
வெள்ளி
தங்கம் விலை உயர்ந்துவரும் இந்தச் சமயத்தில், வெள்ளி விலையும் வேகமாக உயர்ந்துவருகிறது. கடந்த ஜூன் 17-ம் தேதி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.39.90-ஆக இருந்தது. அதுவே ஜூன் 27-ம் தேதியன்று 40.80 ரூபாயாக உயர்ந்தது. அதாவது, ஒரு கிலோவுக்கு ரூ.900 அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாகப் பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் வர்த்தகமாகி வந்த வெள்ளியின் விலை, 2011-ம் ஆண்டின் விலையுடன் ஒப்பிடும்போது, அதன் பாதி விலையில் வர்த்தகமாகி வந்தது. சென்ற வருடம் 2018-ம் ஆண்டின் கடைசியில், சர்வதேச அளவில் 26 வருட குறைந்தபட்ச விலையில் வர்த்தகமானது. தற்போது, அதிலிருந்து மீண்டு சுமார் 10% ஏற்றத்தில் காணப்படுகிறது.

இந்த விலை ஏற்றம் நீடிக்குமா என்பது பலருடைய கேள்வி. ஏனென்றால், தங்கம் விலை உச்சத்தில் இருக்கும்போது, வெள்ளி மட்டும் பின்தங்கியிருக்குமா அல்லது தங்கத்தைப் பின்தொடருமா என்கிற கேள்விகள் ஒருபக்கம் இருக்கட்டும். எந்தவொரு முதலீட்டிலும் எதிர்மறையான செய்திகள் இருக்கும்போது முதலீடு செய்வது மிகவும் அவசியம். அந்தமாதிரியான காலகட்டங்கள்தான் முதலீட்டுக்கு ஏற்ற தருணமும்கூட. அப்படியெனில், தற்போது வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்பதே எல்லோருடைய கேள்வியாக உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
கோல்டு - சில்வர் ரேஷியோ
வெள்ளியில் முதலீடு செய்வதற்கான முடிவை எடுக்க உதவும் ஒரு அளவுகோல்தான் கோல்டு சில்வர் ரேஷியோ (தங்கத்தின் விலையை, வெள்ளியின் விலையால் வகுத்தால் கிடைக்கக்கூடிய எண்தான் கோல்டு சில்வர் ரேஷியோ). இந்த ரேஷியோ எண் அதிகமாக இருந்தால், சந்தையில் வெள்ளி விலை குறைவு என்றும் இந்த எண் குறைவாக இருந்தால், சந்தையில் வெள்ளி விலை அதிகம் என்றும் அர்த்தம் (பார்க்க வரைபடம் 1).

வரைபடம் 1-ல் வட்டமிடப்பட்டுள்ள காலங் களில் கோல்டு சில்வர் ரேஷியோ எண் அதிகபட்ச மாக இருப்பதை உணர்த்துகிறது. மேலும், அதன் பின்னர் வரக்கூடிய ஆண்டுகளில் இந்த எண் குறைவதையும் பார்க்க முடிகிறது. இவ்வாறு இந்த விகிதாசார எண் குறையும் போதெல்லாம் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஆகையால், இனிவரும் காலத்தில் வெள்ளி விலை அதிகரிக்க முகாந்திரம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

கோல்டு சில்வர் ரேஷியோ 1993-ம் ஆண்டிற்குப் பிறகு அதிகபட்சமாக 90 என்ற எண்ணைத் தாண்டிக் காணப்படுவதை அடுத்து, வெள்ளியின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
குறையும் வெள்ளி உற்பத்தி
2013-ம் ஆண்டிற்குப் பிறகு குறைந்த அளவில் வெள்ளி உற்பத்தி செய்யப்பட்டு வருவதால், இது நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு சிறந்த உலோகமாகப் பார்க்கப்படுகிறது. மற்ற எல்லாத் தொழில் சார்ந்த உலோகங்களையும்விட வெள்ளி உற்பத்தியின் அளவு (சுமார் 26,000 டன்களாக) குறைவாக இருப்பது விலைச் சரிவினைத் தடுக்கும். வெள்ளி உற்பத்தி 2013-ம் ஆண்டிற்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. (பார்க்க வரைபடம் 2)
தொழில் சார்ந்த தேவை
தொடர்ச்சியாக, கடந்த ஆறு வருடங்களாக உற்பத்திக் குறைந்து காணப்பட்டாலும் 2018-ல் வெள்ளி விலை 8.5% சரிவடைந்தே காணப்படுவது, தேவை அதிகரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. சென்ற ஆண்டின் சராசரி விலை ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு 15.7 அமெரிக்க டாலராகக் காணப்பட்டது. மேலும், சமீபத்திய தங்கத்தின் விலை ஏற்றமானது, அமெரிக்க டாலரின் மதிப்புச் சரிவு மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியில் தொய்வு ஏற்படலாம் என்கிற அச்சம் காரணமாக இருக்கும்போது, வெள்ளியின் தொழில் சார்ந்த தேவையும் குறைய வாய்ப்பி ருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிற / விலைமதிப்பு மிகுந்த தங்கத்தின்மீது முதலீடு செய்ய முடியாதவர்கள், வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள். 2023-ம் ஆண்டுவாக்கில் தங்கத்தின் தேவை 11% அதிகரிக்கும் எனவும், காப்பரின் தேவை 17% அதிகரிக்கும் எனவும் அதேசமயம், வெள்ளியின் தேவை 50 சதவிகிதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டிற்குப் பிறகு, சென்ற ஆண்டில் நம் நாட்டின் வெள்ளி இறக்குமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சென்ற ஆண்டில் (2018) தங்கம் இறக்குமதி குறைந்து காணப்பட்டாலும், வெள்ளியின் இறக்குமதி 36% அதிகரித்து, 6,958 டன்னாக இருந்தது. 2015-ம் ஆண்டில் 7,579 டன்னாக இருந்தது. இந்த ஆண்டு, நம் நாட்டின் வெள்ளி இறக்குமதி 6,000 - 7,000 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (பார்க்க வரைபடம் 3)

முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?
தொழில் சார்ந்த தேவையில் அதிக மாற்றமில்லை என்றாலும், ஆபரணப் பொருள்கள், வெள்ளியால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்களின் மீதான முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்கால உற்பத்தி சார்ந்த புள்ளிவிவரங்கள், தங்கத்தின் விலைப்போக்கு, சர்வதேசப் பொருளாதார நிலவரங்கள் அனைத்தையும் கருத்தில்கொண்டால், வெள்ளியின் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஷியாம் சுந்தர்,கமாடிட்டி நிபுணர்