நடப்பு
தொடர்கள்
Published:Updated:

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

ப.முகைதீன் சேக்தாவூது

றுபது வயதைத் தாண்டியபிறகுதான், வாழவேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது. 50 வயதைத் தாண்டியபிறகுதான் பணத்தின் அருமையே பலருக்கும் புரிய ஆரம்பிக்கிறது. ஆனால், கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்? இந்த உண்மையை இன்றைக்கு 20 வயதுள்ள இளைய சமுதாயத்தினர் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், 60 வயதைத் தாண்டியபின் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கு மேலும் நீளும் வாழ்வுக்குத் தேவையான காசு கையில் இருக்கவேண்டியது கட்டாயம்.  

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

மகிழ்ச்சிக்கான ஃபார்முலா

இந்திய மக்களின் சராசரி வயது நீண்டுகொண்டே செல்கிறது. 1947-ல் 37-ஆக இருந்த நமது சராசரி ஆயுள் காலம் தற்போது 69-யைத் தாண்டிவிட்டது. இப்படியேபோனால், 80 சதவிகித இந்தியக் குடிமக்கள் 80 ஆண்டுகளைத் தாண்டி, 100 வயது வரைகூட வாழக்கூடும்.

இப்படி நீளும் நமது ஆயுள் காலத்தில், அறுபதுக்கு முந்தைய அதே வாழ்க்கையை 60 வயதுக்குப்பிறகும் எந்தப் பாதிப்புமின்றித் தொடர வேண்டுமானால், அதற்குத் தேவையான சேமிப்பு எவ்வளவு நம்மிடம் இருக்க வேண்டும் தெரியுமா?
 
* 23-25 வயதில் மாதத்தின் மொத்தச் சம்பளத்தில் 25% சேமிப்பு

* 30-வது வயதில் இருக்க வேண்டிய சேமிப்புத் தொகை ஓராண்டுச் சம்பளம்.

* 35-வது வயதில் இரண்டாண்டுச் சம்பளம்.

* 40-வது வயதில் மூன்றாண்டுச் சம்பளம்.

* 45-வது வயதில் நான்காண்டுச் சம்பளம்.

*
50-வது வயதில் ஐந்தாண்டுச் சம்பளம்.

* 55-ல் ஆறாண்டுச் சம்பளம்.

* 60-வது வயதில் ஏழு ஆண்டுச் சம்பளம்.

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!இப்படிச் சேமிக்கப்பட்டு கையிருப்பில் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, அந்தத் தொகை முழுமையான முதலீட்டில் குறைவில்லாத வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சரி, இந்தச் சேமிப்பு முறைக்கு மாற்றுமுறை ஏதாவது உண்டா என்றால், உண்டு. மாதாந்திர மொத்தச் சம்பளத்தில் 30% வீதம் 30 ஆண்டுகள் சேமிப்பதே ஓய்வுக்காலச் சேமிப்புக்கான பெஸ்ட் வழி.

சேமிப்பைத் தொடங்காத மக்கள்

நம் மக்களில் சுமார் 29% பேர் சேமிப்பு வட்டத்துக்குள் இன்னும் வராமல் உள்ளனர். சேமிப்பு  வட்டத்துக்குள் வந்துவிட்ட 71 சதவிகிதத்தினரிடம்கூட நாம் மேலே சொல்லியிருக்கிறபடி சேமிக்கிறார்களா என்பது சந்தேகம். இன்றைய தேதியில், வடக்கு மற்றும் மேற்கில் உள்ள நம் மக்களில் 68 சதவிகிதத்தினரிடம், ரூ.5 லட்சம் என்ற அளவில் சேமிப்பு கையிருப்பில் உள்ளது. நம் மக்களிடம் இந்த அளவுக்காவது பணம் இருக்குமா என்பது கேள்விக்குறியே. எனவே, விநாடி நேரத்தைக்கூட வீணடிக்காமல் எதிர்காலத்துக்கான சேமிப்பை நாம் செய்யவேண்டியது அவசியம்.

எப்படிச் சேமிப்பது?


