நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

2000 ரூபாய் நோட்டு... தங்கமாகவும் டாலராகவும் மாறியது உண்மையா?

2000 ரூபாய் நோட்டு...
பிரீமியம் ஸ்டோரி
News
2000 ரூபாய் நோட்டு...

2016-ல் மொத்த கரன்சியில் ரூ.7.80 லட்சம் கோடியாக இருந்த 500 ரூபாய் நோட்டுகள் 2022-ல் ரூ.22.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது...

'எந்த நேரம் வேண்டுமானாலும் மத்திய அரசிடமிருந்து அந்த அறிவிப்பு வரலாம்’ என்று சில பல மாதங்களாகவே எதிர்பார்த்தது, இப்போது வந்தேவிட்டது. 2016-ம் ஆண்டில் ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ‘ஒரே இரவில்’ மதிப்பு நீக்கம் செய்யப்பட்டன. அப்போது, உடனடியாக மக்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்கிற நோக்கில் அவசர அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் 2,000 ரூபாய் நோட்டு. இந்த, 2000 ரூபாய் நோட்டை முழுமையாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறு வதாக கடந்த 19-ம் தேதி அறிவிப்பை வெளி யிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

சாதாரண மக்களுக்கு பாதிப்பு இல்லை...

கடந்த 2016-ம் ஆண்டில், ‘ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லுபடி ஆகாது’ என்கிற அறிவிப்பை வெளியிட்டபோது, சொல்ல முடியாத துயரத்துக்கு உள்ளானார்கள் ஒட்டுமொத்த மக்களும். குறிப்பாக, சாதாராண மக்கள் பெரும்துயரத்துக்கு ஆளானார்கள். ஆனால், இப்போது இந்த 2000 ரூபாய் திரும்பப் பெறப்படும் விஷயத்தில் அத்தகைய துன்பம் எதுவும் பெரிதாக இல்லை. சாதாரண மக்களிடம் பெரும்பாலும் 2000 ரூபாய் நோட்டுகளே இல்லை என்பதுதான் காரணம்.

திட்டமிட்டு திரும்பப் பெற்ற ஆர்.பி.ஐ

2016-ல், 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய ரிசர்வ் வங்கி., ‘இது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான்’ என்பதில் தீர்மானமாக இருந்தது. எனவே, 2018-ம் ஆண்டிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைப் புதிதாக அச்சடிப்பதை நிறுத்தியதுடன், வங்கிகளுக்கு வரும் நோட்டுகளை மீண்டும் வெளியில் விடாமலும் தடுத்துவிட்டது.இதன்காரணமாக, 2017-ல் மொத்த கரன்சியில் 50.2 சதவிகிதமாக இருந்த 2000 ரூபாய் நோட்டு, 2022-ல் 13.8% என்கிற அளவுக்குக் குறைந்தது. 2023 மார்ச் இறுதியில் 10.8% என்கிற அளவுக்குக் குறைந்து விட்டது. மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், ரூ.6.57 லட்சம் கோடியாக இருந்த 2000 ரூபாய் நோட்டு, 2022-ல் ரூ.4.28 லட்சம் கோடியாகக் குறைந்தது. ரூ.3.2 லட்சம் கோடி மதிப்புக்கான 2000 ரூபாய் நோட்டுகளே வெளியில் இருப்பதாகக் கூறுகிறது 2023 மார்ச் மாத ரிசர்வ் வங்கியின் கணக்கு.

2000 ரூபாய் நோட்டு... தங்கமாகவும் டாலராகவும் மாறியது உண்மையா?

யாரிடம் இருக்கிறது?

இப்போதைய முக்கியமான கேள்வி... ரூ.3.2 லட்சம் கோடி மதிப்புக்கான 2000 ரூபாய் நோட்டுகள் யாரிடம் இருக்கிறது என்பதுதான். ஆனால், அது ஒன்றும் பெரிய ரகசிய மெல்லாம் இல்லை.. அரசியல் செல்வாக்கு கொண்ட லஞ்ச ஊழல் பேர்வழிகள், அவர்களுடைய பினாமிகள், லஞ்சம் வாங்கி பிழைப்புநடத்தும் அதிகார வர்க்கத்தினர், சரிவர கணக்குக்காட்டாமல் பதுக்கும் தொழிலதிபர்கள்/ நிறுவனங்களிடம் மட்டுமே பெரும்பகுதி முடங்கிக் கிடக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். இவர்கள் யார், இவர்களிடம் இருக்கும் பணத்தை வெளியே கொண்டுவர எப்படிப்பட்ட நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசு இப்போது அறிவித் திருக்கும் நடவடிக்கையின் மையப்புள்ளி.

வங்கிகளில் மாற்றுவார்களா?

2016-ல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது, சாதாரண மக்கள் வரிசையில் நின்று, பழைய பணத்தைப் புதிய பணமாக்கப் படாதபாடு பட்டனர். ஆனால், பெரும் பணக்காரர்களோ வங்கிகளில் 20% -30% வரை ‘தள்ளுபடி’க்கு பழைய பணத்தைப் புதிய பணமாக மாற்றினார்கள். அப்போது நடந்த முறைகேடுகள் அனைத்தும் பெரிதாக விசாரிக்கப் படாததால், உண்மைகள் வெளிவராமலே புதைந்து போயின. வெளிப்படையாகவே பலரும் சிக்கினார்கள். கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், அவர்கள் எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வழக்குகளிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்.

இந்த முறையும் அதேபோல, வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படலாம். ‘வங்கிக்கு வரும் 2000 ரூபாய் நோட்டுகள் பற்றி கணக்குக் காட்ட வேண்டும்’ என ரிசர்வ் வங்கி சொல்லி இருந்தாலும், முறைகேடுகள் எதுவும் நடக்காமல் இருக்க, இந்த வழிகாட்டுதல் மட்டும் போதுமா?

