மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

வேலை ரெடி, நீங்க ரெடியா?

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களே! உங்களில் எத்தனைபேர் உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றால்கூட உங்கள் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, உங்கள் எதிர்கால வாழ்க்கைத்துணை இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள் இல்லையா?

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

வேலையும் வாழ்க்கை துணை போலவே. வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ய எவ்வளவு சிந்திக்கிறோமோ, அதே அளவு எதிர்கால வேலையைத் தேர்வு செய்ய சிந்திக்க வேண்டும். ஏனெனில், நம் வாழ்நாளில் குறைந்தது 35% நேரத்தை வேலையில் செலவிடுகிறோம். பொருந்தாத துணையோடு வாழ்வது எவ்வளவு கடினமோ, அதே அளவு கடினம் பிடிக்காத வேலையில் இருப்பது. வேலையோ, வாழ்க்கைத்துணையோ எது உங்களுக்கு சரிபட்டு வரும், எது சரிபட்டு வராது என்று தெரிந்துகொள்ள, முதலில் நம் தேவை மற்றும் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தொழில் சார்ந்த நம் விருப்பங்களையே தொழிற்துறை உளவியல் அறிஞர்கள் 'வேலைத் தேர்வு’ (Job preferences) என்கிறார்கள். நம் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் காலத்துக்கு ஏற்றமாதிரி மாறக்கூடும் என்றபோதும், சில அடிப்படை விருப்பங்கள் மாறுவதில்லை.

##~##
சரி, இப்போது உங்களுக்கு ஒரு சுயபரிசோதனை கேள்வி. உங்கள் எதிர்கால வேலையில் உங்கள் முதன்மையான எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றி கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவை கீழ்க்கண்ட ஐந்து விஷயங்களில் அடங்கும்.

1. புதிய விஷயங்களைக் கற்று திறன்களை வளர்த்து கொள்ளும் வாய்ப்பு: கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் மட்டுமல்லாமல் புதிய சூழல்களில் புதிய மனிதர்களைச் சந்திக்க வாய்ப்பளிக்கும் வேலைகளும் இத்தகைய தேவைகளுக்கு ஏற்றவை.

2. சுயமாகச் செயல்படக்கூடிய சுதந்திரம்: பாஸ் அடிக்கடி மூக்கை நுழைத்து தொந்தரவு செய்யமுடியாத அதிக நிபுணத்துவம் தேவைப்படும் துறைகளில் இது சாத்தியம். தொழில் முனைவர் ஆவதும் இன்னொரு தீர்வு.

3. அந்தஸ்து மற்றும் அதிகாரம்:  மக்கள் மீது நேரடித் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய துறைகளைச் சேர்ந்த வேலைகள் இதில் வரும். உதாரணம், கல்வி மற்றும் அரசுத்துறை.

4. நட்புச்சூழல்: மனிதர்களோடு பழக வாய்ப்புகள் அதிகம் உள்ள வேலைகள் இதில் பொருந்தும். உதாரணம், மருத்துவம், வங்கி, விற்பனைத் துறை போன்றவை.

5. நிரந்தரத்தன்மை: அதிக மாறுதல் வராத ஸ்திரமான துறைகளில் உள்ள வேலைகள்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

அதுசரி, இந்தப் பட்டியலில் 'நல்ல சம்பளம்’ என்கிற வார்த்தையே இல்லையே! அதுதானே முக்கியம் என்று நீங்கள் கேட்பது நியாயம்தான். சம்பளம் வேலையின் முக்கிய அங்கம்தான். ஆனால், 'கைநிறைய சம்பளம்’ என்பதை வைத்து வேலையைத் தேர்வு செய்வது, வெளி அழகை மட்டுமே வைத்து வாழ்க்கைத்துணையை தேர்வு செய்கிற மாதிரி. வளர்ச்சி, சுதந்திரம் இல்லாத வேலை எவ்வளவுதான் வருமானம் தந்தாலும் சில காலத்திற்கு பிறகு கசக்கவே செய்யும்.

நம் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்ட பின் நாம் பார்க்க வேண்டிய விஷயம், நாம் விரும்புகிற வேலை எந்த அளவுக்கு நமக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதே. இது திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பதைவிட முக்கியமான விஷயம்! இந்த பொருத்தத்தைதான் மனிதவள மேலாண்மை துறையில் 'பெர்ஸன் ஜாப்-ஃபிட்’ (Person-job fit) என்று சொல்வார்கள். இதற்கு குறைந்தது இரண்டு பொருத்தங்கள் மிக அவசியம். அவை..

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

1. ஆளுமைப் பொருத்தம் (Personality fit): ஆளுமை என்பது நம் அடிப்படைத்தன்மை/குணங்களை குறிக்கும். நாம் தேர்வு செய்யும் வேலை நம் அடிப்படைத்தன்மைக்கு ஏற்ற மாதிரி இல்லையென்றால் அதில் நாம் முழுமனதோடு ஈடுபட முடியாது.

ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு படபடப்பாக இயங்குவது சிலரது அடிப்படை ஆளுமைத்தன்மையாக இருக்கும். இவர்களை டைப் ஏ பர்சனாலிட்டிஸ் என்பார்கள். இதுபோன்ற  நபர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து கூர்நோக்குடன் செய்யும் வேலைகளைத் தந்தால், அவர்களால் சமாளிக்க முடியாது. இதற்கு நேர்மாறான குணம் உடையவர்களை டைப் பி பர்சனாலிட்டிஸ் என்கிறோம். இவர்களிடம் நான்கைந்து காரியங்களை (அவை எளிமையானதாக இருந்தால்கூட) தந்தால் அதிக பதட்டம் அடைந்து விடுவார்கள்.

2) உளசார்பு பொருத்தம் (Aptitude fit): ஆப்டிடியூட் என்பதை  உளசார்பு என்று மொழிபெயர்க்கலாம். இது நமக்குள் மெருகேற காத்திருக்கும் திறன்களைக் குறிக்கும். அதாவது நம் ஒவ்வொருவருக்குள்ளும்  வெவ்வேறு திறன்கள் பொதிந்து உள்ளன. அவை பயிற்சி மற்றும் செயல் வாய்ப்புகள் மூலம் மெருகேருகின்றன. வார்த்தைகளை கையாளக்கூடிய திறன், இயந்திரங்களின் அமைப்பைப் புரிந்துகொள்ளும் திறன் என இவை பல வகைப்படும்.

எந்தளவு நம் கொள்கைகளும், மதிப்பீடுகளும் நாம் வேலையில் சேரப் போகும் நிறுவனத்தின் கொள்கை மற்றும் மதிப்பீடுகளோடு ஒத்துப்போகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். அதேபோல் விசுவாசத்திற்கு மட்டுமே பரிசு தரும் நிறுவனங்களில் செயல்நோக்கு உடையவர்கள் வேலை பார்ப்பது கடினம். எனவே, வேலை தேடும்போது இதையும் மனதில் கொள்வது மிக அவசியம்.

(தயாராவோம்)

செவிலியர் படிப்பு!
எப்படி தயாராவது?

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருகிறது செவிலியர் பணி. கொஞ்சம் சேவை மனமும், கை நிறைய சம்பளமும் தரும் செவிலியர் பணி இன்று அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த படிப்பு மற்றும் வேலைவாய்ப்புப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் சென்னை எம்.ஏ. சிதம்பரம் காலேஜ் ஆஃப் நர்ஸிங் கல்லூரியின் டீன் அம்பிகா ரவீந்திரன்.

''நர்ஸிங் படிப்பில் ஸ்கூல் ஆஃப் நர்ஸிங் மற்றும் காலேஜ் ஆஃப் நர்ஸிங் என இரண்டு நிலைகள் இருக்கிறது. ஸ்கூல் ஆஃப் நர்ஸிங் என்பது நர்ஸிங்கில் டிப்ளமோ படிப்பது. டிப்ளமோ இன் ஜென்ரல் நர்ஸிங் என்ற இந்த படிப்பை மூன்றரை வருடங்கள் படிக்க வேண்டும். இந்த படிப்பில் சேர பிளஸ் டூ-வில் அறிவியல் சார்ந்த பாடங்களை எடுத்து படித்திருக்கவேண்டும். இந்த படிப்பு முடித்தால் மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸாக பணிபுரியலாம்.

காலேஜ் ஆஃப் நர்ஸிங் என்பது பி.எஸ்.சி. நர்ஸிங் மற்றும் எம்.எஸ்.சி. நர்ஸிங் படிப்புகளை கொண்டது. பி.எஸ்.சி. படிப்பு என்பது நான்கு வருடங்களும், எம்.எஸ்.சி. படிப்பு இரண்டு வருடங்களும் கொண்டது.  

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மெடிக்கல் பல்கலைக்கழகத்தின் கீழ் 140 நர்ஸிங் கல்லூரிகள் இயங்குகின்றன. இது இல்லாமல் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. இந்த படிப்பில் உடல் பாகங்கள், மனோதத்துவம், மகப்பேறு, அறுவை சிகிச்சை போன்ற மருத்துவத் துறை சார்ந்த படிப்புகள் பயிற்றுவிக்கப்படும்.

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, நூறு சதவிகிதம் உடனடியாகக் கிடைக்க வாய்ப்புண்டு. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் செவிலியர் பற்றாக்குறை அதிகளவில் இருக்கிறது. உள்நாட்டில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, சவுதி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது.

இங்கிருந்து பி.எஸ்.சி. நர்ஸிங் முடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு போய் ஆன்லைன் மூலம் எம்.எஸ்.சி. நர்ஸிங் படித்துக் கொள்ளலாம். டிப்ளமோ நர்ஸிங் முடித்தவர்களும் பி.எஸ்.சி. நர்ஸிங் படிக்கலாம். இது இரண்டு வருடப் படிப்பு. சேவைக்கு சேவையும், சம்பளத்துக்கு சம்பளமும் கிடைக்க நல்ல பணி செவிலியர் பணி'' என்றார்.

-பானுமதி அருணாசலம்