நாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா!


இன்றைக்கு அடிக்கடி வேலை மாறுவது இளைஞர்களிடம் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒரு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தாலே அதிகம் என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஆனால், ''ஒருவர் அடிக்கடி வேலை மாறுவது தனது எதிர்கால வாழ்க்கையை (வேலைவாய்ப்புகளை) தானே கொலை செய்வதற்குச் சமம்'' என்கிறார் சென்னை பஜாஜ் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஹெச்.ஆர். சீனியர் மேனேஜர் எம்.ராஜேஷ்.
அடிக்கடி வேலை மாற என்ன காரணம், அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன, வேலை மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி சொல்கிறார் அவர்.
''வேலையைத் தேர்வு செய்வது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்கிற மாதிரி. மிக பக்குவமான மனநிலையுடன் இதை செய்ய வேண்டும். பிடித்த வேலை கிடைத்தால் செய்வேன் என்றில்லாமல் குடும்ப பொருளாதார சூழ்நிலை கருதி, கிடைத்த வேலையை நன்றாகச் செய்யும் மனப்பக்குவம் முதலில் வரவேண்டும்.
இன்றைய உலகில் நிறைய வேலைவாய்ப்பு இருக்கிறது. ஆனால், எல்லா வாய்ப்புகளையும் எல்லோரும் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டுவிட வேண்டும் என்கிற அவசர மனநிலையில் இருப்பவர்களே அடிக்கடி வேலை மாறுகிறார்கள்.
ஒரு நிறுவனத்தில் சம்பளம் குறைவாக இருக்கலாம்; சில வசதிகள் இல்லாமல் இருக்கலாம். சில மாதங்களுக்கு இரவில்கூட வேலை பார்க்கச் சொல்லலாம். இதையெல்லாம் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டால், அடிக்கடி வேலை மாற வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இந்த பொறுமை இன்றைய ஊழியர்களிடம் இல்லை என்பதே உண்மை.
முதல் வேலையில் முதல் ஆறு மாதங்களுக்கு வருமானத்தைவிட அந்த வேலையை திறமையாகச் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் அந்த நிறுவனத்தில் உங்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கித் தரும்.
• எப்படி பாதிக்கிறது?
##~## |
இதற்காக வேலை மாறிய விஷயத்தைச் சொல்லாமலும் இருக்க முடியாது. காரணம், இடைப்பட்ட காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தோம் என்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். அல்லது பொய்யான ஒரு காரணத்தைச் சொன்னால் அதற்காகவே அடுத்த வேலை கிடைக்காமல் போகலாம்.
ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தால்தான் பணிக் கொடை என்று சொல்லப்படுகிற கிராஜுட்டி கிடைக்கும். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என ஒருவர் இரண்டு, மூன்று கம்பெனி மாறினால் இந்த கிராஜுட்டி தொகை கிடைக்காமலே போகும்.
ஒருவர் ஒரு நிறுவனத் தில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வேலை செய்திருந்தால்தான், அடுத்த நிறுவனத்திற்கு வேலைதேடிச் செல்லும்போது மதிக்கப்படுவார். அடிக்கடி வேலை மாறும் ஒருவரை ஒரு அலுவலகத்தில் வேலைக்கு எடுத்தாலும் அவரிடம் அலுவலக ரகசியங்கள் எதுவும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். சக ஊழியர்களுக்கு கிடைக்கும் பல சலுகைகள் அவருக்கு கிடைக்காமல் போகலாம். பதவி உயர்வில், சம்பள உயர்வில் தாமதம் காட்டலாம். அதனால் அடிக்கடி வேலை மாறி இதுபோன்ற விஷயங்களில் சிக்காமல் இருப்பது நல்லது.
• மாறாமல் இருக்க..!
முதலில் வேலைக்குச் சேரும்போது அந்த வேலை பற்றிய பலம், பலவீனம், பிளஸ், மைனஸ் போன்ற விஷயங்களை ஆய்வு செய்யும் 'சுவாட்’ (ஷிகீளிஜி) அனாலிசிஸ் செய்தபிறகு சேர்ந்தால், வேலையைவிட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவசியமே ஏற்படாது.
நிறுவனத்தின் லட்சியத்தையும் உங்கள் லட்சியத்தையும் ஒன்றாக்கிக் கொள்ளுங்கள். நிறுவனம் தனது லட்சியத்தை அடையும்பட்சத்தில் உங்கள் லட்சியமும் நிச்சயம் நிறைவேறுவதாக இருக்கும்.
சம்பளம் அதிகம் என்கிற ஒரே காரணத்திற்காக வேலை மாறுவது கூடவே கூடாது. முதலில் அதிக சம்பளம் தந்து, பிற்பாடு சம்பளத்தைக் குறைத்தாலும் நீங்கள் கேட்க முடியாது என்பதால் அதை மட்டுமே காரணமாக வைத்து வேலை மாறாதீர்கள்.
சிறந்த நிறுவனங்கள் அந்த நிறுவனத்தில் நீண்ட காலம் வேலை பார்ப்பவருக்கு பொறுப்பான உயர்பதவியைத் தரும். ஆக, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உயர்பதவியை அடைய வேண்டும் எனில், அடிக்கடி வேலைமாற வேண்டாம்!.''
இளைய தலைமுறையினர் இனிமேலாவது வேலையைவிடும்போது இதையெல்லாம் யோசிப்பது நல்லது!
- செ.கார்த்திகேயன்,
படம்: ச.இரா.ஸ்ரீதர்