
கோ.சுந்தர்ராஜன் சூழலியல் செயற்பாட்டாளர்
2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
வருடந்தோறும் ஒரு பேரழிவை எதிர்கொண்டுவருகிறது தமிழ்நாடு. பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில்கூட எப்போதாவது நிகழும் இயற்கைப் பேரிடர்கள், கடந்த சில ஆண்டுகளாக வருடாந்தர நிகழ்வாகிவருகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தமிழ்நாடும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் அக்கறை காட்ட வேண்டிய அரசு, எதையுமே செய்யாமல் மௌனமாக இருக்கிறது. காரணம், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உடனடியாகவும் அதிகமாகவும் எதிர்கொள்ளப்போவது எளிய மக்களே. அது பெண்களை பாதிக்கும்; விவசாயிகளை பாதிக்கும்; மீனவர்களை பாதிக்கும்; ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களையே நேரடியாக பாதிக்கும். ஒகியில் தொடங்கி கஜா புயல்வரை ஒரே கதைதான்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் மட்டும்தான் பிரச்னையா? எளிய மக்களின் வலிமையான எதிர்ப்புகளையும் மீறி அரசுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கிற மக்கள் விரோதத் திட்டங்கள் எல்லாம் என்ன? இந்தச் செயற்கைப் பேரிடர்களை எந்த தைரியத்தில் இந்த அரசுகள் உருவாக்குகின்றன?
உப்புக்காற்றில் நச்சை விதைத்த ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டம், ரத்த வரலாறாக முடிந்ததே. அரசின் நடவடிக்கைக்கு எதிராக நம்மால் என்ன செய்ய முடிந்தது? இதோ இப்போது மீண்டும் ஆலையைத் திறக்கப்போகிறார்கள். நீதிமன்றப் பகுப்பாய்விற்கு நிற்கமுடியாத ஆணையின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவைத் தவறாக வெளியிட்டது அரசு. அந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை நாடியது. வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டு அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

பதினேழே வயது நிரம்பிய ஸ்னோலின் உள்ளிட்ட 13 உயிர்களும், வரலாற்றில் நிலைத்துவிட்ட போராட்டமும் எந்த நீதியையும் பெற்றுத் தர முடியவில்லை.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திலாவது மரணங்கள் அரசு மீது ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஆனால், எட்டுவழிச் சாலைக்காக மக்களுக்கு எதிராக அரசே ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும்? மக்கள் எதிர்க்கும் திட்டத்தை அரசு அதிவேகமாகச் செயல்படுத்த முனையும் அநீதிக்கு என்ன பெயர்?
எட்டு வழிச் சாலைக்காக விவசாய நிலங்களைக் காவுகொடுக்க வேண்டிய நிலையில்,`உயிரைக்கூட எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கதறிய விவசாயிகளுக்கு இன்றுவரை என்ன பதில் சொல்லியிருக்கிறோம்? எத்தனை ஆயிரமாயிரம் விவசாய நிலங்களை இழக்கப்போகிறோம் தெரியுமா? வாழையடி வாழையாக வாழ்ந்த எத்தனை குடும்பங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வீசப்போகிறோம் தெரியுமா? வேர் பிடித்து வாழ முடியாத சிமென்ட் சாலைகளில் அவர்கள் அழிவதை வேடிக்கை பார்ப்பதைவிட வேறு என்ன செய்துவிட முடியும் நம்மால்?

எல்லாக் கேள்விகளும் சோர்வை ஏற்படுத்துகின்றன. கடந்த சில வருடங்களாகவே சூழல் சார்ந்த பிரச்னைகள் மக்களிடம் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திவருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பொதுச் சமூகத்தில் சூழல் போராட்டங்கள் அதிகம் விவாதிக்கப்படும் கருப்பொருளாக மாறியிருக்கிறது. இவையெல்லாம் ஒரு நம்பிக்கையை விதைத்தாலும் மனதின் ஓரத்தில் அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
இன்னும் எத்தனை குரல்கள் தொண்டை நீர் வற்றக் கத்த வேண்டும், எளிய மக்களின் அலறல்கள் உங்கள் காதுகளை எட்ட? இன்னும் எத்தனை கைகள் உயர வேண்டும், வானுயுர்ந்த உங்கள் அதிகாரக் கோட்டைகளை அடைய? இன்னும் எத்தனை உயிர்களின் பலி வேண்டும், உண்மையை நீங்கள் உணர?