
பாரதி
தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தி நிறுவனமான `ஜெய்நிதி ஆட்டோமேஷன்ஸ்’ஸின் உரிமையாளர், பாரதி.

திருப்பூரைப் பூர்வீகமாகக்கொண்ட பாரதி, இளம்வயதில் தடகள வீராங்கனையாகவும் ஜொலித்திருக்கிறார். அப்போதே இவருக்குள் மன வலிமையும் போராட்டக் குணமும் உறுதியாகியுள்ளது. ஜவுளித் தொழில் செய்துவந்த தாத்தா, தாய்மாமா இருவரின் வீட்டுக்கும் விடுமுறை நாள்களில் அடிக்கடி சென்றிருக்கிறார். அதனால், அத்தொழில்களைப் பற்றி அறிந்துக்கொள்கிறார். பி.ஏ முடித்த தருணம். `சொந்தத் தொழில் செய்து உயர வேண்டும்’ என்ற தன் நீண்டகால கனவுக்கு, எம்.பி.ஏ படித்துச் செயல்வடிவம் கொடுக்க நினைக்கிறார். மேற்படிப்புக்குத் தடைவிதிக்கும் பாரதியின் அப்பா, மகளைத் தன் கார்மென்ட்ஸ் தொழிலில் பணியாற்றச் சொல்கிறார், சாதாரண ஊழியராக! 100 பேர் வேலை செய்துவந்த அந்நிறுவனத்தில், பாரதியும் மாதச் சம்பளம் பெறும் ஓர் ஊழியர். எல்லா டிபார்ட்மென்ட்டுகளிலும் சில மாதங்கள் என்று வேலை செய்கிறார். அந்த இரண்டு ஆண்டுக்கால ஊழியர் அனுபவம்தான், பாரதியின் பிசினஸ் பயணத்துக்கான விதை!
திருமணம், குழந்தைப்பேறு எனக் கோயம் புத்தூரில் இரண்டு ஆண்டுகள் கழிகின்றன பாரதிக்கு. ஜவுளித் தொழில் அவருக்குப் பரிச்சயம் என்பதால், திருப்பூரிலிருந்து ஆயத்த ஆடைகளை வாங்கிவந்து வீட்டிலிருந்தபடியே விற்பனை செய்கிறார். வரவேற்பு அதிகரிக்க, பிறகு பொட்டீக் ஒன்றைத் தொடங்குகிறார். பின்னர் கூடுதலாக டெய்லரிங் யூனிட்டையும் ஆரம்பிக்கிறார். அப்போது பாரதியுடன் சேர்த்து, 13 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பல்வேறு சிரமங்களுக்கு இடையே, இவ்விரண்டு தொழில்களும் லட்சங்களில் வருமானத்துடன் சிறப்பாகச் செயல்படுகின்றன. வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்புக்கு ஒதுக்கி, அதை இக்கட்டான சூழலில் மட்டுமே பயன்படுத்துவதை வாடிக்கையாக்கிக்கொள்கிறார். இப்படியே ஏழு ஆண்டுகள் கழிகின்றன. இதற்கிடையே, உடற்பயிற்சிக்கூடம், தேங்காய் மண்டி, மசாலா பொருள்களுக்கான மாவு ஆலை உள்ளிட்ட தொழில்களையும் ஆரம்பித்தவர், வேலையாட்கள் பற்றாக்குறையால் அத்தொழில்களைக் கைவிட்டிருக்கிறார்.
``என் முன்னாள் கணவர், கணினி பயன்பாட்டின் மூலம் மெஷின் டூல்களைக் கட்டுப்படுத்தும் சிஎன்சி (Computer Numerical Control) ஆட்டோமேஷன் நிறுவனத்தை நடத்திட்டிருந்தார். 2010-ம் ஆண்டு அவருக்கு ஒரு விபத்து ஏற்பட, நிறுவனத்தை அவரால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போ மூணு சிஎன்சி மெஷின்கள் இருந்தன. 15 ஊழியர்கள் இருந்தாங்க. சூழ்நிலை சிக்கலாக, ஆர்டர்களும் குறைய ஆரம்பித்தது. அந்த நிறுவனத்தின் பெயர்ல வாங்கிய லோன் தவிர, 50 லட்சம் ரூபாய் கடனும் இருந்தது. அதையெல்லாம் அடைக்க வேண்டிய நிர்பந்தம். எக்கச்சக்க குடும்பப் பிரச்னைகளால், என் சொந்த பிசினஸில் கவனம் செலுத்த முடியலை. பொறுமையாவும் சரியாகவும் முடிவெடுத்தேன். வேறு வழியே இல்லாம, என் நிறுவனங்களை வித்துட்டேன். படிப்பு பாதிக்கக் கூடாதுனு, மகளை ஊட்டி ஸ்கூல்ல ஹாஸ்டலில் சேர்த்துட்டேன்.