சேமிப்பு - இன்றைக்குப் பலரும் வெறுக்கும் வார்த்தையாக இருக்கிறது. இன்றைக்கு அனுபவிக்க நினைக்கும் பல சுகங்களுக்கும், செளகர்யங்களுக் கும் தடையாக இருப்பது இந்தச் சேமிப்புதான். பணத்தைச் சேமித்து விட்டு, பொருள்களை வாங்கி அனுபவிப்பதைவிட, பொருளை முதலில் வாங்கிவிட்டு, பிற்பாடு அதை மாதந்தோறும் கட்டுவதே சரி என்றே பலரும் நினைக்கிறார்கள். பெரிய நகரத்திலும், சிறிய நகரத்திலும் வாழும் நடுத்தர வர்க்கத்து மக்களிடம் இந்த அணுகுமுறைதான் பிரதானமாக இருக்கிறது.

சேமிக்காமல் இருப்பதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள் நடுத்தர வர்க்கத்து மக்கள். ‘‘பணவீக்கமும், விலைவாசியும் படுத்துகிறபாட்டில் 30% பணத்தை எப்படிச் சேமிக்க முடியும்?’’ என்பதுதான் அவர்கள் கேட்கும் கேள்வி.  

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

இந்தக் கேள்வியை மேலோட்டமாக அணுகினால், இந்த வாதத்தில் நியாயம் இருப்பதுபோலவே தோன்றும். அதிலும், பணவீக்கம் என்கிற வார்த்தையை எல்லாம் பயன்படுத்துவதைப் பார்த்தால், இது நியாயமான வாதம்தான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், பணவீக்கம் நாம் நினைக்கும் அளவுக்குக் கெட்டதா?

பணவீக்கம் நல்லதா, கெட்டதா?

பணவீக்கம் என்பது சினிமாவில் வரும் வில்லனைப் போன்றது. நல்ல குணங்களை உடைய ஒருவர், பல நல்ல காரியங்களைச் செய்கிறவராக இருப்பார். ஆனால், அவரது தத்ரூபமான நடிப்பினால், மிக மோசமான மனிதன் எனப் பார்ப்பவர் அத்தனை பேரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகியிருப்பார். பணவீக்கமும் ஏறக்குறைய இந்த சினிமா வில்லன்தான். ஏன் தெரியுமா?

ஆயிரத்துக்குள் பணப்பரிவர்த்தனை செய்துகொண்டிருந்தவர்களை லட்சாதிபதிகளாகவும், லட்சாதிபதி களை கோடீஸ்வரர்களாகவும், கோடீஸ்வரர்களை மகா கோடீஸ்வரர்களாகவும் உயர்த்தியது இந்தப் பணவீக்கம்தான். நாம்தான் இந்தப் பணவீக்கத்தைச் சரியாகப்  புரிந்துகொள்ளாமல், ‘பணவீக்கத்தை’ நிஜ வில்லன் போல பாவித்து வருகிறோம். ஆனால், பணவீக்கமானது நமது வாழ்க்கையை வெகுவாக முன்னேறியிருக்கிறது. எப்படி?

வாழ்க்கையை முன்னேற்றும் பணவீக்கம்

இதற்கு ஓர் உதாரணமாக ஒரு வணிக நிறுவன உரிமையாளரையோ, ஆலை முதலாளியையோ எடுத்துக்கொள்ள அவசியமில்லை. அரசு வேலையில் துவக்க நிலையில் இருக்கும் ஓர் இளநிலை உதவியாளரையே எடுத்துக்கொள்வோம்.

1978-ல், ஒருவர் 18-வது வயதில், தமிழக அரசில் இளநிலை உதவியாளராக வேலைக்குச் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது மாதச் சம்பளம் ரூ.350. நாற்பது ஆண்டுகாலப் பணி வாழ்க்கையில் அவருக்கு ஐந்து முறை பதவி உயர்வு கிடைக்கிறது. இந்த ஆண்டில் அதாவது, 2018-ல் அவர் ஓய்வு பெறும்போது அவரது சம்பளம் ரூ.70,000-ஆக இருக்கும்.  

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

அதாவது, 40 ஆண்டு கால இடைவெளியில் அவரது சம்பளப் பெருக்கம் 20,000% அல்லது 200 மடங்கு உயர்ந்திருக்கிறது. காரணம்,  பணவீக்கம். அதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. அதை ஈடுகட்டத் தரப்பட்ட அகவிலைப்படி முதலியன. பணவீக்கம் உயராமல் போயிருந்தால், அவர் சம்பளம் இவ்வளவு தூரம் உயர்ந்திருக்குமா என்பது சந்தேகமே. பணவீக்கம் தந்த பரிசுதான் அவரது சம்பள உயர்வுக்கு முக்கியக் காரணம்.

