மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

நாணயம் ஜாப்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

சில வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த என் நண்பரின் தாயாருக்கு அவசர அறுவை சிகிச்சை நடந்தது. எதிர்பாராத அறுவை சிகிச்சைக்குத் தேவைப்பட்ட பண உதவி, வாகன உதவி, ரத்த தானம் என எல்லாமே தந்து, பக்கபலமாக இருந்தவர்கள் நண்பரின் தந்தையோடு வேலை பார்த்த அலுவலக நண்பர்கள்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ணியிடம் பணத்தைச் சம்பாதிப்பதற் கான இடம் மட்டுமல்ல, நல்ல நண்பர் களையும், வழிகாட்டிகளையும் சம்பாதிக்கும் இடமும்கூட. தற்கால இளைஞர்கள் பணியிடத்தில் செலவிடும் நேரம் அதிகரித்து வருகிறது என்பது உண்மை. வாரத்திற்கு 50 மணி நேரத்திற்கு மேல் அலுவலகத்தில் அல்லது பணியில் செலவிடுவது அவர்களுக்கு சகஜமாகி வருகிறது. இத்தகையச் சூழலில் நட்பு வட்டம் என்பது அலுவலக சக பணியாளர்கள் மட்டுமே என சுருங்கிவிடுவது தவிர்க்க முடியாத நிகழ்வு.

மேலும், இத்தகைய அலுவலகம் சார்ந்த உறவுகள் பணி வாழ்வைக் கடந்து நம் தனிப்பட்ட வாழ்விலும் கலந்துவிடுவதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது. இதுபோன்ற சூழலில் புதிதாக பணியில் சேரும் இளைஞர்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் உறவுகளை எப்படி தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றை எப்படி கையாள்வது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

##~##
அலுவலகத்தில் வேலைத் தேவைகளை தாண்டி ஏற்படும் நட்பு போன்ற உறவுகளை மேலாண்மை அறிஞர்கள் Outside Role Relationships  என்று அழைப்பார்கள். நட்பைத் தவிர, வழிகாட்டி (Mentors), பகைமை, காதல் போன்ற உறவுகளும் இதில் அடங்கும். அலுவலகத்தில் ஏற்படும் இத்தகைய உறவுகளில் சில உங்கள் மேன்மைக்கும், உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அதே சமயம், இவை சரியாக கையாளப்படா விட்டால் நம் பணி வாழ்வு மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

மேற்கூறிய உறவுகளில் நட்பு, வழிகாட்டி போன்றவை பொதுவாக பணியிடத்தில் செயல்திறனை அதிகரிக்க உதவும் உறவுகளாக கருதப்படுகிறது. பணியாளர்களிடையே நட்பு உணர்வு அதிகரிக்கும்போது, உதவி மனப்பான்மை, விட்டுக் கொடுத்தல், கூட்டு முயற்சி, தகவல் பரிமாற்றம் போன்ற நற்செயல்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கவலைகளையும் பிரச்னைகளையும் பகிர்ந்து கொள்வதால் பணியாளர் களிடையே மனஅழுத்தம் போன்ற தீமைகளும் குறை கின்றன. இதனால் பணியிடத்தின் நற்சூழல் (Organizational Climate) மேன்மை அடைகிறது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இதேபோல, பணியிடத்தில் நல்ல வழிகாட்டி அமைவதின் மூலம் பணியாளர்களின் செயல்திறனும், நிறுவனத்தின் மீதான ஒட்டுதலும் அதிகரிக்கிறது. இதனால்தான் நிறுவனங்கள், அலுவலகங்களில் இத்தகைய உறவுகளை ஊக்குவிக்கின்றன. அதே சமயம், இந்த உறவுகளினால் அலுவலகங்களில் பிரச்னைகளும் ஏற்படலாம்.

