மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி - 9: அன்று முதலீடு ஒரு லட்சம்... இன்று 42 கிளைகள்... ஆண்டு வருமானம் ரூ.100 கோடி!

தொழிலாளி to முதலாளி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி ( கு.ஆனந்தராஜ் )

தொழிலாளி to முதலாளி - 9: அன்று முதலீடு ஒரு லட்சம்... இன்று 42 கிளைகள்... ஆண்டு வருமானம் ரூ.100 கோடி! - லதா மோகன்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த ‘ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட்’ (Spalon India Pvt Ltd) நிறுவனத்தின் இயக்குநர் லதா மோகன்.

38 ஆண்டுகளுக்கு முன்பே பியூட்டி பார்லர் தொழிலை பிரபலமாக்கும் முயற்சியில் இறங்கியவர் லதா. இவரின் வெற்றிப் பயணம் `பியூட்டி’ஃபுல்லானது. இவரின் அப்பா, புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

தொழிலாளி to முதலாளி - 9: அன்று முதலீடு ஒரு லட்சம்... இன்று 42 கிளைகள்... ஆண்டு வருமானம் ரூ.100 கோடி!

18 வயதில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே லதாவுக்குத் திருமணமாகிறது. மரைன் இன்ஜினீயரான கணவருடன் உலகம் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு, அழகுக் கலையில் ஆர்வம் அதிகரிக்கிறது. சிங்கப்பூரில் மூன்று மாத கோர்ஸ் படித்து, தன் திறனை வளர்த்துக்கொண்டிருக்கிறார். இத்துறையில் தொழில் முனைவோராகச் சாதிக்க நினைத்தவருக்கு, முதல் எதிர்ப்பு வீட்டிலிருந்தே கிளம்பியிருக்கிறது. அதையெல்லாம் சமாளித்தவர்,  தன் நகைகளை அடகுவைத்ததுடன், சித்தியிடம் 20,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில், 1981-ம் ஆண்டு வெறும் 120 சதுரஅடியில் `கன்யா’ என்ற பெயரில் பியூட்டி சலூனைத் தொடங்குகிறார். இதுவே, சென்னையில் பெண்களுக்காகப் பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட முதல் பியூட்டி சலூன்.

பாட்டி வைத்திய முறையில் தங்களை அழகுபடுத்திக்கொண்டிருந்த பெண்கள், பியூட்டி பார்லர்களுக்குச் செல்வதைத் தர்மசங்கடமாக நினைத்த காலம் அது. ஆனால், அந்நிலையை மாற்றி, இத்தொழிலை இன்று தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிரபலப்படுத்தியதில் லதாவின் பங்கு முக்கியமானது.

தொழிலாளி to முதலாளி - 9: அன்று முதலீடு ஒரு லட்சம்... இன்று 42 கிளைகள்... ஆண்டு வருமானம் ரூ.100 கோடி!

``அதிகபட்ச உழைப்பைக் கொடுப்போம்; தோல்வியைப் பத்தி முன்கூட்டியே யோசிக்க வேண்டாம்னு நினைச்சுதான் பிசினஸைத் தொடங்கினேன். அப்போ ஃபேஷியல் வேலைகளை நான் பார்த்துக்க, மற்ற வேலைகளுக்கு ரெண்டு பெண் ஊழியர்கள் இருந்தாங்க. ஆரம்பத்துல கஸ்டமரே வராம, ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க சிரமப்பட்டிருக்கேன். கஸ்டமர்கள் எண்ணிக்கை மெதுமெதுவாதான் அதிகரிச்சது. வெளியூர்களுக்குப் போய் புதுப் புது யுக்திகளைக் கத்துகிட்டு வந்து, அத்துடன் என்னுடைய கிரியேட்டிவிட்டியையும் சேர்ப்பேன். வித்தியாசமான ஹேர் கட், கர்லிங், டையிங், பெடிக்யூர், மெனிக்யூர்னு புதுமையான வேலைகளைச் செய்தோம். ஒரு கஸ்டமர்கிட்டயிருந்து மொத்தமா ஐம்பது ரூபாய் வருமானம் கிடைச்சாலே ரொம்பச் சந்தோஷமாயிருக்கும்.

