நடப்பு
Published:Updated:

யு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு!

யு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு!
பிரீமியம் ஸ்டோரி
News
யு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு!

நடவடிக்கை

திக லாபம் கிடைக்கும் என்கிற ஆசையைக் காட்டி, அப்பாவி மக்களின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு செல்லும் மோசடி நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துவருவது கவலைக்குரிய விஷயம். இப்படிப்பட்ட மோசடி நிறுவனங்கள்மீது தமிழகக் காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பது உள்ளபடியே பாராட்டத்தகுந்தது. அந்த வகையில், மக்களிடமிருந்து முதல் சபாஷினைப் பெற்றிருப்பது கோவையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு.

யு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு!

‘ஒரு  லட்சம் முதலீடு செய்தால், இரண்டு லட்சம் கிடைக்கும்’ என்று கோவையில் ஜிகினா காட்டிக்கொண்டிருந்த யு.டி.எஸ் நிறுவனத்தின் குட்டு இப்போது உடைந்திருக்கிறது. கோவை பீளமேட்டில் உள்ளது யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் (UTS). இந்த நிறுவனம், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் 10% முதலீட்டின் மூலமான வருமானமாகத் (Return on investment, சுருக்கமாக, ROI) தருவோம் என்று மக்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தைத் திரட்டியது. அதாவது, இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், பத்தே மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகிவிடும். அதுமட்டுமல்ல, பத்து மாதங்களுக்கு தலா ரூ.10,000 கிடைத்ததுபோக, அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கு அதாவது, 11, 12-வது மாதங்களுக்கு போனஸாக தலா ரூ.10,000 தருவதாகவும் அடிஷனல் ஆஃபரை அறிவித்திருந்தது. மக்களிடமிருந்து பெற்ற பணத்தைப் பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபத்தைத் தருவதாகச் சொன்னதை நம்பி, பலரும் இந்த நிறுவனத்தில் பணத்தைப் போட்டார்கள்.

யு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு!இதெல்லாம் சுத்தமான ஏமாற்று; பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகள்மூலம் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது; எனவே, இந்த நிறுவனத்தில் பணத்தைப் போட வேண்டாம் என நாணயம் விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரை வெளிவந்தபின் இதழ்களை ஒவ்வொரு கடைகளாகச் சென்று வாங்கிய யு.டி.எஸ் நிறுவனம் உண்மையை மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்தது. ‘கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும்’ என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. யு.டி.எஸ் நிறுவனத்தின்மீது கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு எடுத்த நடவடிக்கையால், அந்த நிறுவனம் தற்போது முடங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக, கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு சமீபத்தில் ஒரு பத்திரிகைச் செய்தியினை வெளியிட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டிருப்பதாவது...

“கோயம்புத்தூர், பீளமேடு ராம் லெட்சுமன் நகரில் இயங்கிவந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பொதுமக்களிடமிருந்து பல்வேறு திட்டங்களின் மூலமாக அதிக அளவில் லாபம் தருவதாகத் தெரிவித்து, முதலீடுகளைப் பெற்று வந்தது. இது தொடர்பாக யு.டி.எஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் முதலீட்டுத் தொகையைத் திரும்பத் தராமல் ஏமாற்றியுள்ளது சம்பந்தமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள்மீது கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமார்ந்த முதலீட்டாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவில் நேரில் வந்து புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரக் குற்றப்பிரிவின் துரிதமான நடவடிக்கைக்குப் பிறகு இந்த நிறுவனம் மூடப்பட்டிருக்கிறது.  எனினும், இந்த நிறுவனம் குறித்து பலரும் புகார் எதுவும் தராமலே இருக்கின்றனர். இந்த நிறுவனம் குறித்து காவல்துறையில் புகார் செய்தால், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில்தான் பலரும் புகார் செய்யாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். 

யு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு!

யு.டி.எஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தினைக் கைப்பற்றி, அப்பாவி முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தரவேண்டும் என்பதுதான் கோவை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மீண்டும் செயல்படத் தொடங்கிய நெல்லை சி.டி.எஸ்...

கோவை யு.டி.எஸ் போலவே, அதிக லாபம் என்கிற ஆசையைக் காட்டி, நெல்லை மக்களிடமிருந்து பல கோடியை வசூலித்திருக்கிறது கனெக்ட் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம்.

