பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

எஃப்.டி-க்கு டி.டி.எஸ்... 15G, 15H படிவத்தை வாட்ஸ்அப்பில் சமர்ப்பிக்கலாம்!

எஃப்.டி-க்கு டி.டி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எஃப்.டி-க்கு டி.டி.எஸ்

வாடிக்கையாளர்கள் 15G மற்றும் 15H படிவங்களை இனி வாட்ஸ்அப்பில் சமர்ப்பிக்கலாம்.

நிலையான வருமானம் கிடைக்க ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed deposit) வைத் திருப்பவர்களுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தில் இருந்து டி.டி.எஸ் (TDS - Tax Deduction at source) பிடிக்கப்படும். வருமானவரி கட்டவேண்டிய வரம்புக்குள் வராதவர் களுக்கும், வழக்கம்போல வங்கிகள் வரிப் பிடித்தம் செய்துவிடும். அதைத் தவிர்க்க, இந்திய வருமான வரிச் சட்டம் 1961-ல் ஒரு வழி தரப்பட்டுள்ளது. அதாவது, 197A பிரிவில் 15G அல்லது 15H படிவத்தைப் பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பித்தால், அவர்களுக்கு டி.டி.எஸ் வரி பிடிக்கமாட்டார்கள். ஒருவரது வருமானம் அடிப்படை வருமான வரி வரம்புக்குக்கீழ் இருக்கும்பட்சத்தில் 60 வயதுக்குக் கீழுள்ளவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருந்தால், அவர்கள் 15G படிவத்தையும், 60 வயதைத் தாண்டியவர்கள் 15H படிவத்தையும் ஒவ்வொரு நிதியாண்டும் பூர்த்தி செய்து வங்கிக்கு வழங்க வேண்டும்.

எஃப்.டி-க்கு டி.டி.எஸ்... 15G, 15H படிவத்தை வாட்ஸ்அப்பில் சமர்ப்பிக்கலாம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் சேவையை எளிமையாக்க 15G மற்றும் 15H படிவங்களை வாட்ஸ்அப்பில் சமர்ப்பிப்பதற் கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது, `யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா.’ இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியில் பதிவு செய்யப் பட்ட தங்களது மொபைல் எண்ணிலிருந்து, வங்கியின் வாட்ஸ்அப் எண் 09666606060-க்கு செய்தியை அனுப்ப வேண்டும். அதன்பின் வங்கியின் யூனியன் ‘விர்ச்சுவல் கனெக்ட் வாட்ஸ்அப் சேனல்’ (UVConn) மூலமாக ஏழு வெவ்வேறு மொழிகளில் சேவைகள் வழங்கப் படும். இதில் வாடிக்கையாளர் தனக்குத் தேவையான மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15H படிவத்தையும், 60 வயதுக்குக் கீழுள்ளவர்கள் 15G படிவத்தையும் சமர்ப்பித்து, டி.டி.எஸ் பிடித்தத்தில் இருந்து விலக்கு கோரலாம்.

முதியவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இனி எவ்வித அலைச்சலும் இல்லாமல், தங்கள் மொபைலில் இருந்தே டி.டி.எஸ் பிடிக்காமல் இருக்க, இவர்கள் விண்ணப்பிக்கலாம். இருந்தாலும் ஆன்லைன் ஃபிராடுகள் குறித்தும் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.