தொழிலாளி to முதலாளி - 5: தோல்வியிலிருந்து வெற்றி... இப்போ ஆறரை கோடி வருமானம்! - சிந்து

தொழிலாளி to முதலாளி - 5: தோல்வியிலிருந்து வெற்றி... இப்போ ஆறரை கோடி வருமானம்! - சிந்து

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தேங்காய் ஏற்றுமதி மற்றும் செக்கு எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான `அக்ரி ப்ரோ இண்டஸ்ட்ரீஸ்’ (Agri Pro Industries) இணை உரிமையாளர் சிந்து.
பொள்ளாச்சியைப் பூர்வீகமாகக்கொண்ட சிந்துவின் பெரியப்பா, தென்னை நார் தொழில் செய்துவந்துள்ளார். அண்ணனும் சுயதொழில் செய்துவர, சிந்துவுக்கும் தொழில்முனை வோராகும் ஆர்வம் ஏற்படுகிறது. எனவே, பி.டெக் படித்துக்கொண்டே பிசினஸ் பயணத்துக்கான தேடலிலும் ஈடுபடுகிறார். வீடு, கல்லூரி எனக் குறுகிய வட்டத்துக்குள்ளேயே வளர்ந்த நிலையில், வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க நினைக்கிறார். பெற்றோர் ஆசிரியர்களே என்பதால், கல்விக்குத் தடையிருக்கவில்லை. ஆனால், பள்ளியில் தமிழ்வழியில் படித்தவருக்கு ஆங்கில மொழி தடையாக இருந்திருக்கிறது. தோழியின் உதவி, பயிற்சி வகுப்பு என்று அதில் தன்னை மெருகேற்றிக்கொள்கிறார். பொருளாதாரச் சிரமங்களுக்கிடையில் கடன் பெற்று லண்டன் செல்கிறார். அங்கு எம்.எஸ்ஸி., இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் படித்துக்கொண்டே, ஓர் உணவகத்தில் பகுதிநேர பணியிலும் ஈடுபடுகிறார். படிப்பு முடிந்ததும், அந்நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தில் ஓராண்டு வேலை செய்கிறார். சொந்த ஊரில் பிசினஸ் செய்வதே சிந்துவின் இலக்கு என்பதால், ஊர் திரும்புகிறார்.

``வெளிநிறுவனத்துல வேலைக்குப் போகாம, தாமதிக்காம தொழில்முனைவோராக முடிவெடுத் தேன். எம்.எஸ்ஸி படிப்பில் ‘கேஸ் ஸ்டடி’க்கு முக்கியத்துவம் கொடுத்து, தொழில்துறை சார்ந்த பல பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வழிமுறை களைப் படிச்சேன். அதன்படி ‘பிராப்ளம் சால்விங்’ தொடர்புடைய பிசினஸைச் செய்ய நினைச்சேன். இ-காமர்ஸ் தொழில்நுட்பம் வேகமெடுத்த 2009-ம் ஆண்டில், அதுசார்ந்த ஆன்லைன் ரீசேல் இணையதளத்தைத் தொடங்கினேன். என் அண்ணன் பார்ட்னராக வும், ஐந்து ஊழியர்களும் இருந்தாங்க. பிசினஸ் தொடங்கணும், சாதிக்கணும் என்கிற ஆர்வம் மட்டும் போதாது. தொழில் தொடங்கும் முன்பு, நாம தேர்ந்தெடுக்கும் தொழிலில் அல்லது மற்ற தொழிலில் வெற்றிபெற்றவங்களுடைய அனுபவங்களைத் தெரிஞ்சுவெச்சுக்கணும். ஆனா, அதை நாங்க செய்யலை. அதைப் பத்தி பெரிசா யோசிக்கவும் இல்லை. இதுதான் சுயதொழிலில் நான் செய்த பெரிய தவறு.
நம்ம புராடக்ட் மக்களிடம் போய்ச் சேரணும்; மக்கள் நம்மை நோக்கி வரணும். இதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி. ஆனா, இந்த வழியில் நாங்க கவனம் செலுத்தலை. கார்ப்பரேட் நிறுவனம்போல, எங்க வெப்சைட் டெவலப்மென்ட்டுக்கு அதிக உழைப்பையும் பணத்தையும் செலவழிச்சோம். இதனால் தொழில் பெரிசா வளர்ச்சியடையலை.