38% வட்டி தருவதாகச் சொல்லி மக்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது குறித்து, 2019 மே 12 மற்றும் 19-ம் தேதியிட்ட நாணயம் விகடனிலும் 2019 மே 19-ம் தேதியிட்ட ஜூனியர் விகடனிலும் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது. நெல்லை மாநகரக் காவல்துறை சார்பாக மேலப்பாளையம் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நெல்லை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரும்  சி.டி.எஸ் நிறுவனத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். இதனால் சில நாள்களுக்கு அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது.

‘‘சி.டி.எஸ் நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபடும் ஆபத்து இருப்பதை உணர்ந்து அந்த நிறுவனத்தினை சோதனை நடத்தினோம்.  ஆனால், அந்த நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரம் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் செலுத்தியவர்களில் யாரும் புகார் தரவும் இல்லை. எனவே, எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை’’ என்கிறது காவல்துறை.

பிற மோசடி நிறுவனங்களைப்போல, இந்த நிறுவனம் தனது அலுவலகத்தில் மக்களிடமிருந்து பணத்தை வாங்குவதில்லை. பணம் போடுபவர் களை இந்த நிறுவனத்தின் ஏஜென்டுகள் நேரடி யாகச் சந்தித்துப் பணம் வாங்குவதால், அது தொடர்பான ஆவணங்களை ரகசியமாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளானதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுவருகின்றனர். என்றாலும், சில நாள்களுக்கு மூடப்பட்டிருந்த சி.டி.எஸ் அலுவலகம் இப்போது திறக்கப்பட்டு விட்டது. அதிக வட்டி தருவதாகச் சொல்லி,  அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

மோசடி நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுத்து கோவைக் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில், நெல்லைக் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து, அப்பாவி மக்களின் பணம் திரும்பக் கிடைக்க வழிசெய்ய வேண்டும். மக்களும் மோசடி நிறுவனங்களைக் கண்டு விலகி நிற்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது!      

 பி.ஆண்டனிராஜ், எம்.புண்ணியமூர்த்தி

திருச்சி செந்தூர் ஃபின்கார்ப்... கட்டிய பணம் கிடைக்காமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள்!

‘ரூ.35,000 கொடுத்தால், ஒரே ஆண்டில் ரூ.1,21,000 கிடைக்கும்’ என்று ஆசை காட்டி, அப்பாவி மக்களிடமிருந்து பல லட்சங்களை அள்ளிய திருச்சி செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம் குறித்து நாணயம் விகடனில் அட்டைப்படக் கட்டுரை (7/4/2019 தேதியிட்ட இதழ்) வெளியிட்டோம். இதற்குப்பின்பும் அந்த நிறுவனம் செயல்படுவது நின்றபாடில்லை. இதன்மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

யு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு!

இந்த நிலையில், செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம் இப்போது எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அந்த அலுவலகத்திற்குச் சென்றோம். தங்களுக்குப் பணம் வராமல் இருப்பதைக் கேட்டு சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்களை உட்காரவைத்து, பணம் அனுப்புவதில் உள்ள சிக்கல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் செந்தூர் ஃபின்கார்ப் ஊழியர்கள்.

அங்கிருந்த வாடிக்கையாளர்களிடம் பேசினோம். “இந்த நிறுவனத்தில் பணம் போட்டால் பெரிதாக லாபம் கிடைக்கும் என்று சொன்னதை நம்பி பணத்தைக் கட்டினேன். ஆனால், கடந்த சில வாரங்களாகப் பணம் வரவில்லை. கேட்டால், இணையதள சேவையை விரிவுபடுத்துவதால் பணம் அனுப்புவதை நிறுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். கேள்விக்குமேல் கேள்வி கேட்டால், காசோலைகளைக் கொடுக்கிறார்கள். இதை வங்கியில் போட்டால், பணம் வருமா இல்லையா என்று தெரியவில்லை’’ என்றார்கள். செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருடன் பேசினோம். “செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் சொந்த இடத்துக்கு மாறவிருக்கிறோம். கட்டுமானப் பணிகள் முழுமையடையாததால், அந்த முகவரியை அறிவிக்க முடியவில்லை’’ என்றார்.

கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு யு.டி.எஸ் மீது நடவடிக்கை எடுத்ததுபோல, திருச்சி செந்தூர் ஃபின்கார்ப் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்கிற கேள்வியைத் திருச்சி மக்கள் கேட்கின்றனர். செந்தூர் ஃபின்கார்ப் மீது நடவடிக்கை எடுத்து, மக்கள் கட்டிய பணத்தை அவர்களுக்குத் திரும்பத் தர திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்குமா?

- சி.ய.ஆனந்தகுமார், படம்: என்.ஜி.மணிகண்டன்