தொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்!

தொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்!
தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், சென்னையைச் சேர்ந்த லேபிள் பிரின்ட்டிங் தொழில் நிறுவனமான `ஆர்.எஸ் மேனுஃபேக்சரிங்’கின் உரிமையாளர், வித்யா.
அப்பாவின் வருமானத்தில் இயங்கும் சராசரி குடும்பம். அவர், நான்கு மகள்களையும் நன்கு படிக்கவைத்தார். கடைக்குட்டி, வித்யா. இன்ஜினீயரிங் முடித்தவர், சென்னையிலுள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார். ஓராண்டுக்குப் பிறகு திருமணமாகிறது. குடும்பச் சூழல் காரணமாக வேலையிலிருந்து விலகுகிறார். சிறுவயதிலிருந்தே தனக்குள் இருக்கும் சுயதொழில் ஆர்வத்துக்குச் செயல்வடிவம் கொடுக்க நினைத்தார் வித்யா.

`இது சரிவருமா?’ - பெரும்பாலான வெற்றியாளர்களின் தொடக்கப்புள்ளியும் இப்படித்தான் இருந்திருக்கும். வித்யாவுக்கும் அந்த எண்ணம் உண்டாகிறது. `நான் பக்கபலமாக இருக்கிறேன்’ என நம்பிக்கையளிக்கிறார், வித்யாவின் கணவர் இன்ஜினீயர் அன்பழகன். ‘சூப்பர்ல!’ என்பதற்கு முன் ஒரு ட்விஸ்ட்.
`உன் சொந்த திறமையால்தான் பிசினஸில் உயரணும். ஏதாவது சிக்கல்னா மட்டும் நான் வழிகாட்டுவேன்’ என்று நிபந்தனை விதிக்கிறார் கணவர். அதைத்தான் வித்யாவும் விரும்பினார். `என்ன தொழில் செய்யலாம், எப்படிச் செய்யலாம்?’ என ஏராளமான கேள்விகள் எழுகின்றன வித்யாவுக்கு. எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் முடித்தவருக்கு, புரோகிராம் கோடிங் ரொம்பவே அத்துப்படி. `பார் கோடிங்’ தொழில்நுட்பம் வளர்ந்துவந்த காலகட்டம் அது. எதிர்கால டிஜிட்டல் உலகை இவை தன்வசம் கொண்டிருக்கும் என்பதை 2002-ம் ஆண்டிலேயே கணிக்கிறார், வித்யா. கற்ற கல்வி மற்றும் ஓராண்டு பணி அனுபவத்தின் துணையுடன், உற்சாகத்துடன் வீட்டிலிருந்தபடியே லேபிள் பிரின்ட்டிங் தொழிலைத் தொடங்குகிறார். அப்போது வித்யாவுக்கு முதலீடாகத் தேவைப்பட்டது, கணினி மட்டுமே!
``ஓரளவுக்கு ஆர்டர்கள் வந்தன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, பிளெய்ன் லேபிள், டேக் லேபிள், டிசைன் லேபிள், பில் லேபிள்னு பலவற்றையும் சாஃப்ட் காப்பி டிசைன்களாகச் செய்து கொடுத்தேன். டீலராகவும் வேலை செய்தேன். சிறப்பான எதிர்காலத்தை நோக்கி சரியான பாதையில் போகிறோம் என்கிற நம்பிக்கை அதிகம் இருந்தது. ஓய்வுநேரங்களில், பார் கோடிங் தொழில்நுட்பம், லேபிள் பிரின்ட்டிங் மெஷின், கம்ப்யூட்டர் பில்லிங் மெஷின் ஆகியவை இயங்கும்விதம் மற்றும் அவற்றில் உண்டாகும் கோளாறுகளைச் சரிசெய்யும் அளவுக்கு விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, ஆர்டர்கள் அதிகமா வர வர, செகண்டு ஹேண்டு லேபிள் பிரின்ட்டிங் மெஷினை வாங்கினேன். வீட்டிலிருந்தபடியே சாஃப்ட் காப்பி, ஹார்டு காப்பினு ரெண்டு விதமாகவும் லேபிள்களைத் தயாரிச்சு விற்பனை செய்தேன்.
அப்போதான் கம்யூட்டர் பில்லிங் முறை பிரபலமாகுது. அந்த மெஷின் ஆபரேட்டிங் வேலைகள் எனக்குத் தெரியும் என்பதால், `அந்த முறைக்கு மாறினால் வேலைகள் எளிதாகும். அதுகுறித்து உங்களுக்குச் சந்தேகம் இருப்பின் விளக்குகிறேன்’னு நிறைய கடைகளுக்குப் போய் சொன்னேன். பத்தில் ரெண்டு கடைகளில்தான் வரவேற்பு கிடைக்கும். `தொழில்ல இதெல்லாம் சகஜம்தானே’னு தளராமல் அலைவேன். இதனால், நிறுவன உரிமையாளர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது” என்று பாசிட்டிவ் உத்வேகத்துடன், தான் கடந்துவந்த பாதையை நினைவுகூர்கிறார் வித்யா. அப்போது கணவரின் ஆதரவு அவருக்குப் பெரிதாக உதவியிருக்கிறது.