அரசு ஊழியர்களின் சம்பளம் மட்டுமல்ல, தமிழக அரசின் பட்ஜெட் தொகையும் 200 மடங்கு உயர்ந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்குமுன் சுமார் 1,000 கோடி என்ற அளவில் இருந்த பட்ஜெட் தொகை, இன்றைக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு எவ்வளவு?

நமது வருமானத்தையும், விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்க்க, ஒவ்வொரு காலகட்டத்திலும் எடுத்துக்கொள்ளப்படும் முதன்மைப் பொருள் தங்கம்தான். அன்றைய (24 காரட்) ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் ரூ.400. இது 200 மடங்கு உயர்வு என்று கணக்கிட்டால், இன்றைய விலை ஒரு பவுனுக்கு ரூ.80,000 என்றிருக்க வேண்டும். ஆனால், 24,000 என்கிற அளவில்தான் நிற்கிறது ஒரு பவுன் தங்கம்.

தங்கம் மட்டும்தான் அன்றைய விலையிலிருந்து 60 மடங்கு விலை அதிகரித்துள்ளது. ஆனால், வேறெந்தப் பொருளும் குறிப்பாக, அன்றாடம் பயன்படும் அத்தியாவசியப் பொருள்கள்கூட 40 மடங்காகக்கூட உயரவில்லை. 
அன்றைக்கு (சாதாரண) அரிசி கிலோ ரூ.3. இன்றைக்கு நல்ல அரிசி விலையே ரூ.60-தான் (இது 20 மடங்கு மட்டுமே!)

அன்றைய (சுமாரான) 100 கிராம் பற்பசை விலை ரூ.4. இன்றைக்கு அதன் விலை ரூ.40 (இது 10 மடங்கு மட்டுமே!) அரசு ஊழியரின் சம்பளம் 200 மடங்கு அதிகரித்ததைப்போல, ஒரு கிலோ அரிசி விலை 200 மடங்கு பெருகியிருந்தால், அது இன்றைக்கு ரூ.600-ஆகவும், 100 கிராம் பற்பசை விலை ரூ.800-ஆகவும் இருந்திருக்க வேண்டும் அல்லவா?

விலைவாசி உயர்வு என்பது கார் முதல் கத்தரிக்காய் வரை, கொல்கத்தா முதல் கொளத்தூர் வரை விற்கும் விலையை அனுசரித்துத்தான் கணக்கிடப்படுகிறது. அதற்கேற்ப அகவிலைப்படியும் உயர்ந்து சம்பளப் பெருக்கம் ஏற்படுகிறது. எனவே, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வு என்பது அனைவரையும் பாதித்துவிடுவதில்லை.

இந்தக் கணக்குகளைச் சரியாகப் புரிந்துகொண்டால், பணவீக்கத்தின் காரணமாக நமது சம்பளம் உயரும்போது, அதிலிருந்து கணிசமானதொரு தொகையை நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்ல, யாராலும் நிச்சயம் சேமிக்க முடியும் என்பது சாத்தியமே என்கிற உண்மை விளங்கும்.

சேமிப்பும் உயர்ந்துள்ளது

1978-க்கும் - 2018-க்கும் இடைப்பட்ட காலத்தில் நமது கட்டாயச் சேமிப்பு உயரவே செய்திருக்கிறது. நாம் உதாரணமாக எடுத்துக்கொண்ட இளநிலை உதவியாளர் 1978-ல் பெற்ற சம்பளம் ரூ.350. அப்போது 6% பணத்தை அவரது கட்டாய ஓய்வுக்காலச் சேமிப்புக்காக (GPF) அவர் செய்திருப்பார். எனவே, இவர் தனது 350 ரூபாய் சம்பளத்தில் மாதந்தோறும் ரூ.20-யை ஜி.பி.எஃப் கணக்கில் செலுத்தி இருப்பார்.

ஆனால், இன்றைக்கு ஓர் அரசு ஊழியர் ஜி.பி.எஃப்-ல் கட்டும் குறைந்தபட்ச பணம் 12%. எனவே, ரூ.70,000 சம்பளத்துக்கு மாதந்தோறும் ரூ.8,400-யை ஒருவர் செலுத்த வேண்டும். அதாவது, 40 ஆண்டுகளில் சம்பளம் 200 மடங்கு உயர்ந்தாலும், ஜி.பி.எஃப் சேமிக்கும் பணம் 420 மடங்கு உயர்ந்துள்ளது.

