
கமாடிட்டி
தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர், மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)
தங்கம் கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுத்த பிறகு, தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்து வருகிறது. இந்த நகர்வு ஒரு தற்காலிக நகர்வாக இருந்து, மீண்டும் அடுத்த கட்ட வலிமையான ஏற்றத்திற்கு மாறலாம். அல்லது, இந்த ஏற்றம் தற்போதைக்கு முடிவடைந்து ஒரு புதிய இறக்கத்தின் ஆரம்பமாக இருக்கலாம்.
சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த 34400 என்ற தடைநிலை வலுவான தடைநிலையாகவே இருந்துள்ளது. சென்ற வாரம் திங்களன்று தங்கம் ஒரு வலுவான ஏற்றத்தின் தொடர்ச்சியாக ஏற முயற்சி செய்துள்ளது. ஆனால், அது பெரிய மாற்றம் இல்லாத ஸ்பின்னிங் டாப்பாக முடிவடைந்துள்ளது. தங்கம், இறங்கி 34300-ல் முடிவடைந்தது. எனவே, தடைநிலை வலுவானதாகவே மாறியது. அதன்பின் மெள்ளமெள்ள இறங்க ஆரம்பித்துள்ளது.
இனி என்ன நடக்கலாம்?
தங்கம் ஜூலை கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி நாம் ஆகஸ்ட் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். தங்கம் 34570-ஐ உடனடித் தடையாகக் கொண்டுள்ளது; உடைத்தால் பெரிய ஏற்றம் வரலாம். கீழே 33830 மிக முக்கிய ஆதரவு ஆகும்.
வெள்ளி (மினி)
வெள்ளி தங்கத்தைவிட வலிமை குன்றி காணப்படுவதைப் பார்க்கிறோம். சென்ற வாரம் தங்கம் ஏற தயங்கி நின்றது; வெள்ளி பலமாக இறங்க ஆரம்பித்தது.

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 39450-ஐ தக்கவைத்துக் கொண்டது. அதற்குப் பதிலாக கீழே கொடுத்த ஆதரவு எல்லையான 37850 நோக்கி நகர்ந்துள்ளது, ஆனால், இன்னும் உடைக்கவில்லை.
இனி என்ன நடக்கலாம்?
வெள்ளி தற்போது 37750-ஐ ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 38460 என்பது மிக வலிமையான தடைநிலை ஆகும்.
கச்சா எண்ணெய் (மினி)
சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் பலமான ஏற்றத்தில் உள்ள நிலையில், 4170 என்பது வலுவான தடைநிலை ஆகும். இதையும் உடைத்தால் கச்சா எண்ணெய் அப்டிரெண்டுக்கு மாறிவிடலாம். கீழே 3880 உடனடி ஆதரவு ஆகும்.”

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 3880-க்கு அருகில் வந்து, உடைக்காமல், மேலே எழுந்து தடைநிலையான 4170-க்கு அருகில் (4163 வரை) வந்து தாண்ட முடியாமல் தயங்கி நிற்கிறது. ஏறக்குறைய எல்லைகள் துல்லியமாக வேலை செய்துள்ளதாகவே எடுத்துக்கொள்ளலாம்.
இனி என்ன நடக்கலாம்?
கச்சா எண்ணெய் இன்னும் பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், உடனடித் தடைநிலையான 4190-ஐ தாண்டினால் பலமான ஏற்றம் வரலாம். இன்னும் 3880 முக்கிய ஆதரவே.
காப்பர்
காப்பர் மினியின் அடுத்த மாத கான்ட்ராக்ட் இல்லை என்பதால் விலையை மெகாவில் கொடுத்துள்ளோம். சென்ற வாரம் சொன்னது… “காப்பர் தற்போது கீழே 404-ஐ ஆதரவாகவும், மேலே 415-ஐ தடைநிலையாகவும் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் உடைக்கிறதோ அந்தப் பக்கம் வியாபாரம் செய்யலாம்.’’
காப்பர் மினி, சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 415-ஐ உடைத்து ஏற முயற்சி செய்து, 420.40-ஐ தொட்ட பிறகு இறங்கிவிட்டது. மாறாக மெள்ளமெள்ள இறங்கி, பக்கவாட்டு நகர்வுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.
இனி என்ன நடக்கலாம்?
