இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


வேலை ரெடி, நீங்க ரெடியா?
எப்போதும் வேலை, வேலை என ஆபீஸே கதியாக இருப்பது எந்த வயதிலும் சரியான விஷயமல்ல! உங்கள் உறவுகள், உடல் மற்றும் மனநலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப் பதும் உங்கள் கடமை தானே! 'வேலை’ வாழ்வின் முக்கியமான அங்கம்தான். ஆனால், அதற்காக மட்டுமே நம் வாழ்க்கையை அர்ப்பணிப்பது நம் தனிப்பட்ட வாழ்க்கையை நிச்சயம் பாதிக்கும்.

உறவுகளில் பிரச்னையோ, உடல் நலத்தில் பாதிப்போ ஏற்பட்டால் உங்கள் வேலையிலும் செயல்திறனிலும் கட்டாயம் பாதிப்பு ஏற்படும். அதனால்தான் வேலை, பெர்சனல் வாழ்க்கை இரண்டையும் சமநிலையோடு அணுகுவது அவசியம். இதை Work-Life balance என்று அழைப்பார்கள்.
இது குடும்பஸ்தர்களுக்கான பிரச்னை. திருமணமாகாத இளைஞர்களுக்கு இது ஒரு பிரச்னையே இல்லையே! தவிர, இளம் வயதில் வேலையில், முழுக்கவனம் செலுத்தினால் தானே பின்னர் வெற்றி அடைய முடியும்? என சிலர் கேட்கக்கூடும்.
பணி உலகத்தில் நுழைந்த உடனேயே தனிப்பட்ட வாழ்க்கை, பணி சார்ந்த வாழ்க்கை இரண்டையும் சமநோக்கோடு பார்க்க கற்றுக் கொண்டால் மட்டுமே பிற்காலத்தில் இந்த இரண்டு உலகங்களிலும் சாதித்து நிறைவான வாழ்வை அடைய முடியும்.
குறிப்பாக, புதிதாக வேலையில் சேர்ந்த இளைஞர்களுக்குப் புதிய சூழல், வேலைப்பளு போன்ற காரணங்களினால் மனஅழுத்தம் மற்றும் உடல் சார்ந்த உபாதைகளும் வரக்கூடும். இவற்றைத் தொடக்கத்திலேயே சமாளிக்க கற்றுக் கொள்வது அவசியம்.
##~## |
அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் செலவிட எங்களுக்கு மட்டும் விருப்பமா என்ன? மேலதிகாரி தரும் வேலையை 'முடியாது’ என்று சொல்ல முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு என் பதில்: சமயோஜிதமாக செயல்பட்டால் வேலைப் பளுவை மட்டுமல்ல, உங்கள் மேலதிகாரியையும் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்.

வேலைப் பளுவை சமாளிக்க சரியான வழி 1. திட்டமிடுதல் (Planning), 2.நேரத்தைச் சரியான வழியில் பயன்படுத்துதல் (Time Management).
அலுவலகத்தில் செலவிடும் நேரத்தை நாம் எத்தனைபேர் முழுமையாக வேலையில் செல விடுகிறோம்? தேவையில்லாத பல விஷயங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இதை குறைத்துக் கொண்டாலே நம் நேரம் கனிசமாக மிச்சமாகும்.
ஒரு செயலை தொடங்கும் முன் அதை முடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று வரையறுத்துக் கொண்டு, கவனத்தைச் சிதறவிடாமல் அந்த நேரத்திற்குள் அதை முடித்துவிட முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு வாரத் தொடக்கத்திலும் நீங்கள் அந்த வாரத்தில் முடிக்க வேண்டிய பணிகளை பட்டியலிடுங்கள். நீங்கள் அமைத்துக் கொள்ளும் பட்டியல் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
1. அதிஅவசரம் மற்றும் அதிமுக்கியமான காரியங்கள்: இவற்றைச் செய்ய தவறினால் உங்கள் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே முழு மூச்சோடும், கவனத்தோடும் இவற்றை செய்து முடிக்க வேண்டும்.
2. அதிஅவசரம், ஆனால் முக்கியமில்லாத விஷயங்கள்: கூரியர் அனுப்புவது, கடைசி நாளுக்குள் காசோலை அனுப்புவது போன்ற விஷயங்களை நீங்கள்தான் செய்ய வேண்டும் என அவசியமில்லை. இத்தகைய காரியங்களை உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் கொடுத்து செய்யலாம்.
3. மிக முக்கியமான விஷயங்கள், ஆனால் அவசரமில்லை: வேலைப்பளு அதிகம் இல்லாதச் சமயங்களில் பயனில்லாத விஷயங்களில் நேரத்தைச் செலவிடாமல் இந்த முக்கியமான காரியங்களில் முழுக்கவனம் செலுத்தலாம். நேரமும் இருப்பதால் எந்த டென்ஷனும் இல்லாமல் இந்த காரியங்களை நேர்த்தியோடு முடிக்கலாம். இதனால் உங்கள் மேலதிகாரியிடம் நல்ல பிள்ளை என பேர் வாங்க முடியும்.
4. அவசரமோ, அவசியமோ இல்லாத வெட்டி விஷயங்கள்: நாம் செய்கிற பல வேலைகள் இதில் வரும். உஷாராக இவற்றைத் தெரிந்து கொண்டு களைந்து விடுவது நல்லது.
இவை தவிர, வேலையிலும், தனிப்பட்ட வாழ்விலும் சமநிலைகாண இளைஞர்களுக்கு சில டிப்ஸ்:
• தினமும் 15 நிமிடங்களாவது அமைதியாக தனிமையில் செலவிடுங்கள். அது தியானமாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. அது உங்களுக்குப் பிடித்த மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரும் எந்த காரியமாகவும் இருக்கலாம்.
• தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஜிம்முக்கு போக வேண்டும் என அவசியமில்லை. நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, படி ஏறுவது போன்றவையும் நல்ல உடற்பயிற்சியே.
• காலை உணவை கண்டிப்பாகத் தவிர்க்காதீர்கள். அதிகாலையில் அலுவலகம் கிளம்புகிறவர்கள் காலை டிபனையும் எடுத்துக் கொண்டு போய்விடலாம். பேச்சிலர்கள் பழங்களையாவது சாப்பிடலாம்.
• அலுவலகத்தில் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல் குறைந்தது 40 நிமிடத்திற்கு ஒரு முறையாவது கை கால்களை நீட்டி மடக்குங்கள்.
• ஆபீஸ் வேலைகளை வீட்டிற்கோ, வீட்டு பிரச்னைகளை அலுவலகத்திற்கோ கொண்டு செல்லாதீர்கள்.
இசை, பிரயாணம், சமூகசேவை, புகைப்படக்கலை, புத்தகங்கள் வாசிப்பு என நல்ல பொழுதுபோக்குகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
(தயாராவோம்)

