மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி!

தொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி!
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி!

தொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி!

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், மதுரையைச் சேர்ந்த கிச்சன் கிளாத் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான, `டி.எம்.இன்டர்நேஷன’லின் உரிமையாளர், தேன்மொழி.

ப்ளஸ் டூ வரை மட்டுமே படித்த இவர், கோடிகளில் டர்ன் ஓவர் செய்யும் தொழில்முனைவோராக உயர்ந்த கதை சுவாரஸ்யமானது!

ஐந்து சகோதரிகளில் மூத்தவர், தேன்மொழி. `எதிர்காலத்தில் ஏதாவதொரு துறையில் பலரும் பாராட்டுற வகையில் முன்னேறியிருப்பேன்’ எனத் தன் பள்ளித் தோழிகளிடம் அடிக்கடி சொல்லுவார். ப்ளஸ் டூ முடித்ததுமே, திருமணமாகிறது. இவரின் தங்கைகள் நால்வரும் பட்டதாரிகள். தன்னால் கல்லூரி சென்று படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இவருக்குள் ஒருபோதும் எழவில்லை. படிப்புக்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உறுதியாக நம்பினார்.

தொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி!

`குடும்பம் ஃபர்ஸ்ட்; லட்சியம் நெக்ஸ்ட் என்றாலும், அதை பெஸ்ட் ஆகச் செய்ய வேண்டும்’ என்பது தேன்மொழியின் கொள்கை. அப்போது மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்புகளுக்கு ஆர்வத்துடன் செல்கிறார். அவை தேன்மொழிக்கு நம்பிக்கையை உண்டாக்குகின்றன.  `மகன்களும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டார்கள். இதுதான் சரியான தருணம்’ என நினைத்தவர், தொழில்முனைவோராக நினைக்கிறார். ஹோட்டல் நடத்திவரும் தேன்மொழியின் கணவர் ஊக்கமளிக்கிறார்.

என்ன தொழில் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? - இந்தக் கேள்விகளுக்கு முன்பு, புதிய தொழிலானது எந்த வகையிலும் குடும்பத்துடனான நெருக்கத்தைக் குறைத்துவிடக் கூடாது என்கிற எண்ணம் தேன்மொழிக்கு உண்டாகிறது. `பிசினஸ் மற்றும் குடும்பம் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள முடியும்’ என்பது தேன்மொழியின் கூற்று. என்ன செய்திருப்பார்?

‘`நிறைய யோசனைக்குப் பிறகு, வீட்டிலிருந்தே ஆன்லைன் மார்க்கெட்டிங் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். அதற்கான பயிற்சிகளைப் பெற்றது தவிர, அத்தொழில் செய்கிற பலரையும் சந்திந்து ஆலோசனை பெற்றேன். அத்தகைய தேடலில் ஈரோடு மற்றும் கரூரிலுள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் தொழில் அறிமுகம் கிடைத்தது. அவங்க உற்பத்திப் பொருள்களை வாங்கி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டிரேடிங் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். இரு மகன்கள் வாயிலாகவும் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்தக் கத்துக்கிட்டேன். அப்புறம் என்ன... 2005-ம் ஆண்டு வீட்டில் இருந்தபடியே ஏற்றுமதித் தொழிலைத் தொடங்கினேன்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆன்லைனில் மெட்டீரியல் சாம்பிள்களைத் தினமும் அனுப்புவேன். பல நிறுவனங்களுக்கு ஃப்ரீ சாம்பிள் மெட்டீரியல்களை கொரியரிலும் அனுப்பிவைப்பேன். இப்படி மாசக்கணக்காக 70 நிறுவனங்களுக்கு விண்ணப்பிச்ச நிலையில, 10 நிறுவனங்கள்ல இருந்துதான் பதில் வந்துச்சு. அதிலும் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம், சாம்பிள் மெட்டீரியலை கொரியரில் அனுப்பிவெச்சு, அதே தரத்தில் தங்களுக்கு உற்பத்திப் பொருள்கள் வேணும்னு கேட்டது. என் உற்சாகத்துக்கு அளவேயில்ல. அவங்க எதிர்பார்த்த தரத்துடன் கூடிய மெட்டீரியலில் புராடக்ட் வாங்க மெனக்கெட்டு அலைந்தேன். டெலிவரியை விரைவாகவும் அனுப்பிவெச்சேன். அந்த நிறுவனம், நான் அனுப்பிவெச்ச புராடக்ட்டின் டெக்னிக்கல் தகவல்களை ஆறு மாதங்களாகக் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அதை நான் சிரமமா பார்க்கலை. புதிய விஷயங்களைத் தெரிஞ்சுக்க உதவும் சிறந்த கற்றல் முறையாக அதை எடுத்துகிட்டு, அவங்க கேட்ட எல்லா தகவல்களையும் கொடுத்தேன்” - மகிழ்ச்சியுடன் கூறுகிறார், தேன்மொழி.

