
ஆடிட்டர்கள் விலகலால் சரியும் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!
ஒரு நிறுவனத்தின் பங்கு விலைச் சரிவுக்கு இதுவரை எத்தனையோ காரணங் களைக் கண்ட பங்குச் சந்தை, ஆடிட்டர்கள் விலகியதால், நிறுவனங்களின் பங்கு விலை சரிவடைந்ததைக் கண்டு திகைத்துப்போய் நிற்கிறது. குறிப்பாக, வக்ராங்கி, மான்பசாந்த் பீவரேஜஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

சரிந்த பங்குகள்...
கடந்த ஏப்ரல் 27-ம் தேதியன்று வக்ராங்கி நிறுவனத்தின் கணக்குவழக்குகளை ஒரு ஆடிட்டராகக் கவனித்துவந்த பிரைஸ் வாட்டர் ஹவுஸ் அண்டு கோ நிறுவனம், அதிலிருந்து ராஜினாமா செய்தது. அதேபோன்று, மான்ப சாந்த் பீவரேஜஸ் நிறுவனத்தின் ஆடிட்டரான டெலாய்ட் ஹஸ்க்கின்ஸ் அண்டு செல்ஸ் நிறுவனமும் ராஜினாமா செய்தது.
இந்த ராஜினாமா நடவடிக்கை, அதிலும் காலாண்டு முடிவுகள் வெளியாவதற்குமுன் வெளியேறியது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியதால், இவற்றின் பங்குகளின் விலை கடும் சரிவைச் சந்தித்தது. கடந்த ஜனவரியில் வக்ராங்கி நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 400 ரூபாய்க்கும் அதிகமாக மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வந்தநிலையில், தற்போது அதன் விலை ஏறக்குறைய 90 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. ஜூன் 1-ம் தேதியன்று இந்த நிறுவனப் பங்கின் விலை 31 ரூபாயாகச் சரிந்தது.

அதேபோல, மான்பசாந்த் பீவரேஜஸ் நிறுவனத் தின் பங்கு விலை, ஜனவரியில் 440 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், தற்போது அதன் மதிப்பு பாதிக்கும்மேல் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஜூன் 1-ம் தேதியன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 203.05 ரூபாயாகக் காணப்பட்டது.
ஆட்டம் கண்ட அட்லான்டா
இந்த அளவுக்கு ஏற்பட்ட சரிவினால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்குள், இதே காரணத்தினால் அட்லான்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பும் சரிவைச் சந்தித்தது. இந்த நிறுவனத்தின் ஆடிட்டராகப் பணியாற்றிய பிரைஸ் வாட்டர் ஹவுஸ் அக்கவுன்டன்ட்ஸ் நிறுவனம், அதிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்கு விலை 31% சரிவைச் சந்தித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த விலையுடன் ஒப்பிட்டால் 60% சரிவைச் சந்தித்துள்ளது அட்லான்டா. மே-30-ம் தேதியன்று வர்த்தக முடிவில் இந்தப் பங்கின் விலை ரூ.63.85-ஆகக் காணப்பட்டது.
விலகல் ஏன்?
அட்லான்டாவிலிருந்து விலகியது குறித்து பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனம் எழுதியிருந்த கடிதத்தில், தேவையான மற்றும் தொடர்புடைய தகவல்கள் மற்றும் விளக்கங்கள் இல்லாததாலும், வரி விதிப்பு அதிகாரிகளின் முக்கியமான கருத்துகள் என்ன என்பதைத் தெரிவிக்காத காரணத்தாலும் தங்களால் நிறுவனத்தின் மதிப்பீடு குறித்து எந்தவொரு முடிவுக்கும் வர இயலவில்லை. எனவே, அட்லான்டாவின் கணக்குத் தணிக்கைப் பணியி லிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்திருந்தது.
