மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
MBA - மூன்றெழுத்து மந்திரம்

மூரி, மூரா, மூடா!

##~##
ஹெ
ன்றி ஃபோர்டு கண்டுபிடித்த அசெம்பிளி லைன் தயாரிப்பு முறை தொழிற்துறை வளர்ச்சியை பெரிய அளவில் உந்தித் தள்ளியது போல, இன்னொரு முக்கியமான விஷயமும் உற்பத்தியை பல மடங்காகப் பெருக்கியது. அது, டொயோட்டா தயாரிப்பு முறை (Toyota Production  System). சுருக்கமாக TPS. அசெம்பிளி லைன் தயாரிப்பு முறை அமெரிக்காவின் பங்களிப்பு என்றால், இந்த டி.பி.எஸ். ஜப்பானின் பங்களிப்பு.

பொதுவாக, அமெரிக்கர்களுக்குக் கொஞ்சம் அறிவுச்செருக்கு அதிகம். எந்த விஷயத்திலும் தாங்களே முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்ட அமெரிக்கர்களே டி.பி.எஸ்.-ஐ பின்பற்றினார்கள் எனில், அதில் அப்படி என்ன தங்கமலை ரகசியம் மறைந்து கிடக்கிறது?

டி.பி.எஸ்.-ன் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. அவை:

1. கைஜென் (Kaizen)

2. பிறரை மதித்தல்.

கைஜென் என்றால் ஜப்பானிய மொழியில் 'தொடர்ச்சியான முன்னேற்றம்’ என்று அர்த்தம். கைஜென் என்கிற இந்த தொடர்ச்சியான முன்னேற்றத்தின் இலக்கு, மூரி, மூரா, மூடா ஆகிய மூன்றையும் இல்லாமல் செய்வது.  அது என்ன மூரி, மூரா, மூடா? யாரையோ திட்ற மாதிரி இருக்கேங்கிறீங்களா?

மூரி என்றால், வேலை செய்யும்போது ஏற்படும் சோர்வு, அயர்வு. தொழிலாளர்கள் தங்கள் முழுத் திறமையுடன் செயல்படுவதை மூரி தடுக்கிறது. மூரி ஏற்பட முக்கிய காரணங்கள் வேலையைத் தொழிலாளர்களிடையே சரியாகப் பகிர்ந்து கொடுக்காமை, பணிபுரியும் இடத்தில் போதிய வெளிச்சமும் வசதிகளும் இல்லாமை போன்ற காரணங்கள்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

மூரா என்றால், நிர்ணயிக்கப்பட்ட தரத்தைவிட மோசமான பொருட்களைத் தயாரித்தல். உற்பத்தி முறைகளில் குறை, தொழிலாளர்கள் பயிற்சி குறைவு ஆகிய காரணங்களால் மூரா ஏற்படலாம்.

மூடா என்றால், சரக்குகள், நேரம், உழைப்பு, பணம் ஆகியவற்றில் ஏற்படும் விரயம். இதற்கு பல காரணங்கள்:

• தேவைக்கு அதிகமான உற்பத்தி (உற்பத்தியான பொருட்கள் தேங்கும் நிலை).

• தொழிலாளி அல்லது எந்திரத்தின் தேவையற்ற இயக்கம் / அசைவு.

• தனக்கு முந்தியவர் வேலையை முடித்துக் கொடுப்பதற்காகத் தொழிலாளி காத்திருத்தல்.

• உற்பத்தி ஓட்டம் சீராகத் திட்டமிடப்படாமை.

• மூலப் பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்காதிருத்தல்.

• தொழிலாளிகளின் உற்பத்தித் தவறுகள். தர அளவை சந்திக்காத உற்பத்தி.

டி.பி.எஸ்-ன் இன்னொரு அடிப்படைக் கொள்கை பிறரை மதித்தல். ஜப்பானிய மரபுப்படி, டொயோட்டா கம்பெனி தனது தொழிலாளிகளை குடும்ப அங்கத்தினர்களாகவே நடத்துகின்றது. இதனால், டி.பி.எஸ்.-ன் கீழ்க்கண்ட அடித்தள எண்ணங்களைச் சிரமமே இல்லாமல் டொயோட்டா பின்பற்ற முடிகிறது.

• தொழிலாளர்கள் தவறு செய்வது இயற்கை.

• செய்த தவறை ஒப்புக்கொள்வது கம்பெனிக்கும் தனி மனிதருக்கும் நல்லது.

• ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு குழுவாக இணந்து செயல்பட வேண்டும்.

டி.பி.எஸ். மிகுந்த கவனத்தோடு செயல்படுத்தப்படுகிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்யாமல் நிதானமாகச் செய்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதலில் சிறிய பிரச்னைகளுக்கு டி.பி.எஸ். மூலம் தீர்வு காண்கிறார்கள். இந்த வெற்றி ஊழியர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

டொயோட்டா கம்பெனியில் தொழிலாளிகளுக்கு எப்படி பயிற்சி தருகிறார்கள் தெரியுமா? தொழிலாளி தொழிற்சாலையில் தன் சுற்றுப்புறத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எந்த பிரச்னை வந்தாலும், ஐந்து கேள்விகளை கேட்க வேண்டும்.

