மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
MBA - மூன்றெழுத்து மந்திரம்

மேனேஜ்மென்டும் குணசீலமும்!

##~##
தி
ருச்சிக்குப் பக்கத்தில் இருக்கிற குணசீலத்துக்குப் போனால் மனநோய் தீரும் என்று நம்புபவர்கள் பலர்.  அதெல்லாம் தீராது என்று சொல்பவர்களும் உண்டு. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும் இத்தகைய நம்பிக்கைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கின்றன.

ஜப்பான் நாட்டு கோட்டோக்கு-இன் (Kotoku-in) என்னும் ஊரில் 44 அடி உயரத்தில் வெண்கலச் சிலையாக புத்தர் இருக்கிறார். பணம், பழங்கள், அரிசி எனக் காணிக்கைகளை மக்கள் படைக்கிறார்கள். தங்கள் குறைகளைத் தீர்க்க பகவானிடம் முறையிடுகிறார்கள். அதிசயமாக, அவர்களுடைய பிரச்னைகளும் மறைகின்றன.  

பிரான்ஸ் நாட்டில் 1,380 அடி உயரத்தில் இருக்கும் புனித இடம் லூர்தஸ் (Lourdes). இங்கே குகையிலிருந்து வரும் ஊற்று நீர் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது என்று மக்கள் நம்புகிறார்கள். கடந்த 152 ஆண்டுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் நெஞ்சம் நிறைந்த ஆசைகளோடு இங்கே வந்தவர்கள் 20 கோடிக்கும் அதிகம்.      

இவையெல்லாம் மூட நம்பிக்கைகளில்லை; மனித அறிவின் எல்லைக்கோடுகளைத் தாண்டிய ரகசியங்கள், இந்த நம்பிக்கைகளின் பின்னால் மறைந்திருக்கலாமோ என்று விஞ்ஞானிகளும், டாக்டர்களும் இப்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், மருத்துவ உலகில் நடந்துவரும் சில நம்பமுடியாத நிகழ்ச்சிகள்.

டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெயில் (Dr. James Esdaile ஆங்கிலேயர் ஆட்சியில் கொல்கத்தாவின் ஹூக்ளி மருத்துவமனையில் பணியாற்றினார். 1845 காலகட்டத்தில், கண், காது, தொண்டை, நோய்ப்பட்ட கை கால்களைத் துண்டித்தல் போன்ற 346 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் மயக்க மருந்துகள் கிடையாது. எஸ்டெயில், நோயாளிகளின் ஆழ்மனதை மனவசியம் செய்து, அவர்கள் வலியை உணராமல் இருக்க செய்தார். இன்னொரு ஆச்சரியம், நோய்கள் பரவுவதைத் தடுக்கும் கிருமிநாசினிகள் பரவலாகாத காலம் அது. தங்களுக்குத் தொற்று நோய் வராது என்னும் நம்பிக்கையை அவர்கள் மனதில் எஸ்டெயில் விதைத்தார். நோயாளிகளின் அறுவைப் புண்கள் விரைவில் ஆறியதன் காரணம், ஆழ்மனதின் மகிமை!    

இத்தாலி நாட்டில் ஓர் ஆய்வு நடந்தது. இதன்படி, ரோஸரி என்னும் மணிமாலை ஜெபம் செய்தவர்களின் இதயமும், நுரையீரலும், இந்த ஜெபம் செய்யாதவர்களைவிட ஆரோக்கியமாக இருந்தன. அமெரிக்க அரசின் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் 999 இதய நோயாளிகளின் வரலாற்றை ஆராய்ச்சி செய்தது. அதன்படி பிரார்த்தனை செய்தவர்கள், கூட்டுப் பிரார்த்தனை செய்யாதவர்களைவிட வேகமாக உடல்நலம் பெற்றனர்.    

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கேன்சர் சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நியூயார்க் மெமோரியல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் தியோடர் மில்லர் அனுபவம் இது: தங்களுக்கு உடல்நலமாகும் என்று நம்பியவர்களில் பெரும்பாலானோர் கேன்சரை வென்றார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் சொர்க்கத்துக்கு விசா வாங்கினார்கள்.  

அமெரிக்க நியூயார்க் நகரத்தில் இருக்கும், பிரெஸ்பிட்டேரியன் கார்டியோவாஸ்க்குலர் இன்ஸ்டிட்யூட் (Presbyterian Cardiovascular Institute) இயக்குநர் டாக்டர் மெஹ்மது ஓஸ் (Dr. Mehmet Oz) உலகப் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். உடல் குணமாகவும், காயங்கள் ஆறவும், இவர் தன் நோயாளிகளுக்குத் தரும் ஆலோசனை, 'தியானம் செய்யுங்கள்’ என்பதே. டாக்டர் ஓஸின் இந்தப் பேட்டியை, 'அறுவை சிகிச்சைக்கு முன்னால் சொல்லுங்கள் ஓம்’ (Say Om before surgery) என்னும் தலைப்பில் டைம் பத்திரிகை வெளியிட்டது.

