மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்!

தொழிலாளி to முதலாளி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி ( கு.ஆனந்தராஜ் )

- சகீலா ஃபரூக்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் விழுப்புரத்தில் உள்ள, மண்பாண்ட பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ‘சபானா ஆர்ட் பாட்டரீஸ்’ஸின் உரிமையாளர், சகீலா ஃபரூக்.

நடுத்தரக் குடும்பம். பெற்றோருக்கு ஆறு பிள்ளைகள். இவர்களில் சகீலாவுக்குப் படிப்பைக் காட்டிலும் ஓவியத்தில்தான் ஆர்வம் அதிகம். இந்தப் பெண்ணின் திறமைக்குப் பள்ளி ஓவிய வகுப்பு பெரிதாக உதவியிருக்கிறது. ப்ளஸ் டூ முடித்ததுமே திருமணமாகிறது. கணவரின் ஊரான விருத்தாசலத்தில் அவர் செய்துவந்த பீங்கான் தொழில் நலிவடைய, குடும்பச் சூழல் சிக்கலாகிறது. புதிய தொழில் பயணத்தை நோக்கி, விழுப்புரம் வருகிறார். சுயதொழில் தொடங்கலாம் என வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கிறார்.

தொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்!

சுயதொழில் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார் சகீலா. அங்கு, ‘திறமையும் நம்பிக்கையும்தான் சுயதொழில் செய்ய முக்கியம். படிப்பு இரண்டாம்பட்சம்தான்’ என்று வாழ்ந்து காட்டும் பல வெற்றியாளர்களின் கதைகளைக் கேட்டு புதிய நம்பிக்கை பிறக்கிறது. கணவருக்குப் பீங்கான் வகை கைவினைப் பொருள்கள் செய்யத் தெரியும். அவற்றுக்கு அழகாக வண்ணம் தீட்டத் தெரியும், சகீலாவுக்கு. ‘இதுதான் நம்ம தொழில்’ என முடிவெடுத்து, 1994-ம் ஆண்டு இருவரும் தொழிலைத் தொடங்குகிறார்கள். சில தினங்களிலேயே ஃப்ளெக்ஸ் பேனர் ஓவியம் வரையும் வாய்ப்புவர, கணவர் அத்தொழிலில் கவனம் செலுத்துகிறார். தனியாளாகத் தொழிலைக் கவனிக்கத் தொடங்கிய சகீலாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதிர்பார்த்த வடிவத்தில் பீங்கான் பொருள்களைச் செய்ய முடியவில்லை. பீங்கான் தொழிலுக்கான ஃபர்னஸுக்குப் பதிலாக வேறு ஃபர்னஸ் கொடுத்து ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவருகிறது. வருமானம் இல்லாமல்போக, சில மாதங்கள் வட்டியும் கட்ட முடியாத நிலை. கைவசம் இருக்கும் ஃபர்னஸில், மண்பாண்டங்கள் செய்யலாம் எனத் தெரிந்துகொள்கிறார். ‘மாத்தி யோசி’த்தவர், குயவர்களை நாடி மண்பாண்டங்களைச் செய்யக் கற்றுக்கொள்கிறார்.

“வங்கிக் கடன் பெற, நான் படிச்ச பள்ளியில ப்ளஸ் டூ மார்க் ஷீட் மற்றும் டி.சி வாங்கப் போனேன். `பீங்கான் தொழில் செய்யப் போறேன்’னு சொன்னேன். அதை ஒருவகை மணல்லதான் செய்ய முடியும். ‘மண்ணுல தொழிலா?’ன்னு அங்க சிலர் கிண்டலாகப் பேசினாங்க. ரொம்ப வருத்தப்பட்டு, எப்படி யாவது தொழிலில் சாதிச்சாகணும்னு முடிவெடுத்தேன். விழுப் புரத்தில் வாடகைக்குக் கிடைச்ச காலி நிலத்துல தற்காலிகமான வீடும் ஃபேக்டரியும் அமைச்சு, அங்கிருந்துதான் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். மண்ணை மிதிச்சுப் பக்குவப்படுத்துவது, அலங்காரப் பொருள்கள் செய்வது, உலரவெச்சு பெயின்ட் அடிக் கிறதுன்னு எல்லா வேலைகளையும் செய்தேன். நேசிச்சு செய்ற எந்தத் தொழிலும் கஷ்டமா தெரியாது. தயாரிச்ச பொருள்களை விற்பனை செய்ய நிறைய அலைஞ்சிருக்கேன். சென்னையில் ஒரு கடையில என் மண்பாண்டப் பொருள்களை வாங்கிக்கோங்கனு கேட்டேன். ‘சில பொருள்களை வெச்சுட்டுப் போங்க. 10 நாள்கள் கழிச்சு வாங்க. பொருள்கள் வித்திருந்தா, அதற்குக் பணம் வாங்கிக்கோங்க’னு சொல்லிட் டாங்க. அட்வான்ஸ்கூட கிடைக்கலை. சொன்னதுபோல மீண்டும் போனேன். நாலு பொருள்கள் வித்திருந்துச்சு. அந்த முதல் விற்பனையால், சில ஆயிரம் ரூபாய் கிடைச்சது. அதைக் கையில் வாங்கினப்போ கிடைச்ச மகிழ்ச்சி இருக்கே... அதை உணர்ந்துதான் பார்க்க முடியும்” என்கிற சகீலா, தொடர்ந்து கடின உழைப்பால் வெற்றி பெறத் தொடங்கினார். 

தொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்!

அப்போது சகீலாவோடு, இரண்டு ஊழியர்கள் மட்டுமே. படிப்படியாக ஆர்டர்கள் அதிகம் வர, இரவு பகலாக வேலைகள் நடக்கின்றன. விற்பனை செய்த பொருள்களுக்கு உரிய பணம் தராமல், பலரால் ஏமாற்றங்களையும் எதிர்கொள்கிறார். இப்படி ஆரம்பக் காலங்களில் சகீலா எதிர்கொண்ட சவால்கள், கஷ்டங்கள், புறக்கணிப்புகள் ஏராளம். ஆனாலும், நம்பிக்கையை மட்டும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை. வருமான மெல்லாம் வங்கிக்கடன், ஊழியர்களுக்கான சம்பளத்துக்கே சரியாக இருக்கிறது. அதனால், தொழிலை விரிவுபடுத்த நினைக்கிறார். அப்போதுதான் வெளிநாட்டு ஆர்டர்களும் வரத்தொடங்கின. கைவசம் இருந்த மிகக் குறைவான பணத்தில், ஊருக்கு ஒதுக்குப்புற மான ஓரிடத்தில் ஃபேக்டரியை இடமாற்றம் செய்கிறார். மீண்டும் வங்கிக்கடன் பெற்று, தொழிலை விரிவுபடுத்துகிறார். வேலை யாட்களின் எண்ணிக்கையும் உயர்கிறது. வெளிநாட்டு ஏற்றுமதிக்குச் சிக்கல் ஏற்பட, இந்திய மார்க்கெட்டில் பலம்பெற கவனம் செலுத்துகிறார்.

``ஆரம்பத்தில் பொருளாதார ரீதியா நிறைய சவால்கள் இருந்தாலும், ஒருபோதும் சாலை யோரத்துல கடை போடவேயில்லை. ஏன்னா, 10,000 ரூபாய் மதிப்புள்ள கலைப் பொருளைச் சாலையோரத்தில் வெச்சு விற்றிருந்தால் எத்தனை பேர்  வாங்கியிருப்பாங்க? அதையே ஷோரூம்ல வெச்சு விற்றால், வரவேற்பும் உரிய விலையும் கிடைக்கும். அதேநேரம், எங்கிட்ட பொருள்களை வாங்கி சாலையோரத்தில் தொழில் நடத்துறவங்களை ஊக்கப்படுத்த, விலைகுறைவான பொருள்களையும் தயாரிக்கிறேன்.

தொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்!

குறிப்பா, ஏழு வருஷங்களுக்கு முன்பு, களிமண்ணில் செய்த வாட்டர் பாட்டில்களை விற்க ஆரம்பிச்சேன். அதன் பிறகு அத்தகைய பாட்டில்கள் பிரபலமாகிடுச்சு. கேஸ் அடுப்பு, விறகு அடுப்பு, அவன்னு மூன்றிலும் பயன்படுத்தக்கூடிய த்ரீ இன் ஒன் மண்பாண்ட சமையல் பாத்திரங்களைத் தயாரித்தேன். இவற்றையெல்லாம் இப்போ கணிசமான அளவுக்கு ஏற்றுமதி செய்றேன். இப்படிப் புதுத் தயாரிப்புகளுக்கான யோசனைகளுக்கு, பழைய திரைப்படங்களை அதிகம் பார்ப்பேன். புடவை டிசைன்களைக் கூர்ந்து கவனிப்பேன். இப்படி, என் பார்வையில்படும் வித்தியாசமான உருவம் எதுவாக இருந்தாலும், அதை அடிப்படையா வெச்சு மண்பாண்டங்களில் ஓவியமா வரைஞ்சுடுவேன். காலமாற்றத்துக்கேற்ப என்னையும் தொழிலையும் அப்டேட் செய்துப்பேன். 25 வருஷங்களாகியும் உழைக்க மட்டும் ஒருநாளும் சலிப்படையலை” என்கிற சகீலா, தன் தொழிலாளர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிவருகிறார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரச் சவால் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