40 ஆண்டுக்கு முன் வேலைக்குச் சேர்ந்தபோது ஒருவருக்குத் தரப்பட்ட ரூ.350 சம்பளம், இன்றைக்குப் புதிதாகப் பணியில் சேரும் ஊழியருக்கு ரூ.24,250 என்ற அளவில் உள்ளது. அதாவது, அன்றைய சம்பளத்தைப்போல் சுமார் 70 மடங்கு இப்போது அதிகம். ஆனால், விலைவாசி உயர்வு வெறும் 40 மடங்குதான் என்கிறபோது, 30 சதவிகிதத்தை ஒவ்வொருவரும் சேமிப்பது ஒன்றும் கடினமான காரியமில்லை என்று தெளிவாகப் புரிகிறதா?

எப்படிச் சேமிப்பது?

வருமானம் என்பது செலவு - சேமிப்பு என்ற இரட்டைக் குதிரை பூட்டிய தேர். இதில், செலவுக் குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிட்டால், சேமிப்புக் குதிரையின் கழுத்து நெறிபடாமல் தப்பிக்கும். செலவைக் குறைப்பது எப்படி என்று பலரும் யோசிக்க விரும்புவதில்லை. எனவே, இந்த நெகட்டிவ் அணுகுமுறையை விட்டுவிட்டு, பாசிட்டிவ் அணுகுமுறையைச் சிந்திப்பதே நல்லது. அது, சிக்கனமாக இருப்பது எப்படி என்பதே.

உங்கள் மாதச் செலவில் எது அத்தியாவசியம், எது இப்போதைக்கு அவசியம் இல்லை என்பதைப் பிரித்துக்கொள்ளுங்கள். அத்தியாவசியமான செலவை மறுக்காமல் செய்யுங்கள். எது இப்போதைக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறீர்களோ, அதற்கான பணத்தை எடுத்து சேமிக்கத் தொடங்குங்கள். இப்படி நீங்கள் சேமிக்கும் தொகை 30 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

சேமிப்பிலிருந்து முதலீட்டுக்கு...

உங்கள் சேமிப்பு, முதலீடாக மாற வேண்டும். அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் பணவீக்கத்தைத் தாண்டியதாக இருக்க வேண்டும்.

தங்கத்திலும், நிலத்திலும் போட்ட பணமும் பெரிய அளவில் குறைந்துவிடாது என்றாலும், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், பங்கு சார்ந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் (1-3 ஆண்டு போட்ட தொகை குறைய வாய்ப்புண்டு என்றாலும், 10-20 ஆண்டு காலத்தில் செய்யப்படும் முதலீட்டுக்குப் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புண்டு. 20 வயது தொடங்கி 40 வருடம், மாதம் ரூ.4000-யை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய முதலீட்டில் போட்டால், 60-வது வயதில்  ரூ.5 கோடி கிடைக்கும்.

பணவீக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்தால், ஆயிரத்தில் சேமிப்பவர்கள் லட்சாதிபதி களாகலாம்; லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாகலாம் என்பதில் சந்தேகமில்லை. 

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

எஃப்.டி, சொத்து, தங்கம்...லாபகரமான முதலீடா?

ம்மில் பலரும் எதில் பணத்தைப் போடுகிறோம்? வங்கி எஃப்.டி-யில், தங்கத்தில், நிலத்தில் பணத்தைப் போடு கிறோம். வங்கி எஃப்.டி-யில் போடும் பணத்துக்குப் பாதுகாப்பு உண்டு. ஆனால், வருமானம் என்று பார்த்தால், அதிகபட்சம் 6-7% மட்டுமே. பணவீக்கமே 6-7% என்கிறபோது, இதில் பணத்தைப் போடுவதால் என்ன லாபம்?  தவிர, வரும் வருமானத்துக்கு வரியும் கட்டவேண்டும் என்கிறபோது, நமக்குக் கிடைத்த வருமானம் மேலும் குறையவே செய்யும்.

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்... உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

விராட் கோலி... அதிகம் சம்பாதிக்கும் வீரர்!

லகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டிய லில் அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் பிளாய்டு மேவெதர் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தப் பட்டியலில்  83-வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள ஒரே ஒரு விளையாட்டு வீரர் இவர்தான் என்பதும் இவருக்குப் பெருமை தரக் கூடிய விஷயம். இவரது வருமானம் 24 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.