என் முன்னாள் கணவருடைய தொழிலை நடத்தும் பொறுப்பை நான் ஏத்துக்கிட்டேன். அப்போ ஆட்டோமொபைல் துறையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நம்பிக்கை யோடு களமிறங்கினப்போ, ஆறு மாதங்கள் அனுபவப் பாடங்களைத்தான் கத்துக் முடிந்தது. கம்பெனியில தொடர்ச்சியான உற்பத்தி நடக்காததால, என் நகைகளை அடமானம் வெச்சுத்தான் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்துட்டிருந்தேன். நிறுவனம் மெதுவா முன்னேற ஆரம்பிச்சது. விரிவுபடுத்தினால்தான், தொழிலை லாப பாதைக்குக் கொண்டுபோக முடியும்னு தோணுச்சு. அதே நிறுவனத்துல ‘ஜெய்நிதி ஆட்டோமேஷன்ஸ்’னு ஒரு புது சிஎன்சி மெஷின் யூனிட்டை ஆரம்பிச்சேன்” என்கிற பாரதி, குடும்பம் மற்றும் தொழில் இரண்டிலும் வெற்றிபெற கடுமையாகப் போராடியிருக்கிறார். மூன்று ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அலைந்த கதைகள் இருக்கின்றன பாரதியிடம்.
கடும் சிரமங்களுக்கு இடையே சேமிப்புப் பணம் மற்றும் கடனுதவியுடன் ஆறு மாத இடைவெளியில் இரு சிஎன்சி மெஷின்கள் என வாங்குகிறார். ஊழியர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்கிறது. எனினும், அடுத்த மாதம் ஆர்டர் வருமா என்ற உறுதியில்லாத நிலை மற்றும் உற்பத்திப் பொருள்களுக்கான ஊதியம் தாமதமாகக் கிடைப்பது எனச் சவால்கள் ஏராளம். இப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண `மாத்தி யோசி’த்த பாரதி, புதிதாக ஓர் உலோக உருக்கு ஆலை (Foundry) ஆரம்பித்து, தன் நிறுவனத்துக்குத் தேவையான ஜாப் ஆர்டர்களைத் தானே தயாரித்துக் கொள்ள முடிவெடுக்கிறார்.
``புது உற்பத்தி பொருள்களுக்கு வாடிக்கை யாளர் நிறுவனங்களை அணுகியபோது, மறுபடியும் புறக்கணிப்புதான். சலிப்படை யாமல், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனத்துக்கான டிஎஸ் (Technical Specification) சான்றிதழையும், பிறகு ஐஏடிஎப் (International Automotive Task Force) சான்றிதழையும் விரைவாக வாங்கினேன். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த முந்தைய வாடிக்கையாளர் நிறுவனமே என் மேல் நம்பிக்கை வெச்சு, ஆர்டர் கொடுத்தாங்க. தொடர்ந்து புது பிரஷர் டை காஸ்டிங் மெஷின் வந்ததும், கனரக வாகனங்களுக்கான பிரேக் வால்வ் பாகத்தைத் தயாரிக்க ஆரம்பிச்சோம். தொழில் நேர்த்தி, குவாலிட்டி, டைமிங்னு எல்லா வகையிலும் நல்ல பெயர் ஏற்பட, மேற்கொண்டு புதிய ஆர்டர்கள் வந்தன. முந்தைய சிஎன்சி நிறுவனக் கடன்களையும் அடைச்சேன்” என உற்சாகமாகக் கூறுகிறார் பாரதி.
