மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு!

அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு!
பிரீமியம் ஸ்டோரி
News
அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு!

அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு!

கும்பகோணத்திற்கு கோயில் நகரம், பாரம்பர்ய நகரம் என  பல சிறப்புகள் உண்டு. டிகிரி காபி, கொளுந்து வெற்றிலை, நெய் மணக்கும் சீவல், நாச்சியார் கோயில் குத்து விளக்கு, சுவாமி மலை ஐம்பொன் சிலை, பித்தளை பாத்திரம், திருபுவனம் பட்டு போன்ற பாரம்பர்யப் புகழ்பெற்ற பொருள்கள் தயாரிக்கப்படும், விற்பனை செய்யப்படும் ஊர் என்பதால் கும்பகோணம் எப்போதும் தனித்த அடையாளத்துடனே காணப்படுகிறது. 

அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு!

இந்தச் சிறப்புகள் இன்று, நேற்று தொடங்கவில்லை சோழர்கள் காலத்திலேயே தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சோழர்கள் காலத்திலேயே தாராசுரம் அருகே உள்ள பழையாறை என்ற ஊர்தான் வர்த்தகத்திற்கான தலைமையிடமாக இருந்துள்ளது. இங்கு மிகப்பெரியதாக  வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது.

வணிகத்திற்காகச் சோழர்கள்  கம்பட்டம் எனப்படும் காசு அச்சிட்டு அப்போதே பயன்படுத்தி வந்துள்ளனர்.

தாராசுரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் தஞ்சாவூர் பிரதான சாலையில் உள்ளது கும்பேஸ்வரன் கோயில். இந்தக் கோயிலை ஒட்டி எதிரே செல்கிறது சுமார் இரண்டு கிலோ மீட்டர் கொண்ட அகலமான சாலை. இந்தச் சாலையைப் பெரிய கடைத் தெரு என்றும் பெரிய கடை வீதி என்றும் அழைக்கிறார்கள். இந்தப் பகுதிதான்  கும்பகோணத்தின் மிகப்பெரிய சந்தை.

வெங்காயம், பூண்டு, மிளகாய், உப்பு, வெல்லம், சணல் மற்றும் கப்பாணி கயிறு, பாய் என  அனைத்துப் பொருள்களுக்கும் தனிக் கடைகள் உள்ளன. மேலும், துணி, நகை, மளிகை, பூஜை  பொருள்கள்,  இரும்பு  பொருள்கள், ஃபர்னிச்சர், எலெக்ட்ரானிக்ஸ், பாரம்பர்ய பொருள்கள், காபி தூள், வெற்றிலை, பாக்கு என அனைத்து பொருள்களுக்கும்  தனிக் கடைகள் இருக்கின்றன.

பெரிய கடைத் தெரு ஆரம்பிக்கும் இடத்தில் பூ மற்றும் பழ மார்க்கெட் உள்ளது.வண்டியில் பூக்களையும், பழங்களையும் குவித்து வைத்து விற்பனை செய்கிறார்கள். பார்ப்பதற்கே ரம்மியமாக அழகாக இருக்கிறது. சுவாமிமலை பகுதிகளில் விளையும் மல்லிகை பூ விற்பனை இங்கு படு ஜோராக நடப்பதுடன் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அனுப்பப்படுகிறது. 

அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு!

உலர்ந்த பழங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கும் குருநாதன் என்பவர், “குங்குமப்பூ, பாதாம், முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்ற பொருள்களை விற்பனை செய்கிறோம். எங்க கடை 75 வருடமாக இயங்குகிறது. அதற்குக் காரணம் நம்பிக்கை. சுற்றுப்பகுதி மக்கள் இங்கிருந்து பல பொருள்களை மொத்தமாகவும்,  சில்லறையாகவும் வாங்கிச் செல்கிறார்கள்” என்றார்.

“கும்பகோணத்தில் புகழ்பெற்ற பொருள்களில் ஒன்று வெற்றிலை. இங்கு வெற்றிலை கடை வைத்திருக்கும் பாட்ஷா என்பவர். “கும்பகோணத்தைச் சுற்றி 30 கிலோ மீட்டர் சுற்றளவில் விளையும் வெற்றிலையைத்தான் கும்பகோணம் வெற்றிலை என்கிறோம்.