நம்பிக்கையையே மூலதனமாக்கி எந்த விளம்பரமும் செய்யாம வளர ஆரம்பிச்சோம். ஒரு கட்டத்தில் கல்லூரி மாணவிகள், பணிக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள்னு நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் எங்க வாடிக்கையாளர் ஆனாங்க. `நாம சரியான பாதையிலதான் போறோம்’னு நம்பிக்கை ஏற்பட்டது. அதோடு, சித்திகிட்ட வாங்கின கடனைத் திருப்பிக்கொடுக்கவும் முடிந்தது” என்று பெருமிதத்துடன் சொல்லும் லதா, தொழில் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சென்னை மற்றும் பெங்களூரில் புதிய கிளைகளை ஆரம்பித்திருக்கிறார்.

இந்த நிலையில் இவருடன் மகன் விக்ரம் மோகனும், மகள் பிரார்த்தனாவும் கரம்கோத்து பிசினஸ் பயணத்துக்கு வலிமை கூட்டியிருக்கின்றனர். பெண்களுக்கான `கன்யா’ பிராண்டு பியூட்டி சலூன்கள் தனியாகச் செயல்பட, 2004-ம் ஆண்டு, `பவுன்ஸ் ஸ்டைல் லவுஞ்ச்’ என்ற புதிய பிராண்டு பெயரில் இருபாலருக்குமான பியூட்டி சலூன்களைத் தொடங்கியிருக்கிறார்கள். சில ஆண்டுகளிலேயே மகள் வெளிநாடு செல்ல, அம்மாவும் மகனும் தொழிலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

இச்சூழலில் போட்டியாளர்கள் அதிகளவில் உருவானாலும் தங்கள் வெற்றியை உறுதியாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் லதா. புதிதாக `ஒரைசா டே ஸ்பா’ என்ற புதிய பிராண்டு பெயரில் இருபாலருக்கான, நவீன தொழில்நுட்பங்களுடன்கூடிய பியூட்டி சலூன்களைத் தொடங்கியிருக்கிறார். இதற்கிடையே, அழகுக்கலைத்துறையில் புகழ்பெற்ற ஷானாஸ் உசேன் நிறுவனத்துடன் சில ஆண்டுகள் கூட்டு முயற்சியுடனும் தொழிலை நடத்தியிருக்கிறார்.

தொழிலாளி to முதலாளி - 9: அன்று முதலீடு ஒரு லட்சம்... இன்று 42 கிளைகள்... ஆண்டு வருமானம் ரூ.100 கோடி!

``எங்க நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்துட்ட நிலையில், நிறுவனத்தின் நற்பெயரை தக்கவெச்சுக்கிறதுல அதிக கவனம் செலுத்துறோம். லாபத்தை மீண்டும் முதலீடு செய்தே நிறுவனத்தை விரிவு படுத்திக்கிட்டிருக்கோம். தொழிலாளி - முதலாளிங்கிற பாகுபாடில்லாம, குடும்ப உறுப்பினர்கள்போலதான் எனக்கு என் ஊழியர்கள். எங்க பியூட்டி சலூனுக்கு வரும் நார்மல் கஸ்டமர்லயிருந்து வி.வி.ஐ.பி வரை பாரபட்சம் இல்லாம எல்லோருக்குமே ஒரே மாதிரியான சர்வீஸ்தான். திரைத்துறையில் நடிகர், நடிகைகளுக்கு ஹேர் ஸ்டைல்களை வடிவமைச்சுக் கொடுக்கிறோம். நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் எங்க பியூட்டி சலூனில்தான் காதலை வெளிப்படுத்தியிருக்காங்க. அதை சமந்தா தன் வெடிங் டிரஸ்லயும் குறிப்பிட்டிருந்தாங்க.

