MBA - மூன்றெழுத்து மந்திரம்



பெப்ஸி கோலா கம்பெனியின் உலகத் தலைவர் இந்திரா நூயி. அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை, உலகத்தின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் தயாரித்து வெளியிடுகிறது. அதில் இந்திரா நூயிக்கு நான்காம் இடம். இவர் தமிழ்ப் பெண்; சென்னையில் பிறந்தவர்; பி.எஸ்.சி. வரை சென்னையில் படித்தவர் எனப் பெருமையோடு நாம் எல்லோரும் முதுகில் தட்டிக்கொள்ளலாம்.
உலக அரங்குகளில் நம்மைப் பெருமைப்பட வைத்த இன்னொரு தமிழ்நாட்டுக்காரர் கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத். அமெரிக்க மிச்சிகன் மாநிலத்தில் இருக்கும் ராஸ் பிஸினஸ் ஸ்கூலில் (Ross Business School) பேராசிரியராகவும், பல முன்னணி நிறுவனங்களில் ஆலோசகராகவும், இயக்குநராகவும் இருந்தவர். அமெரிக்க மேனேஜ்மென்ட் சிந்தனையாளர்களில் சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்டவர். அமெரிக்காவில் இவர் பேச ஆரம்பித்தால் அரங்குகள் நிரம்பி வழியும். இவருடைய ஒரு பேச்சுக்கு நிறுவனங்கள் என்ன சன்மானம் தந்தன தெரியுமா? 50,000 டாலர்கள். அதாவது, இருபத்தைந்து லட்சம் ரூபாய். 2010-ல் பிரகலாத் அமரரானபோது, ஒட்டுமொத்த பிஸினஸ் உலகமும் அஞ்சலி செலுத்தியது.
##~## |
2011. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நத்தம், கொட்டாம்பட்டி, எஸ்.புதூர், பொன்னமராவதி வட்டங்களில் உள்ள 625 கண்மாய்கள்,
125 ஊரணிகளின் நீர் ஆதாரக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணி போர்க்கால வேகத்தில் நடக்கிறது. 30 ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றி வைக்கப்போகும் இந்த பணி ஐந்தாண்டு காலத்தில் முடிவடையும். ஆனால், இது அரசாங்கத் திட்டமல்ல. ஆக்ஸிஸ் வங்கியின் கடனுதவியில் மதுரையில் இருக்கும் 'தான்’ என்னும் தனியார் அறக்கட்டளை நடத்தும் பணி. கடந்த பதினைந்து ஆண்டுகளாக கிராமங்களில் மக்கள் சக்தியை எழுப்பி புரட்சி படைக்கும் அந்த 'தான்' அறக்கட்டளையை நிறுவியவர், அதன் நிர்வாக இயக்குநராக வழிகாட்டி நடத்தி வருபவர் வாசிமலை.

சேத்தன் பகத். 2004 தொடங்கி இன்றுவரை இவர்
Five Point Someone,
One Night @ The Call Center,
The 3 Mistakes of My Life,
2 States,
Revoluion 2020
என ஐந்து நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். ஒவ்வொரு புத்தகமும் பத்து லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியிருக்கிறது.
3 இடியட்ஸ் (தமிழில் நண்பன்) இவருடைய நாவலைத் தழுவிய கதைதான். விற்பனை, சம்பாத்தியம், புகழ் என அனைத்திலும் உச்சம் கண்டிருக்கும் சேத்தன் பகத்போல் சாதனை படைத்த ஆங்கில நாவலாசிரியர் இந்திய வரலாற்றிலேயே வேறு யாரும் இல்லை என்கிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்.
கிரிக்கெட் விளையாட்டு வீரராக ஜொலித்து, ஓய்வுபெற்றபின் விளையாட்டு வர்ணனையாளராக மாறுவதுதான் நியதி. ஆனால், ரசிகராக இருந்து வர்ணனையாளராக மாறி ஜெயித்துக் காட்டியவர் ஹர்ஷா போக்லே. நீரோட்டமாய்ப் பொங்கிவரும் பேச்சு, புள்ளிவிவரங்கள், கிரிக்கெட் வீரர்கள் பற்றிய சுவாரஸ்ய துணுக்குகள், ரசிக்கத்தக்க நகைச்சுவை என ஹர்ஷா போக்லே ரசிகர்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்.
இந்திரா நூயி, சி.கே.பிரகலாத், சரத்பாபு, வாசிமலை, சேத்தன் பகத், ஹர்ஷா போக்லே... இவர்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிறந்தவர்கள்; பல்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்கள்; பல்வேறு துறைகளில் முத்திரை பதிப்பவர்கள். ஆனால், இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன தெரியுமா? இவர்கள் அத்தனை பேரும் எம்.பி.ஏ. பட்டதாரிகள்.