காப்பர் மெகாவின் ஜூலை கான்ட்ராக்டிற்கு மாறுகிறோம். தற்போது 448-ஐ தடைநிலையாகவும், கீழே 439 முக்கிய ஆதரவாகவும் கொண்டுள்ளது.
மென்தா ஆயில்
மென்தா ஆயில், தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. 18.06.2019 அன்று உச்சமாக 1372-ஐ தொட்ட பிறகு இறக்கம் ஆரம்பித்தது. இந்த உச்சம் அல்லது தடை என்பது 07.06.2019 அன்று தொட்ட உச்சமான 1369-க்கு அருகில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான், அது ஏறக்குறைய ஒரு டபுள் டாப்பை ஏற்படுத்தி, அடுத்தகட்ட வலிமையான இறக்கத்திற்கு வழிவகுத்தது. அந்த இறக்கம் தொடர்ந்தாலும் தற்போது அது ஓர் ஆதரவுக்கு அருகில் வந்துள்ளது.
மென்தா ஆயில் சென்ற வாரம் கொடுத்திருந்த தடைநிலையான 1295-ஐ தக்கவைத்துள்ளது. இரண்டு முறை முயன்றும் இந்தத் தடைநிலையைத் தாண்ட முடியாமல் இறங்க ஆரம்பித்துள்ளது. மென்தா ஆயில் ஒவ்வொரு நாளும் இறங்க ஆரம்பித்து, மெள்ளமெள்ள நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 1245 நோக்கி இறங்கவும் செய்தது. 25.06.2019 அன்று ஆதரவான 1245-ஐ உடைத்து இறங்கி 1239-ஐ தொட்டாலும், மீண்டும் ஏறி 1245-க்கு மேலே வந்தது. அடுத்து 28.06.2019 வெள்ளியன்று 2145-ஐ சற்றே உடைத்து, 1241.50-ஐ தொட்டாலும் மீண்டும் 1247.50-ல் முடிந்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்?
மென்தா ஆயில் நன்கு இறங்கியிருந்தாலும், முடிவு விலை அடிப்படையில் 1245-ஐ உடைக்க வில்லை. எனவே, அது வலிமையான ஆதரவாக மாறியுள்ளது. இருந்தாலும் நாம் ஃபில்டரை உபயோகித்து 1230-ஐ ஆதரவாக எடுக்கிறோம். மேலே 1275 வலிமையான தடைநிலை ஆகும்.
காட்டன்
காட்டன், மென்தா ஆயிலைப் போலவே தொடர்ந்து இறங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், சென்ற வாரம் இறக்கம் தொடர்ந்தாலும், ஒரு பாட்டத்தை ஏற்படுத்தி, இறக்கத்தைத் தடுத்து நிறுத்த முயற்சி நடக்கிறது. காளைகள் இதில் வெற்றி பெற்றால் வலிமையான ஏற்றத்திற்கு வழி வகுக்கலாம்.
காட்டன் சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 22070 என்ற எல்லையைத் தக்கவைத்துக்கொண்டது. எனவே, அதுவே மீண்டும் வலிமையான தடைநிலையாக மாறி விட்டது. அடுத்த இறக்கம் என்று வரும்போது சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று இறங்கி, நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 21500-ஐ உடைத்து, கீழே 21300 வரை இறங்கியது. இந்த எல்லையானது 12.06.2019-ல் தொட்ட ஒரு பாட்டத்திற்கு அருகில் இருந்ததால், அதுவே ஒரு வலிமையான ஆதரவு எல்லையாக மாறியுள்ளது. இந்த எல்லையிலிருந்து காட்டன் மேல்நோக்கி ஏறுவதற்கு முயற்சி செய்கிறது.
இனி என்ன நடக்கலாம்?
காட்டன் தற்போது 21290 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 21850 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது.
சென்னா
சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்னா, சென்ற வாரம் தொடர் பக்கவாட்டு நகர்விலேயே இருந்தது. நாம் கொடுத்த ஆதரவான 4100-ஐ தக்கவைத்துக் கொண்டது.
மேலே நாம் கொடுத்த தடைநிலையான 4270-ஐ உடைக்க முயற்சி செய்து அதில் வெற்றி பெற முடியாமல் இறங்க ஆரம்பித்துள்ளது.
இனி என்ன நடக்கலாம்்?
சென்னா, மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது. மேலே 4300-ஐ தடைநிலையாகவும் கீழே 4160-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.
தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in