நடப்பு
Published:Updated:

என் பணம் என் அனுபவம்!

என் பணம் என் அனுபவம்!
பிரீமியம் ஸ்டோரி
News
என் பணம் என் அனுபவம்!

ஓவியங்கள்: பிள்ளை

என் பணம் என் அனுபவம்!

வாய்ப்புகளும் வளர்ச்சியும்!

கு
டியிருப்புப் பகுதியில் காய்கறிக் கடை வைத்துள்ளேன். பலரும் சூப்பர் மார்க்கெட்டு களுக்குப் போய்விடுவதால், காய்கறி வியாபாரம் சுமாராகவே இருந்தது. கட்டடப் பணிகளைச் செய்துவரும் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர்தான் என் கடைக்கு வந்தார்கள். வியாபாரம் சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், “சார், மீதமாகும் காய்கனிகளை வைத்து, இதே கடையின் ஒரு பகுதியில் சாப்பாட்டுக் கடை போட்டால் உங்களுக்கும் வியாபாரம் ஆகும்; நாங்களும் சாப்பாட்டுக்காக மெயின் ரோடு வரை போகத் தேவையில்லை” என்றார். அவர் சொன்னது சரியென்றுபட்டதால், அடுத்த நாளே மெஸை ஆரம்பித்துவிட்டேன். தினமும் ஃப்ரெஷ்ஷாகத் தருவதால், காய்கறி வியாபாரமும் சூடுபிடித்தது. சாப்பாட்டு மெஸ்ஸும் சக்கைபோடு போடுகிறது. நீங்களும் வியாபாரம் சரியில்லை என விரக்தியாக இருப்பதை விட்டுவிட்டு, சுற்றுப்புறச் சூழலில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து வளருங்கள்!

-தேனப்பன், செங்கல்பட்டு

என் பணம் என் அனுபவம்!

உங்கள் பணத்தை உறங்க விடாதீர்கள்!

நா
ன் இல்லத்தரசி. என் கணவர், மாதாந்தரக் குடும்பச் செலவுகளுக்குத் தேவையான தொகையைக் கொடுத்துவிடுவார். என் தனிப்பட்ட செலவுகளுக்கென மாதம் ரூ.1,000 கொடுப்பார். இந்தத் தொகையை  பெட்டி யில் சேர்த்து வந்தேன். திருமணமான ஐந்து வருடங்களில் ரூ.60,000 சேர்த்துவிட்டேன். என் அக்காவிடம் இதைப் பெருமையாகச் சொன்னேன். விலைவாசி அதிகரித்தும்வரும் சூழலில் பெட்டிக்குள் வைத்திருக்கும் பணம் தேய்ந்துதான் போகும் எனச் சொல்லி அவர் என்னைத் திட்டினார். பிறகு, முதலீட்டு ஆலோசகர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் சொன்னபடி, மொத்தத் தொகை 60,000 ரூபாயையும் இரண்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தேன். அடுத்த மாதம் முதல் 1,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தேன். பெட்டிக்குள் தூங்கிய ரூ.60,000 ஒரே வருடத்தில் 66,000 ரூபாயாக வளர்ந்திருந்தது. எஸ்.ஐ.பி முதலீடு ஓராண்டில் 8% லாபத்தில் இருந்தது. பணத்தை இப்போதெல்லாம் நான் பெட்டியில் உறங்கவிடுவதேயில்லை.

-சிந்தாமணி, மதுரை

என் பணம் என் அனுபவம்!

கையொப்பம்  இடும்முன் கவனியுங்கள்!

ன்னுடைய அலுவலகத்தில் சம்பளக் கணக்கை, பிரபலமான தனியார் வங்கி ஒன்றுக்கு மாற்றினார்கள். வங்கி ஊழியர்கள் அலுவலகத்துக்கே வந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கையொப்பம் வாங்கிச் சென்றார்கள். அவர்கள் கொடுத்த விண்ணப்பத்தில் டிக் மார்க் செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் கையொப்பமிட்டுக் கொடுத்தேன். என்னைப்போல் பல ஊழியர்களும் படித்துப் பார்க்காமல் கையொப்பமிட்டுக் கொடுத்தார்கள். கணக்கு ஆரம்பித்து சில மாதங்கள் கழித்தே தெரிந்தது, அவர்கள் கொடுத்த விண்ணப்பத்தில் டீமேட் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, இன்ஷூரன்ஸ் எனப் பல படிவங்களையும் இணைத்திருந்த விஷயம். முதலீடு, காப்பீட்டுக்கான தொகை, சர்வீஸ் கட்டணங்களைப் பிடித்தம் செய்த நிலையில்தான் படித்துப் பார்க்காமல் கையொப்பமிட்டதன் விளைவுகளை உணர முடிந்தது. பிறகு வங்கிக்கு மெயில் அனுப்பி, தேவையில்லாத விஷயங்களை குளோஸ் செய்தேன். எந்த விண்ணப்பமாக இருந்தாலும், உங்களுக்கு அதுகுறித்துத் தெரியாவிட்டால் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டு கையொப்பமிடுங்கள்.

-நாகேந்திரன், கோவை

என் பணம் என் அனுபவம்!

காலிமனையைக் கவனியுங்கள்! 

நா
ன் கடலூரில் சின்னதாக பிசினஸ் செய்து வருகிறேன். பிசினஸ் மூலம் ஓரளவு பணம் சேர்த்து வைத்திருந்தேன். பிசினஸை சென்னைக்கு மாற்றலாம் என நினைத்து, நண்பர் ஒருவர் மூலம் சென்னைப் புறநகரில் இடத்தை வாங்கிப் போட்டேன். பிறகு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட சிக்கல்களால் சென்னைக்கு பிசினஸை மாற்றுவது தள்ளிப்போனது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை இடத்தை விற்றுவிடலாம் எனச் சென்று பார்த்தபோது  அதிர்ச்சியடைந்தேன். என் பிளாட்டுக்குமுன் சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ளூர் வியாபாரி ஒருவர் தகர கொட்டகை அமைத்து, தன் வியாபாரத்துக்குப் பயன்படுத்தி வந்தார். விசாரித்துப் பார்த்ததில் அவர் லோக்கல் ரவுடிகளுடன் தொடர்பு டையவர் எனத் தெரிந்துகொண்டேன். எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் காலி செய்யவில்லை. வேறு வழியில்லாமல் ஏரியாவில் உள்ள கட்சி ஆட்கள் மூலம் பஞ்சாயத்துப் பேசி கணிசமான ஒரு தொகையைச் செலவு செய்துதான் அவரை காலி செய்ய வைத்தேன். வாங்கிப்போட்ட மனையை அவ்வப்போது சென்று பார்க்கவில்லையென்றால்  நஷ்டப்பட வேண்டியிருக்கும். எச்சரிக்கை.

-சங்கரன், கடலூர்

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.