மனதின் சக்தியைப் பயன்படுத்தும் இந்த நம்பிக்கைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றின் அடிப்படையாக இருப்பது மனோதத்துவம். இந்த மனோதத்துவம் என்ன சொல்கிறது?  

மனம், உணர்வு மனம், ஆழ் மனம் என இரண்டு நிலைகளில் செயல்படுவதாக மனோதத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.  

உணர்வு மனம் நம்மிடம் பல கேள்விகள் கேட்கும். அதைத் திருப்திப்படுத்துகிற வகையில் நாம் பதில் சொல்லவேண்டும். நாம் மனசாட்சி என்று சொல்வது உணர்வு மனதைத்தான். சினிமாவில் பார்த்திருக்கிறோமே? ஹீரோவின் தங்கைக்கு லிம்போ சர்க்கோமா ஆஃப் தி இன்ட்டஸ்ட்டைன் என்கிற விசித்திர வியாதி. பணத்தைக் கண்ணில் காட்டினால்தான் ஆபரேஷன் தியேட்டர் கதவு திறக்கும்.

ஹீரோ கையில் காசில்லை. கவலையோடு நடந்து வருகிறான். அவன் காலில் தட்டுகிறது ஒரு பை. திறந்தால், கரெக்ட்டாக டாக்டர் கேட்ட அதே அளவு பணம். ஹீரோ மனதில் போராட்டம் - பாசமா, நேர்மையா? இப்போது ஒரு ட்ரிக் ஷாட். ஹீரோ உடலுக்குள்ளிருந்து அவனுடைய மனசாட்சி எழுந்துவரும். அவனுடைய பாசமும், நேர்மையும் போராடும். பாசத்தைவிட நேர்மை முக்கியம் என்று சொல்லிவிட்டு மனசாட்சி மறைந்துவிடும்.  

ஆனால், ஆழ்மனம் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்காது, வாதாடாது. ஆனால், ஆழ்மனம் உணர்வு மனதைவிட ஆயிரம் மடங்கு சக்தி கொண்ட மனம். ஒரு எண்ணத்தை ஆழ்மனதில் விதைத்துவிட்டால், அந்த எண்ணம் சரியா, தப்பா என்று கேள்வியே கேட்காமல், தன் அத்தனை சக்தியையும் பயன்படுத்தி. எண்ணத்தை நனவாக்கிக் காட்டும். இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தும் யுக்திதான் மனோதத்துவம்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1890-ல் வில்லியம் ஜேம்ஸ் என்ற அமெரிக்க மனோதத்துவப் பேராசிரியர் மனோதத்துவக் கொள்கைகள் (Principles of Psychology) என்ற ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். பன்னிரண்டு வருட உழைப்பில் உருவான இந்த கொள்கைகளைப் படித்த டாக்டர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் முன்னால் விடை தேடி நின்றன பல வினாக்கள்:

• நோய்களுக்குத் தடுப்பூசி போடுகிறோம். ஒரே ஆரோக்கியம் கொண்ட பலருக்கு இவற்றைக் கொடுத்தால், சிலருக்கு மட்டுமே நோய் வருகிறது. ஏன்?  

• ஒரே ஆரோக்கியம் கொண்ட இருவரை இன்ஃப்ளூயன்ஸா கிருமிகள் தாக்குகின்றன. ஒருவருக்கு மட்டுமே ஜுரம் வருகிறது. மற்றொருவர் அந்த கிருமியால் பாதிக்கப்படவே இல்லை. ஏன்?

• அல்சர், கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்கள் கிருமிகளால் வருவதில்லை. இந்த நோய்களைப் படைக்கும் பிரம்மா யார்?

• 'மூடப்பழக்கங்களின்’ அடிப்படையில் உருவான வழிபாடு, யோகா, தியானம் ஆகியவற்றால் நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறதே, எப்படி?

• மனதைப் பாதிக்கும் விஷயங்களான மன அழுத்தம், பதற்ற நிலை, பிரச்னைகள் ஆகியவற்றால் உடல்நிலை பாதிக்கப்படுகிறதே, ஏன்?        

இந்த கேள்விகள் அறிவியல் மேதைகளைச் சிந்திக்க வைத்தன. மதபோதகர்களின் கூடாரமாக இருந்த மனோதத்துவம், விஞ்ஞானிகளும், மருத்துவ வல்லுநர்களும் உறவாடும் இடமாக மாறத் தொடங்கியது. மருத்துவமும், மனோதத்துவமும் கைகுலுக்கியவுடன், மனோதத்துவத்துக்கு மரியாதை வந்தது. அறிவியலும், மனோதத்துவமும் இணைந்த கூட்டு மகரந்தச் சேர்க்கை, இயற்கையின் பல இருட்டுப் பிரதேசங்களுக்கு வெளிச்சம் காட்டும் என விஞ்ஞானிகள் முத்திரை குத்தினார்கள்.    

