நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: வங்கிப் பங்குகளை மீண்டும் கவனிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

ஷேர்லக்: வங்கிப் பங்குகளை மீண்டும் கவனிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: வங்கிப் பங்குகளை மீண்டும் கவனிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

ஓவியம் : அரஸ்

டந்த வாரம் சொன்னபடி மாலை நான்கு மணிக்கு நம்மைச் சந்திக்க வந்தார் ஷேர்லக். கையில் மழை கோட் வைத்திருப்பதைப் பார்த்ததும், “இன்றைக்கும் மழை வருமா’’ எனக் கேட்டோம். “அதற்கான அறிகுறி தெரிந்ததால் தயாராக வந்தேன்’’ என்று சொல்லிச் சிரித்தார். அவருக்காக நாம் ஆர்டர் செய்திருந்த சூடான பஜ்ஜியும், இஞ்ஜி டீயும் வந்துசேர்ந்தது. அவர் சாப்பிட ஆரம்பிக்க, நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: வங்கிப் பங்குகளை மீண்டும் கவனிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

வங்கிப் பங்குகளில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மீண்டும் அதிக அளவில் முதலீடு செய்கின்றன... என்ன காரணம்?

‘‘நடாளுமன்றத் தேர்தலுக்குமுன்பாகவே வங்கிப் பங்குகளின் போக்கு ஏற்றத்தில்தான் இருந்தது. அப்போதும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கிப் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்தன. பொதுத்துறை வங்கிகளின் கடன் மற்றும் இதர பிரச்னை களைக் களைவதற்காக ரூ.40,000 கோடியைக் கூடுதல் மூலதனமாக  மத்திய அரசு வழங்குவதாகச் சொன்ன செய்தியால், வங்கிப் பங்குகள் ஏற்றம் கண்டன. தற்போதைய நிலையும் வங்கிப் பங்கு களுக்குச் சாதகமாக இருப்பதால், மீண்டும் வங்கிப் பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கவனிக்க ஆரம்பித்திருக்கின்றன.

ஷேர்லக்: வங்கிப் பங்குகளை மீண்டும் கவனிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!கடந்த ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி, வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.2.58 லட்சம் கோடியாக இருந்தது. மே மாத இறுதியில் இது ரூ.2.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 6.5% அதிகம். கடந்த ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 45% அதிகம். அப்போது அது ரூ.1.90 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பில், வங்கிப் பங்குகளின் பங்கு 23.62 சதவிகிதமாக இருக்கிறது.

வங்கிப் பங்குகளில் மட்டுமல்லாமல், நிதி நிறுவனப் பங்குகள், நுகர்வோர் சாதன நிறுவனப் பங்குகள் மற்றும் பெட்ரோலிய பங்குகளிலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. கடந்த மே மாதத்தில் இந்த நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகள் முறையே ரூ.1.07 லட்சம் கோடி, ரூ.80,237 கோடி மற்றும் ரூ.62,065 கோடியாக இருக்கிறது.”

 அதானி போர்ட்ஸ் அண்டு எஸ்.இ.இஸட் கடன் பத்திரங்களை வெளியிட முடிவெடுத்தது ஏன்?

“சர்வதேச அளவில் கடன் பத்திரங்களை வெளியிட்டு 75 கோடி டாலர் முதல் 100 கோடி டாலர் வரை நிதி திரட்ட அதானி போர்ட்ஸ் அண்டு எஸ்.இ.இஸட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தக் கடன் பக்த்திரங்களுக்கு மூடிஸ் இன்வெஸ்டார் சர்வீஸ், பிஏஏ3 (BAA3) தரக் குறியீட்டினை வழங்கியுள்ளது. கடந்த     2018-19-ம் நிதியாண்டில் கன்டெய்னர் போக்கு வரத்தில் 13% வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.’’

பங்கேற்பு ஆவணங்கள்மூலமான அந்நிய முதலீடு எப்படியிருக்கிறது?