டீலராக பெரிய லாபம் இல்லாதது, வாடிக்கையாளர்களின் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியாமல் போனது, டெலிவரி நேரம் அதிகமாவது உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுகின்றன. `மாத்தி யோசி’த்த வித்யாவுக்கு, புது ஐடியா பிறக்கிறது. இதுவரை கிடைத்த அனுபவத்தில், புதிதாக பிளான்ட் அமைத்துத் தொழிலை விரிவுபடுத்த நினைக்கிறார். 2007-ம் ஆண்டில் கடனுதவிக்காக ஏராளமான வங்கிகளுக்கு அலைகிறார். `நீங்க கேட்கும் லோன் தொகைக்கு ஈடான பிராப்பர்ட்டி இருக்கா?’ என எல்லா வங்கிகளிலும் கேட்கிறார்கள். வித்யாவின் கைவசம் எந்தச் சொத்தும் இல்லாததால், ஐந்தாண்டுகளாக வங்கிக் கடனுக்கு அலைந்தும் பலனில்லை.

கைவசம் இருந்த சேமிப்புப் பணத்தில், செகண்டு ஹேண்டாக ரெசிப்ட் ரோல் ஸ்லிட்டிங் மற்றும் லேபிள் பிரின்ட்டிங் மெஷின்களை வாங்குகிறார் வித்யா. தன்னுடன் சேர்த்து ஆறு ஊழியர்களுடன், 2012-ம் ஆண்டு ஈக்காட்டுத்தாங்கலில் புது பிளான்ட்டைத் தொடங்குகிறார். கடந்த பத்தாண்டுகளில் கிடைத்த அனுபவங்களைக்கொண்டு, தொழிலில் அதிக கவனம் செலுத்துகிறார். முந்தைய நம்பிக்கையான வாடிக்கையாளர்கள் வாயிலாக, புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். இந்த நிலையில் வித்யாவின் கணவர் தன் வேலையிலிருந்து விலகி, தனியாக ஹார்டுவேர் பிசினஸ் ஆரம்பிக்கிறார்.
``தொழிலைப் பெரிய அளவுக்குக் கொண்டு போக, குவாலிட்டியான மெஷின்கள் வாங்க கட்டாயம் லோன் வேணும். ஆனா, அதுக்கு பிராப்பர்ட்டி எதுவுமில்லையே. அதனால, நானும் என் கணவரும் அவங்கவங்க பிசினஸில் இரவு பகலா ஓவர்டைம் பார்த்தோம். எனக்கு இரண்டாவதா பெண் குழந்தை பிறந்திருந்த நேரம். பாப்பாவை அட்டைப்பெட்டி மேல தூங்க வெச்சுட்டு வேலைகளைப் பார்ப்பேன். என் யூனிட்லதான் குழந்தைங்க விளையாடிட்டிருப்பாங்க. அப்படி ஒருமுறை விளையாடும்போது, அடுக்கிவெச்சிருந்த பேப்பர் ரோல் பண்டல்களுக்கு இடையில் என் பொண்ணு தவறுதலா விழுந்துட்டா. தாடை கட்டாகி ரத்தம் கொட்ட, அவளை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடின தவிப்பு இன்னும் மனசுல இருக்கு. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான், ஒரு வழியா நானும் கணவரும் ஒரு பிராப்பர்ட்டி வாங்கினோம்” - உழைப்பில் வாங்கிய முதல் சொத்து பற்றிக் கூறுகையில் வித்யாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்கிறது.
தொழிலை விரிவுபடுத்த நினைக்கிறார் வித்யா. 2014-ம் ஆண்டு, ‘டிக்’ (TIIC) நிறுவனம் மூலம் முப்பத்தேழு லட்சம் ரூபாய் கடனுதவி கிடைக்கிறது. அட்வான்ஸ்டு தெர்மல் டிரான்ஸ்ஃபர் ரிப்பன் மெஷினை வாங்குகிறார். தொழிலாளர்களின் எண்ணிக்கையும் உயர்கிறது. வேலைகள் இன்னும் வேகமெடுக்க, புதுப்புது ஆர்டர்கள் வருகின்றன. 2016-ம் ஆண்டு, மேலும் ஒரு கோடி ரூபாய் கடன் பெறும் அளவுக்குத் தன் தொழிலின் வருமானத்தை உயர்த்துகிறார். ஆட்டோமேட்டிக் பிரின்ட்டிங் மெஷினை வாங்குகிறார். கூடுதலாக இன்னொரு பிளான்ட்டைத் தொடங்கி, பில் பேப்பர் கட்டிங் மற்றும் கார்பன் ஷீட் தயாரிப்புகளையும் தொடங்குகிறார்.
