மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

குண்டூசிக் கொள்கை!

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1903-ல் ஹென்றி ஃபோர்டு கொண்டுவந்த புரட்சிகரமான மாற்றத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், கடைசி இருநூறு ஆண்டுகளை மீண்டுமொருமுறை கொஞ்சம் உன்னிப்பாகப் படிக்கவேண்டும்.  

எந்திரங்களைப் போலவே மனிதர்களின் உற்பத்தியையும் உச்சமாக்குவது எப்படி என்னும் கேள்விக்கு, இங்கிலாந்தின் அரசியல், பொருளாதார மேதை ஆடம் ஸ்மித் தீர்வு கண்டுபிடித்தார். அந்தத் தீர்வு - உழைப்புப் பங்கீடு (Division of Labour) என்னும் தயாரிப்பு முறை.  

1776-ல் இவர் எழுதிய நாடுகளின் செல்வ வளம் - தன்மையும் காரணங்களும் - ஒரு விசாரணை (An Enquiry into the nature and causes of the wealth of nations) என்னும் புத்தகத்தில், ஆடம் ஸ்மித் எளிமையாக இந்த உற்பத்தி முறையை விளக்கினார். குண்டூசி தயாரிப்பதை அவர் உதாரணமாக எடுத்துக்கொண்டார். சாதாரணக் குண்டூசியா என்று கேவலமாக நினைக்காதீர்கள். குண்டூசி தயாரிப்பில் அன்று பதினெட்டுப் படிநிலைகள் இருந்தன.  

இரும்புத் துண்டிலிருந்து கம்பி செய்யவேண்டும்; கம்பியைக் கோணல்கள் இல்லாமல் நேராக்கவேண்டும்; சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டவேண்டும்; தலைப்பாகத்தை உருண்டை வடிவமாக்கவேண்டும்; மறுமுனையைக் கூர்மையாக்கவேண்டும்; துரு நீக்கிப் பாலிஷ் செய்யவேண்டும். இப்படி பதினெட்டுப் பணிகளையும் செய்து முடித்தால்தான் குண்டூசி தயார்.  இந்த பதினெட்டு வேலைகளையும் ஒரே ஒரு மனிதன் மட்டுமே செய்தால், அவனால் ஒரு நாளில் இருபது குண்டூசிகள் மட்டுமே தயாரிக்க முடியும். பத்து பேர் சேர்ந்து உட்காருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் முழுக் குண்டூசி தயாரித்தால், ஒரு நாளில் அவர்கள் தயாரிக்கும் மொத்தக் குண்டூசிகள் 10X20=200.

##~##
அந்த பத்துப் பேரும் ஆடம் ஸ்மித் சொல்லும் உழைப்புப் பங்கீடு முறையில் குண்டூசி தயாரிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் கம்பி செய்கிறார்: இரண்டாமவர் கம்பியை நேராக்கி சைஸுக்கு வெட்டுகிறார்: மூன்றாமவர் தலையை உருண்டை வடிவமாக்குகிறார்: நான்காமவர் மறுமுனையைக் கூர்மையாக்குகிறார். இப்படி வேலையின் பதினெட்டு அம்சங்களைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டு அந்த பத்துப் பேரும் செயலாற்றுகிறார்கள். பத்துப் பேரும் இந்த உழைப்புப் பங்கீட்டு முறையில் ஒரு நாளில் எத்தனை குண்டூசிகள் தயாரிப்பார்கள்?  

என்ன 4,000 குண்டூசிகளை தயாரித்துவிடுவார்களா? என்றுதானே கேட்கிறீர்கள். இல்லை, அவர்கள் மொத்தம் 48,000 குண்டூசிகளைத் தயாரிப்பார்கள்.

