மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஃபோர்டு கண்டுபிடித்த மாற்றம்!

##~##
1903
-
ல் அமெரிக்காவில் ஐம்பது கார் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்கள் தயாரித்த காரின் விலை ஆயிரம் டாலருக்கு மேல். ஆனால், சாதாரண மனிதனும் கார் வாங்க வேண்டும் என்று ஹென்றி ஃபோர்டு ஆசைப்பட்டார். 500 டாலருக்குள் கார் விற்க முடிந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று நினைத்தார் அவர்.  

தயாரிப்புச் செலவே 500 டாலரைவிட அதிகம். பிறகு  எப்படி 500 டாலருக்கு விற்பது? பகல் கனவு காணும் பைத்தியக்காரன் என்றுதான் ஹென்றியை நினைத்தது உலகம்.

லட்சிய வெறிகொண்டவர்களுக்கு இந்த கேலிகள்தாம் உற்சாக டானிக். உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதுதான் தன் கனவின் மந்திரச்சாவி என்று தீர்மானித்த ஹென்றி ஃபோர்டு, அந்த முயற்சியில் இறங்கினார். ஐந்து வருடங்கள், எண்ணற்ற தோல்விகள். கடைசியில் அவர் கண்டுபிடித்தது, அசெம்ப்ளி லைன் தயாரிப்பு முறை.

அந்த நாட்களில் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் பல குழுக்களாகச் செயல்படுவார்கள். தொழிற்சாலையின் பல பகுதிகளில் பல்வேறு பாகங்கள் தயாரிக்கப்படும். இறுதியாக, இந்த பாகங்கள் ஒரு மையப்பகுதிக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டு, காராக உருவாகும்.  

ஹென்றி ஃபோர்டு இந்த முறையைத் தலைகீழாக மாற்றினார். பாகங்கள் இருக்கும் இடத்திற்கு தொழிலாளிகள் போவதற்குப் பதில், அந்த பாகங்கள் தொழிலாளிகள் இருக்குமிடத்திற்கு வரும்படி அசெம்ப்ளி லைன் என்னும் புதிய தயாரிப்பு முறையை அறிமுகம் செய்தார். இதன்படி, தொழிலாளர்கள் வரிசையாக இருப்பார்கள். அவர்களுக்கு முன்னால் இருக்கும் பெல்ட்டில் பாகங்கள் நகர்ந்துவரும். காரின் சேஸிஸ் (Chassis) என்கிற அடித்தள அமைப்புச் சட்டம், முதல் தொழிலாளியிடம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் அதில் பிரேக்கை மாட்டுவார். அடுத்தவர் கிளட்ச்சைப் போடுவார். இப்படி அடுத்தடுத்து பல்வேறு தொழிலாளர்கள் அவரவர் மாட்டவேண்டிய பாகங்களை மாட்ட, முழுக் காரும் தயாராகும்.  

இந்த புரட்சிகரமான உற்பத்தி முறையால், மற்றவர்கள் முழுக் காரைத் தயாரிக்க சுமார் 180 நிமிடங்கள் எடுக்க, ஹென்றி ஃபோர்டினால் வெறும் 93 நிமிடங்களில் தயாரிக்க முடிந்தது. உற்பத்தி எக்கச்சக்கமாகக் கூடியது; செலவு குறைந்தது. உற்பத்தி நிர்வாகம் என்னும் புரொடக்ஷன் மேனேஜ்மென்ட் தொடங்கியது.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

தவிர, ஒரு காருக்கு வேண்டிய அத்தனை விஷயங்களையும் அவருடைய நிறுவனத்திலேயே தயாரித்தார். கார் டயருக்கான ரப்பருக்காக, அவர் ரப்பர் தோட்டங்களையே வாங்கினார்.

