
ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் சி.இ.ஓ ஏ.பாலசுப்பிரமணியன் சிறப்புப் பேட்டிசி.சரவணன்
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ரூ.2.47 லட்சம் கோடி நிர்வகிக்கும் தொகையுடன் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அவர் நாணயம் விகடனுக்குச் சிறப்புப் பேட்டி தந்தார்.

கடந்த 2014-ல் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகித்து வந்த தொகை ரூ.10 லட்சம் கோடி. இது, 2017-ம் ஆண்டிலேயே ரூ.20 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. எதிர்வரும் ஆண்டுகளிலும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இதே வளர்ச்சி நீடிக்குமா, வரும் 2025-ம் ஆண்டில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை சுமார் எவ்வளவாக இருக்கும்?
‘‘கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை ஆண்டுக்குச் சராசரியாக 26% வளர்ச்சி கண்டு வந்துள்ளது. இதே வளர்ச்சி வேகம் வரும் ஆண்டுகளில் நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். சுமார் 22% வளர்ச்சி கண்டால்கூட 2025-ம் ஆண்டில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை சுமார் ரூ.90-95 லட்சம் கோடியாக இருக்கும் என்பது எங்கள் கணிப்பு.’’
2014-ம் ஆண்டில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகிக்கும் தொகை ரூ.1.05 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது உங்கள் நிறுவனம் நிர்வகிக்கும் மொத்தத் தொகை ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. வரும் 2025- ம் ஆண்டில் எவ்வளவு தொகையை நிர்வகிப்பீர்கள் என நம்புகிறீர்கள்?
‘‘தற்போதைய நிலையில் நாங்கள் நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் தொகை ரூ.2,47,530 கோடியாக உள்ளது. நாங்கள் ஆண்டுக்குச் சராசரியாக 12% வளர்ச்சி கண்டு வருகிறோம். சராசரியாக ஆண்டுக்கு 10 சதவிகித வளர்ச்சி என்று வைத்துக்கொண்டால்கூட, 2025-ம் ஆண்டில் எங்கள் நிறுவனத்தின் நிர்வகிக்கும் தொகை ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டி விடும் என்று நம்புகிறோம்.’’
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் அதிக வளர்ச்சி காணும் துறைகள் எவை என அடையாளம் கண்டு வைத்திருக்கிறீர்கள்்?
‘‘இனிவரும் காலங்களில் பயன்பாடு மற்றும் நுகர்வோர் சார்ந்த துறைகள் சிறப்பான வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கலாம்.

