மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்!

தொழிலாளி to முதலாளி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி ( கு.ஆனந்தராஜ் )

- காயத்ரி ரத்னம் ராஜம்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டைச் சேர்ந்த, கிளவுஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான `க்விக் பேட்ச்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், காயத்ரி ரத்னம் ராஜம்.

பிசினஸில் பிறர் வகுத்த பாதையில் பயணிப்பது பிரதான ரகம். புதிய பாதையை வகுத்து, அதில் வெற்றிபெற்று, மற்றவர்களுக்கு முன்னோடியாக இருப்பது தனி ரகம். அந்த வகையில் காயத்ரி தனியொரு நம்பிக்கை நட்சத்திரம்! நம் நாட்டில் விளையாட்டுப் பிரியர்கள் பலர் உள்ளனர். முறையான பயிற்சி மற்றும் தேவையான உபகரணங்களுடன் புரொஃபஷனலாக விளையாடுபவர்களோ மிகவும் குறைவு. அதனால் கிளவுஸ் உள்ளிட்ட முக்கியமான விளையாட்டு உபகரணங்களின் பயன்பாடு நம் நாட்டில் குறைவாகவே இருக்கிறது. இதை 30 ஆண்டுகளுக்கு முன்பு, தான் விளையாட்டு வீராங்கனையாக இருந்தபோது அனுபவத்தில் உணர்ந்த காயத்ரி, அதற்கான விதையை ஊன்றியிருக்கிறார். ஸ்போர்ட்ஸ் கிளவுஸ் உற்பத்தியில் இந்தியாவில் முன்னோடிப் பாதையை உருவாக்கியிருக்கிறார். இவரின் நிறுவனம் மட்டுமே, நம் நாட்டில் ஸ்போர்ட்ஸ் கிளவுஸ் உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறது.

தொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்!

கல்லூரிக் காலங்களில் ஹாக்கி, டென்னிஸ், நீச்சல் வீராங்கனையாக ஜொலித்த காயத்ரி, பிறகு தனியார் நிறுவனத்தில் ஓராண்டு பணிபுரிகிறார். திருமணம், குழந்தைகள் என்றான நிலையில், ஓய்வுநேரங்களில் கால்ஃப் விளையாட்டில் கவனம் செலுத்துகிறார். இவரின் கணவர் ஸ்ரீநாத் ராஜம், டி.வி.எஸ் குரூப் நிறுவன இயக்குநர்களில் ஒருவர். இவரோ, தன் இளம் வயது கனவுப்படி சுய அடையாளத்துடன் பிசினஸ் துறையில் வெற்றிபெற நினைக்கிறார். விளையாட்டு வீரர்களுக்குப் பிரதானமாகத் தேவைப்படும் கிளவுஸ் தயாரிக்க முடிவெடுக்கிறார். இந்தியாவில் கால்ஃப் விளையாட்டு மெதுவாக வளர்ந்துவரும் நிலையில், இதற்கான கிளவுஸ் தயாரித்தால், இவ்விளையாட்டு மேலும் பிரபலமடையும் என `மாத்தி யோசி’க்கிறார். பயிற்சிபெற்று, கால்ஃப் கிளவுஸ்களைத் தயாரித்து, தன் நண்பர்களுக்குக் கொடுக்க, நல்ல ஃபீட்பேக் கிடைக்கிறது. ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்களைப் பார்த்து, வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஆர்டர் கேட்டு விண்ணப்பிக்கிறார். லண்டன் நிறுவனம் ஒன்று, 700 கால்ஃப் கிளவுஸுக்கான ஆர்டரை காயத்ரிக்குக் கொடுக்கிறது.

20 ஊழியர்களுடன், இந்தியாவிலேயே முதல் ஸ்போர்ட்ஸ் கிளவுஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சென்னையில் தொடங்குகிறார்.

``அந்த நேரத்துல ஹாங்காங்ல நடந்த `இன்டர்நேஷனல் லெதர் ஷோ’வில் கலந்துகிட்டேன். அதில், இம்தியாஸ் பாஷா என்பவர், எனக்கு ஸ்டால் போட இடம் கொடுத்தார். அப்போது, உலகின் பெரிய கால்ஃப் கிளவுஸ் வாடிக்கையாளரான மார்க் ரோபாவைச் சந்திச்சுப் பேசியதில் நிறைய அனுபவங்கள் கிடைச்சது. ‘உங்க தேவைக்கேற்ப, குறைந்த விலையில் தரமான கிளவுஸ்களைச் செய்துகொடுக்கிறேன்’னு அவரிடம் சொன்னேன். சென்னை வந்து என் நிறுவனத் தயாரிப்புகளைப் பார்த்த மார்க் ரோபா, புது ஆர்டர் கொடுத்தார். பிறகு, அவர் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியாக, 1994-ம் ஆண்டு அம்பத்தூர்ல `ஸ்போர்ட்ஸ் கிளவுஸ் இந்தியா லிமிடெட்’ என்கிற என் நிறுவனத்தை விரிவுபடுத்தினேன்.