இந்த இரு யுக்திகளாலும் செலவு குறைந்து, லாபம் அதிகமானது. இதனால் ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினார். அப்போது கார் உற்பத்தித் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 126 அமெரிக்க டாலர். அவர்கள் வாரம் ஆறு நாள் உழைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. ஹென்றி ஃபோர்டு தன் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தை 180 டாலர்களாகக் கூட்டினார். விடுமுறை நாட்களையும் சனி, ஞாயிறு என இரண்டு நாட்களாக்கினார்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1908-ல் ஃபோர்டு தன் கனவை நிஜமாக்கினார். மாடல் டி (ஜி) கார் 500 டாலரில், நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கும் விலையில் மார்க்கெட்டுக்கு வந்தது. விற்பனை பிய்த்துக்கொண்டு போயிற்று. 15 லட்சம் கார்களுக்கும் அதிகமாக விற்பனையாகி, மாடல் டி சரித்திரம் படைத்தது.  சாதாரண மக்களும் இந்த காரை வாங்கியதால், மக்களின் போக்குவரத்து வசதிகள் பெருகின. புதிய ரோடுகள் வந்தன. வாணிபம் உயர்ந்தது. அமெரிக்கா வல்லரசாகும் விதை, செடியாகத் துளிர்விட ஆரம்பித்தது.

இது சாதாரண மாற்றமில்லை.  அதனால்தான் இதை இரண்டாம் தொழில் புரட்சி என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.  

ஹென்றி ஃபோர்டின் வெற்றியைக் கண்ட எல்லா முதலாளிகளும் உலகம் முழுக்க அசெம்ப்ளி லைன் தயாரிப்பு முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். ஃபோர்டு உற்பத்தி முறையின் முக்கிய அனுமானம் என்ன தெரியுமா? தொழிலாளிகள் ரத்தமும், சதையும், உள்ளமும், உணர்ச்சிகளும் கொண்ட மனிதர்களல்ல: சுவிட்ச் போட்டால் ஓடும் எந்திரங்களைப் போல், சம்பளம் கொடுத்தால் உற்பத்தி செய்யும் எந்திரன்கள்.

இந்த ஹென்றி ஃபோர்டு வழியில், பல அறிஞர்கள் புதிய உற்பத்திமுறைகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஃபிரெடரிக் டெய்லர் (Frederick Taylor). இவர் ஒரு பொறியியல் வல்லுநர், கல்லூரிப் பேராசிரியர், ஃபோர்டு கம்பெனியின் ஆலோசகர். எந்திரங்களின் உற்பத்தித்திறனை அளப்பதுபோல், மனிதர்களின் உற்பத்தித்திறனையும் அளக்கமுடியும் என்பது இவருடைய நம்பிக்கை. இந்த அடிப்படையில், நேர இயக்க ஆராய்ச்சி (Time and Motion Study) என்னும் கொள்கையை இவர் 1911-ல் வெளியிட்டார். உற்பத்தித் துறையில் இந்த சித்தாந்தம் ஒரு மைல்கல். தொழிலகப் பொறியியல் (Industrial Engineering) என்னும் புதிய துறையே இந்த நுண்ணாய்வின் அடிப்படையில் உருவானதுதான்.  

இந்த புதிய துறை என்ன சொல்கிறது என மிக எளிதாகச் சொல்கிறேன். நீங்கள் ஒரு லைப்ரரியில் இருக்கிறீர்கள். தினமும் புத்தகம் படிக்கவேண்டியது உங்கள் வேலை. ஃபிரெடரிக் டெய்லர் உங்கள் உயர் அதிகாரி. அவர் கண்கள் உங்கள் மீதும், அவர் கையில் இருக்கும் ஸ்டாப் வாட்ச் மீதும் மாறி மாறிப் பாய்கின்றன. நடுநடுவே, கையில் இருக்கும் குறிப்பு நோட்டில் ஏதோ எழுதிக்கொள்கிறார்.  அதாவது, நீங்கள் ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிப்பது முதல் முடிக்கும் வரை ஒவ்வொரு அசைவுக்கும் எவ்வளவு நேரம் தேவை என்பதை அவர் கணக்கிடுகிறார். (அந்த கணக்கை அடுத்த பக்கத்தில் பாக்ஸில் தந்திருக்கிறேன். முதலில், அதைப் படித்துவிடுங்கள்!)