மிக நெருக்கமான நட்பு வட்டங்களினால் பணியிடத்தில் சிறுசிறு குழுக்கள் தோன்றவும், அவற்றுக்கு இடையே மோதல் போக்கு ஏற்படவும் வாய்ப்புண்டு. மேலும், தங்களை வழிகாட்டிகளாகக் கொள்ளும் பணியாளர் களை, மேலதிகாரிகள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் உயர்பதவிகளுக்குப் பரிந்துரை செய்யக்கூடும். இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க நாம் சரியான நட்பு வட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

மொழி, பிராந்தியம் போன்ற மேலோட்ட மான ஒற்றுமையின் அடிப்படையில் இல்லாமல் ஆழமான மதிப்பீடுகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, அதன் மூலம் உருவாகும் நட்பே உண்மையான நட்பாகவும், நீண்ட காலத்திற்கு நண்பர்களாக இருக்கவும் உதவும். அத்தகைய நண்பர்கள் கிடைக்கும் வரை உங்கள் நட்பு வட்டத்தைச் சுருக்கிக் கொள்ளாதீர்கள். வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்கும்போது அவர்களது ஒழுக்கத்தன்மையையும், நல்ல கொள்கைகளின் மீதான அவர்களின் பற்றுதலையும் உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்பதை திருவள்ளுவரே சொல்லி இருக்கிறார்.

அலுவலக நட்பில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது மேலதிகாரியுடனான நட்பு. குளிர்காய உதவும் தீயைப் போல அதிகம் எட்டியிருப்பது மட்டுமல்ல, அதிகம் ஒட்டியிருப்பதும் உங்களுக்கு நல்லதல்ல. குறிப்பாக, மேலதிகாரியுடனான உங்கள் நட்பு தரும் சுதந்திரத்தைக் கவனமாக கையாள வேண்டியது மிகவும் அவசியம்.

பணியிடத்தில் ஏற்படக்கூடிய மற்றுமொரு முக்கியமான உறவு காதல் மற்றும் இனக்கவர்ச்சி. சக பணியாளரை காதலிப்பது தவறல்ல; ஆனால், அது இருமுனை கூரான கத்தியைப் போல ஜாக்கிரதையாக கையாளப்பட வேண்டிய ஒன்று. அலுவலகத்தில் அதிக நேரம் பழகுவதால் ஏற்படும் பரிச்சயத் தன்மையாலும் (Familliarity), நம்பிக்கையினாலும் (Trust) அலுவலக நண்பர்கள் மீது ஈர்ப்பு வருவது தவிர்க்க முடியாத விஷயம். அந்த ஈர்ப்பு நட்பு சார்ந்த பாசமா? இனக்கவர்ச்சியா? அல்லது ஆழமான காதலா? என்பதைப் பிரித்துணர்வது கடினமானச் செயலாக இருந்தாலும், அது மிகவும் அவசியமானது. குறிப்பாக, புதிதாக பணியில் சேர்ந்த வுடன் வரும் தன்னம்பிக்கையும், பொருளாதார சுதந்திரமும், குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தால் அது தரும் தனிமையும் உங்களை காதலை நோக்கி உந்தித் தள்ளக்கூடும்.

ஆனால், காதல் என்பது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது என்று உணர்ந்தால், அதன் ஆழத்தையும், அது பற்றி முடிவெடுப்பதில் உங்களுக்குள்ள பொறுப்பையும் உணர்த்தும். எனவே, காதலில், 'விழும்’ முன் உங்களுக்கு அவர் மேல் உள்ள ஈர்ப்பின் தன்மையையும் அதன் காரணத்தையும் புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில், தவறான இடத்தில் காதலில் விழுந்தால் எழுவது கடினம்!

நீங்களும் உங்கள் சகபணியாளரும் ஒருவருக்கொருவர் காதலிக்கும்பட்சத்தில் அதை அலுவலகத்திற்கு வெளியே வைத்துக் கொள்வதுதான் அறிவு முதிர்ச்சி. ஏனெனில், காதலையும் பணி சார்ந்த உறவையும் கலப்பது இரண்டிலும் சிக்கலைத் தரும். மேலும், அது பணியிடத்தில் உங்கள் செயல்திறனைக் குறைப்பது மட்டுமல்லாமல் மற்றவர்கள் கேலிக்கும், புறங்கூறுதலுக்கும் ஆளாக்கும். பணியிடத்தில் ஏற்படும் காதல் ஒரு தலையானதாகவோ, அல்லது தோல்வியில் முடியும்போதோ அது உங்கள் பணிச்சூழலை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அலுவலகக் காதலில் மிகவும் சிக்கலானது, மேலதிகாரியுடனான காதல். இது தார்மீக ரீதியாக மட்டுமல்ல, உணர்வு ரீதியாகவும் சிக்கலான விஷயம். மேலதிகாரி உங்கள் மீது காட்டும் அன்பும், அவர் மீது உங்களுக்கு உள்ள மதிப்பும் காதலாக மாறுவது தவறல்ல. ஆனால், அதில் மறைமுக நிர்ப்பந்தங்களோ, பயன்படுத்திக் கொள்ளுதலோ இல்லாமல் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் இது அதிகார துஷ்பிரயோகமாகவும், பாலியல் தொந்தரவாகவும் பார்க்கப்படலாம். மேலும், உங்கள் இருவருக்கும் உள்ள காதல் நிஜமானதாக இருந்தால், உங்கள் இருவருக்கும் இடையே உள்ள மேலதிகாரி - பணியாளர் என்ற அலுவலக உறவை துண்டித்து கொள்வதே தார்மீக அடிப்படையில் சரியானது.

( தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


இரண்டாம் நிலை காவலர் தேர்வு!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

மிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 13,376 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு எப்படி தயார் செய்து வெற்றி பெறுவது என்பதை ஆயக்குடி இலவசப் பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி தெரிவிக்கிறார்.

''எழுத்துத் தேர்வு - 80, உடல் தகுதித் தேர்வு - 20 என மொத்தம் 100 மதிப்பெண்கள்.

எழுத்துத் தேர்வில் மொத்தம் 80 கேள்விகளுக்கு 80 மதிப்பெண்கள். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பாடப் புத்தகங்களை படித்தாலே போதும். தமிழில் பொருத்துதல், நூலாசிரியர், தொடர்பும் - தொடர்பு அறிதல் போன்ற எளிமையான வினாக்களே இடம் பெறும்.

கணிதத்தைப் பொறுத்தவரை, அல்ஜீப்ரா, எண்ணியல், அளவியல், முக்கோணவியல் போன்றவற்றை (10-ம் வகுப்பு புத்தகம் மட்டும்) பார்த்தால் போதுமானது. உதாரணமாக, 10 பேர் உள்ள வகுப்பில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்கின்றனர் எனில், மொத்த கைக்குலுக்கல் எத்தனை? என்பன போன்ற சிந்தித்து பதிலளிக்கக் கூடிய கேள்விகளே இடம்பெறும்.

பொது அறிவியலைப் பொறுத்தவரையில் விட்டமின்கள், விட்டமின் குறைபாடு, அதனால் ஏற்படும் நோய்கள், அறிவியல் விதிகள் (உதாரணம் நியூட்டன் விதி) மனித உடலியல், விலங்குகள், பாலூட்டிகள், சுற்றுப்புறச்சூழல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு. பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தை அதிக கவனம் செலுத்தி படித்தால் அறிவியல் கேள்விகளை எதிர்கொள்ள எளிமையாக இருக்கும். சமூகவியலில் இந்திய சுதந்திரப் போராட்டம், முந்தைய ஆட்சி முறைகள், பருவநிலை, தேசியப் பூங்காக்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடம் சரணாலயங்கள் மக்கள் தொகை, பயிர்கள் போன்றவை தொடர்பான கேள்விகளே இடம் பெறும்.

இந்திய அரசியலமைப்புத் தேர்தல், சுதந்திரப் போராட்டத்தில் பெருந்தலைவர்களின் பங்கு, குடியுரிமை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவசியம். தேசிய சர்வதேச விருதுகள், விளையாட்டு, கலைத்துறை, சொல் சுருக்கம் போன்ற எளிமையான கேள்விகளே பொது அறிவு வினாக்களில் கேட்கப்படும்.

பொதுவாகவே அனைவருக்கும் சற்று கடினமாக அமைவது உளவியல் மட்டுமே. இதற்கு சட்டென யோசிக்கும் திறன் முக்கியம். சிந்தனையைத் தூண்டுவதற்கான கேள்விகளே அமையும் என்பதால் இதற்கு பயிற்சி அவசியம். உதாரணமாக, சிறைச்சாலைக்கு இன்றியமையாதது எது? என்ற கேள்விக்கு 1. காவலர் 2. கம்பி 3. பூட்டு 4. கைதிகள். இதில் பூட்டு என்பதே சரியான பதில். இதுபோல விடைகள் அனைத் தும் ஒரே மாதிரி இருக்கும் என்பதால் பயிற்சி முக்கியம்.

தேர்வுக்கு தயார் செய்பவர்கள் கடந்த நான்கு வருட காவலர் தேர்வு வினாத்தாளை பார்த்து படித்தால் தேர்வை எளிதாக அணுக உதவும். அனைவரும் எளிதாக பதிலளிக்க முடியும் என்பதால் உளவியல் பகுதியே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

- கு. பிரகாஷ்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!