நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: லார்ஜ்கேப் பங்குகளுக்கு மாறும் முதலீட்டாளர்கள்!

ஷேர்லக்: லார்ஜ்கேப் பங்குகளுக்கு மாறும் முதலீட்டாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: லார்ஜ்கேப் பங்குகளுக்கு மாறும் முதலீட்டாளர்கள்!

ஓவியம்: அரஸ்

“அவசர வேலையாக டெல்லிக்கு வந்துவிட்டேன். கேள்விகளை அனுப்பவும்” எனக் காலையிலேயே ஷேர்லக்கிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வரவே, நாம் கேள்விகளை அனுப்பி வைத்தோம். சரியாக மாலை ஐந்து மணிக்குப் பதில்களை நம் மெயிலுக்கு அனுப்பி வைத்தார். இனி நம் கேள்விகளும், அவருடைய பதில்களும்...  

ஷேர்லக்: லார்ஜ்கேப் பங்குகளுக்கு மாறும் முதலீட்டாளர்கள்!

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் புதிய சேர்மனை நியமிக்க உள்ளதாமே?

“ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாகம் சாராத  சேர்மனான எம்.கே.சர்மாவின் பதவிக் காலம், ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அந்தப் பதவிக்குப் புதிய நபரை நியமிப்பதற்கான நடவடிக்கையில் அந்த வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வங்கியின் தற்போதைய இயக்குநர்களிலேயே ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதா அல்லது வெளியிலிருந்து ஒருவரை நியமிப்பதா என்பது குறித்த ஆலோசனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பேங்க் ஆஃப் பரோடாவின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.டி.மல்லையா, கடந்த மே-29-ம் தேதியன்றுதான் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப் பட்டார். இந்த நிலையில், அவரது பெயர் தலைவர் பதவிக்கான பரிசீலனைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் தவிர, இயக்குநர்கள் குழுவில் உதய் சிட்டேல், திலீப் சோக்‌ஷி, நீலம் தவான், ராதா கிருஷ்ணன் நாயர், வி.கே.சர்மா (எல்.ஐ.சி ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தின் தலைவர்), லோக் ரஞ்சன் ( அரசால் நியமிக்கப்பட்ட இயக்குநர்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.”

பயோகான் பங்கின் விலை திடீரென ஏறி, இறங்கி இருக்கிறதே?

“பயோகான் மற்றும் அதன் பார்ட்னரான மைலான் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பான ‘பெக்ஃபில்கிராஸ்டிம்’ (Pegfilgrastim) என்ற கேன்ஸர் மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் எதிரொலியாக அந்த நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமையன்று வர்த்தகத்தின் இடையே  6.25% உயர்ந்தது. இது கடந்த  52 வாரங்களில் இல்லாத உயர்வாகும். ஆனாலும், இந்த விலை உயர்வை அந்த நிறுவனத்தினால் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனதால்,  அடுத்த நாள் வர்த்தக முடிவின்போது 7% சரிந்தது.’’

செபியின் கண்காணிப்புப் பட்டியலில் உள்ள பங்குகள் எவை என்பது குறித்த தகவல் கசிந்து விட்டதாமே?

“பங்குச் சந்தையில் தங்கள் நிறுவனப் பங்குகளுக்குச் சாதகமான நிலையைத் திட்ட மிட்டு உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில், பி.எஸ்.இ ‘ஏ’ பிரிவில் வர்த்தகம் செய்யப்படும் முதல்நிலை நிறுவனப் பங்குகள் உள்பட 31 நிறுவனப் பங்குகளைத் தனது கூடுதல் கண்காணிப்பு (Additional     Surveillance Measure -ASM) பட்டியலில் வைத்திருந்தது செபி. இதுகுறித்த அறிவிப்பை மே-31-ம் தேதி, சந்தையில் வர்த்தகம் முடிவடைந்தபின்னர் தனது இணையதளத்தில் வெளியிட முடிவெடுத்திருந்தது செபி. ஆனால், அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, அந்தப் பட்டியல் வெளியே கசிந்துவிட்டது.இதற்கு மும்பை மற்றும் குஜராத்தில் செயல்படும் சில புரோக்கர்களும், முன்னணி பங்கு வர்த்தகர்களும்தான் காரணம் என்று செபி சந்தேகிக்கிறது.