டெலிவரி செலவு உட்பட, அந்த முதல் ஆர்டருக்காக தேன்மொழிக்கு ஐம்பதாயிரம் செலவாகியுள்ளது. லாபமோ, இரண்டாயிரம்தான். ஆனால், அத்தொகையும், தொடர் முயற்சிக்குக் கிடைத்த முதல் ஆர்டரும் அவருக்கு விலைமதிப்பில்லாத நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் ஃபிரான்ஸ் நிறுவனத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் ஆர்டருடன், பாதித் தொகை முன்பணமாகவும் வருகிறது. இரண்டாவது ஆர்டரே லட்சங்களில் என்றதும் தேன்மொழிக்கு உற்சாகம் இரட்டிப்பாகிறது. அந்த ஆர்டரையும் உரிய நேரத்தில் டெலிவரி செய்கிறார். இம்முறை 20% லாபம் கிடைக்கிறது. பிறகு அந்நிறுவனத்துடனான நட்பை பலப்படுத்திக்கொண்ட தேன்மொழி, தொடர்ந்து 14 ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். படிப்படியாகப் பல வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் ஆர்டர்கள் வருகின்றன.

இப்படி, ஏழு ஆண்டுகள் கழிகின்றன. ஒவ்வொரு முறையும் வரக்கூடிய ஆர்டருக்காக உற்பத்தியாளர்களைச் சந்திக்க அலைவது மற்றும் டெலிவரி காலம் அதிகமாவதால் சிக்கல் ஏற்படுகிறது. டிரேடிங் பிசினஸ் (merchant exporter) செய்வதில் ரிஸ்க் குறைவு; கிடைக்கும் லாபமும் குறைவு. `மாத்தி யோசி’த்த தேன்மொழி, `வாடிக்கையாளர்களின் தேவை நல்லா புரியுது. அதை நாமே உற்பத்தி செய்து கொடுத்தால், டெலிவரி நேரம் குறையும்; தரமும் லாபமும் உயரும்’ என நினைக்கிறார். 20 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுதவி பெற்று, 2012-ம் ஆண்டு மதுரை செல்லூரில் சொந்தமாக உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்குகிறார். அப்போது தேன்மொழியுடன் சேர்த்து, 13 பணியாளர்கள் உழைக்கிறார்கள்.

தொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி!

``புதுசா தொழில் தொடங்கும்போது, நிதானமா தொழிலை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுபோகணும், பண விஷயத்துல எந்தச் சிக்கலும் வந்துடக்கூடாதுனு முடிவெடுத்தேன். எனவேதான், செகண்டு ஹேண்டு டெய்லரிங் மெஷின்களை வாங்கினேன். சொந்தமா உற்பத்தி செய்ததால புதுப்புது ஆர்டர்களையும் விரைவாக முடிக்க முடிந்தது. இந்த உற்பத்தியுடன் கூடிய ஏற்றுமதியாளர் (manufacturer exporter) வேலையில சின்னச் சின்ன சறுக்கல்கள் ஏற்பட்டாலும், நல்ல லேர்னிங் புராசஸா இருந்துச்சு. பிசினஸ் தொடங்குவதற்கு முன்பு, நான் தென்மாவட்டங்களைத் தாண்டி எங்கேயும் போனதில்லை. ஆனா, இப்போ தொழில் சார்ந்த நிறைய வெளிநாட்டுப் பயணங்கள் வரை கிடைச்சிருக்கு. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த என் தொழில் சார்ந்த கண்காட்சிகள்ல கலந்துகிட்டு, அதில் கத்துக்கிட்ட விஷயங்களை என் ஊழியர்களுக்கும் சொல்லிடுவேன்’’

- பெருமையுடன்கூறும் தேன்மொழி, தன் தொழிலைப் படிப்படியாக விரிவுபடுத்துகிறார்.

