
சொக்கலிங்கம் பழனியப்பன்

தெருவுக்கு இரண்டு வங்கிகள், குறுக்குத் தெருக்களுக்குள் எல்லாம் ஏடிஎம் மையங்கள் எனக் காலம் மாறிவிட்ட பிறகும், எளிய மக்களின் நம்பிக்கையாக இன்றும் இருப்பது சீட்டுப் பிடித்தல் என்னும் வழக்கம்தான்.
சிறுதொழில் செய்யும் பலருக்கு, சீட்டு பிசினஸ் ஒரு நல்ல கடன் நிறுவனம்தான். காரணம், எந்த டாக்குமென்ட்டுமே இல்லாமல் கடன் கிடைத்துவிடும். வங்கிகளில் சென்று சேமிக்கப் பயப்படுபவர்களுக்கு, இது ஒரு நல்ல முதலீடு. ஏனென்றால், மாதம்தோறும் சேமித்து கடைசியில் சிறிய அளவிலான லாபத்துடன் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதை எடுத்து நடத்துபவருக்கு, இது ஒரு சூப்பர் தொழில். ஏனென்றால், அவருக்கு உரிய கமிஷன்தொகை கிடைத்துவிடும். எப்படிப் பார்த்தாலும் இது நன்மைபயக்கக்கூடியதே.
அப்படி இருக்கும்போது, நாம் அடிக்கடி தினசரிகளில் `சீட்டு மோசடி’ என்ற செய்தியைப் படிக்கிறோமே ஏன்? இதற்கு முக்கியக் காரணம், அரசாங்கத்தால் பதிவுசெய்து இயங்கிவரும் சீட்டு கம்பெனிகளைவிட, பதிவுசெய்யாமல் இயங்கிவரும் சிறுசிறு நிறுவனங்கள்தான். இந்த மாதிரியான சீட்டு நிறுவனங்கள்தான் நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அடிக்கடி மோசடி நடப்பது, பதிவுசெய்யாமல் இயங்கிவரும் நிறுவனங்களில்தான்!

நீங்கள் சீட்டுப் போட விரும்பினால், பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் சீட்டுகளில் சேர்ந்துகொள்ளுங்கள். ஒருசில மாநில அரசுகளும் (கேரளா மற்றும் கர்நாடகா), பல முன்னணி பிரைவேட் சீட்டு நிறுவனங்களும் சீட்டுத் தொழில் செய்துவருகின்றன. சீட்டு நிறுவனங்களுக்கென்று மத்திய அரசாங்கம் தனியே சட்டம் இயற்றியுள்ளது. மாநில அரசுகள், இந்த நிறுவனங்களை நெறிமுறைப்படுத்திக் கண்காணிக்கவும் செய்கின்றன. சீட்டு நிறுவனங்கள், பொதுவாக பிரைவேட் அல்லது பப்ளிக் லிமிடெட் அமைப்பில் இருக்கும் என்பதை நினைவில்கொள்க.
பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பிரச்னையே வராதா? அங்கும் வரலாம். ஆனால், வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அப்படியே வந்தாலும், ஏமாற்றிய நிறுவனங்களுக்கும் புரமோட்டர்களுக்கும் சட்டச்சிக்கல்கள் ஏராளமாக வந்துவிடும். ஆகவே, பதிவுசெய்து இயங்கிவரும் நிறுவனங்கள் சரியாகச் செயல்படும்.
சீட்டில் யாருக்கு லாபம்?
சிறுதொழில் புரிபவர்களுக்கு, சீட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், சுலபமாக லோன் கிடைக்கும். மாதாமாதம் சுலபத் தவணைகளில் சீட்டைக் கட்டிவிடலாம். அடிக்கடி ரொட்டேஷனுக்குப் பணம் தேவைப்படுபவர் களுக்கும் இது உதவியாக இருக்கும். கடைசி மாதம் வரை சேமிப்பவருக்கு, வங்கி சேமிப்புக்கணக்கு, ரெக்கரிங் டெபாசிட்டைவிட நல்ல லாபம் கிடைக்கும். ஆகவே, அவரும் ஹேப்பி!
நான் சீட்டில் சேரலாமா... வேண்டாமா?
கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும், சிபில் ஸ்கோர் இல்லாதவர்களுக்கும் சீட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் தேவையைப் பொறுத்து சீட்டில் சேருவதை முடிவுசெய்ய வேண்டும். ஏனென்றால், லோன் தருவதற்குப் பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இன்றைய தினத்தில் வீடு தேடி வந்து குறைந்த வட்டியில் (உங்கள் சிபில் ஸ்கோரைப் பொறுத்து) கடன் தருவதற்குப் போட்டி போட்டுக்கொண்டி ருக்கின்றன. மற்றொரு பக்கத்தில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு உங்களின் முதலீட்டை வாங்கிப் பெருக்கித்தர உங்கள் வீட்டுக்கதவைத் தட்டிக்கொண்டிருக் கின்றன. இவை இரண்டிலும் நுழைய முடியாதவர்கள், தாராளமாக சீட்டுப் போடலாம்!
-வரவு வைப்போம்...