25 லட்சம் ரூபாய் நஷ்டம். ரெண்டு வருஷத் துடன் அந்தத் தொழிலிலிருந்து விலகினேன். பணப் பிரச்னை ஏற்பட்டது. வருத்தமிருந்தாலும், தொழில்முனைவோர் பாதையிலிருந்து பின்வாங்கலை. அடுத்துச் செல்லவேண்டிய பாதை சரியாக இருக்கணும்னு நினைச்சேன்” என்கிற சிந்து, முதல் தோல்விக்குப் பிறகு போதிய அனுபவம் மற்றும் நிதானத்துடன் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.
`முதன்முறை தோல்வி வந்தால் என்ன... குழந்தை பிறந்ததுமே எழுந்து ஓடிவிடுமா? பிசினஸில் நானும் குழந்தைதான்’ என்று நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார், சிந்து. அத்தருணத்தில், `கல்யாணம் செய்துகிட்டு, தொழிலில் உன் விருப்பம்போலச் செயல்படு’ எனச் சிந்துவின் பெற்றோர் நிபந்தனை விதிக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்டவர், `பிசினஸ் செய்பவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். அவரை நானேதான் தேர்வு செய்வேன்’ என்கிறார். திருமணம் முடிகிறது. இறக்குமதி தொழில் செய்துகொண்டிருந்த கணவர் அருணுடன் இணைந்து, புதிய தொழில் செய்ய நினைக்கிறார். ஏற்கெனவே இருவரும் தங்களது தொழிலில் எதிர்கொண்ட தோல்வி அனுபவங்கள் இனி ஏற்படக் கூடாது என்
பதில் உறுதியாக இருக்கிறார்கள். நிறைய யோசனைகள் மற்றும் தேடல்களை மேற்கொண்டும், சரியான முடிவை எடுக்க முடியவில்லை.
சிந்துவின் மாமனார், விவசாயிகளிடமிருந்து தேங்காய்களைக் கொள்முதல் செய்து அவற்றை மதிப்புக்கூட்டி கொப்பரைத் தேங்காயாக விற்பனை செய்துவந்திருக்கிறார். அத்தொழிலையே இன்னும் பெரிய அளவில் செய்யலாம் என சிந்துவும் அவர் கணவரும் முடிவெடுக்கிறார்கள். ஊழியர்களின் எண்ணிக்கை 25-லிருந்து 100-ஆக உயர்கிறது. ‘எங்களுக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. குறிப்பிட்ட நாள்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு, தேங்காய்களுக்கு ஒப்புக்கொண்ட தொகையை உறுதியாகக் கொடுக்கிறோம்’ என விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். சுற்றுவட்டார மாவட்டங்களிலுள்ள ஏராளமான தென்னை விவசாயிகளைச் சந்தித்து, அவர்களிடமிருந்து தேங்காய்களைக் கொள்முதல் செய்கிறார்கள். தேங்காய்களை எடை மற்றும் வடிவம் வாரியாகப் பிரித்து, பல ஊர்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், கடைகள், மண்டிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். துபாய் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். விற்பனை அதிகரிக்க, இரண்டு ஆண்டுகளில் தொழில் நல்ல வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது.

``அப்போ ஆண் தொழிலாளர்கள்தான் அதிகம் இருந்தாங்க. அவங்கள்ல பலரும் மதுப்பழக்கத்தால் தொழிலில் சரிவரக் கவனம் செலுத்தலை. அவங்க தங்கள் மனைவிகளைக் கொடுமைப்படுத்தும் நிலையும் இருந்தது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, பெண்கள் பொருளாதார ரீதியாக பலம் பெறணும்; குடும்ப நிர்வாக அதிகாரம் அவங்க கையில் இருக்கணும்னு நினைச்சேன். அதனால், பெண் தொழிலாளர்கள் பலரை வேலைக்கு எடுத்தேன். அதேநேரம் தொழிலையும் விரிவுபடுத்த நினைச்சேன்.