நம்முடைய தயாரிப்பு தனித்துவமாக இருந்தால், நாம் எந்த மூலையில் இருந்தாலும் நிச்சயம் வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வருவார்கள். அப்படித்தான் சகீலாவும் வெற்றிபெற்றிருக்கிறார். ஒரு காலத்தில் தொழிலை விரிவுபடுத்த இடமின்றித் தவித்த சகீலா இன்று விழுப்புரத்தில் பிரபலமான தொழில்முனைவோர். கிச்சன் மற்றும் அலுவலகப் பயன்பாட்டுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், கடவுள் சிலைகள், பூக்குடுவைகள் உட்பட 900-க்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரிக்கிறார். வெளிநாட்டு ஏற்றுமதிகளும் நடைபெறுகின்றன. வங்கிக்கடனை முறையே செலுத்தி, தொடர்ந்து வங்கிக்கடன் பெற்றுவருகிறார். ‘கும்ஹாரி’ என்ற பெயரில் விழுப்புரம், சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஐந்து ஷோரூம்களையும் நடத்திவருகிறார். இப்போது 120 பேருக்கு முதலாளியான சகீலா, ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் டர்ன் ஓவர் செய்கிறார்.

தொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்!

``தொழிலில் புதுப் புதுப் பிரச்னைகள் வரும் போதுதான், எனக்குள் இருக்கும் திறமையை உணர்கிறேன். நான் தொழில் தொடங்கியபோது மண்பாண்ட பொருள்களுக்குப் பெரிசா மதிப் பில்லை. இன்னிக்கு வரவேற்பு அதிகமாகிடுச்சு. மண்பாண்டப் பாத்திரங்கள்தான் ஆரோக்கியம்னு பலரும் உணர்ந்திருக்காங்க. இந்த பிசினஸ் வெற்றிக்காக என் பள்ளி நிர்வாகத்தினர் கூட, தொடர்ந்து ஊக்கமும் கொடுக்கிறாங்க. அரசுப் பள்ளியில படிச்ச எனக்கு இங்கிலீஷ் சுமாராதான் தெரியும். அதனால வெளிநாடு மற்றும் வெளிமாநில ஆர்டர்கள், அவர்களுடனான மீட்டிங்ல கலந்துக்கிறதெல்லாம் சவால்தான். இங்கிலீஷ் தெரிஞ்ச ஒருவரின் உதவியை நாடவேண்டியதா இருக்கு. தொழிலுக்கு வந்த பிறகு, சிறந்த தொழில்முனைவோர் ஆகணும்; பலருக்கும் வேலைவாய்ப்புக் கொடுக்கணும்; கார் ஓட்டணும்; இங்கிலீஷ்ல சரளமா பேசணும்னு ஆசைப்பட்டேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி கார் ஓட்டக் கத்துகிட்டேன். என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் கார் ஓட்டக் கத்துக்கொடுத்தேன். இப்போ இங்கிலீஷ் கத்துகிட்டு இருக்கேன். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஷோரூம் தொடங்குவது என் இலக்கு. ஒரு குட் நியூஸ்... அமெரிக்காவில் விரைவில் ஷோரூம் தொடங்கப்போறேன்” - உற்சாகத்துடன் சொல்கிறார் பிசினஸ் நட்சத்திரம் சகீலா!

- நாம் வெல்வோம்!

-கு.ஆனந்தராஜ்

படங்கள்: தே.சிலம்பரசன்

நான் கற்ற பாடம்!

‘இப்போ என்ன தொழில் வெற்றிகரமா போகுது’னு பார்த்து அதையே பலரும் புதிதாகத் தொடங்கறாங்க. அது தவறான நிலைப்பாடு. வெற்றிகரமாகத் தொழில் செய்றவங்களின் அனுபவங்களைப் பெறலாம். பிறகு நமக்கு எது நல்லா தெரியுமோ, நம்மால் முடியும்னு நம்பிக்கை வருதோ... அத்தொழிலைத் தொடங்கி வெற்றி பெறுவதே சரியான வழி. அப்படித்தான், என் ஓவியத் திறமையை அடிப்படையா வெச்சு வெற்றிபெற்றிருக்கேன்.