குடும்பச்சூழலில் தினந்தோறும் மனப் போராட்டத்தை எதிர்கொண்டாலும், தொழிலில் சரியாகக் கவனம் செலுத்தியிருக்கிறார் பாரதி. கருத்து வேறுபாடு காரணமாக, 2017-ம் ஆண்டு முன்னாள் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர், அவர் தொடங்கிய சிஎன்சி நிறுவனத்தையும் விலைக்கு வாங்கிக்கொண்டார். பிறகு மறுமணம் செய்துகொண்டவர், இப்போது மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
முன்பு ஜாப் ஆர்டர்களுக்காக நூற்றுக்கணக் கான நிறுவனங்களுக்கு ஏறி இறங்கியவர், இப்போது 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்களை சப்ளை செய்கிறார். 210 ஊழியர்களுக்கு முதலாளியான பாரதி, ஆண்டுக்கு ₹ 30 கோடி டர்ன் ஓவர் செய்கிறார். 2022-ம் ஆண்டுக்குள் ₹ 100 கோடி டர்ன் ஓவர் என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார். சிறந்த தொழில்முனைவோருக்கான இரண்டு தேசிய விருதுகள் உட்பட பலதரப்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவ்வளவு பிரச்னைகளையும் தனி மனுஷியாகவே எதிர்கொண்டு, தொழிலில் வெற்றிபெற்றிருக்கிறார்.
‘`குடும்ப வாழ்க்கைதான் சிக்கலா கிடுச்சு. பிசினஸ்லயும் தோல்விங்கிற சூழல் வந்திடக்கூடாதுனு நினைச்சேன். `இத்துறையைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?’னு ஆர்டர் கேட்டுப்போன இடத்தில் கேட்கப்பட்ட வார்த்தைகள் எனக்குப் பெரிய வலியைக் கொடுத்தது. கடுமையா உழைச்சேன். ஊழியர்கள் எனக்குப் பக்கபலமா இருந்தாங்க. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், டெக்ஸ்டைல் இயந்திரங்கள், எலெக்ட்ரானிக் உபகரணங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட இயந்திரங்களுக்கு மாதம் சராசரியாக 100 டன் உதிரிப்பாகங்களை இப்போ உற்பத்தி செய்றோம். கொங்கு மண்டலத்துல பவுண்ட்ரி யூனிட் தொடங்கிய முதல் பெண் நான்தான். வாழ்க்கையில நிறைய அடிபட்டாலும், விடாமுயற்சி மட்டும்தான் என்னை இப்போவரை இயக்கிக்கிட்டிருக்கு. இப்போ குடும்பம், பிசினஸ்னு ரெண்டுக்குமான நேரத்தைச் சரியா செலவிட முடியுது. என் பொண்ணு மற்றும் கணவரின் ரெண்டு பொண்ணுங்கனு எங்க மூணு மகள்களுக்கும் எதிர் காலத்தில் பிசினஸில் ஜெயிப்பதே இலக்கு. மெக்கானிக்கல் துறையில் பிசினஸ் பண்ற என் கணவரும் நானும் மகள்களுக்கு ஊக்கம் கொடுக்குறோம். ₹ 100 கோடிங்கிற இப்போதைய என் இலக்கில் நிச்சயம் வெற்றி பெறுவேன்!” - அழுத்தமாகக் கூறும் பாரதியின் முகத்தில், விடாமுயற்சியுடன் சாதித்த பெருமித உணர்வு பிரகாசிக்கிறது.
- நாம் வெல்வோம்!
-கு.ஆனந்தராஜ்
படங்கள் : தி.விஜய்
நான் கற்ற பாடம்!

நிறைய பிரச்னைகளால் துவண்டுபோனப்போ, என்னுடைய ப்ளஸ், மைனஸ் ரெண்டையும் துல்லியமாகக் கணிச்சேன். என் பலத்தால், பலவீனத்தைக் கடந்து தொழிலில் கவனம் செலுத்தினேன். எல்லா முடிவுகளையும் நானே எடுத்ததால, உடனுக்குடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிஞ்சது. அதனால் தொழிலில் முன்னேற்றப் பாதைக்கு எளிதில் உயர முடிஞ்சிருக்கு.