இந்தியாவின் முன்னணி பிஸினஸ்மேன்களை ஒரு நிமிடம் மனக்கண் முன்னால் கொண்டுவாருங்கள். டாடா குழுமத் தலைவராக 2012 இறுதியில் பதவியேற்கப்போகும் சைரஸ் மிஸ்ட்ரி, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அனில் அம்பானி, ராகுல் பஜாஜ், ஆதி கோத்ரெஜ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர் காமத், காக்னிசன்ட் டெக்னாலஜீஸ் சி.இ.ஓ. ஃபிரான்ஸிஸ்கோ டிசூஸா, மஹேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா ஆகிய அத்தனைபேரும் எம்.பி.ஏ. படித்தவர்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் 40 சதவிகித சி.இ.ஓ.க்கள் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்கள்.
எம்.பி.ஏ. மாஸ்டர் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்கிற இந்த இரண்டாண்டு முதுகலைப் படிப்பு கொடுத்த அறிவு, பயிற்றுவித்த சூட்சுமங்கள், இந்த தனிநபர்களின் சாதனைகளுக்கு மட்டுமல்ல, உலகின் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம் என்று எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.
எம்.பி.ஏ. படிப்புப் படித்த எல்லோருமே தாங்கள் தொட்ட துறைகளில் சிகரம் தொட்டு ஜொலிக்கிறார்கள் என்றால், எம்.பி.ஏ. என்னும் இந்த மூன்றெழுத்துகளில் நிச்சயமாக ஏதோ மந்திரசக்தி இருக்கிறது. அப்படி என்ன மேஜிக் இருக்கிறது இந்த படிப்பில்?
பல பத்தாண்டுகளுக்கு முன்னால் அகமதாபாத் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. படித்து முடித்து வந்தவன் என்னும் தகுதியில் நான் உறுதியாகச் சொல்ல முடியும். 'பிஸினஸில் மட்டுமல்ல, வாழ்க்கையில் சந்தித்த பல சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்க எம்.பி.ஏ. படிப்பு எனக்கு உதவியிருக்கிறது. பிரச்னைகளை எல்லாக் கோணங்களிலும் அலசி ஆராயும் ஆழப்பார்வை, அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடிக்கும் திறமை, தீர்வுகள் தேடும் மனப்பான்மை - இவை எல்லாமே எம்.பி.ஏ. படிப்பு தந்தவைதான். எம்.பி.ஏ.வில் நான் படித்த இரண்டாண்டு படிப்பு என் அறிவை மட்டும் விசாலமாக்கவில்லை; என்னைப் புது மனிதனாக்கியது.'

இது என் அனுபவம் மட்டுமல்ல, இன்றைய தலைமுறையின் பிரதிநிதியான அக்பர், என் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறார்.
சென்னை திருநின்றவூரில் ஜெயா ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் இருக்கிறது. இங்கே எம்.பி.ஏ. படித்த அக்பர் வே டு வெல்த் (Way 2 Wealth) நிதி ஆலோசனை நிறுவனத்தில் ரிலேஷன்ஷிப் மேனேஜராகப் பணியாற்றுகிறார். அவர் சொல்கிறார். 'என் திறமைகளைப் பட்டை தீட்டவும், சவால்களைத் தன்னம்பிக்கையோடும், துணிச்சலோடும் எதிர்கொள்ளவும் இந்த படிப்பு எனக்கு உதவியது. பிறரோடு பழகுவது எப்படி, ஒரு குழுவில் பிறரோடு தோள் கொடுத்துப் பணியாற்றுவது எப்படி என்பது போன்ற வெற்றி ரகசியங்களை நான் வேறு எங்கும் கற்றிருக்கவே முடியாது.'
எம்.பி.ஏ. படிப்பு தரும் இந்த தனித்திறமைகளைக் கார்ப்பரேட் உலகம் வெகுவாக மதிக்கிறது. இதனால்தான், இரண்டு வருட எம்.பி.ஏ. படிப்பை முடிக்கும் முன்னாலேயே, இருபதுகளில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், டாடா, பார்தி ஏர்டெல், சிட்டி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய முன்னணி கம்பெனிகள் உனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக்கொண்டு வரவேற்று வேலை கொடுக்கின்றன.
இப்படி கிடைக்கும் வேலைக்கு கிடைக்கும் சம்பளம் மாதத்துக்கு லட்சத்துக்கு மேல். சில வெளிநாட்டு கம்பெனிகளில் கோடிக்கு மேல். இதனால்தான் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, அத்தனை பேரும் எம்.பி.ஏ. படிக்க ஆசைப்படுகிறார்கள்.
அத்தனை கேள்விகளுக்கும், இந்த தொடர் பதில் சொல்லும்; சொந்த, கேட்ட அனுபவங்களாய், பிஸினஸ் நடப்புகளாய், சுவாரஸ்யமாய்...
(கற்போம்)
படம்: ஜெ.வேங்கடராஜ்.