எஃப்.எம்.சி.ஜி, உணவுப் பொருள்கள் தயாரிப்புத் துறை, உணவைப் பதப்படுத்துதல் துறை, வாகனங்கள் தயாரிப்புத் துறை (கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்), நிதிச் சேவைகள் (வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதிச்சேவைகள்), ரசாயனம் உள்ளிட்ட துறைகள் அதிக வளர்ச்சி காண வாய்ப்பிருப்பதாக நாங்கள் மதிப்பிட்டு இருக்கிறோம்.’’
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது படித்தவர்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமாகி இருக்கிறது. நாட்டின் முதுகெலும்பான கிராமப்புறங்களில் மியூச்சிவல் ஃபண்ட் முதலீட்டை அதிகரிக்க உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது?
‘‘பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் புதிதாக முதலீடு செய்யும்போது ஆரம்ப முதலீடு ரூ.5,000-ஆக இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பும் குறைந்த வருமானப் பிரிவினர் மற்றும் கிராமப்புறத்தினருக்கு இந்த ஆரம்ப முதலீடு ஒரு தடையாக இருக்கக்கூடாது. அனைவரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காக இந்த ஆரம்ப முதலீட்டை 5,000 ரூபாயிலிருந்து ரூ.500-ஆகக் குறைத்துள்ளோம்.
குறிப்பாக, எங்களின் ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஃபிரண்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் ஆரம்ப முதலீட்டை ரூ.5,000-லிருந்து ரூ.500 ஆகக் குறைத்திருக்கிறோம். ஐந்தாண்டுகளுக்குமுன் சிஸ்ட மேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) மூலம் சராசரியாக ரூ.2,000 முதலீடு செய்யப்பட்டு வந்தது. அது இப்போது (2018) ரூ.4,200-ஆக அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்.
கிராமப்புறங்களில் குறைந்தபட்ச ஆரம்ப முதலீட்டைக் குறைப்பதன்மூலம் நாங்கள் இன்னும் அதிகமாக முதலீட்டாளர் களைச் சென்றடைவோம். இனி கிராமத்தினரும் மியூச்சுவல் ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்ய முன்வருவார்கள். கிராமங் களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அறிமுகமாகும்பட்சத்தில், இந்தத் துறை அடையும் வளர்ச்சி இன்னும் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.’’
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட் விநியோக வரி மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% விதிக்கப்பட்டிருப்பதால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?
‘‘மத்திய அரசின் வரி வருமானத்தை அதிகரிக்க இவை கொண்டு வரப்பட்டுள்ளன. டிவிடெண்ட் விநியோக வரியைத் தவிர்க்க நினைப்பவர்கள் குரோத் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், நீண்டகால மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க அல்லது குறைக்க ஓராண்டுக்குப் பிறகு, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் யூனிட்களை விற்று லாபத்தை வெளியே எடுத்து மீண்டும் முதலீடுகூட செய்துகொள்ளலாம். அல்லது சிஸ்டமேட்டிக் வித்ட்ரால் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) மூலம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரையிலான மூலதன ஆதாயத்துக்கு வரி இல்லை. அதன்பிறகான லாபத்துக்கு 10% வரி என்பது முதலீட்டாளர் களைப் பெரிதாகப் பாதிக்காது. அதற்காக யாரும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நிறுத்தப் போவதில்லை. இதர முதலீடுகளைக் காட்டியிலும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்தான் அதிக வருமானத்தைத் தந்துகொண்டு இருக்கின்றன. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு விதிவிலக்கு எதுவும் இல்லாத நிலையில், அதில் அதிக பட்சம் 30% வரி கட்ட வேண்டி வரும்போது, இந்த 10% வரி என்பது பெரிய விஷயமில்லை.’’
செபி அண்மையில் ஃபண்டுகளை வகைப்படுத்தியிருப்பது பற்றி..?
‘‘வரவேற்கத்தக்க மாற்றம்தான். அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபண்ட் பிரிவுகளின் முதலீட்டுப் பாணி ஏறக்குறைய ஒன்றாக இருக்கும். இதனால், முதலீட்டாளர்கள் ஃபண்டுகளை ஒப்பிட்டு வாங்குவது சுலபமாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் பொறுத்தவரை, பங்குகளை வாங்கி / விற்கும் பாணியில்தான் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் கொடுக்க முடியும். மேலும், புதிய மாற்றத்தின்மூலம் ஒரு ஃபண்டின் பெயரை வைத்தே அதன் வகையைச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
செபி கமிட்டியில் நானும் ஓர் உறுப்பினராக இருந்து, முதலீட்டாளர் களுக்குப் பயனுள்ள பல மாற்றங்களைச் செய்திருக்கிறோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், புதிய மாற்றத்தால் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் முதலீட்டாளர்கள் எல்லோருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் குறித்துத் தெளிவு கிடைத்திருக்கிறது. பல ஃபண்டுகள் இணைக்கப்பட்டு நிர்வகிக்கும் தொகை கூடியிருப்பதால், ரிஸ்க் மேலாண்மை மேம்பட்டிருக்கிறது. இது முதலீட்டாளர், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இரண்டுக்கும் லாபமாக அமைந்திருக்கிறது.’’
சிறு முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?
‘‘பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் பத்தாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் நல்ல வருமானத்தைத் தந்துவருகிறது. அந்த வகையில், ஈக்விட்டி ஃபண்டில் நீண்ட கால நோக்கில்தான் முதலீடு செய்யவேண்டும். சிறு முதலீட்டாளர் அஸெட் அலோகேஷன் முறையைப் பின்பற்றினால், நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். ஒருவர் ரூ.100 முதலீடு செய்கிறார் எனில், பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் ரூ.40, பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.30, மீதி ரூ.30-யைக் கடன் ஃபண்டுகள், எஃப்.டி., ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் எந்தக் காலகட்டத்திலும் இழப்பைச் சந்திக்காமல் லாபம் ஈட்ட முடியும்” என்று முடித்தார் ஏ.பாலசுப்பிரமணியன்.
படம்: ம.அரவிந்த்

ஃபண்ட் செலவு விகிதம்... தினசரி அறியலாம்!
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஃபண்டு களின் மொத்தச் செலவு விகிதத்தை (TER) தினமும் காட்ட வேண்டும் என செபி வலியுறுத்தி யுள்ளது. இதன்படி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் இணைய தளங்களில் ‘மியூச்சுவல் ஃபண்ட் மொத்தச் செலவு விகிதம்’ என்ற தலைப்பின் கீழ் செலவு விவரங்கள் தனியாகக் காட்டப்பட வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. மேலும், முதலீடுகளின் மொத்தச் செலவு விகிதம் மற்றும் ஜி.எஸ்.டி-யில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப் பட்டால், மூன்று நாள் களுக்கு முன்னதாகவே முதலீட்டாளர்களுக்கு மெயில் அல்லது குறுஞ் செய்தி மூலம் தெரியப் படுத்த வேண்டும் என்றும் செபி கூறியுள்ளது.