
சொக்கலிங்கம் பழனியப்பன்
பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்- முதலீட்டு முயற்சிகளில் முன்னோக்கியிருப்பது இதுதான். இந்தியாவில் இருப்பதிலேயே பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளானும் இதுதான். அதேபோல் சட்டரீதியான நன்மைகளும் இதில் அதிகம். இதன் முதலீட்டுக் காலம், 15 ஆண்டுகள். அதற்குப் பிறகும் விரும்பினால் ஒவ்வொரு முறையும் ஐந்தைந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு குடிமகனும் ஒரு பி.பி.எஃப் கணக்கை வைத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. அந்த முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டிக்கும் வரிவிலக்கு உண்டு. முதிர்வின்போது எடுக்கப்படும் தொகைக்கும் வரிவிலக்கு உண்டு. இதை `EEE – Exempt, Exempt, Exempt’ என்று சொல்வார்கள். அதாவது முதலீடு செய்யும்போது, அதிலிருந்து வரும் வருமானம் மற்றும் மெச்சூரிட்டித் தொகைக்கு என மூன்று நிலைகளிலும் வரிவிலக்கு கிடைக்கும். இதுபோல மூன்றடுக்கு வரிவிலக்கு கிடைக்கக்கூடிய முதலீடுகள் இந்தியாவில் வெகுசிலவே. எல்லாவற்றுக்கும்மேல் இது அரசாங்க கஜானாவுக்குச் செல்லக்கூடிய பணம். ஆகவே, `மோசடி நடந்துவிடுமோ!’ என்ற பயம் இல்லாமல் இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
இன்னும் ஒரு பெரிய ப்ளஸ் என்னவென்றால், எந்த நீதிமன்றமும் உங்களின் பி.பி.எஃப் பணத்தை அட்டாச் செய்ய முடியாது. ஆகவே, உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள், பி.பி.எஃப்-ல் நீங்கள் சேர்த்துவைத்துள்ள பணத்தை எடுத்துத் தருமாறு சொல்ல முடியாது.
சரி, வட்டி இப்போது எவ்வளவு?

தற்போது ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி தருகிறார்கள். இந்த வட்டிவிகிதத்தை, சந்தை நிலவரத்தைப் பொறுத்து மத்திய அரசாங்கம் அவ்வப்போது ஏற்றி இறக்கும்.
எவ்வாறு முதலீடு செய்யலாம்?
குறிப்பிட்ட அஞ்சலகங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
முதலீடு எப்படிச் செய்ய வேண்டும்?
வருடத்துக்கு, குறைந்தபட்சம் 500 ரூபாயும் அதிகபட்சம் 1,50,000 ரூபாயும் முதலீடு செய்யலாம். 15 வருடங்களுக்கு முன்னர் கணக்கை முடிக்க முடியாது. மூன்று வருடத்துக்குப் பிறகு லோன் எடுத்துக்கொள்ளலாம். ஏழு வருடத்துக்குப் பிறகு ஒரு பகுதியைத் திருப்பி எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.
குழந்தைகள் பெயரிலும் இந்த அக்கவுன்ட்டைத் திறந்துகொள்ளலாம். ஆனால், கார்டியன் மற்றும் குழந்தை ஆகிய இருவரும் சேர்ந்து அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய்தான் முதலீடு செய்ய முடியும்.
பயம் இல்லாமல், வரி இல்லாமல், வட்டி குறைவாக இல்லாமல் முதலீடு செய்யவேண்டும் என்பவர்கள், இப்போதே பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
- வரவு வைப்போம்...