“கடந்த மே மாதத்தில், பங்கேற்பு ஆவணங்கள் (பி-நோட்ஸ்) மூலமான அந்நிய முதலீடு ரூ.82,619 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய மாதத்தைவிட 1.75% அதிகம். இந்த அந்நிய முதலீட்டில் பங்கு முதலீடு மட்டும் ரூ.61,574 கோடி.  கடன் சந்தையில் ரூ.19,681 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. மீதம் ரூ.193 கோடி முன்பேர வணிகச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்பு ஆவணங்கள் மூலமான அந்நிய முதலீடு, நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.1.19 லட்சம் கோடியாக இருந்தது. பிப்ரவரியில் அது ரூ.73,428 கோடி யாகச் சரிந்தது. மார்ச் மாதத்தில் ரூ.78,110 கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் ரூ.81,220 கோடியாக அதிகரித்தது.”

இரு நிறுவனப் பங்குகளை எல்.ஐ.சி விற்றிருக்கிறதே, எதனால்?

“எல்.ஐ.சி நிறுவனம் வைத்திருந்த ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் பி.ஹெச்.இ.எல் நிறுவனப் பங்குகளிலிருந்து தலா 2% பங்குகளை  விற்றிருக்கிறது. இதனால் ஆக்ஸிஸ் வங்கியில் இதன் பங்கு மூலதனம் 10.20 சதவிகிதமாகவும், பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் இதன் பங்கு மூலதனம் 11.70 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. பங்குகள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், எல்.ஐ.சி நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோ விலிருந்து 5.25 கோடி ஆக்ஸிஸ் பேங்க் பங்கு களையும், 6.96 கோடி பி.ஹெச்.இ.எல் பங்கு களையும் விற்பனை செய்திருக்கிறது. என்றாலும், இந்த இரு நிறுவனங்களின் பங்கு விலையும் பெரிய அளவில் குறையவில்லை என்பது ஆறுதலான விஷயம்.’’

வாராக் கடன் வசூலில் யூகோ பேங்க் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறதே?

‘‘கொல்கத்தாவைச் சேர்ந்த யூகோ பேங்க், வாராக் கடன் பிரச்னையை அதிகமாகச் சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.2,000 கோடி  வீதம் ரூ.8,000 கோடி அளவிலான கடன் தொகையை மீட்டெடுக்க, அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் அடிப்படையில், 14 வங்கிக் கணக்குகளில் வாராக் கடனாக இருக்கும் ரூ.1,795 கோடியை வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் திரும்பப் பெற நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி இந்த வங்கிக்குத் திரும்பப் கிடைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைய நிலையில், யூகோ வங்கியின்  பெரிய வாராக் கடன்களின் எண்ணிக்கை 183. இந்தக் கணக்குகளிலிருந்து பெறப்பட வேண்டிய பணத்தின் மதிப்பு ரூ.25,096 கோடி.’’

மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் எல் அண்டு டி  நிறுவனம் தனது முதலீட்டைத் தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறதே?

“முன்னணி ஐ.டி  நிறுவனமான மைண்ட் ட்ரீயினைக் கைப்பற்ற எல் அண்டு டி நிறுவனம் தீவிரமான முயற்சி செய்துவருகிறது. தற்போது மைண்ட்ட்ரீயின் 48% பங்குகளை எல் அண்டு டி நிறுவனம் வைத்துள்ளது.  இதனை 66 சதவிகிதமாக அதிகரிக்கத் திட்ட மிட்டுள்ளது. இதற்காக, ஓப்பன் ஆஃபர் ஒன்றை அறிவித்திருக்கிறது. பங்கு ஒன்றை 980 ரூபாய்க்கு வாங்கத் திட்டமிட்டிருக்கிறது.  கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை  வர்த்தக முடிவில் மைண்ட்ட்ரீ பங்கு விலை ரூ.927.40-ஆக நிலைபெற்றது. தற்போதைய சந்தை விலையைவிட ஆஃபர் விலை அதிகம் என்பதால், பலரும் எல் அண்டு டி-க்கு மைண்ட் ட்ரீ பங்குகளை விற்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மைண்ட் ட்ரீ நிறுவனத்தைக் கைப்பற்றும் எல் அண்டு டி நிறுவனத்தின் ஆசை நிறைவேறிவிடும்.”