இந்த நிலையில், ‘தொழிலில் ரெண்டு பேரும் ஓரளவுக்கு அனுபவம் பெற்றிருக்கோம். இனி தனித்தனியே தொழில் செய்வோம். அவரவர் தொழிலில் முன்னேறலாம்’னு கணவரும் நானும் முடிவெடுத்தோம். பெங்களூரில் ஒரு பிசினஸ் கோச்கிட்ட பயிற்சி எடுத்து, மாஸ்டர் ஆப் பிசினஸ் ஆக்ஸிலரேஷன் கோர்ஸ் படிச்சேன். கூடுதலாக உணவுப் பொருள் சார்ந்த தொழிலை செய்ய நினைச்சு, 12 ஊட்டச்சத்து நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன். சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் பலவற்றிலும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அவை மக்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்குது. அதற்கு மாற்றா, சுத்திகரிக்கப்படாத பிரெஷ் செக்கு எண்ணெய் தயாரிச்சு விற்க நினைச்சேன். பணத்துக்காக பிசினஸ் செய்வதைத் தாண்டி, அதனால ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், மக்கள்னு பலருக்கும் நன்மை கிடைக்கணும்னு நினைச்சேன். அதுதொடர்பாக பலரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பிச்சேன்” என்னும் சிந்து, கடந்த ஆண்டு `பிரஸ்ஸோ’ (Presso) என்ற பிராண்டு பெயரில் செக்கு எண்ணெய் தயாரிக்கும் யூனிட்டைத் தொடங்கியிருக்கிறார்.
இப்போது... தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைத் தயாரித்து தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்கிறார். அவர் கணவர் பருத்தி மதிப்புக்கூட்டல் மற்றும் ஏற்றுமதித் தொழில் செய்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நேரடியாகவும், ‘வொர்க் ஃபரம் ஹோம்’ முறையில் பெண்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கிறார் சிந்து. ஏழு ஐக்கிய அரபு நாடுகளுக்குத் தேங்காய்களை ஏற்றுமதி செய்கிறார். தன் மூன்று தொழில்களிலும் ஆண்டுக்கு ஆறரை கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார். `பிரஸ்ஸோ பிரெனர்ஸ்’ என்ற திட்டத்தின் மூலம், புதிய தொழில்முனைவோர்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
``மாமனார் விவசாய வேலைகளில் கவனம் செலுத்துறார். நானும் என் கணவரும் அவரவர் தொழிலில் கவனம் செலுத்துவதுடன், ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கோம். தேங்காய்களின் விலை மாற்றம் சவாலாக இருந்தாலும், விவசாயிகள் எங்க மேல வெச்சிருக்கும் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாத்திட்டு வர்றோம். இயற்கை விளைபொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அனுபவத்துடன் கூடிய சரியான பாதையில் போயிட்டிருப்பதால, இப்போதைய தொழிலில் பெரிசா நஷ்டங்களைச் சந்திக்கலை. என் தொழிலை நகரப் பகுதிக்கு மாற்றினால் இன்னும் அதிக வளர்ச்சி கிடைக்கும். ஆனால், எங்க தொழிலின் அஸ்திவாரமே கிராமம்தானே? அதனால கிராமத்தைவிட்டும் ஆரோக்கியமான வாழ்க்கையைவிட்டும் விலக விருப்பமில்லை. கிராமப்புறப் பகுதியில் இருந்தவாறே, தொழிலை இன்னும் வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுபோகணும்!’’ - நம்பிக்கையுடன் கூறுகிறார், சிந்து.
- நாம் வெல்வோம்!
-கு.ஆனந்தராஜ்
படங்கள் : ரமேஷ் கந்தசாமி
நான் கற்ற பாடம்!
`சரியான பாதையில் போகிறோமா?’, `வெற்றிகரமான பாதையில் போயிடுவோமா?’ - இத்தகைய பயம் பிசினஸ் பண்றவங்களுக்கு நிச்சயம் ஏற்படும். அதைவிட, என்ன நடந்தாலும் பின்வாங்காம வெற்றி பெற்றே ஆகணும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கணும். அதைவிட, அதற்கான உழைப்பைப் பலமடங்கு கொடுக்கணும். அப்படித்தான் நான் உயர்ந்தேன்.