என் ஊழியர்களுக்கு நானேதான் ஸ்டிச்சிங், கட்டிங், பேக்கிங் உட்பட எல்லா வேலைகளையும் சொல்லிக்கொடுத்தேன். மெல்லியதாகவும் உறுதியாகவும் இருக்கும் இவ்வகை கிளவுஸ்களைத் தயாரிக்கிறது சவாலான வேலை. அதனால, ஆரம்பக் காலத்துல ஒவ்வொரு நாளும் உற்பத்தியில் நிறைய பிரச்னைகளும் சவால்களும் இருந்தது. அதையெல்லாம் கடந்து நிறுவனம் வளர, நிறைய ஆர்டர்கள் கிடைத்தன. பிசினஸ், குடும்பம், மூணு குழந்தைகள், விளையாட்டுனு மல்டி டாஸ்க்கிங் கத்துக்கிட்டேன். என் உலகம் வேகமா இயங்கிச்சு” என்று தன் பிசினஸ் பயணத்தின் தொடக்க காலத்தை நினைவுகூர்கிறார் காயத்ரி.

நிறுவனத்தை விரிவுபடுத்திய சில மாதங்களிலேயே ஊழியர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்கிறது. வேறு பல விளையாட்டுகளுக்கான கிளவுஸ்களையும் தயாரிக்கிறார். பல வெளிநாட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இணைகிறார்கள். விளையாட்டுப் பொருள்களுக்கான உலகின் முன்னணி நிறுவனமான டெக்கத்லான், இந்தியாவில் வளர்ந்துவந்த நேரம்... அது காயத்ரியின் நிறுவனத்துடன் தொழில் உடன்படிக்கைகள் மேற்கொள்கிறது. ஆரம்பத்தில் அந்நிறுவனத்திடமிருந்து இரட்டை இலக்கத்திலேயே ஆர்டர்கள் வருகின்றன. ‘`அதனால என்ன... தொழிலில் யார், எப்போது பெரிய அளவில் உயர்வாங்கனு சொல்ல முடியாது. நம்மை நம்பி வரும் வாடிக்கையாளரின் தேவையை உரிய முறையில் நிறைவேத்திக்கொடுக்கணும்’’ என்று சொல்லும் காயத்ரி, தன் தொழில் வளர்ச்சிக்கான முக்கியக் காரணத்தைப் புரிய வைக்கிறார்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கிளவுஸ் உற்பத்தியாகிறது. இந்த நிலையில், சென்னை மெப்ஸ் பகுதியில் 500 ஊழியர்களுடன் புதிய பிளான்ட்டைத் தொடங்குகிறார். சில ஆண்டுகள் கழிகின்றன. குளிர்காலத்தில் வெளிநாட்டினர் பெரும்பாலும் கால்ஃப் விளையாட மாட்டார்கள். பிரதான வாடிக்கையாளரான ஜெர்மனி நிறுவனம், குளிர்காலத்தில் தங்கள் ஆர்டரைக் கணிசமாகக் குறைத்துக்கொள்கிறது. இதனால் பல மாதங்கள் ஆர்டர் தட்டுப்பாடு ஏற்பட, ஊழியர்கள் பலரும் வேலையைவிட்டுச் செல்லத் தொடங்குகிறார்கள். சிக்கல் பெரிதாகவே, அம்பத்தூர் நிறுவனத்தை மூடுகிறார். பிறகு 2006-ம் ஆண்டு, மெப்ஸ் பகுதியில் இயக்கிவந்த நிறுவனத்தைச் செங்கல்பட்டுக்கு மாற்றுகிறார். அப்போது 200 ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தொழிலில் மிகச் சிக்கலான அந்தச் சூழலை தைரியமாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொண்டிருக்கிறார் காயத்ரி. ஆர்வமுள்ள ஊழியர்களை வேலைக்கு எடுத்து, மாதக்கணக்கில் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார். வேலைகள் வேகமெடுக்க, கூட்டு முயற்சியில் நிறுவனம் மீண்டும் முந்தைய வளர்ச்சி நிலையை எட்டுகிறது. இதைவிடவும் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அதை காயத்ரி எதிர்கொண்ட விதம் அசாத்தியமானது. 

``சிஸ்டம் சரியா இருந்தா போதும்... யார் இருந்தாலும் இல்லைன்னாலும் வேலைகள் சரியாக நடக்கும். நம்பிக்கையான ஊழியர்களை நியமிச்சுட்டு, மீண்டும் ஸ்போர்ட்ஸ்ல கவனம் செலுத்தினேன். தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் (மாஸ்டர்) நிறைய தங்கப்பதக்கங்கள் குவிச்சேன். தவிர, ட்ரயத்லான், சைக்கிளிங் போட்டிகள்லயும் கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கினேன். யோகா வகுப்புகளும் எடுத்துக்கிட்டு, நிறுவன வேலைகளிலும் கவனம் செலுத்தினேன். இந்த நிலையில் சில காரணங்களால், நிறுவனத்தின் வளர்ச்சி குறைய ஆரம்பிச்சது. மாதத்துக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டம் என்கிற நிலை, ஒருகட்டத்தில் நிறுவனத்தை மூடணும் என்கிற அளவுக்கு மோசமாச்சு. இந்த நிலை ஏற்படவா பாடுபட்டேன்?