தங்கத்திலும் டாலரிலும்...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பத் தரவேண்டும் என்கிற அறிவிப்பு வந்தவுடனேயே அதிக அளவில் அந்தப் பணத்தை வைத்திருந்தவர்கள், தங்கம் மற்றும் அமெரிக்க டாலர்களாக மாற்ற ஆரம்பித்துவிட்டனர். அறிவிப்பு வந்தபோது 10 கிராம் தங்கத்தின் (24 காரட்) விலை ரூ.62,000 - ரூ.63,000- என்று இருந்தது. இதுவே, 2000 ரூபாயை மாற்ற நினைத்தவர் களுக்கு ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை விலை சொல்லப்பட்டது.

அதேபோல, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 82.75 என்கிற அளவில்தான் இயல்பாக வர்த்தகமானது. ஆனால், 2000 ரூபாய் குறித்த அறிவிப்பு வெளியானவுடனேயே கள்ளச்சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியது. 85, 87, 88 என்றெல்லாம் உயர்ந்து... ஒரு கட்டத்தில், 91 ரூபாய் வரை கொடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர். இதெல்லாம் எப்படி நடக்கிறது, இப்படிப் பணம் கைமாறுவதைத் தடுக்க முடியாதது ஏன் என்பதெல் லாம் ரிசர்வ் வங்கிக்கே வெளிச்சம்!

காங்கிரஸுக்குக் கிடுக்கிப்பிடியா?

2000 ரூபாய் குறித்த அறிவிப்பின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்கிறார்கள் சிலர். ‘‘கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. மத்தியில் ஆளும் பா.ஜ.க தோல்வி அடைந்திருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

அடுத்த ஆண்டு ஆந்திரா, அருணாச் சலப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. தவிர, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. இதிலெல்லாம் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கவேண்டுமெனில், அவர்கள் கைவசம் இருக்கும் பணத்தை முதலில் முடக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த நடவடிக்கை. அதாவது, ஏற்கெனவே பா.ஜ.க தரப்பு தன்னிடமும் தன்னுடைய ஆதரவாளர்களிடமும் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளையெல்லாம் 500 ரூபாய்களாக மாற்றி வைத்துவிட்டது. அப்படியில்லாமல் 2000 ரூபாய்களாக வைத்துக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சிகள், இனி அதை மாற்ற முயற்சி செய்தால் வம்பில் மாட்டிக்கொள்ளும். ஆக, அவர்களிடம் பணம் இல்லாத சூழல் ஏற்படும். அதனால், தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் முடங்கிப்போவார்கள் என்பதுதான் பா.ஜ.க-வின் கணக்கு’’ என்கிறார்கள்.இதெல்லாம் எந்த அளவுக்கு நிஜம் என்பது அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியும்.

அநியாயத்துக்கு உயர்ந்த 500 ரூபாய் புழக்கம்!

கடந்த ஐந்து ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டின் புழக்கம் குறைந்த அதேவேளையில், 500 ரூபாய் நோட்டின் புழக்கம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. 2016-ல் மொத்த கரன்ஸியில் ரூ.7.80 லட்சம் கோடியாக இருந்த 500 ரூபாய் நோட்டுகள், 2022-ல் ரூ.22.77 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. 200 ரூபாய் நோட்டும் ரூ.0.37 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.20 லட்சம் கோடி என்கிற அளவுக்கு உயர்ந்தி ருக்கிறது. அதேசமயம், 100 ரூபாய் நோட்டு ரூ.2.60 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.81 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது.

2,000 ரூபாய் நோட்டு களைத் திரும்பப் பெறுவது குறித்த செய்தி குறித்து அதிகார வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டதால், நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘‘அப்படி ஓர் எண்ணம் அரசுக்கு இல்லை’’ என்று பதிலளித்துவிட்டு, பிற்பாடு அந்த அறிவிப்பை வெளியிட்டது ஏன், யாரைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதெல்லாம் பில்லியன் டாலர் கேள்விகளாகும்! இந்தக் கேள்விக்கான பதில் எப்போது கிடைக்கும் என்பதுதான் சாதாரண மனிதனின் கவலை..!

ஆடிட்டர் கார்த்திகேயன்
ஆடிட்டர் கார்த்திகேயன்

‘‘கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள்தான் கஷ்டப்படுவார்கள்!’’

2000 ரூபாய் வாபஸ் தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘‘கறுப்புப் பண ஒழிப்பின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் தாள்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. எனவே, வங்கிக் கணக்கில் பணத்தை டொபசிட் செய்யும்போது, சம்பந்தப்பட்டவர் குறித்த விவரங்கள் எல்லாம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் கறாராகக் கண்காணிக்கப்படும். குறைந்த வருமானப் பிரிவினர் தொடங்கிய ஜன்தன் வங்கிக் கணக்குகளும் அதேபோல கண்காணிக்கப்படும். அதிக பணம் டெபாசிட் செய்யப்படும்போது, கணக்கில் காட்டாத பணமாக இருந்தால், வருமான வரித்துறை கேள்வி கேட்டு, அபராதம் விதிக்கும். இதன் மூலம் அரசின் கறுப்புப் பணஒழிப்பு நோக்கம் நிறைவேறக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கும், கறுப்புப்பணம் அதிகம் கையாள்பவர்களுக்கும்தான் இது சிரமமான நேரமாக இருக்கும். நியாயமாக சம்பாதித்து வருமான வரியைக் கட்டுபவர்களுக்கு சிக்கல் ஏதும் இருக்காது’’ என்று சொன்னார்.

- சி.எஸ்