அடி ஆத்தி, எப்படி இது சாத்தியம்? என்று நீங்கள் வியக்கலாம். அதுதான் ஆடம் ஸ்மித் கண்டுபிடித்துச் சொன்ன தத்துவம். அவர் சொன்ன உழைப்புப் பங்கீடு என்னும் தயாரிப்பு முறையைப் பின்பற்றினால், உற்பத்தி 240 மடங்கு அதிகமாகிறது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

முதலாளிகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். கணக்கு ஓகே. ஆனால், நடைமுறையில் பல பிரச்னைகள். உழைப்புப் பங்கீடு வெற்றிகரமாக நடக்கப் பல அடிப்படைத் தேவைகள் உண்டு. குண்டூசியின் முனையைக் கூராக்க உங்கள் ஊர் தொழிலாளிக்குத் திறமை கம்மி. அதில் நுணுக்கம் கொண்டவர் பக்கத்து ஊரில் இருக்கிறார். அவர் தினமும் உங்கள் ஊருக்கு வந்து வேலை செய்தால்தான் உங்கள் உற்பத்தி அதிகமாகும்.  

இதற்கான போக்குவரத்து  வசதிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் இருக்கவில்லை. ஊருக்கு ஊர் பயணம் செய்ய குதிரை, மாட்டு வண்டிகள்தாம் பயன்பட்டன. வேலை பார்க்கும் நேரத்தைவிட பிரயாண நேரம் அதிகமானது. ஆனால், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் ஆடம் ஸ்மித் மகிமை உலகத்துக்குப் புரிந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் வந்த நீராவியால் ஓடும் ரயில்களும், கப்பல்களும் வியாபாரத்தை அமோகமாக வளர வைத்தன. இந்த திடீர் வளர்ச்சியை சமாளிக்க முடியாமல் முதலாளிகள் திண்டாடித் திணறினார்கள். கொட்டும் ஆர்டர்களுக்கு சப்ளை செய்ய எப்படி மூலப் பொருட்கள் வாங்கவேண்டும், உற்பத்தியை எப்படி ஒழுங்குபடுத்தவேண்டும், ஊழியர்களிடம் எப்படி வேலை வாங்கவேண்டும், யாருக்கு யார் மேலதிகாரி, யார் கட்டளையிட வேண்டும், யார் அடி  பணியவேண்டும் என்பதெல்லாம் ஒருவருக்குமே தெரியவில்லை. ஒரே குழப்பம், குளறுபடி.  

இரவுக்குப்பின் பகல், இருட்டுக்குப்பின் வெளிச்சம், குழப்பத்துக்குப்பின் தெளிவு. இது உலக நியதி. 1854-ல் டேவிட் மெக்கல்லம் (David McCallum) அமெரிக்காவின் எர்ரி ரயில்ரோடு (Erie Railroad) என்னும் ரயில் கம்பெனியின் உயர் அதிகாரியாக இருந்தார். தொழிலாளர்களிடையே வேலையின் பல அம்சங்களைப் பங்கிட்டுக் கொடுத்தல், ஊழியர்களின் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் வரையறுத்தல், திறமைக்கேற்ற ஊதியம், பதவி உயர்வு என ஏராளமான மேனேஜ்மென்ட் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். கம்பெனியை லாபகரமாக நடத்தினார். நிறுவனங்களை எப்படி நிர்வகிக்கவேண்டும் என்று புதிய பாதை போட்டார். உலகத்தின் முதல் மேனேஜர் என உலகம் அழைப்பது இவரைத்தான், இதனால்தான்!

மீண்டுமொரு மாற்றம் வந்தது; இது வித்தியாசமான மாற்றம். 1876, அலெக்சாண்டர் கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்தார். தகவலை சொல்லி அனுப்புவதற்கு புறா, அன்னம் என்று தேடி அலையாமல், பக்கத்தில் இருக்கும் டெலிபோன் டயலைச் சுழற்றினால், சேதியைப் பகிர்ந்துகொள்ளவும், பிஸினஸ் தொடர்புகளை வளர்க்கவும் கைக்கெட்டும் தூரத்தில் வசதி!  

போக்குவரத்துக்கு ரயில், கப்பல், தகவல் தொடர்பு வசதிக்கு டெலிபோன் - இந்த சௌகரியங்களால், பிஸினஸ் வரலாறு காணாத வளர்ச்சி கண்டது. உழைப்புப் பங்கீடு எல்லோரும் பின்பற்றும் கொள்கையானது. ஏராளமான நிறுவனங்கள் பெரிய, பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கின.

