மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: பள்ளி To கல்லூரி!

நாணயம் ஜாப்: பள்ளி To கல்லூரி!

நாணயம் ஜாப்: பள்ளி To கல்லூரி!
நாணயம் ஜாப்: பள்ளி To கல்லூரி!

பிளஸ் டூ ரிசல்ட் வந்து கல்லூரியில் சேரத் தயாராக இருக்கிறார்கள் மாணவர்கள். கல்லூரியில் இவர்கள் படிக்கப் போகும் அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகள்தான் அவர்களின் எதிர்கால பணி வாழ்க்கையை நிர்ணயம் செய்யப் போகிறது. பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தங்கள் மனநிலையை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் துறையகத்தின் இயக்குநர் பேராசிரியர் வேங்கடபதி.

''கல்லூரி படிப்பை ஆரம்பிக்கும் மாணவர்களுக்குப் பெரும் குழப்பமே அடுத்து என்ன படிப்பைத் தேர்வு செய்வது என்பதுதான். இந்த விஷயத்தில் மற்றவர்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக படிப்பைத் தேர்வு செய்யாமல், அவர்களுக்கு விருப்பமான, ஆர்வமுள்ள படிப்பைத் தேர்வு செய்வது அவசியம்.  

கல்லூரிப் படிப்புக்காக வெளியூரிலோ, வெளி மாநிலத்திலோ சென்று படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில்,  சுற்றுப்புறச் சூழ்நிலைக்குத் தக்கவாறு அவர்களின் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பள்ளிப் படிப்பில் பாடங்கள் குறைவு. கல்லூரியில் பாடங்கள் அதிகம். எனவே, ஜாலி மனநிலைக்கு டாட்டா காட்டிவிட்டு, கல்லூரி பருவத்திற்கு ஏற்ற மனநிலைக்கு மாறுவது அவசியம்.

##~##
பெரும்பாலான மாணவர்கள் 'இந்த கல்லூரியில் சேர்ந்து விட்டாலே வேலை உறுதி’ என்கிற மனநிலையுடன் சேர்கிறார்கள். இது தவறு. சிறந்த கல்லூரியாக இருந்தாலும் படிப்பு என்பது அவரவர்களைச் சார்ந்தே அமைகிறது. நல்ல கல்லூரியில் சேர்ந்து விட்டு படிக்காமல் ஊர்சுற்றித் திரிகிறவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? அதேபோல, இந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டேனே! நான் எங்கே உருப்படப் போகிறேன்! என்கிற எண்ணமும் உங்களுக்கு வேண்டவே வேண்டாம். அது எந்த கல்லூரியாக இருந்தாலும் சரி, முழுமையான ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். பொதுவாகவே கல்லூரியில் சேர்ந்ததும் பாடத் திட்டங்கள் முதலில் கடினமாகத் தெரியும். முதல் பருவத்தேர்வை முடித்ததும் பாடத் திட்டம் பழகிவிடும். அந்த மனப்பக்குவம் வரும்வரை காத்திருப்பது அவசியம். பாடம் புரியவில்லை என்று பாதியில் படிப்பை நிறுத்துவது சரியில்லை. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் இந்த விஷயத்தில் இன்னும் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.

* கல்லூரியில் வெறும் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்காமல், நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் படிப்பது அவசியம்'' என்று முடித்தார் பேராசிரியர் வேங்கடபதி.

பள்ளி மனநிலையை கல்லூரியின் தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டாலே போதும், வெற்றி நூறு சதவிகிதம் உறுதி!

- செ.கார்த்திகேயன்,
படம்: வி.ராஜேஷ்

கவுன்சிலிங்கில் கவனிக்க வேண்டியவை!

பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது கல்லூரியின் தரம், கல்லூரிகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறதா என்பதைக் கவனிப்பது அவசியம்.  

கல்லூரியில் கணினி வசதி, போதுமான ஆசிரியர்கள், ஆசிரியர்களின் பயிற்சி திறன், அடிப்படை வசதிகள் என எல்லாமே முறையாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரே கல்லூரி, ஒரே படிப்பு என்றிருப்பதைவிட மூன்று கல்லூரி, மூன்று படிப்பு என சாய்ஸ் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரி மற்றும் படிப்பு கிடைக்காவிட்டால், அடுத்த கல்லூரியில் அதை தேர்வு செய்து படிக்கலாம்.

படிப்பு முடிந்ததும் கல்லூரியானது மாணவர்களுக்கு சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கிறதா என்பதையும் முன்பே ஆராய்வது அவசியம்.