இதேபோன்று வக்ராங்கி நிறுவனம் தொடர்பாக கம்பெனி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்துக்கு, கடந்த ஏப்ரல் 28-ல் கடிதம் எழுதிய பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனம், வக்ராங்கி நிறுவனத்தின் புல்லியன் மற்றும் ஜூவல்லரி பிசினஸ் தொடர்பாகக் கவலை தெரிவித்தி ருந்தது. ஆனால், வக்ராங்கி நிறு வனமோ, தாங்கள் எவ்வித முறை கேடான நடவடிக்கையிலும் ஈடு படவில்லை என்று மறுத்திருந்தது.
வக்ராங்கியின் கதை இதுவென் றால், பழச்சாறு தயாரிப்பு நிறுவனமான மான்பசாந்த் பீவரேஜஸ் நிறுவனம், மே-27-ம் தேதியன்று பங்குச் சந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில், தங்களது அதிகாரபூர்வ ஆடிட்டரான டெலாய்ட் ஹஸ்க்கின்ஸ் அண்டு செல்ஸ் நிறுவனம் திடீரென விலகியதால், மே-30-ம் தேதியன்று நிதி நிலை அறிக்கையை வெளியிடலாமா என்பது குறித்து விவாதிப்பதற்காக நடைபெற இருந்த இயக்குநர்கள் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.
முதலீட்டாளர்கள் உஷார்
ஒரு நிறுவனத்தின் ஆடிட்டர், அந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வெளியாவதற்குமுன் ராஜினாமா செய்வது என்பது சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மட்டுமல்ல, அதன் முதலீட்டாளர் களுக்கும் மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்த ராஜினாமாவில் கம்பெனி நிர்வாக விதிமுறைகள் ஏதும் மீறப்பட்டுள்ளதா என்பதை முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு நபர் அல்லது ஒரு ஆடிட்டிங் செய்யும் நிறுவனத் தின் நபர் அல்லது பார்ட்னர், ஆடிட்டராக நியமிக்கப் பட்ட அல்லது மறுநியமனம் செய்யப் பட்ட தேதியில் 20-க்கும் அதிகமான நிறுவனங்களில் ஆடிட்டராகப் பணியாற்றினால், அவருக்கு அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் கிடையாது என்கிறார் கள் இந்தத் துறை நிபுணர்கள். ஆடிட்டரின் ராஜினாமா, கம்பெனி நிர்வாக விதிமுறைகளை மீறியதாக இல்லை என்றால், முதலீட்டாளர்கள் அதுகுறித்து கவலைகொள்ளத் தேவையில்லை. அதேசமயம், ஆடிட்டருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் இடையே கணக்குகளைத் தணிக்கை செய்வது தொடர்பான கருத்து வேறுபாடுகளாக இருந்து, அதன் காரணமாக ராஜினாமா செய்திருந்தால், ஆடிட்டர்களுடன் முக்கியமான தகவல்களை நிறுவனம் பகிர்ந்துகொள்ளாததும் ராஜினாமாவுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.
“ஆடிட்டர்களை அடிக்கடி மாற்றினாலோ, முந்தைய தணிக்கை அறிக்கையில் ஏதாவது பாதகமான கருத்துகள் இடம் பெற்றிருந்தாலோ, கடன் தவணையைச் செலுத்துவதில் தவறி இருந்தாலோ, பிரச்னை இல்லாத கடன் செட்டில் செய்யப் படாமல் இருந்தாலோ, ரொக்கப் பணவரத்து அதிகமாக இருந்தாலோ, தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டாலோ, அளவுக்கு அதிகமான கடன் இருந்தாலோ, நிதிநிலை அறிக்கைகள் உரிய நேரத்தில் தயாரிக்கப்படாமல் இருந்தாலோ, ஒழுங்குமுறை ஆணையம் அல்லது வரித்துறை அதிகாரிகளால் ஏதாவது நடவடிக்கைக்கு உள்ளாகி இருந்தாலோ அவற்றை முன்னெச்சரிக்கைக்கான அறிகுறிகளாக முதலீட்டாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஆடிட்டர்கள் ராஜினாமா குறித்து முதலீட்டாளர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. இந்த ராஜினாமாவால் பங்குகளின் விலைமீது ஏற்படும் தாக்கம் குறுகிய காலத்துக்கே இருக்கும். ஆனால், நிறுவனத்தின் முக்கியமான தகவல் தொடர்பான ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் ஆடிட்டர்கள் ராஜினாமா செய்தால், முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்றுவிட்டு, வெளியேறுவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள். தற்போதைக்கு, நிறுவனங்களே பங்குச் சந்தைகளுக்குத் தெரிவிக்கும் காரணங்கள் மூலமாகத்தான் இதுபோன்ற ராஜினாமாவுக்கான காரணத்தைத் அறிய முடியும். எப்போதாவது ஆடிட்டர்களே தங்களது ராஜினாமாவுக்கான காரணங்களைத் தெரிவிப்பார்கள். அப்படி இல்லாதபட்சத்தில் செபி போன்ற பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமே, விசாரணை மேற்கொண்டு தகவல் தெரிவிக்கும் வரை முதலீட்டாளர்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
சில நிறுவனங்களிலிருந்து ஆடிட்டர்கள் விலகுவதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என இன்கவர்ன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் சுப்பிரமணியனிடம் கேட்டோம்.