இந்த வெற்றிலையின் சுவைக்கு காவிரி தண்ணீரும் ஒரு காரணம். இந்த வெற்றிலைக்குத் தமிழகம் முழுவதும் நல்ல கிராக்கி இருக்கிறது. எல்லோரும் விற்பனைக்காகவும் சுப காரியத்திற்காகவும் பல பகுதிகளில் இருந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிச் செல்கிறார்கள்” என்றார்.

காபி என்றதும் முதலில் நினைவிற்கு வருவது கும்பகோணம் டிகிரி காபிதான். இங்கு மட்டும் காபி கூடுதல் சுவையாக இருக்கக் காரணம் என்ன என வீனஸ் காபி உரிமையாளர் சாமிநாதனிடம் கேட்டோம்.

“நம்ம கடை 55 வருடத்திற்கு மேலாக இங்கு இருக்கு. மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காபி கொட்டையை மொத்தமாக வாங்குவோம். அதைப் பக்குவமாக வறுப்பதில்தான் விஷயமே இருக்கிறது.கொட்டையைப் பதமாகக் காய வைத்து, கறுப்பு நிறமாக மாறும் அளவிற்கு வறுத்த பிறகு மெஷினில்  தூளாக அறைத்து விற்பனை செய்வோம்.  

அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு!

கும்பகோணம் காபிக்கு தமிழ்நாட்டைத் தாண்டியும் நல்ல மவுசு இருக்கிறது. எவ்வளவு காபித் தூள் வேண்டும் எனச் சொல்லி அதற்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டால் அவர்களுக்கு காபித் தூளை அனுப்பிவிடுகிறோம்” என்றார் புன்னகையுடன்.

வேதா பாத்திரக்கடை உரிமையாளர் ராமலிங்கம், “சுமார் 150 வருடத்திற்கு முன்பிருந்தே இங்கு பித்தளை, அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்கள் செய்துவருகின்றனர். இப்போது சில்வர் பாத்திரங்களும் செய்யப்படுகிறது.

பெரும்பாலும் இந்தப் பாத்திரங்கள் எல்லாம் கையிலேயே செய்யப்படுகின்றன. அதனால் கூடுதல் அழகுடனும் தரத்துடனும் காணப் படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பாத்திரங்களை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வாங்கிச் செல்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் ஐம்பொன் சிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கும்பகோணம் பாத்திரக்கடை என்றே பெயரிலேயே கடை சிலர் வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கோயில் படிகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்படும் பித்தளை தகடுகளை இங்கிருந்தே தமிழகத்தின் முக்கியக் கோயில்களுக்குச் செய்து தரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கோயில் கொடி மரமும் இங்கு செய்யப்படுகிறது” என்றார்.

பாரம்பர்யப் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், மற்ற ஊர்களில் உள்ளதுபோல் வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் பர்மா பஜார் போன்ற கடைகள் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாராசுரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தின் மூன்றாவது பெரிய மார்க்கெட்டாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்ட மக்கள் இங்குதான் காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.

தினமும் இங்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெறும் எனச் சொல்லப் படுகிறது. கும்பகோணத்தைச் சுற்றி நவக்கிரக கோயில்கள் இருப்பதால் அதற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதனால் இங்கு சிறிய அளவிலான தங்கும் அறைகள் மற்றும் ஸ்டார் ஹோட்டல்கள்  பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் இங்கு தங்குவதற்கான அறைகள் கிடைப்பது சிரமம் என்கிறார்கள்.

கும்பகோணம் போகிறவர்கள் பெரிய கடைத் தெருவுக்கும் போய்வரலாமே.

-கே.குணசீலன்

படங்கள்: ம.அரவிந்த்

அங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு!

7,000 கடைகள்... 50 ஆயிரம் பணியாளர்கள்!

கு
டந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன், “இங்கே சிறியதும் பெரியதுமாக சுமார் 7,000 கடைகளுக்கு மேல் இருக்கின்றன. இதன்மூலம் 50,000 பேர் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். கும்பகோணத்தை மையமாகக்கொண்டு 50 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு, கும்பகோணம் பெரிய கடைத்தெருதான் மிகப்பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு மட்டுமே தினமும் பல லட்சம் பேர்  வந்து போகிறார்கள். இவர்களை மையமாக வைத்து நடக்கும் வியாபாரத்துடன், பொருள்களை மட்டுமே மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க தினமும் பல லட்சம் பேர் இங்கு வந்து செல்கிறார்கள்” என்றார்.