நஷ்டத்தில் போன கம்பெனியை லாப பாதைக்குக் கொண்டு போகணும்; ஊழியர்கள் கவலையில்லாம வேலை செய்யணும். இதுதான் என் ஒரே குறிக்கோளா இருந்தது. விளையாட்டுகளில் கவனம் செலுத்துறதை விட்டுட்டு, நிறுவனத்திலேயே இருந்து ஊழியர்களை ஊக்குவிச்சேன். அவங்களும் சிறப்பா செயல்பட்டாங்க. வருடம் முழுக்கவே வேலை நடக்கிற மாதிரி புதுப்புது ஆர்டர்களை வாங்கினேன். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை, ஊழியர்களின் மகிழ்ச்சியைப் பார்த்தே கணிச்சுடலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். மீண்டும் கூட்டுமுயற்சி சிறப்பான பலனைக்கொடுக்க, சில ஆண்டுகளில் நிறுவனம் வேகமா லாப பாதையை நோக்கி வளர்ந்தது” என்கிற காயத்ரி, ஊழியர்களின் நலனுக்காகச் செய்த விஷயங்கள் பாராட்டுக்குரியவை.

ஊழியர்களை அழைத்துவர வாகன வசதி, `கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி’ திட்டத்தின் கீழ் ஊழியர்களின் 700 குழந்தை களுக்கு இலவச டியூஷன் வகுப்பு, தினமும் 25 ஊழியர்களுக்குத் தானே யோகா சொல்லிக் கொடுப்பது, ஆங்கில வகுப்பு எனப் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறார் காயத்ரி. இதனால் ஊழியர்களுக்கும் முதலாளிக்குமான உறவு பலமாகியுள்ளது.

சைக்கிளிங், குதிரைப் பயிற்சி, ஓட்டப் பந்தயம், வெயிட் டிரெய்னிங், மாரத்தான், குளிர்கால பயன்பாடு மற்றும் மொபைல் டச் ஸ்கிரீன் கிளவுஸ் உட்பட 20 வகையான கிளவுஸ்களைத் தயாரிக்கிறார். மொத்தமுள்ள 1,000 ஊழியர்களில், 800 பேர் பெண்கள். ஆண்டுக்கு 60 கோடி ரூபாய்க்கும் அதிக டர்ன் ஓவர் செய்கிறார். நாள்தோறும் 20,000 கிளவுஸ்களைத் தயாரிக்கிறார். தொடர்ந்து ஆர்டர்கள் அதிகம் வருவதால், புதிய பிளான்ட்டைத் தொடங்கவிருக்கிறார்.

``ஒரு நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்கு வருமானமும் லாபமும் முக்கியம்தான். அதுக்காக, சுயநலமா `நான் வளர்ந்தா போதும்’னு ஊழியர்களைக் கரும்புச் சக்கையைப் பிழியுற  மாதிரி கடுமையா வேலைவாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. வேலை நேரத்துல மகிழ்ச்சியா, சரியா வேலை செய்யணும். அப்படி நடந்தாலே நிறுவனம் தானா வளரும். என் கணவரின் ஊக்கத்தால் வேலை, குடும்பம், யோகா வகுப்புகள்னு இப்போதும் மல்டி டாஸ்க்கிங்ல
சிறப்பா கவனம் செலுத்தறேன்.

பிசினஸ்னா நிச்சயம் வெற்றி யும் தோல்வியும் கலந்துதான் இருக்கும். இதைத்தான் தொழில்முனைவோராகும் முன் என் மனசுல பதியவெச்சுக்கிட்டேன். வெற்றி, தோல்வி ரெண்டையுமே ஒரே கண்ணோட்டத்துல பார்க்குறதால, எல்லா சூழல்களையும் எளிதில் எதிர்கொள்ள முடிஞ்சது. இனியும் சவால்களை எதிர்கொள்ளத் தயார்” எனக் கூறும் காயத்ரி, தன் தொழிலில் முன்னோடியாகத் தொடந்து நடைபோடுகிறார்.  

- நாம் வெல்வோம்!

- கு.ஆனந்தராஜ்,  படங்கள்: சி.ரவிக்குமார்

நான் கற்ற பாடம்!

தொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்!

ணவர் பெரிய பொறுப்பில் இருக்கார்னு நான் வீட்டுக்குள் இருந்திருந்தால், இன்னிக்கு 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்க முடியுமா? சவால்களை எதிர்கொண்டால்தான் சாதனைகளுக்கு வழி பிறக்கும். டி.வி.எஸ் பிசினஸ் குடும்பத்தில், இன்னிக்கு நானும் பிரபலமான பிசினஸ் வுமன். இது, சுய அடையாளத்துடன் பெற்ற வெற்றி!”