அந்த கணக்கின்படி, நீங்கள் தினமும் 202 பக்கங்கள் படித்தேயாகவேண்டும் என்று கட்டளையிடுவார். இதற்குக் குறைவாகப் படித்தால், தண்டனை கிடைக்கும். 202 பக்கங்களுக்கும் அதிகமாகப் படித்தால்தான் வேலை நிலைக்கும், சம்பளம் உயரும், புரமோஷன் கிடைக்கும். ஆமாம், நீங்கள் இப்போது ஒரு எந்திரம்!

MBA - மூன்றெழுத்து மந்திரம்

டெய்லரும், ஃபோர்டும், மனிதர்களைவிட எந்திரங்களையே நம்பினார்கள். ஃபோர்டு இன்னும் ஒரு படி மேலே போனார். தொழிலாளர்களை கண்காணிக்க அவர்களுள் சிலரை ஒற்றராக மாற்றினார். இதனால் ஒவ்வொரு தொழிலாளியும் தன் சகதொழிலாளியை எப்போதும் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தான். அவன் மனதில் இனம் புரியாத பயம் எப்போதும். இந்த பயமும் மன அழுத்தமும் பலரால் தாங்க முடியவில்லை. 1914-ல் பல தொழிலாளர்கள் ஃபோர்டு கம்பெனி வேலையைவிட்டுப் போனார்கள்.

அதிகச் சம்பளம், வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை என்று சலுகைகளை தந்தும், தொழிலாளிகள் ஏன் சந்தோஷமாக இல்லை என்று யோசித்த முதலாளிகள் சில காரணங்களை கண்டுபிடித்தார்கள்.

· தொழிலாளிகள் சம்பளத்துக்கும் அதிகமாக வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள்; சக தொழிலாளிகளோடு நட்பான உறவு, உயர் அதிகாரிகள் தங்களிடம் வைக்கும் நம்பிக்கை போன்றவை இதில் முக்கியமானது.  

· ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால் தொழிலாளர்களுக்கு மனச்சலிப்பு ஏற்படுகிறது. செய்யும் வேலையை அனுபவித்துச் செய்தால்தான் தொழிலாளர்களின் முழு சக்தியையும் பயன்படுத்த முடியும்.

ஹென்றி ஃபோர்டின் புரொடக்ஷன் மேனேஜ்மென்ட் முறைகளில் திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டாயத்தை கம்பெனி முதலாளிகளும், மேனேஜர்களும் உணர்ந்தார்கள்.  

1914 முதல் 1918-வரை நடந்த முதல் உலகப் போர் இந்த முயற்சிக்குக் கிரியா ஊக்கியானது. போருக்காக எல்லாத் தொழிலகங்களும் உற்பத்தியைப் பெருக்கவேண்டிய கட்டாயம். இந்த தொழிற்சாலைகளில் வேலை பார்க்க ஆட்கள் தேவை என்பது ஒருபக்கம். போரில் சண்டையிட வீரர்கள் தேவை என்பது இன்னொரு பக்கம். திடீரென்று ஆயிரக்கணக்கான ஆட்களை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது? உடல் வலிமை படைத்த தொழிலாளர்கள் அனைவரும் போருக்கு அனுப்பப்பட்டார்கள்.

அவர்களின் இடத்தில் புதிதாக அந்த வேலைகளுக்குச் சேர்க்கப்பட்டவர்கள் கத்துக்குட்டிகள். அவர்களுக்குப் பாலபாடமாக தொழிற்சாலை, எந்திரங்கள் ஆகியவை பற்றிய அத்தனை அறிவையும் புகட்ட வேண்டி இருந்தது. அவர்கள் மனநிறைவோடு வேலை செய்யாவிட்டால் தங்கள் நோக்கம் நிறைவேறாதே என்கிற கவலை முதலாளிகளுக்கு. ஏதாவது மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தெரிந்தது. ஆனால், என்ன மாற்றம் வேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை.

(கற்போம்)
படம்: இ.ராஜவிபீஷிகா.