மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: ஜெயிக்க வைக்கும் மந்திரம்!

நாணயம் ஜாப்: ஜெயிக்க வைக்கும் மந்திரம்!

நாணயம் ஜாப்: ஜெயிக்க வைக்கும் மந்திரம்!

பணிபுரியும் நிறுவனத்தில் ஒருவர் உயர் பதவிகளை எட்டிப் பிடிக்க கடுமையான உழைப்பு மட்டுமே போதாது. உழைப்போடு வேறு சில விஷயங்களும் இருக்க வேண்டும்.  அதில் ஒன்றுதான், அலுவலகம் சார்ந்த ஒருவரின் பழக்கவழக்கங்கள். ஒரு பணியாளருக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டக்கூடிய அலுவலக நாகரிகங்கள் என்னென்ன, அலுவலகத்தில் எப்படி நடந்துகொண்டால் ஜெயிக்கலாம் என விளக்கமாகச் சொல்கிறார் மனிதவள மேம்பாட்டாளர் விக்னேஷ்.

நாணயம் ஜாப்: ஜெயிக்க வைக்கும் மந்திரம்!

''பொதுவாகவே அலுவலகத்தில் நம் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்பதே உண்மை. நம்முடைய ஒவ்வொரு சிறு செயல்பாடும்கூட நம் உயர்வுக்கு காரணமாக அமையும். அலுவலக நாகரிகத்தில் நேரத்திற்கு வருவதும், குறித்த நேரத்தில் வேலையை முடிப்பதும் அடிப்படை விஷயங்களாக கருதப்படுகிறது. இந்த இரண்டிலும் சரியாக இருந்தாலே அலுவலகத்தில் நம் மீதான மதிப்பும் மரியாதையும் கூடும்.

அடுத்ததாக நாம் அணியும் உடை மிக முக்கியம். அலுவலகத்தில் பின்பற்றப்படும் கலாசாரத்திற்கு எதிராக இல்லாமல் உடை அணிய பழகிக்கொள்ள வேண்டும். அதேபோல மற்றவர்களின் கண்களை உறுத்தாத, விகாரமில்லாத சிகை அலங்காரம் அவசியம்.  

அலுவலகத்தில் மற்றவர்களுடனான உறவை எப்படி கையாளுகிறோம் என்பதும் முக்கியம். நம்முடன் படித்தவர்களோ, நம் நண்பர்களோ, சக பணியாளராக இருந்தவர்களோகூட உயர் அதிகாரியாக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் அலுவலகத்தில் அவர்களோடு அதிக உரிமையோடுப் பேசுவதும், நடந்துகொள்வதும் தவறு. பதவிக்கு ஏற்ற மரியாதையைக் கொடுக்க வேண்டியது மிக அவசியம். இதுபோலவே நமக்கு கீழே பணிபுரிபவர்களிடம் நமது தனிப்பட்ட வேலைகளைச் செய்யுமாறு சொல்வதும் கூடாது.  

அடுத்ததாக, வீட்டு விஷயங்களை அலுவலகத்தில் பகிர்ந்துகொள்வதில் சில கட்டுப்பாடு தேவை. அவசியமே இல்லாமல் தனிப்பட்ட விஷயங்களை சிலரிடம் சொல்கிறபோது அது நமது பலவீனத்தைப் பகிரங்கப்படுத்துவதாக அமைந்துவிடும் ஆபத்து உண்டு. நம் வீட்டுச் சுமைகள் நிர்வாகத்தின் காதுக்குப் போகிறபோது, இவருக்கு கூடுதலாக பொறுப்பைக் கொடுத்தால் சமாளிப்பாரா என்ற சந்தேகங்கள் எழலாம். அதனாலேயே நம் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும்.

அலுவலகப் பொருட்களை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துவது தவறு. ஒரு பேப்பர்தானே, பேனாதானே என நாம் சாதாரணமாக நினைக்கலாம். ஆனால், நிர்வாகத்தின் பார்வையில் நம்மைப் பற்றிய மதிப்பீட்டை பாதாளத்தில் தள்ளிவிடும். அதேபோல நமது தனிப்பட்ட ஆவணங்களை அலுவலக கம்ப்யூட்டரில் வைத்திருப்பதும் கூடாது.

##~##
அலுவலக நேரத்தில் கதை புத்தகங்கள் படிப்பது, பாட்டு கேட்பது, இன்டர்நெட்டில் படம் பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் உலாவுவது, நம் குழந்தைகளுக்கான வேலையை அலுவலகத்தில் செய்வது, மேற்படிப்பிற்கான புத்தகங்களை அலுவலகத்தில் வைத்து படிப்பது போன்ற வேலைகளை செய்வது நம் மீதான மதிப்பையும் நம்பிக்கையையும் குலைத்துவிடும்.    

விடுமுறை நாட்களில் சில நேரம் நம்முடைய ஆலோசனையோ, பங்களிப்போ அலுவலகத்துக்குத் தேவைப்படலாம். அப்போது அலுவலகத்திலிருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் உடனடியாகப் பதில் அளிப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை அந்த நேரத்தில் முடியவில்லை என்றாலும், மீண்டும் நீங்களே தொடர்புகொண்டு பேசுவதுதான் நம் மதிப்பை உயர்த்தும்.

அடுத்து நாம் வேலை செய்யும் இடத்தை எப்படி வைத்திருக்கிறோம் என்பதுவும் முக்கியம். அலுவலக டேபிளை முடிந்தவரை சுத்தமாக வைத்திருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

உடல் அசதியினால் சில நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரலாம். தூக்கத்தைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டுமே தவிர, கவிழ்ந்து படுத்து தூங்கிவிடக்கூடாது. உடம்புக்கு முடியாவிட்டால் விடுமுறை எடுத்துக்கொள்வதே நல்லது. அலுவலக வேலை முடிந்து கிளம்பும்போது நமக்கான கம்ப்யூட்டர், ஃபேன், லைட்டுகளை அணைத்துவிட்டுச் செல்வது நம் பொறுப்பு உணர்வை நிர்வாகத்துக்கு உணர்த்தும். போட்டது போட்டபடி கிடந்தால் நாம் அலட்சியமானவர்கள் என்ற புரிதல் உருவாகும் வாய்ப்பு அதிகம்.

அடுத்து நம் மீதான நம்பிக்கையை பலப்படுத்திக் காட்டுவது அலுவலகம் சம்பந்தமான நம் சார்ந்த செலவுக் கணக்குகளுக்கு நாம் கொடுக்கும் ரசீதுகள்தான். இது சந்தேகப்படும்படியாக அமைந்துவிட்டால் நிர்வாகம் எப்போதும் நம்மைக் கவனித்துக் கொண்டேதான் இருக்கும். நம்மை யார் கவனிக்கப் போகிறார்கள் என அலட்சியமாக இல்லாமல், அக்கறையோடு அலுவலகத்தில் நல்ல பிள்ளையாக நம்மை உருவாக்கிக்கொண்டால் நமக்கான உயர்வு நிச்சயம்!''

ஜெயிக்க நினைப்பவர்கள் இந்த யோசனைகளைப் பின்பற்றலாமே!

- இரா.ரூபாவதி,
படம்: வீ.நாகமணி.