நடப்பு
Published:Updated:

கேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது?

கேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது?
பிரீமியம் ஸ்டோரி
News
கேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது?

பிசினஸ் கிளினிக்...

நான் செய்துவரும் தொழிலில் வருமானத்துக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், கேஷ் ஃப்ளோவினைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிய வில்லை. இதனை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது?

கேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது?எல்.தெய்வசிகாமணி, நாமக்கல்.

சிஏ என்.ராஜா, ஆடிட்டர், எர்ணாகுளம்.


‘‘இது உங்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்னை அல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பலவற்றுக்கும், சில பெரிய நிறுவனங்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கவே செய்கிறது. பல நிறுவனங்கள் நிறைய விற்பனை செய்யும். ஆனால், வாடகை,  சம்பளம் தருவதற்கு எனப் பல விஷயங்களுக்குக் கஷ்டப்படும். கேஷ் ஃப்ளோ பிரச்னை என்பது தீர்வு காணமுடியாத பிரச்னையல்ல. சிற்சில விஷயங்களில் கவனமாக நடந்து கொண்டால், இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வுகண்டு, உங்கள் பிசினஸில் நல்ல லாபம் பார்க்க முடியும். 

கேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது?

கேஷ் ஃப்ளோ பிரச்னையைத் தீர்ப்பதற்கு மூன்று வழிகளைச் சொல்கிறேன். முதலாவது, நீங்கள் தயார் செய்த பொருள்களை விற்கும்போது அதைக் கடனாகத் தருகிறீர்களா, அப்படித் தருகிறீர்கள் எனில், எத்தனை நாளைக்குத் தருகிறீர்கள் என்பதை ஆராயுங்கள். உங்கள் பொருள் தரமானதாக இருக்கும்பட்சத்தில், பலரும் பணத்தைச் செலுத்திவிட்டு வாங்கத் தயாராக இருப்பார்கள். கடன் தந்துதான் பொருள்களை விற்கவேண்டும் என்ற நிலையில்கூட, எல்லோருக்கும் கடனில் பொருள்களைத் தராதீர்கள். பொருளைக் கொடுத்தவுடன் பணம் உங்கள் கைக்கு வரும்பட்சத்தில், உங்கள் கையில் நிறைய பணம் புழங்கும்.

இரண்டாவதாக, நீங்கள் வாங்கும் எல்லா மூலப்பொருள்களையும் உடனுக்குடன் பணம் தந்து வாங்குகிறீர்களா என்று பாருங்கள். தரமான மூலப்பொருள் உங்களுக்குக் கடனாகக் கிடைத் தால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறாதீர்கள். சொன்ன தேதியில் பணத்தைத் தவறாமல் செலுத்தும் பழக்கம் உங்களிடம் இருந்தால், யார் வேண்டுமானாலும் உங்களுக்குக் கடன் தருவார்கள். இப்படிச் செய்யும்போதும் உங்களுக்குப் பணத் தட்டுப்பாடு இருக்காது.

மூன்றாவதாக, கேஷ் கிரெடிட், ஓவர் டிராஃப்ட் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு வீடு வாங்குவது போன்ற காரியங்களைச் செய்யாதீர் கள். கேஷ் கிரெடிட்டும், ஓவர் டிராஃப்ட்டும் குறுகிய காலத்துக்கு உங்கள் பிசினஸை நன்கு நடத்த உதவும் வழிமுறைகள். ஆனால், வீடு வாங்குவது என்பது நீண்ட காலத்துக்கான முதலீடு. நீண்டகாலத்துக்குத் தேவைப்படாத பணத்தைக்கொண்டுதான் வீட்டை வாங்க வேண்டுமே தவிர, குறுகிய காலத்தில் பிசினஸை நன்கு நடத்தத் தேவையான பணத்தைப் பயன்படுத்தக் கூடாது. இந்த மூன்று வழிகளையும் நீங்கள் சரியாகப் பின்பற்றினால், உங்களுக்கு கேஷ் ஃப்ளோ பிரச்னை வரவே வராது.’’ 

நான் ஒரு எஸ்.எம்.இ. ஆண்டுக்கு ரூ.2 கோடி  டேர்ன்ஓவர் செய்துவருகிறேன். எனது தொழிலைச் சிறப்பாகச் செய்ய வழிகாட்டுதல் (mentoring) தேவை. இந்த வழிகாட்டுதலை நான் பெற என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும்?

விவேக் ராஜன், கரூர்.

அகிலா ராஜேஷ்வர், நிர்வாக இயக்குநர்,  ‘டை’ (TiE) சென்னை.

‘‘ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தும்போது, அந்தத் தொழில் தொடர்பான அனைத்து விஷயங்களும் நமக்குத் தெரியும் என்று சொல்லி விட முடியாது. சிலர், உற்பத்தி செய்வதில் கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுவார்கள். ஆனால், நிதி நிர்வாகம் செய்வதில் குழம்பிக் கிடப்பார்கள். சிலர், மனிதவள நிர்வாகம் தொடர்பான விஷயங் களில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறுவார்கள். 

கேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது?

இதுமாதிரியான சமயங்களில் நமக்குச் சரியாக வழிகாட்டு பவர்கள்தான் ‘மென்ட்டார்’கள். முன்பு, தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் குறைவாக இருந்தது. தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதும் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்றைக்குத் தொழில்ரீதியாக, தான் அறிந்த உண்மைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளப் பலரும் தயாராக இருக் கிறார்கள். நீங்கள் கரூரில் வசிப்பதால், அங்கு மூத்த தொழிலதிபர்கள் யாராவது ஒருவரை அணுகி, உங்களுக்கு வழிகாட்டும்படி கேட்கலாம்.

சென்னையில் உள்ள டை (TiE) நிறுவனம் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘மென்ட்டாரிங்’ பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறது. உங்களுக்கு உதவி தேவையெனில் எங்களை அணுகலாம். அல்லது தமிழகம் முழுக்க 18 கிளைகளைக் கொண்டுள்ள ‘யெஸ்’ (YES - Young Entrepreneur School) அமைப்பில் உறுப்பினராகி, தொழில்ரீதியான வழிகாட்டுதலைப் பெறலாம். கரூரிலும் ‘யெஸ்’ அமைப்பு இருக்கிறது.

இதுதொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற https://chennai.tie.org/, http://yesconnect.in/ ஆகிய இணையதளங்களுக்குச் சென்று பாருங்கள்.’’

தொகுப்பு: ஏ.ஆர்.குமார்

மிழகம் முழுக்க உள்ள லட்சக் கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இதுமாதிரி பல கேள்விகளும் சந்தேகங்களும் வருவது இயற்கையே. இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய பதிலை நிபுணர்களிடமிருந்து தருவதே இந்தப் பகுதியின் நோக்கம். நீங்கள் செய்துவரும் தொழில் பற்றி உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருந்தால், businessclinic@vikatan.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கான பதில் நாணயம் விகடன் இதழில் இடம்பெறும்!