ஆயில் சில்லறை விற்பனை நிறுவனப் பங்குகளின் விலை இறக்கத்துக்கு என்ன காரணம்?

“கச்சா எண்ணெய் விலை ஒரு  சதவிகிதத்துக்கு மேலாக உயர்ந்ததால், ஆயில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய ஆயில் நிறுவனப் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்து உள்ளன. ஐ.ஓ.சி-யின் பங்குகள் 1.3 சதவிகிதமும் பி.பி.சி.எல் 1.8 சதவிகிதமும் ஹெச்.பி.சி.எல் 2.57 சதவிகிதமும் சரிந்தன.

கடந்த வாரம் அமெரிக்க கச்சா எண்ணெய் கையிருப்பு 13 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறைவான கையிருப்பாகும். இதனையடுத்தே சில்லறை ஆயில் நிறுவனங் களின் பங்கு விலை குறைந்துள்ளது.”

 எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரி சொல்லும் விஷயம் என்ன?

“கடந்த வியாழக்கிழமையன்று நிறைவு பெற்ற ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் எக்ஸ்பைரியில்  நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் ரோலோவர் 80 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த மூன்று மாத சராசரியான 73 சதவிகித்தைவிட அதிகம்.  நிஃப்டி ஓப்பன் இன்ட்ரஸ்ட் 1.9 கோடி பங்கு களாக (ரூ.22,800 கோடி) உள்ளது.

வரும் ஜூலையில் 117 நிறுவனப் பங்குகள் எஃப் அண்டு ஓ வர்த்தகத்திலிருந்து நீக்கப்படு கிறது. இவை, பங்குச் சந்தை ஜூலையில் ஏற்றத்தில் இருக்கும் என்பதற்கான அறிகுறியாக உள்ளது. அதேநேரத்தில், ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் அறிவிப்பினைப் பொறுத்து செயல்பட பங்குச் சந்தை வர்த்தகர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. லாங்க் பொசிஷன்கள் அதிக எண்ணிக்கையில் ரோலோவர் செய்யப்பட்டிருக் கிறது. இது நிஃப்டி ஜூலையில் 12000 புள்ளிகள் வரை உயரக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக முன்னணிப் பகுப்பாய்வாளர்கள் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  

அதேநேரத்தில், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர், அமெரிக்கா - ஈரான் பிரச்னை, பருவமழை தாமதம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலை போன்றவற்றைச் சார்ந்துதான் சந்தையின் போக்கு இருக்கும்” என்றவர், ‘‘அடுத்த வாரத்தில் பட்ஜெட் எதிர்பார்ப்பு காரணமாக சந்தை ஏற்ற இறக்கமாக இருக்க வாய்ப்புண்டு. எனவே, டிரேடர்கள் உஷாராக இருக்க வேண்டும். முதலீட் டாளர்கள் எப்போதும்போல, நல்ல பங்கினைத் தாராளமாக வாங்கலாம்’’ என்றபடி, மழை கோட்டினை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

இந்தியா மார்ட் ஐ.பி.ஓ அமோக வெற்றி!

இந்தியா மார்ட் நிறுவனம், தனது விரிவாக்கத்துக்குத் தேவையான பகுதி நிதியைத் திரட்ட புதிய பங்குகளை வெளியிட்டது. இந்தப் பங்கு வெளியீடு, கடந்த 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி நிறைவடைந்தது. அதில் 10 ரூபாய் முக மதிப்புக் கொண்ட ஒரு பங்கின் விலை 970 முதல் 973 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டிருந்தது. 26.92 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில், 9.71 கோடி பங்குகளுக்கு தேவை இருந்திருக்கிறது.

இது வெளியீட்டு அளவைவிட 36 மடங்கு அதிகம். நிதி நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து 30.83 மடங்கு, நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களிடமிருந்து 62.13 மடங்கு மற்றும் சிறு முதலீட்டாளர் களிடமிருந்து 13.37 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன! 

டிரேடர்ஸ் பகுதியைப் படிக்க :  https://bit.ly/2FFeW28