மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
MBA - மூன்றெழுத்து மந்திரம்

தரக் கடவுளான டெமிங்!

##~##
ரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சின்னாபின்னமானது. என்றாலும், சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக அது எழுந்துவரக் காரணமாக இருந்தவர்கள் இருவர். அந்த இருவரும் ஜப்பானியர்கள் அல்ல, அமெரிக்கர்கள்!            

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒருபக்கம்; இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் எதிர்பக்கம். 1939-ல் தொடங்கிய யுத்தம் 1945 வரை நீடித்தது.  

ஆகஸ்ட் 6, 1945, அதிகாலை 8.15 மணி. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலக வரலாற்றின் முதல் அணுகுண்டு வெடிப்பு. நம்பவே முடியாத நாசம். குண்டு வெடித்த பகுதியிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த 90,000 கட்டடங்கள் மண்ணோடு மண்ணாயின. மூன்றில் இரண்டு பகுதி ஹிரோஷிமா அழிந்தது. சுமார் 70,000 பேர் உடனே மரணமடைந்தார்கள். மேலும், 70,000 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல நோய்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்கள். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுக்கு அமெரிக்கா வைத்த சங்கேதப் பெயர் குட்டிப் பையன் (Little Boy).

மூன்று நாட்கள் ஓடின. ஜப்பான் அடிபணியவில்லை. ஆகஸ்ட் 9. காலை மணி 11.02. குண்டுப் பையன் (Fat Boy) என்கிற பெயரில் இன்னொரு அணுகுண்டை நாகசாகி மீது வீசியது அமெரிக்கா. இதனால் 40,000 பேர் உடனே மரணமடைந்தார்கள். 30,000 பேர் கதிர்வீச்சுப் பாதிப்பால் மரணமடைந்தார்கள்.              

ஆகஸ்ட் 15. ஜப்பான் சக்கரவர்த்தி ரேடியோவில் பேசினார், 'என் கண்ணீரை விழுங்கிக்கொண்டு சரணாகதிக்குச் சம்மதிக்கிறேன்.' ஜப்பான், அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாட்டின் பொருளாதாரம், தொழிற்சாலைகள், பிஸினஸ் அத்தனையுமே நொறுங்கிப் போயிருந்தன. சரணாகதிக்குப்பின், பிஸினஸ் மெள்ள மெள்ள முளைக்கத் தொடங்கியது.

ஜப்பானில் மக்கள் தொகை மிக மிகக் குறைவு. உள்ளூர் மார்க்கெட் இயற்கையிலேயே சிறியதாக இருப்பதால், ஜப்பான் தன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை நம்பியிருந்தது. வெளிநாட்டு மார்க்கெட்களைப் பிடிக்க முனைந்த ஜப்பான் குறைந்த விலையில் பொருட்களைத் தயாரித்தது. தரம் இரண்டாம் இடம்தான். இதனால், ஜப்பான் தயாரிப்பு என்றாலே, விலையும் தரமும் குறைந்த சீஃப் சாமான் என்கிற கண்ணோட்டம் உலக அரங்கில் உருவானது.

ஜப்பானை நிர்வகிக்கும் பொறுப்பை ஜெனரல் மெக் ஆர்தர் (MacArthur) வசம் ஒப்படைத்திருந்தது அமெரிக்கா. ஜப்பானின் வளர்ச்சி தொடர்கதையாக வேண்டுமென்றால், உயர்ந்த தரம் என்னும் அடித்தளம் அவசியம் என்று மெக் ஆர்தர் உணர்ந்தார். மக்களிடமும், தொழில் அதிபர்களிடமும் இந்த விழிப்புஉணர்வை உருவாக்க ரேடியோவில் இதுபற்றி அடிக்கடி பேசினார். நாட்டின் தலைவரே நேரடியாக எடுத்த முயற்சியால் தரத்தின் அவசியத்தை மக்கள் மனதில் பதிய வைத்தது.

