நாணயம் ஜாப்: சக ஊழியர்களோடு எப்படி பழகுவது?


குடும்ப உறவுகள் எந்த அளவுக்கு மென்மையும், இனிமையுமானதோ அந்த அளவுக்கு அற்புதமானது அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவு. நம் உயரதிகாரிகள் பெரும்பாலும் நம்மை விட்டு விலகியே இருக்க, நம் சக ஊழியர்கள்தான் நம்மோடு எப்போதுமிருந்து நம் சுக துக்கங்களுக்குக் காரணமாகிறார்கள். வேலை பார்க்குமிடத்தில் சக ஊழியர்களோடு நெருங்கிப் பழகினாலும் ஆபத்து; விலகி நின்றாலும் பாதிப்பு. இந்நிலையில் சக ஊழியர்களுடன் எப்படி பழக வேண்டும் என்று சொல்கிறார் போலாரிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் பாலமுருகன்.
''அலுவலகத்தில் நம்மோடு வேலை செய்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும். சக ஊழியர்கள் அனைவரும் ஒரே வயதில் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட சுபாவம் இருக்கும். சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். சிலர் எப்போதும் அன்பாக இருப்பார்கள். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடவே கூடாது. அதோடு அவர்களின் சுபாவத்திற்கு ஏற்றார்போல் நீங்கள் பழகுவதே நல்லது. அன்பாக இருப்பவரிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவும் கூடாது. கோபப்படுகிறாரே என்று விலகி நிற்கவும் கூடாது. அனைவரிடமும் ஒரே மாதிரியாகப் பழகினால்தான் உங்கள் மதிப்பு உயரும்.
வேலைக்குச் சேர்ந்த புதிதில், அவரிடம் அதிகம் வைத்துக்கொள்ளாதே என்றெல்லாம் அறிவுரை சொல்வார்கள். இதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொருவரிடமும் நீங்கள் பழகி அதன்பிறகு அவர்களைப் பற்றிய கருத்துகளை மனதில் ஏற்றுங்கள். அலுவலகத்தில் இருக்கும் விதிமுறைகளை முடிந்தவரை பின்பற்றுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் அலுவலகம் தொடர்பான விதிமுறைகளை குறை சொல்லி யாரிடமும் பேசாதீர்கள். என்னுடைய பழைய அலுவலகத்தில் இப்படியெல்லாம் கிடையாது என்கிற பேச்சு கூடவே கூடாது.
சக ஊழியர்கள் செய்யும் வேலை பாராட்டும்படியாக இருந்தால் உடனடியாக அதை செய்துவிடுங்கள். தவறு செய்யும்பட்சத்தில், பொறுமையாக இருங்கள். சக ஊழியர்களுடன் நீங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வேளையில், அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தெரிந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை கொஞ்சமாக எடுத்துச் சொல்லலாம். அந்த சமயத்தில் எதிர்மறை தகவல் எதையும் சொல்லாதீர்கள்.
##~## |
சக ஊழியர்களிடம் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளுங்கள். தெரியாத வேலைகளை சக ஊழியர்களிடம் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வழி காட்டுவதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இதற்காக எதற்கெடுத்தாலும் சந்தேகம் கேட்டால், அது எரிச்சலை உருவாக்கிவிடும், எனவே ஜாக்கிரதை.
உங்களோடு வேலை பார்ப்பவர்கள் உங்களை ஒரு போட்டியாளர் என்று எந்த வகையிலும் நினைக்காதபடிக்குப் பழகுங்கள். அதேபோல, நீங்களும் யாரையும் போட்டியாளராக நினைக்காமல், உங்கள் வேலையை சிறப்பாக செய்தாலே உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும். உங்களின் தனித்தன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொண்டு அதை செழுமைப்படுத்துங்கள். யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல், புதிய கருத்துக்களையும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் உங்கள் நலனின் அக்கறை உள்ளவர்களிடம் மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள். உடன் வேலை பார்ப்பவர்களை சரியாகப் புரிந்துகொண்டு பழகினால் அனைவரிடமும் நல்ல பெயரை எளிதில் வாங்கிவிடலாம்'' என்றார் பாலமுருகன்.
ஃபாலோ பண்ணி பார்க்கலாமே!
- இரா.ரூபாவதி.
படம்: த. ரூபேந்தர்.