ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான சி.ரங்கராஜன், சென்னை பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்தார். மாணவப் பத்திரிகையாளராகிய நான் விகடனுக்காகப் பேட்டி வேண்டும் என அவரைச் சந்தித்தேன். பணமதிப்பிழப்பு தொடங்கி ரிசர்வ் வங்கியை மையமாக வைத்து அண்மையில் எழுந்த சர்ச்சைகள் வரை அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தேன். விரிவாகவேப் பேசினார்...
``பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியான முடிவா... அதனால் எத்தகைய தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன?''
``கறுப்புப் பணத்தை ஒழிப்பது உள்ளிட்ட சில நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறானதல்ல. ஆனால், அதைச் செயல்படுத்திய விதம்தான் பேரழிவில் முடிந்துள்ளது. போதுமான பணம் புழக்கத்தில் இல்லாமல் போனது. இது குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அத்துடன் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பணத்தை மாற்றிக்கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசமும் மிகக் குறைவு.
சரியான நோக்கத்தை அடைந்திருக்கவேண்டிய ஒரு நடவடிக்கை, சரியான நடைமுறைப்படுத்துதல் இல்லாமல் போனதால், அதன் குறைந்தபட்ச நோக்கத்தைக்கூட அடைய முடியாமல் போய்விட்டது. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சிறிய முன்னேற்றம் அடைந்திருப்பதாகக் கூறிக்கொண்டாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லாமலே அதை அடைந்திருக்க முடியும். எனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒரு பேரழிவு.''
``ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
``உர்ஜித் பட்டேல் ராஜினாமா நிச்சயம் சந்தையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். இது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய ஒன்று. ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் பல நேரங்களில் வேறுபாடுகள் இருந்துள்ளன. அதை எவ்வாறு தீர்க்கிறோம் என்பதில்தான் நிர்வாகத்திறன் உள்ளது. சில சமயங்களில் அவை உர்ஜித் பட்டேல் விவகாரத்தைப் போன்று பூதாகரமாகின்றன. 1950-களில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த பெனகல் ராமாராவ், நேரு அரசிடம் முரண்பட்டு ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகான காலங்களில் ரிசர்வ் வங்கியின் பங்கும் அதன் சுதந்திரமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
என்னுடைய காலத்தில் அரசு, ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளது. அரசாங்கங்கள், வளர்ச்சியை மையப்படுத்திச் சிந்திக்கும். ரிசர்வ் வங்கி, வளர்ச்சியுடன் நிலைத்தன்மையையும் மையப்படுத்திச் சிந்திக்கும். இதனால் முரண்பாடுகள் எப்போதும் இருக்கும். அவற்றைச் சமாளிக்க வேண்டும்.''
``ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு 28,000 கோடி ரூபாய் டிவிடென்ட் தொகை அளிக்க முடிவெடுத்திருப்பது சரியானதா?''
``இது வெறும் இடைக்கால நிதிதான். ஒட்டுமொத்தமாக எவ்வளவு நிதி கொடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே இந்த முடிவு சரியானதா, இல்லையா என்கிற முடிவுக்கு வரமுடியும். காலப்போக்கில் ரிசர்வ் வங்கி இடைக்கால நிதி மற்றும் ஒட்டுமொத்த நிதி வழங்குவதற்கான தெளிவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். உண்மையில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம், ஒட்டுமொத்தமாக எவ்வளவு நிதி அளிக்கப்படுகிறது என்பதைத்தான். எனவே, இதில் கவலைகொள்ள பெரிதாக ஒன்றுமில்லை.''
``வாராக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்னென்ன... அதை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன?''
``வாராக்கடன் அதிகரிப்பதற்கு, பல காரணங்கள் உள்ளன. முதலில் அனைத்து வங்கிகளும், 2005 - 2008 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் நிலவிய சீரான 9 சதவிகித வளர்ச்சி என்பது நிலைத்திருக்கும் என்றே நம்பியிருந்தன. அந்தக் காலகட்டத்தில் கடன் வழங்குவதில் அவர்கள் கையாண்ட நடைமுறை என்பது சரியானதாக இருந்தது. ஆனால், பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதம் குறைந்தபோது, நிலைமை தலைகீழாக மாறியது. அத்துடன் மற்ற விஷயங்களும் சேர்ந்துதான் வாராக்கடன் அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளன.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள திவால் சட்டத்திருத்த மசோதா, ஒரு நல்ல முன்னெடுப்பு. இதன்மூலம் நேர்மறையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீண்டகாலப் பலன்களை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்திய அரசும் வங்கிகளுக்குத் தேவையான மூலதனத்தை அளிக்க வேண்டும். அதேசமயம் கடனைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்த வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒருசேர நடந்தால், வாராக்கடன் சிக்கலிலிருந்து வங்கிகள் மீண்டு வரலாம்.''
``வங்கித் துறையில் தற்போது எத்தகைய சீர்திருத்தங்கள் தேவை?''
``இரண்டு விஷயங்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. ஒன்று, கடன் வழங்கும் செயல்முறைகளை மேம்படுத்த வேண்டும். இரண்டாவது, வங்கி நிர்வாகக் குழுக்களை அதன் முடிவுகளுக்குப் பொறுப்பாக்க வேண்டும். இவை மட்டுமல்லாமல், வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளையும் மேம்படுத்தி, சரியான நபர்களை வங்கியை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தவேண்டும். சரியான நபருக்குக் கடன் கொடுப்பதை, வங்கிகள் தீர்மானிப்பதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும். வங்கி நிர்வாகத்தின் தரத்தை உயர்த்துவதும், சரியான நபர்களை பணியமர்த்துவதும், சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றப்படுவதும்தான் இப்போதைக்கு அவசியம்.''
``ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கொடுத்த பண மோசடியில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகள் பட்டியலை, மத்திய அரசு ஏன் வெளியிடத் தயங்குகிறது?''
``ரகுராம் ராஜன், நான் உள்ளிட்ட பலருமே பொருளாதாரத்தைச் சீரமைக்க பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். ஆனால், அவையெல்லாம் பொதுத்தேர்தலுக்குப் பிறகு அமையும் அரசாங்கத்தின் கைகளில்தான் இருக்கின்றன. அதுவரை பெரிய அளவிலான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது.''
``இந்தியப் பொருளாதாரம், கடந்த 5 ஆண்டுகளில் எத்தகைய நிலையில் உள்ளது?''
``சமீபத்திய பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவதற்காகக் கையாளப்பட்டுள்ள நடைமுறை, கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி அதிகரித்திருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், இதே நடைமுறையைக் கடந்த காலத்துக்குப் பொருத்திப்பார்ப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் உள்ளதைச் சரியென எடுத்துக்கொண்டாலும்கூட கடந்த காலத்துக்கு இதே நடைமுறையைப் பொருத்திப்பார்க்க முடியாது.''