இந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகிறபோதிலும், அதன் எண்ணிக்கை, கடந்த இரண்டாண்டுகளில் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், எதிர்காலத்தில் ஏடிஎம்-களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமத்துக்குள்ளாகிவிடும் அல்லது பரிவர்த்தனை கட்டணம் அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவல்படி, கடந்த 2017-18 மற்றும் 2018 - 19 ஆகிய இரண்டு நிதியாண்டுகளிலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியர்கள் மிக அதிக அளவில் ஏடிஎம்-களைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தனைக்கும் 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், ரொக்க பரிவர்த்தனையைக் குறைத்து, டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போதும் நாடு முழுவதும் மக்களிடையே ரொக்க பணம் மூலமான பரிவர்த்தனையே முதலிடத்தில் உள்ளது. இதனால், ATM பயன்பாடு அதிகரித்ததில் வியப்பேதும் இல்லை.

2013 மார்ச்சில் ATM மூலம் நடந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் சுமார் 50 கோடியாக இருந்த நிலையில், இது ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக அதிகரித்து 2019 மார்ச்சில் 90 கோடியை எட்டியுள்ளது. அதேசமயம் ஏடிஎம்-களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நிதியாண்டுகளில் படிப்படியாகக் குறைந்துள்ளது அல்லது மூடப்பட்டுள்ளது.
'பிரிக்ஸ்' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில், இந்தியாதான் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஏடிஎம்-களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு ரஷ்யாவில் சராசரியாக 164 ஏடிஎம்-கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவே பிரேசில் 107, சீனா 81, தென்னாப்பிரிக்கா 68 என்ற எண்ணிக்கையிலான ஏடிஎம்-களைக் கொண்டுள்ள நிலையில், இந்தியா மட்டும் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 22 ஏடிஎம்-களை மட்டும் கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் ( International Monetary Fund - IMF) தெரிவித்துள்ளது.
எண்ணிக்கை குறைந்தது ஏன்?
இந்தியாவில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு பணத்தட்டுப்பாடு காரணமல்ல; மாறாக, ATM-களைப் பாரமரிப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதும், அதைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாக இருப்பதும்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, சாப்ட்வேர் மற்றும் உபகரணங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு (Upgrade) அதிக செலவாவதாக ATM ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.

கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 1,13,000 ஏடிஎம்-கள் மூடப்பட்டிருக்கலாம் என ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு (Confederation of ATM Industry - CATMi) மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ATM-களைத் தரம் உயர்த்துவது தொடர்பாக, கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி கொண்டு வந்த விதிமுறைகளின் செயல்பட்டால், இந்தத் துறைக்கு ஆண்டுக்கு சுமார் 3,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்றும் ATM தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சில பொதுத்துறை வங்கிகள் ஒரே வங்கியின் கீழ் இணைக்கப்பட்டதாலும், இணைப்புக்குள்ளான வங்கிகளின் ஏடிஎம்-கள் கணிசமாக மூடப்பட்டன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, அதன் 5 துணை வங்கிகள் மற்றும் ஒரு உள்ளூர் வங்கி ஆகியவற்றைத் தன்னுடன் இணைத்துக்கொண்ட பின்னர், கடந்த 2018-ம் நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் தனது 1,000 ஏடிஎம்-களை மூடியது. அதேசமயம் இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பெருமளவில் மாற்றம் இல்லை என்பதால், அவர்களுக்கான ஏடிஎம் தேவைகள் அதே எண்ணிக்கையில்தான் இருக்கிறது. எனவே, இதுவும் ஏடிஎம் பற்றாக்குறைக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. மேலும், ஏடிஎம்-களின் எண்ணிக்கை விகிதத்தைப் பார்த்தால், இரண்டில் ஒன்று சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை அலுவலகத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.
கட்டண உயர்வுதான் தீர்வா?
இந்த நிலையில், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையிலேயே ஏடிஎம் ஆபரேட்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தற்போதைய கூடுதல் செலவுக்கேற்ப கட்டணத்தை உயர்த்த வேண்டுமெனில் அதற்கு ஏடிஎம் தொழில்துறை கமிட்டியின் ஒப்புதல் தேவை. தற்போது அனுமதிக்கப்பட்ட இலவச வரம்புக்கு மேல் ATM–ல் டெபிட் கார்டையோ, கிரெடிட் கார்டையோ பயன்படுத்தி பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா 15 ரூபாயை ஏடிஎம் ஆபரேட்டர்கள் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
"ஆனால், இது போதாது. இந்தக் கட்டணம் நடப்பு நிலவரத்துக்கு ஏற்ப இல்லை. இதன் காரணமாகத்தான் ஏடிஎம்-களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வங்கிகள், தாங்களே சொந்தமாக ஏடிஎம்-களை வைத்து இயக்குவதற்கு ஆகும் செலவைவிட, மற்ற வங்கிகளின் ஏடிஎம்-களுக்கு இப்படி 15 ரூபாயைப் பரிவர்த்தனை கட்டணமாகச் செலுத்துவது, சிக்கனமானது எனக் கருதுகின்றன" என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஆர்.காந்தி. ஏடிஎம் ஆபரேட்டர்களைப் பொறுத்தவரை அதில் வங்கிகளும் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று மூன்றாவது தரப்பு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ATM-களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டுமானால், அதன் பராமரிப்புச் செலவுக்கு ஏற்ப பரிவர்த்தனை கட்டணத்தை அதிகரிப்பதுதான் தீர்வாக இருக்கும் என்ற வாதம் ஏடிம் ஆபரேட்டர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தற்போதுள்ள 15 ரூபாய் கட்டணத்திலிருந்து மேலும் 1.5 முதல் 2 ரூபாய் வரை உயர்த்த வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்கள் இடையே உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன விளைவுகள் ஏற்படும்?
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்த பின்னர், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத கோடிக்கணக்கான ஏழைக் குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதனால், மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகள் மற்றும் திட்டங்களுக்கான உதவித் தொகைகள், அவர்களது வங்கிக் கணக்குக்கே அனுப்பப்படுவதால், அவர்கள் அதை ஏடிஎம்-கள் மூலம் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ருபே கிஷான் அட்டைகளும் வழங்கப்பட்டன. அவர்களும் இதே பயனை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் செலவினங்களைக் காரணம் காட்டி ATM-கள் மூடப்பட்டால், தற்போது அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

இந்த நிலையில், ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கான பரிவர்த்தனை கட்டணம் உயர்த்தப்பட்டால், வங்கிகள் அந்தக் கட்டண உயர்வை வாடிக்கையாளர்களின் தலையில்தான் சுமத்தும். இதனாலும், கிராமப்புற ஏழைகள் பாதிப்புக்குள்ளாகலாம்.
அதே சமயம், கடந்த ஐந்து ஆண்டுகளில் மொபைல் பேங்கிங் பயன்பாடு 65 மடங்கு அதிகரித்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், ஏடிஎம்-களின் எண்ணிக்கை குறைந்தால், அது மொபைல் பேங்கிங் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.
ஜெர்மனி உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் எந்த வங்கியின் ஏடிஎம்-களைப் பயன்படுத்தினாலும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இந்தியாவில் அத்தகைய நிலை எப்போது வருமோ?