
தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in
தங்கம் (மினி)
தங்கம் ஒரு குறுகிய எல்லைக்குள் சுழல்வதைத் தொடர்ந்து பார்த்தோம். ஆனால், சென்ற வார இறுதியில், இந்தக் குறுகிய எல்லையின் கீழ்எல்லையை உடைக்க ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் நாம் சொன்னதாவது… “தங்கம் சென்ற வாரம் நன்கு ஏறினாலும், தடையைத் தாண்ட முடியாமல் இறங்க ஆரம்பித்துள்ளது. இனி, ஜூன் மாதம் முடிவுக்கு வருவதால், ஜூலை மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய தடைநிலை 31680 ஆகும். ஆதரவு நிலை 31240 ஆகும்.’’

தங்கம், சென்ற வாரம் நாம் தந்த தடை நிலையைத் தாண்ட முடியாமல் திணறியது. திங்களன்று 31300 என்ற அளவில் ஆரம்பித்து, பிறகு வெகுவாக இறங்கியது. நாம் கொடுத்த ஆதரவு நிலையான 31240-ஐ உடைத்து, 31038 வரை இறங்கியது.
ஆனால், செவ்வாயன்று அதற்கு நேர்மாறாக ஒரு வலிமையான ஏற்றத்தைக் கொடுத்தது. ஆனாலும், அந்த ஏற்றம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31680-யை உடைக்கவில்லை. அதன்பிறகு புதனன்று இறங்கி 31170-ல் முடிந்தது. வியாழனன்று இன்னும் இறங்கி 31114-ல் முடிந்தது. வெள்ளியன்று இன்னும் பலமாக இறங்கியுள்ளது.
இனி என்ன நடக்கலாம்?
நல்ல இறக்கத்திலுள்ள தங்கத்திற்கு 30800 என்பது அடுத்த முக்கிய ஆதரவு. மேலே 31180 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.
வெள்ளி (மினி)
சென்ற இதழில் சொன்னது... ‘‘வெள்ளி வலிமையாக ஏறினாலும்கூட, தற்போது மிக வலிமையான தடைநிலையான 41000-க்கு அருகில் உள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் இரண்டுமுறை இந்த எல்லைக்கு அருகில் வந்து, தாண்டமுடியாமல் இறங்க ஆரம்பித்தது. தற்போது உடனடி ஆதரவு நிலை என்பது 40250 ஆகும்.’’

வெள்ளி, நாம் சொல்லியிருந்த தடைநிலையான 41000-த்தை இந்த முறையும் தாண்ட முடியாமல் இறங்கியது. இந்த வலுவான இறக்கம் முதல் கட்டமாக நாம் கொடுத்திருந்த ஆதரவான 40250-யை உடைத்து இறங்கியது. அதன்பிறகு பலமான இறக்கத்தில் உள்ளது.
இனி என்ன நடக்கலாம்?

தற்போது முக்கிய ஆதரவான 39700-யும் உடைத்த நிலையில் பலமான இறக்கம் வரலாம். உடனடி ஆதரவு 39250 ஆகும். வலிமையான தடைநிலை 40150 ஆகும்.
கச்சா எண்ணெய் (மினி)
சென்ற வாரம் சொன்னது… ‘‘தற்போது வலிமையான இறக்கத்தில் உள்ள கச்சா எண்ணெய், கீழே 4600 என்ற எல்லையில் ஆதரவு எடுக்கலாம். மேலே 4850 என்பது முக்கியமான தடைநிலை.’’