இப்போது தொழில் அதிபர்கள் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ். இந்த கொள்கைகளைத் தொழிலகங்களில் ஏன் பயன்படுத்தக்கூடாது? மனோதத்துவ மேதைகளின் உதவியை நாடினார்கள். மேனேஜ்மென்டில் மனோதத்துவம் பயன்படுத்தும் ஆராய்ச்சிகளில் இறங்கினார்கள்.  

அமெரிக்க இல்லினாய் நகரில், ஹாத்தோர்ன் (Hawthorne) என்னும் பகுதியில், வெஸ்ட்டேர்ன் எலெக்ட்ரிக் கம்பெனி மின்சார பல்புகள் தயாரித்து வந்தது. அந்த நாட்களில், தொழிற்சாலைகளில் பல பகுதிகளில் வெளிச்சம் குறைவாக இருக்கும். வெளிச்சத்தை அதிகமாக்கினால், தொழிலாளிகளின் உற்பத்தித்திறமை அதிகரிக்கும் என்று நிரூபிக்க முடிந்தால், பல்புகளின் விற்பனையை அதிகரிக்கலாமென்று அந்த கம்பெனி திட்டமிட்டது.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எல்ட்டன் மேயோ (Elton Mayo) என்னும் மனோதத்துவ மேதை உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டார்கள். 1927-ல் ஆராய்ச்சி தொடங்கிய மேயோ தன் கண்டுபிடிப்புகளை 1933-ல் The Human Problems of an Industrialized Civilization என்னும் நூலில் வெளியிட்டார்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

மேயோவும், அவர் நண்பர்களும் நடத்திய இந்த ஆறு வருட ஆராய்ச்சி பகீரத முயற்சி! ஆனால், வெஸ்ட்டேர்ன் எலெக்ட்ரிக் கம்பெனியைப் பொறுத்தவரை, இந்த முயற்சி, குரங்கு பிடிக்கப் பிள்ளையாரான முயற்சி! ஏன் தெரியுமா?

மேயோ என்ன கண்டுபிடித்தார்? அதிக பல்புகள் போட்டு வெளிச்சத்தைக் கூட்டினாலும், பல்புகளைக் கழற்றி வெளிச்சத்தைக் குறைத்தாலும். தொழிலாளிகளின் உற்பத்தியில் கணிசமான மாற்றங்கள் ஏதுமில்லை. தங்களுக்குச் சாதகமாக மேயோவின் ஆராய்ச்சி சாட்சி சொல்லும் என்று அவருக்கு ஐந்து வருடங்கள் காசை தந்த வெஸ்ட்டேர்ன் எலெக்ட்ரிக் கம்பெனியின் திட்டத்துக்கு மேயோவின் ஆராய்ச்சியால் ஒரு பிரயோஜனமும் இல்லை.    

ஆனால், வெஸ்ட்டேர்ன் எலெக்ட்ரிக் கம்பெனி உலக மேனேஜ்மென்ட் துறைக்குச் செய்திருக்கும் மாபெரும் உதவிக்கு நாம் எல்லோரும் பெரிய சல்யூட் அடிக்கவேண்டும். தொழிலாளிகளின் அர்ப்பணிப்பையும், முழு உற்பத்தித்திறமையையும் பயன்படுத்த வேண்டுமானால், ஊதிய உயர்வுகளையும், பணப்பரிசுகளையும் மட்டுமே அவர்களுக்குக் கொடுத்தால் போதும் என்று முதலாளிகள் நம்பினார்கள். இல்லை, இல்லை, இவற்றுக்கும் அதிகமாக, குழுவில் பங்காற்றும் வாய்ப்பு, குழுவில் அங்கமாக இருப்பதால் கிடைக்கும் நட்புப் பாதுகாப்பு, மேல் அதிகாரிகளின் அரவணைப்பு, அங்கீகாரம், ஆகியவற்றுக்காகத்தான் அவர்கள் ஏங்குகிறார்கள் என்று மேயோ நிரூபித்தார்.

இதற்குப் பிறகுதான், தொழிலாளிகளின் உணர்ச்சிகளைத் தொழில் அதிபர்கள் மதிக்கத் தொடங்கினார்கள். மேயோவின் கருத்துகளைப் பல நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கின. மனிதவள நிர்வாகம் (Human Resource Management – செல்லமாக பி.ஸி.) அல்லது பெர்சனல் மேனேஜ்மென்ட் என அழைக்கப்படும் ஊழியர் நிர்வாகத் துறை வேரூன்றத் தொடங்கியது. மனிதவளத் துறையின் தந்தை என்று எல்ட்டன் மேயோ உலக மேனேஜ்மென்ட் வரலாற்றில் தனியிடம் பிடித்தார்.  

(கற்போம்)
படங்கள்: இ.ராஜவிபீஷிகா.