
கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 17: பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும்!

இந்த இதழில் நாம் பார்க்கப்போவது, மூத்த குடிமக்களுக்கும் பெண்களுக்கும் நன்மை தரும் திட்டங்கள் பற்றி...
மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், ரிஸ்க் இல்லாதவையாக இருக்க வேண்டும். அதாவது, அசலுக்கு எல்லா வகையிலும் உத்தரவாதம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பணவீக்கம் அளவுக்காவது குறைந்தபட்சம் லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, எளிதில் எடுத்துப் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களையும் கருத்தில்கொண்டு சில திட்டங்களைச் சொல்கிறேன். இவை உங்களுக்கோ, உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ பயன்படலாம்.

சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்
இந்தத் திட்டம் 60 வயதுக்கு மேற் பட்ட மூத்த குடிமக்களுக் கானது. இதில் முதலீடு மற்றும் வருமானத்துக்கு உத்தரவாதம் உண்டு. ரூ.15 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக இதற்கான வட்டி 8.3 சதவிகிதமாக இருந்துவந்தது, கடந்த டிசம்பர் காலாண்டில் 8.7 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இதன் வட்டி விகிதம் அரசால் அடிக்கடி மாற்றப்பட்டாலும், முதலீடு செய்யும்போது என்ன வட்டியோ, அதுவே ஐந்து வருடங் களுக்குத் தொடரும். இதில் செய்யும் முதலீட்டுக்கு 80சி வரிச் சலுகையும் உண்டு.
பிரதம மந்திரி வயவந்தன யோஜனா
இந்தத் திட்டத்தை எல்.ஐ.சி நிறுவனம் வழங்குகிறது. இதில் ரூ.15 லட்சம் அளவுக்கு முதலீடு செய்யலாம். இதற்கு வட்டி 8%. பத்து வருட காலத்துக்கு இது தொடரும் என்பதால், வட்டி இறக்கம் சீனியர் சிட்டிசன்களைப் பாதிக்காது.
பெண்களுக்கான திட்டங்கள்
பெண்கள் என்றாலே ரிஸ்க் இல்லாத முதலீடுகளான எஃப்.டி, ஆர்.டி, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. இளம்பெண்களாக இருக்கும்பட்சத்தில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம். வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் மட்டுமே ரிஸ்க் இல்லாத முதலீடுகளைத் தேர்வுசெய்யலாம்.

சுகன்யா சம்ருதி திட்டம்
பெண் குழந்தைகளுக்கு 10 வயது ஆகும்முன் இந்தத் திட்டத்தில் சேரலாம். 15 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் 250 ரூபாயிலிருந்து 1.5 லட்சம் வரை கட்டலாம். இதற்கு 80சி வரிவிலக்கும் உண்டு. பெண்ணுக்கு 10 வயது ஆகிவிட்டால், அவளே இந்த அக்கவுன்ட்டை நிர்வகிக்கலாம்.
18 வயதானபின் படிப்புச் செலவுக்குத் தேவை என்றால், 50% பணத்தை எடுக்கலாம். அக்கவுன்ட் ஆரம்பித்து 21 வருடங்கள் கழித்து அதை குளோஸ் செய்யலாம். அல்லது அதற்குமுன் அந்தப் பெண்ணுக்கு திருமணமானாலும், அக்கவுன்ட்டை குளோஸ் செய்யலாம்.
மற்ற அரசுத் திட்டங்களைவிட வட்டி அதிகம். வட்டி 8.5%. போடும் பணம், வரும் வட்டி, கடைசியில் பெறும் பணம் என்ற மூன்று முனைகளிலும் வரி கிடையாது. அஞ்சலகங்களிலும் வங்கிகளிலும் இதை ஆரம்பிக்க முடியும்.
ஒரு பயிற்சி: உங்கள் பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ருதி திட்டத்தின்கீழ் பணம் சேர்க்கிறீர்களா? வருடம் எவ்வளவு சேமிக்கிறீர்கள்? உங்களில் எத்தனை பேர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள்?
ப(ய)ணம் தொடரும்
-சுந்தரி ஜகதீசன்