அன்றைய தினம், அதாவது மே 31 அன்று, மும்பை பங்குச் சந்தையில் பாம்பே டையிங்  11.07%), ஃபின்டோடெக்ஸ் கெமிக்கல் (10.95%), திலீப் பில்ட்கான் (9.05%), பட்டர்ஃபிளை காந்திமதி அப்ளையன்சஸ் (5.86%), யுனிப்ளை டெக்கர் (4.97%), மான் இண்டஸ்ட்ரீஸ் (3.36%), எக்ஸெல் இண்டஸ்ட்ரீஸ் (3.25%), ரேடிகோ கெய்தான் (3.15%), இண்டியா கிளைஸ்கோல் (3.07%), ரெய்ன் இண்டஸ்ட்ரீஸ் (2.5%) மற்றும் ஃபோர்ப்ஸ் அண்டு கோ (2%) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உள்பட 12-க்கும் அதிகமான பங்குகள் சரிவைச் சந்தித்தன. இந்தப் பங்குகள் அனைத்தும் செபியின் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவையாகும்.

இந்த நிலையில், இந்தத் தகவல் எப்படிக் கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த செபி உத்தரவிட்டுள்ளது.”

ல‌ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குகளை ஐ.ஐ.எஃப்.எல் நிறுவனத்தின் துணை நிறுவனம் வாங்கியுள்ளதே?


“ஐ.ஐ.எஃப்.எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியா இன்ஃபோலைன் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் நிறுவனம், தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கியின் 1.06 கோடி பங்குகளை அதாவது, 4.13 சதவிகிதப் பங்குகளை மொத்தமாக வாங்கியுள்ளது. பங்கு ஒன்றின் விலை 100.1 ரூபாய் என்ற விலையில் ரூ105.93 கோடிக்கு இந்த வங்கியின் வாங்கியுள்ளதாக  பி.எஸ்.இ வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளது.’’

லார்ஜ் கேப் பங்குகளின்மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

“பேங்க் நிஃப்டி மற்றும் நிஃப்டி விகிதத்தில் சமீபத்தில் காணப்பட்ட ஏற்றம், சிறு முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். அவர்கள் தங்களது மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளை ஒழுங்குபடுத்தி, தங்களது முதலீடுகளில் பெருமளவைத் தேர்ந்தெடுத்த லார்ஜ்கேப் பங்குகளுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இண்டெக்ஸ் அளவுகளையே தங்களது போர்ட்ஃபோலியோ எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவீடாக முதலீட்டாளர் கள் பார்ப்பதால், இது அவர்களைத் தவறாகத் திசை திருப்பிவிடும் என்று முன்னணி பங்குச் சந்தை அனலிஸ்ட்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது ஏற்றத்தில் இருக்கும் பங்குகளைக் காட்டிலும் இறக்கத்தில் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கையே அதிக அளவில் இருப்பதால், அனலிஸ்ட்டுகளின் இந்த எச்சரிக்கை, சந்தையின் போக்கைப் பிரதிபலிப்பதாக உள்ளது. முதலீட்டாளர்கள் இண்டெக்ஸை கவனிப்பதைவிட, தாங்கள் முதலீடு செய்த பங்குகளின் செயல்பாட்டைக் கவனித்து அதற்கேற்ப செயல்படுவதே சிறப்பு.”

இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு பெருமளவு வெளியேறி உள்ளதே?
 
“இந்திய நிதி மற்றும் பங்கு சந்தை களிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள், நடப்பு 2018-ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், சுமார் 30,000 கோடி ரூபாய் (4.4 பில்லியன் டாலர்) அளவுக்குத்  தங்கள் முதலீடுகளை விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 1999-ம் ஆண்டுக்குப்பின்னர், இந்த அளவுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் மொத்தமாக முதலீடுகளை விற்றுவிட்டு வெளியேறியது இதுவே முதன்முறை. 

நிதிச் சந்தையிலிருந்து  4.2 பில்லியன் டாலர் அளவுக்கும், பங்குச் சந்தைகளி லிருந்து 151 பில்லியன் டாலர் அளவுக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்றுவிட்டு வெளியேறி உள்ளனர். இதில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்தான் அதிக அளவு பங்குச் சந்தை முதலீடு அதாவது, 2.2 பில்லியன் டாலர் அளவுக்கான முதலீடு வெளியேறி உள்ளது.’’

எலெக்ட்ரோ ஸ்டீல் பங்குகள்         எஸ்.பி.ஐ-க்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதே?

“எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்துக்கு (ESL) 14,177 கோடி ரூபாய் கடன் சுமை உள்ள நிலையில், தனது கடன் பிரச்னை யைத் தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக அந்த நிறுவனம், சுமார் 7,400 கோடி ரூபாய் மதிப்பிலான தனது 740 கோடி பங்குகளை 26 கடன் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்  ஒதுக்கிக் கொடுத்துள்ளது. அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான வேதாந்தா ஸ்டார் நிறுவனம்தான், இந்தக் கடன் தீர்வுக்கான திட்டத்தைச் சமர்ப்பித்து, இந்த வாரத் தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் முன்வைப்பு கணக்கில் 5,320 கோடி ரூபாயை டெபாசிட் செய்திருந்தது. இதில் 1,765 கோடி ரூபாய் பங்குகளாகவும், 3,555 கோடி ரூபாய் கடனாகவும் வழங்கப் பட்டுள்ளது.

இதற்குத் தேசிய கம்பெனிச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT) ஒப்புதல் அளித்த நிலையில், எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனம் ஒதுக்கிய 740 கோடி பங்குகளில் பெரும்பான்மை பங்குகளை, அதாவது 272 கோடி பங்குகளை, பங்கு ஒன்றின் விலை 10 ரூபாய் என்ற மதிப்பில் எஸ்.பி.ஐ வங்கி பெற்றுள்ளது.’’

கேப்லின் பாயின்ட் லேப் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மூன்று ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளதே!

‘‘இந்தப் பங்கு நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவு சமீபத்தில் வெளியானது. இந்தப் பங்கு நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபமானது 39 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாகக் குறைந்ததால், இந்தப் பங்கு விலையும் கடந்த சில நாள்களாகக் குறைந்தது. ஆனால், இது ஒரு பெரிய காரணமல்ல என்று நினைத்த முதலீட்டாளர்கள் இந்தப் பங்கினை வேகமாக வாங்கத் தொடங்கியதால், பங்கின் விலை உயர ஆரம்பித்தது. தவிர, இந்த நிறுவனத்தின் புரமோட்டர் சி.சி.பார்த்திபன் 10,427 பங்குகளை வாங்கியதைப் பார்த்து மற்றவர்களும் வாங்கத் தொடங்கிய தால், இந்தப் பங்கின் விலை கடந்த மூன்று தினத்தில் 30% உயர்ந்துள்ளது’’ என்றவர், ‘‘எஸ்.ஐ.பி மூலம் பங்குச் சந்தைக்கு வரும் முதலீடு 7,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக் கிறது. இந்தச் சாதனையில் நாணயம் விகடனின் பங்கு இருப்பதை நிச்சயம் மறுக்க முடியாது. வாழ்த்துகள்’’ என்று முடிந்திருந்தது.”  

10 ஆண்டுகள் பாண்ட் வருமானம் உயர்வு!

ரெ
ப்போ விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி புதன் கிழமையன்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதற்கு மறுநாள் வியாழக்கிழமையன்று 10 ஆண்டுக் கால மத்திய அரசு பாண்டுகளுக்கான வருமானம் 7.993%, அதாவது ஏறக்குறைய 8 சதவிகிதத்தில் நிலைகொண்டது. இது, கடந்த டிசம்பர் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட  அதிக உயர்வாகும். அதே சமயம் புதனன்று வர்த்தக முடிவின்போது இது 7.913 சதவிகிதமாக இருந்தது. பாண்டு வருமானம் ஏற்கெனவே அவற்றின் மூன்றாண்டுக் கால உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதில் மேலும் சில அடிப்படை புள்ளிகள் உயர்ந்தால், அது நம்மை 2014 டிசம்பருக்குக் கொண்டு செல்லும். அன்றைய தினம் 10 ஆண்டு கால பாண்டு யீல்டு 8.06 சதவிகிதமாகக் காணப்பட்டது.

வாராக் கடன் வசூல்: பி.என்.பி தீவிரம்!

வை
ர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பி.என்.பி) ரூ.13,416 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய விவகாரம், அந்த வங்கிக்குக் களங்கத்தை ஏற்படுத்தியது. 2017-18-ம் நிதியாண்டில் பி.என்.பி-யின் நிகர இழப்பு ரூ.12,283 கோடி என்ற அளவுக்கு அதிகரித்ததற்கு நீரவ் மோடியின் மோசடியும் முக்கியக் காரணமாக அமைந்தது. மேலும், இந்த வங்கியின் மொத்த வாராக் கடனும் 86,620 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இதனையடுத்து வாராக் கடன் அளவைக் குறைக்கக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிய பி.என்.பி, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் 5,600 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அந்த வங்கித் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.