மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை!

கல்வி-வேலை

நாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை!

இந்தியாவில் வங்கித் துறை அதிவேகமாக வளர்ந்து வரும் துறை. பொதுத் துறை வங்கிகள் மட்டும் சேவை செய்துவந்த நிலையில் தனியார் வங்கிகளும், வெளிநாட்டு வங்கிகளும் சேவை செய்ய அரசு அனுமதித்ததைத் தொடர்ந்து பல வங்கிகள் நம் நாட்டில் வங்கிச் சேவை செய்து வருகின்றன. நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் வங்கிகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினம் தினம் ஏதாவது ஒரு வங்கியிலிருந்து வேலைக்கான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

நாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை!

ங்கித் துறை வேலை வாய்ப்புகள் குறித்து நவ்கரி டாட் காம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சுமித் சிங் சொல்கிறார்.

''வங்கித் துறையைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. எங்களது நவ்கரி டாட் காம் நிறுவனம் நடத்திய சர்வேயின்படி, வங்கித் துறை அனைத்து விதங்களிலும் நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறது.  இந்தியாவில் சேவைத் துறையில் மட்டும் 59 சதவிகித வேலைவாய்ப்புகள் இந்த வருடம் முதல் காலாண்டில் கிடைத்துள்ளது. இதுவே சென்ற ஆண்டில் இதே நேரத்தில் 46% மட்டுமே கிடைத்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை வங்கிகளின் முக்கிய பணி, டெபாசிட் வாங்குவதும் கடன் கொடுப்பதுமாக இருந்தது. ஆனால், இப்போது கிரெடிட் கார்டு, இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்கு வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பலவிதமான சேவைகளை வங்கிகள் செய்து வருகிறது.

புதிய வங்கிகளுக்கு கொள்கை அளவில் மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. இதற்கான ஆரம்பகட்ட  பணிகள் துவங்கப் பட்டிருக்கிறது. விரைவில் இன்னும் சில புதிய வங்கிகளை நாம் எதிர்பார்க்கலாம். இதனால் இத்துறைக்குத் தேவையான நபர்களின் எண்ணிக்கை பெருகியே வருகிறது.

நாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை!
##~##
என்னென்ன வேலைகள்?

வங்கிகளைப் பொறுத்தவரை கிளார்க், புரபேஷனரி ஆபீஸர்கள், மேலாளர் பணி களுக்கு அதிகளவில் ஆட்களை எடுக்கிறார்கள். இதில் பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சேர்ந்து ஐ.பி.பி.எஸ். எனும் தேர்வை நடத்து கின்றன. ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் நடக்கும் இந்த தேர்வில் தேர்வானால் வங்கிகள் நடத்தும் நேர்முகத் தேர்வுக்குச் செல்லலாம். இந்த தேர்வில் வெற்றி பெற்று விட்டால் ஒரு வருடத்திற்குள் வங்கிப் பணிகளுக்கு விண்ணப் பிக்கலாம்.

என்ன படிக்கலாம்?

வங்கிப் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினீயரிங்கூட படித்திருக்கலாம். ஆனால், பி.காம், எம்.காம். படிப்புகள் கூடுதல் பலனளிக்கும். கிளார்க், புரபேஷனரி ஆபீஸர் என பணிக்குச் சேர்ந்த பிறகு அடுத்தடுத்து தேர்வு எழுதி உயர் பதவிகளை அடையலாம்.

சம்பளம்!

கிளார்க் பணிக்கு ஆரம்ப சம்பளமாக பத்தாயிரம் ரூபாய் வரை கிடைக்கும். அதன்பிறகு பதவி உயர்வின் மூலம் அடுத்தடுத்து சம்பளம் உயரும். நிரந்தரப் பணி, விடுமுறை, கடன் உதவி என அனைத்து விதங்களிலும் வங்கித் துறை நல்ல தேர்வாக அமையும்.

- பானுமதி அருணாசலம்.