
முதலீடுவி.கோபாலகிருஷ்ணன், www.askgopal.com
கடன் பத்திர வகைகளில் ஒன்றான பங்குகளாக மாறாத பத்திரங்களில் (என்.சி.டி) சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்வது அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக பங்குச் சந்தைக்கு சற்றும் குறைவில்லாத ஏற்ற இறக்கங்களைக் கடன் பத்திரச் சந்தையில் பார்க்க முடிகிறது. இதுபோன்ற ஏற்ற இறக்கங்களுக்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், நாட்டில் நிலவிவரும் வட்டி விகிதச் சூழல் இந்தச் சந்தையில் அதீத தாக்கத்தையே ஏற்படுத்தும் எனலாம்.

மேலும், நிறுவனங்களின் ரேட்டிங் எனப்படும் கடன் சார்ந்த தர மதிப்பீடு இந்தச் சந்தையில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த பல மாதங்களாகச் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் நிதிநிலை தொடர்பான பிரச்னைகள் காரணமாக இந்தச் சந்தை பல்வேறு ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

ஐ.எல்.எஃப்.எஸ் மற்றும் திவான் ஹவுஸிங் நிறுவனங்களில் ஏற்பட்ட நிர்வாக மற்றும் நிதி நெருக்கடிகளால் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சார்ந்த துறையில் மிகப் பெரிய அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் அந்த நிறுவனங்களின் ரேட்டிங் நல்ல நிலையில் இருந்துவந்த சூழலில், அந்த நிறுவனங் களில் நிறைய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், நிறுவனங்களில் உள்ள பிரச்னைகள் வெளிவரவே, அவற்றின் ரேட்டிங்குகள் அதலபாதாளத்திற்குச் சென்றன. அதன் காரணமாக அந்த நிறுவனங்களால் வாங்கிய பணத்தையோ அல்லது வட்டியையோ தரமுடியாத சூழல் ஏற்பட்டு நிதிச் சந்தையில் பெரும் குழப்பங்கள் வெடித்தன. இந்தப் பிரச்னைகள் காரணமாக வங்கிசாரா நிதி நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்குப் பெரிய அளவில் முதலீட்டாளர்களிடம் வரவேற்பு இல்லை. அப்படியே புதிய பத்திரங்களில் முதலீடு செய்தாலும், தங்களின் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்களின் தயக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. கடன் பத்திரச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்கநிலை காரணமாக ஏற்கெனவே பட்டிய லிடப்பட்டுள்ள என்.சி.டி-களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, கடன் பத்திரச் சந்தையில் முதலீட்டாளர்களிடம் வரவேற்பில்லாத காரணத்தால், பத்திரங்களின் வெளியீடுகள் குறைந்துள்ளன. இதனால், ஏற்கெனவே இருக்கும் பத்திரங்களின் சந்தை மதிப்பு அந்த நிறுவனங்கள் நல்ல நிலையில் இருக்கும்பட்சத்தில் அதிகரிக்கும். அந்த அடிப்படையில் ஏற்கெனவே இரண்டாம் நிலைச் சந்தையில் வர்த்தகமாகும் என்.சி.டி-க்களின் மதிப்பு நல்ல நிலையை அடையும்.

இப்போதைய சூழலில் நாட்டில் வட்டி விகிதம் என்பது குறைந்துகொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரச் சூழல் காரணமாக ரிசர்வ் வங்கி கடந்த மாதங்களில் ரெப்போ விகிதத்தைக் குறைத்த காரணத்தால், முதலீட்டாளர்களுக்கு வைப்பு நிதியங்களில் கிடைக்கக்கூடிய வருமானம் குறையத் தொடங்கியுள்ளது.
வரும்காலங்களில் வட்டி விகிதம் என்பது மேலும் குறையவே அதிக வாய்ப்புள்ளது. குறைந்துவரும் வட்டி விகிதம் என்பது வைப்பு நிதியங்களுக்குப் பாதகமாக இருந்தாலும், சந்தையில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்டுள்ள கடன் பத்திரங்களின் மதிப்பை அது உயர்த்தும். எப்போதெல்லாம் நாட்டில் வட்டி விகிதம் குறைகிறதோ, அப்போதெல்லாம் சந்தையில் இருக்கும் பத்திரங்களின் மதிப்பு கூடும் என்பதுதான் கடன் சந்தையின் சூட்சுமம்.

மேலும், தற்போதைய சூழலில் கடன் பத்திரங்கள் வெளியீட்டில் ஒரு மந்தநிலை காணப்படுவதால், ஏற்கெனவே பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகிவரும் என்.சி.டி-க்களின் மதிப்பு நன்றாக உயர்ந்துள்ளது. ஆகவே, தற்போதைய சூழலில் வைப்பு நிதியங்களுக்கு மாற்றாக முதலீட்டாளர்கள் என்.சி.டி-க்களில் முதலீடு செய்யத் திட்டமிடலாம்.
கடந்த காலத்தில் வெவ்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட நிறுவனங்களின் நேரடிக் கடன் பத்திரங்கள் சந்தையில் வர்த்தகமாகி வருகின்றன. முன்பே சொன்னதுபோல, புதிய வெளியீடுகளுக்கு ஏற்றதொரு தருணமாக இல்லாத காரணத்தால், அவற்றுக்குப் பெரிய அளவில் வரவேற்பும் இல்லை. இந்தச் சூழலில் சந்தையில் இருக்கக் கூடிய கடன் பத்திரங்களின் மதிப்பு என்பது நிறுவனங்களின் நிலைமையைப் பொறுத்து நல்ல வருமானம் ஈட்டும் சூழலில் உள்ளன.
சந்தையில் ஒரு தேர்ந்த நிபுணரைக்கொண்டு ஆராய்ந்து, ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் கடன் பத்திரங்களை இந்தச் சூழலில் வாங்கி முதலீடு செய்யும்பட்சத்தில், நீண்ட கால அடிப்படையில் வைப்பு நிதியங்களைக் காட்டிலும் கூடுதல் வருமானம் ஈட்டலாம். இதுபோன்ற என்.சி.டி பத்திரங்களில் முதலீடு செய்யும்முன், முதலீட்டாளர்கள் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஏற்கெனவே சொன்னதுபோல, இந்தச் சந்தையில் இருக்கும் கடன் பத்திரங்களுக்கு அந்த நிறுவனங்களின் நிலையைப் பொறுத்து ரேட்டிங் வழங்கப்பட்டிருக்கும். உச்சபட்ச ரேட்டிங் அதாவது, AAA என இருக்கும் பத்திரங்களின் தரம் என்பது நல்ல நிலையில் இருக்கும். அதற்கடுத்த நிலையில் AA மற்றும் அதற்கும் குறைவாக இருக்கும் பத்திரங்களின் தரம் என்பது இறங்கிக்கொண்டே வரும். முதல் நிலை அதாவது, AAA நிறுவனங்களின் பத்திரங்களில் வருமானம் சற்றுக் குறைவாக இருந்தாலும், அவற்றின் மீதான நம்பகத்தன்மையானது கூடுதலாக இருக்கும். அடுத்த நிலைகளிலுள்ள பத்திரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் கூடுதலாக இருந்தாலும், அதற்கேற்றவாறு ரிஸ்க்கும் கூடுதலாக இருக்கும்.
இனிவரும் காலத்தில் நாட்டில் வட்டி விகிதம் மேலும் குறையும் என்பதால், இரண்டாம் நிலை சந்தையில் இருக்கும் என்.சி.டி-க்களால் நல்ல வருமானம் ஈட்டும் சூழல் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.