|

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணிகளில் விமானப் பணிப்பெண் வேலையும் ஒன்று. பெரும்பாலான பெண்களுக்கு விமானப் பணிப்பெண் ஆக வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். இதற்கு என்ன படிக்க வேண்டும்? எப்படித் தயாராக வேண்டும்? என்பதுபோன்ற பல விஷயங்கள் தெரிவதில்லை. இதைப் பற்றி இங்கு விளக்கமாகப் பேசுகிறார் ஃபிளை ஏர் சார்ட்டர்ஸ் அண்ட் ஏவியேஷன் அகாடமியின் ஜெனரல் மேனேஜர் வினோத்குமார். |

''விமானப் பணிப்பெண் ஆவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பெண்கள் 5.2 இன்ச் உயரம் நிச்சயம் இருக்க வேண்டும். முகத்திலோ, கையிலோ ஏதாவது காயங்களோ, தழும்புகளோ இருக்கக்கூடாது. பதினெட்டு வயதிலிருந்து அதிகபட்சமாக முப்பது வயது வரை மட்டுமே விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிய முடியும் என்பது முக்கியமான கண்டிஷன். பலதரப்பட்ட மக்கள் வந்து போகும் இடம் என்பதால் தகவல் பரிமாற்றம் நன்கு செய்பவராக இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். சர்வதேச விமானங்களில் பணிபுரிபவர்கள் எனில் ஃபிரெஞ்ச் மொழி தெரிந்திருக்க வேண்டும். டிப்ளமோ இன் கேபின் குரூப் என்ற கோர்ஸ் மூலம் பயணிகளை எவ்வாறு அணுகுவது, விமானத்தில் முதலுதவி செய்வது, குழந்தைகள், பெரியவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்களை அன்புடன் வரவேற்று கவனிப்பது என்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். திடீரென விமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது, விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என்பது போன்ற சூழ்நிலைகளில் நடந்துக் கொள்ளும் விதங்களையும் கற்றுக் கொடுப்போம். இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றதும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வேலை வாய்ப்பு? இந்தியாவில் விமானத்துறை வருடத்திற்கு முப்பது சதவிகிதம் வளர்ச்சியடைந்து வருகிறது. நம் நாட்டில் நூறு கோடி மக்களில் பத்து கோடி மக்கள் விமானத்தைப் பயன்படுத்தும் நிலை உருவாக இருக்கிறது. உலகளவில் விமானத் துறையில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா உள்கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது. இன்னும் இதற்கான வசதிகளை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது அதிகளவில் விமானப் பணிப் பெண்களை பணிக்கு எடுத்து வருகின்றனர். விமானப் பணிப் பெண்ணுக்கு 35,000 ரூபாய் சம்பளம். இது இல்லாமல் ஒருமுறை பறப்பதற்கு முப்பதாயிரம் ரூபாய் முதல் அறுபதாயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இப்படி மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும். -பானுமதி அருணாசலம் |