கல்லூரிப் படிப்பைக்கூட முழுசா முடிக்க முடியலையேன்னு ஆரம்பத்தில் வருத்தப்பட்டிருக்கேன். ஆனா, எனக்குள் இருந்த அழகுக்கலை திறமையைக் கண்டுபிடிச்சு, இன்று அதில் சுயஅடையாளத்துடன் வெற்றி பெற்றிருக்கேன். இன்னிக்கு இருபாலருக்கும் தேவையான அழகுக்கலை சார்ந்த ஏ டு இசட் சர்வீஸ்களை, இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் வழங்குறோம். எங்க நிறுவனத்தைப் பெரிய அளவில் வளர்த்ததில், என் கணவரும் மகனும் உறுதுணையா இருந்தாங்க; இருக்காங்க. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். அதில் நேர்மையுடன் பயணிப்பேன்” என்கிறார் லதா, புன்னகையுடன்.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியாக, பல நகரங்களில் 10 சலூன்களைத் தொடங்கியிருக்கிறார் லதா. இப்போது சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே நகரங்களில், தன் மூன்று பிராண்டு பெயர்களிலும் 42 பியூட்டி சலூன்களை நடத்திவருகிறார். அங்குள்ள வி.வி.ஐ.பிக்கள் பலரும் இவர் நிறுவனத்தின் ரெகுலர் கஸ்டமர்கள். தன் மூன்று பிராண்டு பியூட்டி சலூன்களையும், `ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட் ‘ என்ற நிறுவனத்துக்குக் கீழ் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். 450-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளி யான லதா, ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார். தென்னிந்தியாவின் முன்னணி பியூட்டி சலூன் நிர்வாகியான இவர், புதிய கிளைகளைத் தொடங்குவதற்கான பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இவரின் நிறுவனம்,  அழகுக்கலைத் துறையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களில் முதன்மையானதாக இருக்கிறது.

``நான் தொழில் தொடங்கின காலத்துல பியூட்டி பார்லர் போறதெல்லாம் பகட்டு வேலை, ஆடம்பரம்னு சொல்லுவாங்க. ஆனா, இன்னிக்கு ஒவ்வொருத்தரும் தங்களை அழகுபடுத்திக்கிறது அத்தியாவசியம் மற்றும் கெளரவமா நினைக்கிறாங்க. நான் விருப்பப்பட்டதுபோலவே, இத்துறைக்கு மதிப்புமிக்க நிலை உருவாகிடுச்சு. இப்போ போட்டியாளர்களும் அதிகமாகிட்டாங்க; இன்னும் அதிகமாவாங்க. அதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆகணும். 38 வருஷ அனுபவத்தில் சொல்றேன், இந்தத் துறை எதிர்காலத்தில் இன்னும் இன்னும் பிரமாண்டமா வளர்ச்சியடையும். புதிய மாற்றங்களை வரவேற்போம்; ஆரோக்கியமான போட்டிச்சூழலுக்குத் தயாராவோம்!’’ -  வலிமையான நம்பிக்கையுடன் கூறுகிறார் லதா.

- நாம் வெல்வோம்!

-கு.ஆனந்தராஜ், படங்கள்: பா.காளிமுத்து

நான் கற்ற பாடம்!

``வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் என்பதால, ஒவ்வொரு கஸ்டமரை அணுகும்போதும் நம்ம உடலை அணுகுகிறமாதிரி பொறுப்போடும் அக்கறையோடும்தான் வேலை செய்றோம். மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடம்தான் பார்லருக்கான சரியான களம். என் முதல் பார்லர் முதல் புது கிளைகள்வரை எல்லாத்தையும் அதன் அடிப்படையில்தான் தொடங்கிட்டிருக்கேன்.’’