முன் அனுபவத்துடன் தொழிலை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்கிறார். இதனால், பிசினஸில் கடன் சுமை உட்படப் பெரிதாக எந்தச் சிக்கலையும் சந்திக்கவில்லை. இப்போது தரை விரிப்புகள் (மேட்), கிளவுஸ், ஏப்ரன், கிச்சன் டவல், கர்ட்டன், டைனிங்டேபிள் கிளாத், கிளீனிங் கிளாத் உட்பட கிச்சன் பயன்பாட்டுக்கான 15-க்கும் மேற்பட்ட துணி வகைகளை உற்பத்தி செய்கிறார். அவை ஃபிரான்ஸ், லண்டன், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, துபாய் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இப்போது 35 ஊழியர்களுக்கு முதலாளியான தேன்மொழி, பகுதிநேரமாகவும் பலருக்கு வேலைகொடுக்கிறார். ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்பவர், ஏற்றுமதியாளருக்கான, மத்திய அரசின் `ஒன் ஸ்டார் எக்ஸ்போர்ட் ஹவுஸ்’ சான்றிதழையும் பெற்றிருக்கிறார். 

``இப்பவும் குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். தினமும் சமையலில் தொடங்கி வீட்டு வேலைகளை முடிச்சுட்டுதான் ஆபீஸ் போவேன். பிசினஸ்ல எல்லா நிர்வாக முடிவுகளும் என்னுடையதுதான். அதற்கான எல்லா அனுபவங்களும் எனக்கிருக்கு. இன்னும் பிசினஸ்ல உயரணும். அதற்கான தேடல் மற்றும் முயற்சிகள்லயும் கவனம் செலுத்திக்கிட்டு இருக்கேன். குறிப்பா, இந்தியாவில் கிச்சன் சாதன துணி வகைகளின் பயன்பாடு மற்றும் விழிப்பு உணர்வு நடுத்தர மக்களிடம் குறைவாகவே இருக்கு. அதனாலதான் வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்றேன். இந்தியாவிலும் இவற்றுக்கு வரவேற்பு அதிகமானால், இத்தொழிலில் புதிய தொழில்முனைவோர்கள் இங்கு அதிகம் உருவாக வாய்ப்புண்டு” என்கிற தேன்மொழி, சிறந்த நம்பிக்கை நட்சத்திரம்.

- நாம் வெல்வோம்!

-கு.ஆனந்தராஜ் 

படங்கள் : வீ.சதீஷ்குமார்

நான் கற்ற பாடம்

டிகிரிகூட படிக்கலை, நம்மால் என்ன செய்ய முடியும்னு தயங்கியிருந்தால், இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? முடியும்ங்கிற நம்பிக்கையுடனும் அதற்கான தேடலுடனும் ஓடிக்கிட்டே இருந்தால், நிச்சயம் சாதிக்க முடியும். எதற்காகவும் நம்மைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது.

புதிய தொழில் முனைவோர்களுக்குத் திசைகாட்டி!

புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, TFSC (TANSTIA - Tamil Nadu Small and Tiny Industries Association), FNF - Friedrich Naumann Foundation) Service Centre) நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பற்றி விவரிக்கிறார், அதன் தலைவர் அன்புராஜன்.

*திட்டமிடலுடன் அல்லது திட்டமிடல் இல்லாத அதேநேரம் ஆர்வமுள்ள முப்பாலரும் தங்களுக்கு விருப்பமான துறையில் தொழில்முனைவோராக வழிகாட்டுகிறோம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கத் தனிக் கவனம் செலுத்துகிறோம்.

*வயதோ, படிப்போ தகுதியில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைத் தொடங்க நினைக்கும் புதிய தொழில்முனைவோர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். திட்ட அறிக்கை தயார் செய்யவும், வங்கிக் கடனுதவி பெறவும் உதவுகிறோம்.

*மார்க்கெட்டிங் பிரிவில் வெற்றி பெறவும் உதவு கிறோம். மேலும், தொழிலைத் தொடங்கிய பிறகு ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவுகிறோம்.

*சிறந்த தொழில்முனைவோர்களைக் கண்டறிந்து, அவர்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்ல வழிகாட்டுகிறோம். தொழில் வளர்ச்சிக்கு உதவும் இயந்திரங்களைக் கண்டறியும் நபர்களை, தொழில்முனைவோராக உருவாக ஊக்குவிக்கிறோம்.

*கடந்த 10 ஆண்டுகளில், சேவை, உற்பத்தி, விவசாயம் உட்பட 70 துறைகளில், ஒரு லட்சத்து அறுபத்து மூவாயிரம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கிறோம்.

*tfsc.org.in என்ற இணையதளத்தில் விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.