‘‘இதுபோன்று ஆடிட்டர்கள் விலகுவது எந்த நிறுவனத்திலும் ஏற்படலாம். ஆடிட்டர்கள் ராஜினாமா செய்வதற்குக் கணக்கு வழக்குகள் தொடர்பாக நிறுவனங்கள் கொடுக்கும் சில அழுத்தங்கள் காரணமாக இருக்கக்கூடும். நிர்வாகம் சொல்வதற்கேற்றவாறு நிதி நிலை அறிக்கையைக் கொடுக்க மறுப்பதினாலோ அல்லது ஆடிட்டர்கள் சொல்வதை நிர்வாகம் கேட்க மறுப்பதினாலோ இதுபோன்ற ராஜினாமா நிகழ வாய்ப்பு உண்டு.
இத்தனை வருடங்களாகச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையை அளித்த ஆடிட்டரே ராஜினாமா செய்தால், அது முதலீட்டாளர்களிடையே அந்த நிறுவனத்தின்மீது இதுநாள் வரை கொண்டிருந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும். இதுநாள் வரை அளிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை எந்த அளவுக்கு நம்புவது என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடும். அப்படி ஒன்று நிகழ்ந்தால், அது பங்கின் விலையில் சரிவை ஏற்படுத்தவே செய்யும்.
எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்க வேண்டுமானால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்குமுன் நிறுவனத்தின் வரலாற்றை நன்கு ஆராய வேண்டும். நண்பர்கள் சொன்னார்கள் என்றோ அல்லது உறவினர் சொன்னார் என்றோ நன்கு விசாரிக்காமல் ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யக்கூடாது. மேலும், இதுபோன்ற ஆடிட்டர்களின் ராஜினாமா, வாராக் கடன் அதிகரிப்பு போன்ற காரணங்கள் இருந்தாலும் அதுபோன்ற நிறுவனங் களில் முதலீடு செய்யக்கூடாது’’ என்றார்.
இவர் சொல்வதுபடி சிறு முதலீட்டாளர்கள் நடந்துகொண்டால், இதுமாதிரியான பாதிப்புகளில் சிக்கவேண்டிய அவசியமே இருக்காது!
-பா.முகிலன்

பதிவு ரத்து நிறுவனங்கள்... உடனடி விசாரணை!
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசாங்கம், செயல்படாத நிறுவனங்கள் எனச் சொல்லி 2.26 லட்சம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது. அப்படிப் பதிவு ரத்து செய்யப்பட்ட சுமார் 73,000 நிறுவனங்கள் ரூ.24,000 கோடி அளவுக்குத் தொகையைப் பல்வேறு வங்கிகளில் செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ள இந்த நிறுவனங் கள் குறித்த தகவல்கள் முழுமையாகத் திரட்டப் பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தற்போது உடனடியாக 68 நிறுவனங் கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.