What?  

- என்ன தவறு நடந்தது?

- அது வாடிக்கையாளர்களை எப்படி பாதிக்கும்?

- இந்த தவறுக்கு என்ன தீர்வு?

Where?

- எங்கே பிரச்னை உள்ளது?  

Wh0?

- யார் தவறு செய்தவர்?

- யார் தவறைத் திருத்த உதவி செய்வார்?

When?  

- எப்போது தவறு நடந்தது?

Why?

- ஏன் தவறு நடந்தது? அதற்கு என்ன காரணம்?

இந்த இந்த 5 W-களுக்கான பதில்களின் அடிப்படையில் வருவது How? அதாவது, எப்படி முன்னேற்றம் அடையலாம் என்பது!

இந்த ஆராய்ச்சி எத்தனை ஆழமாகப் போகும் தெரியுமா? ஒரு புதிய தொழிலாளி தன் சகாக்கள் பணியாற்றுவதைக் கூர்ந்து கவனித்தார். தனக்கு அடுத்து இருப்பவரிடமிருந்து சாமான் வாங்க அவர் ஒவ்வொரு முறையும் எட்டு அடிகள் எடுத்து வைத்தார்.

புதியவர் கேட்ட ஒரு கேள்வி,  'அவர் ஏன் எட்டு அடி எடுத்து வைக்கிறார்? அவரும் பிறரும் ஆறு அடிகள் மட்டுமே எடுத்துவைத்துப் பக்கத்தில் இருப்பவரிடமிருந்து தேவையான சாமானை எடுக்க முடியுமா?'

சாதாரண கம்பெனியாக இருந்தால் என்ன சொல்வார்கள்? 'ஏன்யா, உனக்கு வேறே வேலை வெட்டி இல்லையா? அவன் எட்டு அடி நடந்தா என்ன, பத்தடி நடந்தா என்ன? உன் சோலியைப் பாரு.'

எந்த கேள்வியும் சிறுபிள்ளைத்தனமானது அல்ல, மாபெரும் திருத்தங்களின் தொடக்கம் இந்த கேள்விகளின் பதிலில் இருக்கலாம் என்று டொயோட்டா நினைப்பதால், இந்த புதிய தொழிலாளியின் அணுகுமுறையில் நியாயம் இருக்கிறதா என்று டொயோட்டா ஆராய்ச்சி செய்யும். தன் கண்டுபிடிப்பை அவருக்குச் சொல்லும். அப்போது அவர் தன்னம்பிக்கை எப்படி எகிறும் பாருங்கள்! தொடர்ந்து அவர் ஆலோசனைகளை அள்ளித் தருவாரா, இல்லையா?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஆரம்ப நாட்களில் டொயோட்டா கம்பெனி உற்பத்தியில் மட்டும் டி.பி.எஸ். முறை பயன்படுத்தப்பட்டது. 1964-ல் காட்சுவாக்கி வாட்டன்பே (Katsuaki Watanbe) என்ற இளைஞர் டொயோட்டாவில் வேலைக்குச் சேர்ந்தார்.

இந்த கொள்கைகளை ஏன் உற்பத்தியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டார்.

கம்பெனியில் முழுச் சுதந்திரம் உண்டே? கம்பெனி கேண்டீனில் இந்த முறையைப் பயன்படுத்தினார். எக்கச்சக்க விரயம் நிறுத்தப்பட்டது. இத்தனை உந்துதல் கொண்ட இளைஞர் வளர்ந்தாக வேண்டுமல்லவா? நாற்பது வருடங்களில் டொயோட்டா கம்பெனியின் தலைவரானார்.

இன்று, டொயோட்டா தயாரிப்பு முறைக் கொள்கை ஜப்பானில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கார் தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, எல்லா வகைத் தொழில்களிலும், அவ்வளவு ஏன், மருத்துவமனைகள் போன்ற சேவையாற்றும் இடங்களிலும்.

எனவே, எம்.பி..ஏ. படிக்கும் மற்றும் படிக்க நினைக்கும் வாசகர்களுக்கு இந்த டி.பி.எஸ். நிச்சயம் உதவும். பிஸினஸ் செய்கிறீர்கள், அவர்கள் பெட்டிக் கடை வைத்திருந்தாலும் டி.பி.எஸ். உதவும். பிஸினஸே நடத்தவில்லை, வேலை பார்க்கிறீர்களா? டி.பி.எஸ். உங்களுக்கு உதவும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - 5 கீ கேள்விகளை கேட்கப் பழகிக்கொள்ளுங்கள்.

(கற்போம்)
படங்கள்: எம்.விஜயகுமார், வி.ராஜேஷ்.