இப்போது பிரின்டிங் லேபிள், பிளெய்ன் லேபிள், டேக் லேபிள், ரெசிப்ட் லேபிள், தெர்மல் டிரான்ஸ்ஃபர் ரிப்பன், க்யூ.ஆர் கோடு பிரின்ட்டிங் லேபிள், பார் கோடு லேபிள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரிக்கிறார். இனி, புராடெக்ட் லேபிள்களையும் தயாரிக்கவிருக்கிறார்.
டெக்ஸ்டைல், மெடிக்கல், ஜுவல்லரி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த, இந்தியாவிலுள்ள 1,500-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் டீலர்கள், வித்யாவின் இன்றைய வாடிக்கையாளர்கள். இதற்கிடையே ஏராளமான சிரமங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றையெல்லாம் சமாளித்து, பாசிட்டிவ் எனர்ஜியுடன் மீண்டுவந்திருக்கிறார். கடன்களையும் அடைத்துவிட்டார். 60 ஊழியர்களுக்கு முதலாளியாக இருக்கும் வித்யா, ஆண்டுக்கு முப்பது கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார்.
``கணவரின் பிசினஸும் சிறப்பாகப் போகுது. இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு. பண நெருக்கடி, ஊழியர் பற்றாக்குறைனு புதுப்புதுப் பிரச்னைகள் வந்துகிட்டேதான் இருக்கும். அதையெல்லாம் உடனுக்குடன் சரிசெய்து, தொய்வின்றி வேலை நடைபெற கவனத்துடன் செயல்படுகிறேன். இப்போ போட்டியாளர்கள் அதிகம் வந்துட்டாங்க. கொஞ்சம் அசந்தாலும் நம் வாடிக்கையாளர்களைப் பறிகொடுக்க நேரிடும். ஒரே நேரத்தில் குடும்பத்தையும் தொழிலையும் பார்த்துக்கிறது சிரமம்தான். ஆனா, ‘மல்டி டாஸ்க் கிங்’ என்பது பெண்களின் பலம். எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு, இன்னும் பெரிய வெற்றியை அடைவேன்!” - உத்வேகத்துடன் புன்னகைக்கிறார், வித்யா.
நாம் வெல்லுவோம்!
-கு.ஆனந்தராஜ்
படங்கள் : தி.குமரகுருபரன்
நான் கற்ற பாடம்
``என்னுடைய 16 வருட பிசினஸ் அனுபவத்துல புறக்கணிப்பு, தோல்வி, கஷ்டம்னு நிறைய பார்த்துட்டேன். ஒருநாள்கூட, `பிசினஸ் சரிவராதோ? பிசினஸை கைவிட்டுடலாமா?’னு நெகட்டிவா நினைச்சதில்லை. இதுவே என் முதல் வெற்றி!”
புதிய தொழில்முனைவோர்களுக்குத் திசைகாட்டி!
புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் (The Tamilnadu Industrial Investment Corporation Ltd - TIIC) மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பற்றி விவரிக்கிறார், அதன் மேலாண் இயக்குநர் ஆர்த்தி, ஐ.ஏ.எஸ்.
• படித்த இளைஞர்களை (முப்பாலர்) தொழில்முனைவோர்களாக ஊக்குவிக்க, புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (The New Entrepreneur cum Enterprise Development Scheme - NEEDS) மூலம் கடனுதவி அளிக்கிறோம். கடன் தொகையில், 25% மானியமாக வழங்கப்படும். மானியத்தொகையின் அதிகபட்ச வரம்பு, முப்பது லட்சம் ரூபாய். கடன் தொகையில் 3% வட்டிக்குறைப்பு சலுகையும் உண்டு.
• பொதுவாக மற்ற நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்கும் கடனுதவித் திட்டங்களில், திட்டமதிப்பீட்டில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு (33.33%) தொழில் முனைவோரின் பங்களிப்புத் தொகையாக இருக்கும். `NEEDS’ திட்டத்தில் குறைந்தபட்சம் 5% தொகையே தொழில்முனைவோரின் பங்களிப்புக்குப் போதுமானது.
• தொழில் தொடங்கிய பிறகு, பொருளாதார ரீதியாகச் சிக்கல்களைச் சந்திக்கும் திறமையான தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, ஆறு மாத வட்டித்தொகையை குறுகிய கால கடனாக (term loan special package) கணக்கில்கொள்வோம்.
• www.tiic.org என்ற இணையதளம் மற்றும் `TIIC HelpDesk’ என்ற ஆப் வாயிலாகவும், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள எங்கள் அலுவலகங்களிலும், 044 - 24331485 என்ற எண்ணில் தொடர்புகொண்டும் மேலதிக விவரங்களைப் பெறலாம்.