
நானும் எஸ்.ஐ.பி-யும்!
கடந்த 2007-ம் ஆண்டு வரை எனது ஓய்வுதியத் தொகைகள் அனைத்தையும் தபால் அலுவலகச் சேமிப்பான மன்த்லி இன்கம் பிளான், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் மற்றும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் போட்டு வந்தேன். ஆனால், அந்த வருடம் நாணயம் விகடன் நடத்திய ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகுதான், நான் முதலீடு செய்யவில்லை; பணத்தைச் சேமித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டேன்’’ என்றபடி பேச ஆரம்பித்தார் சென்னை வேளச்சேரியில் வசிக்கும் லஷ்மண பெருமாள் நாராயணன். இவர், பணி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. 72 வயதாகும் இவர், தன் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

``எனக்குச் சிறுவயது முதலே சேமிப்பதில் மிகுந்த ஆர்வம். தாம்தூம் என்று செலவு செய்யப் பிடிக்காது என்பதால், பாதுகாப்பான திட்டங்களில் பணத்தைச் சேமித்துவந்தேன். நான் செய்துவந்த சேமிப்புக் குறித்து நான் ஒருநாளும் கேள்வி எழுப்பியதே இல்லை. இந்த நிலையில்தான், சென்னை, திருநெல்வேலி, சேலம் போன்ற இடங்களில் நாணயம் விகடன் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டேன். குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எட்டாவது அதிசயமான கூட்டு வளர்ச்சி (பவர் ஆஃப் காம்பவுண்டிங்) பற்றிப் புரிந்துகொண்டேன். உடனடியாக, மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் ஒருவர்மூலம் என்.எஃப்.ஓ ஒன்றில் மொத்த முதலீடு செய்யத் தொடங்கினேன். பிறகு எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பித்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறேன். தற்போது மாதமொன்றுக்கு ரூ.35,000 முதலீடு செய்து வருகிறேன்” என்றார்.

பொதுவாக, பங்குச் சந்தை இறங்கும்போது, அதில் முதலீடு செய்யும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி குறையும். இப்படி என்.ஏ.வி குறைவதைப் பார்த்து, பலரும் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை நிறுத்திவிடு வார்கள். ஆனால், 2008-ல் பங்குச் சந்தை பெரும் இறக்கம் கண்டபோது, லஷ்மண பெருமாள் தனது முதலீட்டை நிறுத்தாமல் தொடரச் செய்ததன் விளைவாக இன்றைக்கு அவர் நல்ல பலனைப் பெற்றுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஐந்து பேரப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக மாதம் தலா ரூ.2,000 என எஸ்.ஐ.பி முறையில் சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறார்.
‘‘என் மனைவி, மகன், மகள்கள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள் எனக் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ கணக்கு இருக்கிறது’’ என்று பெருமையாகச் சொல்லும் லஷ்மண பெருமாள் நிஜமான உதாரண புருஷர்தான்.
சி.சரவணன் - படம் : வள்ளி சவுத்ரி ஏ
உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம்.