற அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்படுவதால், வாராக் கடன் அளவு தற்போது அதிகமாக இருக்கிறது.
பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் வாராக் கடன் பிரச்னை பற்றி எல்லோரும் பெரிதாகப் பேசினார்கள். ஆனால், டாடா நிறுவனம் அதை இப்போது வாங்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துள்ளது. எனவே, எல்லா வாராக் கடனும் திரும்ப வராது என்று சொல்ல முடியாது.’’
வாராக் கடன் இந்த அளவுக்கு உருவாக அரசியல்வாதிகளின் தலையீடு காரணமா?
‘‘ஒரு சிறிய அளவுக்கு அவர்கள் காரணமாக இருந்திருக்கலாமே தவிர, ஒட்டுமொத்தக் காரணமும் அவர்கள்தான் என்று சொல்ல முடியாது’’
வங்கி உயரதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் கொடுத்ததுதான் வாராக் கடன் அதிகரிக்கக் காரணமா?
‘‘ஒரு நிறுவனத்துக்குக் கடன் தரும் முடிவை ஒரே ஒரு அதிகாரி மட்டும் எடுப்பதில்லை. ஏறக்குறைய 10 அதிகாரிகள் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். இந்த பத்து பேரில் யார் ஆட்சேபம் தெரிவித்தாலும், கடன் தரமுடியாது. இந்த அளவுக்கு ஒரு சிஸ்டம் இருக்கும்போது, வாராக் கடன்களுக்கு வங்கி அதிகாரிகளே காரணம் என்று சொல்ல முடியாது.’’
என்.சி.எல்.எ.டி-ன் (NCLAT) நடவடிக்கைகள் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா?
‘‘முதலில் நீதிமன்ற வழக்கு போட்டு வாராக் கடன் பணத்தை வசூலிக்க முடிந்தபோது, பத்து ஆண்டு காலமானது. ரிட்ரிவ் ட்ரிபியூனல் வந்தபிறகு மூன்று வருடங்களில் வாராக் கடன் வசூலானது. சர்ஃபாசி சட்டம் வந்தபிறகு இரண்டு ஆண்டுகளில் வாராக் கடன் பிரச்னை தீர்ந்தது. இப்போது என்.சி.எல்.எ.டி நடவடிக்கை காரணமாக, வாராக் கடன் பிரச்னைக்கு இன்னும் சீக்கிரத்தில் தீர்வு வரும். அதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரிய ஆரம்பித்துவிட்டன.’’
இனிவரும் காலத்தில் வங்கித் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும்?
‘‘வங்கித் துறையில் உள்ள 90 சதவிகிதப் பிரச்னை களுக்கு ஏற்கெனவே தீர்வு கண்டுவிட்டோம். இன்னும் 10 சதவிகிதப் பிரச்னைகளுக்கு மட்டுமே தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அவற்றிலிருந்து மீண்டுவர இன்னும் 6 - 8 காலாண்டுகள் ஆகலாம். அதற்குப்பின் வங்கித் துறை யானது மீண்டும் சுபிட்சத்தை நோக்கிச் செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.’’
- ஏ.ஆர்.குமார்

ஐ.ஓ.பி-யின் நஷ்டம் ரூ.3,607 கோடி!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடந்த நான்காம் காலாண்டில் அடைந்த நஷ்டம் ரூ.3,607 கோடி யாக அதிகரித்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த வங்கி அடைந்த நஷ்டம் வெறும் ரூ.646 கோடி மட்டுமே. ஆர்.பி.ஐ-யின் வழிகாட்டுதல்படி, வாராக் கடன்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்ததன் காரணமாகவே இந்த வங்கியின் நஷ்டம் இந்த அளவுக்கு உயர்ந்தி ருப்பதாகச் சொல்லப் படுகிறது. 2017 மார்ச் முடிவில் இந்த வங்கியின் வாராக் கடன் ரூ.35,098 கோடியாக இருந்தது. இது கடந்த மார்ச் முடிவில் ரூ.38,180 கோடியாக அதிகரித்துள்ளது. இனியாவது இந்த வங்கி யின் நஷ்டம் குறையுமா?