கச்சா எண்ணெய், பலமான ஏற்றத்துக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஒபெக் நாடுகளின் உற்பத்தி அதிகரிப்பால் குறைய ஆரம்பித்தது. நாம் கொடுத்த ஆதரவு நிலையான 4600 என்ற முக்கியப் புள்ளியையும் உடைத்து இறங்கியது. பெரிய இறக்கத்திற்குப்பிறகு, தற்போது அது பக்கவாட்டு நகர்வில் உள்ளது.
இனி என்ன நடக்கலாம்? கச்சா எண்ணெய் பக்கவாட்டு நகர்வில் உள்ள நிலையில் 4440 என்ற எல்லை முக்கிய ஆதரவு ஆகும். மேலே முந்தைய ஆதரவான 4600 தடைநிலையாக மாறலாம்.
மென்தா ஆயில்
மென்தா ஆயில் இதுவரை இறங்குமுகமாகவே இருந்து வந்துள்ளது. ஆனாலும், ஓர் இடைக்கால ஏற்றத்திற்குக் கொஞ்சம் தயாராவதுபோல்தான் உள்ளது. மென்தா ஆயில் மே மாதம் முடிந்து, தற்போது ஜூன் மாத கான்ட்ராக்ட், நடப்பு கான்ட்ராக்ட் ஆக மாறியுள்ளது. எனவே, ஜூன் மாத விலையானது, மே மாதத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தள்ளுபடியில் வியாபாரம் ஆவதைப் பார்க்க முடிகிறது.

சென்ற வாரம் ஜூன் மாத கான்ட்ராக்ட்டின் விலைநகர்வை நாம் இப்போது பார்க்கலாம். தொடர்ந்து இறங்குமுகமாவே இருக்கும் காரணத்தால், சென்ற வாரம் திங்களன்று 1115 என்ற விலையில் வியாபாரமாகத் துவங்கியது. அதன்பிறகு சற்றே வலுவிழந்து கீழே 1103 வரை இறங்கி முடியும்போது 1113-ல் முடிந்தது.
செவ்வாயன்று மீண்டும் 1115 என்ற எல்லையில் ஏறத் துவங்கிய மென்தா ஆயில், உச்சமாக 1134-யைத் தொட்டு, 1130-ல் முடிந்தது. இந்த நிலையில், மென்தா ஆயில், இதுவரை இருந்த இறக்கத்திலிருந்து ஏற்றத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. எனவே, அடுத்த நாள் புதனன்று ஒரு கேப் அப்பில் துவங்கி அதாவது, 1139-ல் துவங்கி, பிறகு படிப்படியாக இறங்க ஆரம்பித்தது. அந்த இறக்கம் 1110 வரை தொடர்ந்தது. ஆனாலும், முந்தைய பாட்டமான 1103-யை உடைக்கவில்லை.
எனவே, வியாழன் மற்றும் வெள்ளி என இரண்டு நாள்களும் வலிமையாக ஏறி உடனடித் தடைநிலையாக இருந்த 1139-யை உடைத்துள்ளது. தற்போது டபுள் பாட்டம் தோற்றுவித்துள்ள நிலையில் இந்த ஏற்றம் தொடரலாம்.
இனி என்ன செய்யலாம்?
நன்கு ஏறிய நிலையில் உடனடி ஆதரவு 1130 ஆகும். இதற்குக் கீழே முக்கிய ஆதரவு 1110 ஆகும். உடனடியான வலிமையான தடைநிலை 11170 ஆகும்.

காட்டன்
காட்டன் அகண்ட பக்கவாட்டு நகர்வில் இருந்து, மேல் எல்லையை உடைத்து வலிமையாக ஏற ஆரம்பித்துள்ளது.
காட்டனின் விலைப்போக்கு குறித்து சென்ற வாரம் சொன்னது... “காட்டன் உச்சத்திலிருந்து இறங்கி, ஆங்கில எழுத்து U-வைப்போல் இறங்கி ஏறியுள்ளது. தற்போது 21200 என்பது முக்கியத் தடைநிலை ஆகும். கீழே 20820 என்பது முக்கிய ஆதரவாக உள்ளது.’’
காட்டன் சென்ற வாரம் திங்களன்று கொஞ்சம் தயங்கி நின்றாலும், செவ்வாயன்று மிக பலமாக ஏறியுள்ளது. புதனன்று கேப்அப்பில் துவங்கி, பிறகு கொஞ்சம் பின்வாங்கினாலும். வெள்ளியன்று மிக பலமான ஏற்றத்தில் முடிந்துள்ளது.
இனி என்ன செய்யலாம்?
தற்போது 21800 என்பது முக்கிய ஆதரவு நிலை யாகவும், மேலே 22580 என்ற இடம் முக்கியத் தடைநிலையாகவும் உள்ளது.