மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா?

நாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா?

நாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா?
நாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா?

முப்பது வயதில், இருக்கிற வேலையை இழந்தால் இன்னொரு வேலையைத் தேடுவதில் ஒரு பிரச்னையும் இருக்காது. ஆனால், நாற்பது வயதில் வேலையை இழந்தால், இன்னொரு வேலையைத் தேடுவது சுலபமான விஷயமல்ல. நாற்பது வயதில் ஏற்கெனவே குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருக்க, அந்த நேரத்தில் பொருளாதாரச் சிக்கல்களும் சேர்ந்தால், வாழ்க்கையே டென்ஷன் நிறைந்ததாக மாறிவிடும்.

ஆனால், இன்றைய தேதியில் நாற்பது வயதுக்கு மேலே உள்ள பலர் வேலை தேடி வருகிறார்கள். இந்த வயதில் ஒருவர் வேலை தேட என்ன காரணம்? எந்தெந்த துறைகளுக்கு இந்த வயதுக்காரர்கள் பொருத்தமாக இருப்பார்கள்? என்பதைச் சொல்கிறார் மனித வளத் துறை ஆலோசகர் கெம்பா ஆர்.கார்த்திகேயன்.

''நாற்பது வயதுக்கு மேலே வேலை தேடுவது இன்றைக்கு ஒரு டிரெண்ட்-ஆகவே இருக்கிறது. இதற்கு காரணங்கள் பல. சொந்தமாக தொழில் செய்ய நினைப்பவர்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பில் சிக்கி வேலை இழந்தவர்கள், வி.ஆர்.எஸ். வாங்கியவர்கள், ஆசைப்பட்ட துறைக்குப் போக நினைத்து, அது நிறைவேறாமல் வேலைக்கு வருபவர்கள், நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்க நினைக்கும் பெண்கள் என பலரும் வேலை தேடி வருகிறார்கள்.  இவர்கள் கேட்கும் கேள்விகள் இவைதான், இந்த வயதில் நாங்கள் வேலை தேடுவது சரியா? அதற்கு ஏதாவது படிக்க வேண்டுமா? எந்தெந்த துறையில் எங்களுக்கு வேலை கிடைக்கும்?

நாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா?

வேலை போய்விடும் என்பதை நினைத்து பயப்படுபவர்கள் பெரும்பாலும் அறுபதுகளில் பிறந்தவர்கள். ஐ.டி. துறை என்று ஒன்று வருவதற்கு முன்பே வேலைக்குச் சென்றவர்கள். இவர்கள் பெரும்பாலும் உற்பத்தி துறையிலேயே வேலைக்குச் சேர்ந்திருப்பார்கள். அன்று உற்பத்தி செய்த பல பொருட்கள் இன்று மார்க்கெட்டில் இல்லை. இந்த மாதிரியான நிறுவனங்களில் வேலை செய்த பலர் தற்போது வேறு வேலையைத் தேடுகிறார்கள். இவர்கள் படித்த டெக்னாலஜியும் மாறி இருக்கும் என்பதால் மீண்டும் இவர்களுக்கு உற்பத்தித் துறையில் வேலை கிடைப்பது கடினம்.

ஆனால், சர்வீஸ் துறையில் இது மாதிரியானவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கான தகுதிகளை இவர்கள் வளர்த்துக் கொண்டாலே போதும். இங்கு தகுதி என்பது திறமைதான்.  தவிர, எந்த வேலையையும் ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு செய்கிற உற்சாகமான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். தன்னைவிட வயதில் சிறியவர்களிடம் பணிவாகப் பேசி, பழகி வேலை பார்க்க கற்றுக் கொண்டாலே போதும், ஜெயித்துவிடலாம்.

சொந்தமாகத் தொழில் செய்ய நினைப்பவர்கள் அந்த தொழில் சம்பந்தமான நுணுக்கங்களை முதலில் தெரிந்துகொள்வது கட்டாயம். அதன்பிறகே வேலையை விடலாமா என்று யோசிக்க வேண்டும். சொந்தமாகத் தொழில் செய்வதற்கான திறமை நமக்கு இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்வது அடிப்படையான விஷயம். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக இதுபோன்ற பலப்பரிட்சையில் இறங்கக்கூடாது. தொழில் திறமையை வளர்த்துக்கொள்வது தொடர்பான படிப்பு ஏதாவது இருந்தால் அதைப் படிப்பதும் நல்ல விஷயமே. அப்போதுதான் அந்தத் துறையில் ஏற்பட்டுள்ள லேட்டஸ்ட் மாற்றங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ரிஸ்க் எடுக்க தெரியாதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கும் எண்ணத்தைக் கைவிடுவது நல்லது.

இருபது வருடங்களுக்கு மேல் வேலை பார்த்துவிட்டு, அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய பலர், இனி தனக்குப் பிடித்தபடி உழைப்போம் என நினைக்கிறார்கள். இவர்கள் பாட்டு பாடுவது, சமூக சேவை செய்வது, ஆசிரியராக இருப்பது, ஓவியம் வரைவது போன்ற வேலைகளை செய்ய நினைக்கிறார்கள். இந்த திறமைகளை கொண்டவர்கள் இதை வைத்து வேலை தேடுவதைவிட, மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பது சிறந்தது. இது மாதிரியான பயிற்சியாளர்களுக்கு இன்று அதிகமான தேவை இருக்கிறது. அந்த வாய்ப்புகளை புரிந்துகொண்டால் மனதுக்கு பிடித்த வாழ்க்கையைக் கொஞ்சம் வருமானத்தோடு வாழலாம்.  

##~##
பிள்ளைகள் அடுத்து என்ன செய்யலாம் என கேரியர் கவுன்சிலிங்க்குக்குப் போகும்போது, அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பார்த்து நாமும் செய்தால் என்ன என்று யோசிக்கிறார்கள் பலர். இளைஞர்கள், ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்கிற வெறியில் நிறைய உழைப்பார்கள். அவர்களுடன் உங்களால் போட்டி போட முடியுமா என்பதை முதலில் உறுதி செய்துகொண்ட பிறகு களத்தில் இறங்குவது புத்திசாலித்தனம்.  

நாற்பது வயதில் நீங்கள் தேடிய வேலை கிடைத்தாலும், அதை தக்கவைத்துக்கொள்ள நிறைய பாடுபட வேண்டியிருக்கும். ஏனெனில் அங்கு உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருப்பார்கள். அவர்களுடன் போட்டி போட்டு வேலைகளை கற்றுக் கொண்டு உற்சாகமாக செய்ய முடியும் என்பதை நீங்கள் உணர்ந்தாலே போதும், நாற்பது வயதில் நம்பிக்கையுடன் வேலை தேடலாம்'' என்கிற ஆலோசனையுடன் முடித்தார் கார்த்திகேயன்.

- இரா.ரூபாவதி.