இதற்குமேல் முதலாளிகளுக்கு வேறென்ன வேண்டும்? தொழில்புரட்சியால் வந்த அதிக உற்பத்தி, லாபம், பணபலம் ஆகியவற்றால், சகமனிதனே வேண்டாம், எந்திரங்களால் மட்டுமே தான் வளரமுடியும் என்கிற தெனாவெட்டு முதலாளிகளுக்கு வந்தது. தொழிலாளிகளை உணர்ச்சிகளற்ற எந்திரங்களாக, அடிமைகளாக நடத்தத் தொடங்கினார்கள்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

அதேசமயம், தொழிலாளிகளை நெடுங்காலம் அடக்கி ஒடுக்கி வைக்க முடியாது, அவர்களுடைய உணர்ச்சிகள் ஒருநாள் எரிமலைகளாக வெடித்துவிடும்; பிஸினஸுக்கு உலை வைத்துவிடும் என்று முதலாளிகள் மனதில் பயம்.  

தொழில்புரட்சி கொடுத்த வேகத்தால், தொழிற்சாலைகள் பிரமாண்டமாக வளர்ந்திருந்தன. அரசாங்கங்களுக்கும் முதலாளிகளின் பணமும், ஆதரவும் தேவைப்பட்டன. முதலாளிகளின் கருணைமழை அதிகாரிகள் மேல் பொழிந்தது. அதிகாரிகளும், வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு முதலாளிகள் கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுத்தார்கள்.

1799, 1800-களில் தொழிலாளர்கள் அணி சேர்வதையும், வேலை நிறுத்தம் செய்வதையும் இங்கிலாந்து அரசு தடை செய்து சட்டங்கள் இயற்றியது. பணமும், அதிகாரமும் கை கோத்தன; உழைப்பாளிகளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன, நசுக்கப்பட்டன.  

பணம் மற்றும் அதிகார பலத்தை முதலாளிகளுக்குக் கொடுத்த அதே தொழில்புரட்சி, முதலாளிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் தைரியத்தைத் தொழிலாளிகளுக்குக் கொடுத்தது. பெரிய பெரிய தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நிறுவனக் குடையின் கீழ் வேலை பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கின. ஆங்காங்கே, தொழிலாளர்களின் கூட்டமைப்புகள் உருவாக ஆரம்பித்தன. சிறுசிறு துளிகளாக இருந்த இந்த முயற்சிகளை உலகம் முழுக்கவும் உள்ள தொழிலாளர்களுக்காக மாற்றியவர் கார்ல் மார்க்ஸ்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

அன்றைய தேதியில் இங்கிலாந்தில் பிரமாண்டத் தொழிற்சாலைகள் இருந்தமையால், அந்த நாட்டின் பல பாகங்களில் தொழிலாளர்கள் யூனியன்கள் தோன்றின. ஒவ்வொரு தொழிலாளர் கூட்டமைப்பும் தனித்தனித் தீவுகளாக இருந்தது. அவைகளுக்குள் தொடர்புகளே இல்லை. 1850-ல் இங்கிலாந்தில் இன்ஜினீயரிங் தொழிலாளிகள் நாடு தழுவிய தொழிலாளர் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அடுத்தடுத்து பல்வேறு தொழில்களை செய்யும் தொழிலாளர்களும் யூனியன் அமைத்தனர். 1868-ல் எல்லாத் தொழில்களையும் உள்ளடக்கிய டிரேட் யூனியன் காங்கிரஸ் பிறந்தது. அமெரிக்காவில் அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் லேபர் 1904-ல் உருவானது.  

1901. உலகில் முதன் முதலாகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். இந்த வேலைநிறுத்தம் நடந்தது ரஷ்யாவில் அல்ல, அமெரிக்காவில் இருந்த கேஷ் ரிஜிஸ்டர் கம்பெனியில். இந்த வேலைநிறுத்தம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்கள் ஒன்று திரண்டு வேலைநிறுத்தம் நடத்தும் சக்தியைத் தந்தது.

தொழிலாளி வர்க்கம் இப்படித் தலைதூக்கியபோது, 1908-ல் முதலாளிகள் புதிய பலத்தோடு எழுந்து வந்தார்கள். இந்த எழுச்சிதான், இரண்டாம் தொழில் புரட்சி! அதை நடத்திய புரட்சித் தலைவர்தான் ஹென்றி ஃபோர்டு. இவர் என்ன செய்தார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.

(கற்போம்)
படம்: இ.ராஜவிபீஷிகா.