இதற்காக மெக் ஆர்தர் சிலரை களத்தில் இறக்கினார். அவர்களுள் முக்கியமானவர் ஹோமர் சாராஸோன் (Homer Sarasohn). போரின்போது ஜப்பானின் தொலைதொடர்பு வசதிகளைக் குறிவைத்து அழித்திருந்தது அமெரிக்கா. ஜப்பான் தலைதூக்க இந்த வசதிகளை மீண்டும் எழுப்ப வேண்டும். அப்படி எழுப்பும்போது வெறுமனே ரிப்பேர் வேலை பண்ணாமல் உலகத் தரத்தோடு உருவாக்க வேண்டும். இந்த கனவை நனவாக்க மெக் ஆர்தர் அழைத்து வந்தவர் சாராஸோன்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

சாராஸோனுக்கு அப்போது வயது 29 மட்டுமே. அவரால் சிதிலமாகிப் போன ஜப்பானை மீண்டும் கட்ட முடியுமா என பலரும் நினைத்தனர். மெக் ஆர்தரா கொக்கா? சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருந்தார்.

சாராஸோன் மேஜிக் செய்தார். ரேடியோ, தந்தி, ராடார் துறைகளில் முக்கிய கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்தார். அதன் தலைவர்களாக மகா திறமைசாலிகளைச் சல்லடையிட்டுச் சலித்தார்.  இவர்கள் அனைவருக்கும் தரத்தின் அவசியம் பற்றி பயிற்சி கொடுத்தார். இல்லை, மூளைச் சலவையே செய்தார். உயர்மட்டத்தில் ஊற்றிய இந்த அறிவு நீர் அடிமட்ட ஊழியர் வேர் வரை கசிந்தது. தரம் இந்த கம்பெனிகளின் தாரக மந்திரமானது.

ஆனால், ஜப்பான் உற்பத்தி செய்த இப்பொருட்களின் தரம் மட்டும் உயர்ந்தால் போதுமா? நாட்டின் அத்தனை தொழிற்சாலைகளும் தர மந்திரத்தை உச்சரிக்க வேண்டாமோ? இந்த அறிவுப் பரப்பலுக்கு சாராஸோன் ஒரு உலக மேதையைத் தயாராக வைத்திருந்தார். அவர் எட்வர்ட்ஸ் டெமிங் (Edwards Deming).

1950-ல் சாராஸோன், டெமிங்கை ஜப்பானில் ஒரு கருத்தரங்கு நடத்துமாறு அழைத்தார். அதில் அவர் பேசிய பேச்சு சூப்பர் டூப்பர் ஹிட். டெமிங் ஜப்பானின் தரக் கடவுளானார். அவரது கொள்கைகளை Union of Japanese Scientists and Engineers (JUSE)என்கிற முன்னணி அமைப்பு 30 நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தி நாடெங்கும் பரவ வைத்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் 20,000 அறிவியல் வல்லுநர்களும்,     விஞ்ஞானிகளும் டெமிங் கொள்கையில் தேர்ச்சி பெற்றார்கள். ஜப்பானுக்கு என்ன தேவையோ, அதைத் தருகிற தேவதூதன் ஆனார் டெமிங்.

ஏன் படிக்கிறேன் எம்.பி.ஏ.?

ஸ்வேதா, எம்.பி.ஏ.
முதலாமாண்டு மாணவி,

பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

''நான் எம்.பி.ஏ. சேர்ந்து மூன்று மாதம்தான் ஆகிறது. இருந்தாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைக்கிறது. என் அப்பா பிஸினஸ் செய்கிறார். அவரது பிஸினஸை நானும் பார்க்க வேண்டும் என்றால் எம்.பி.ஏ. படித்திருப்பது அவசியம்.  இதன் மூலம் எப்படி நிர்வாகம் செய்வது, ஊழியர்களை எப்படி வேலை வாங்குவது, மேலும் புதுமையான விஷயங்களை எப்படி நிர்வாகத்துக்குள் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை நான் கற்றுக்கொள்கிறேன். இரண்டாம் ஆண்டில் நிதி மேலாண்மை எடுக்கலாம் என்றிருக்கிறேன்.''    

குவாலிட்டி மேனேஜ்மென்ட் என்கிற தர நிர்வாகத்தின் வரலாற்றுக்கு  நான்கு காலகட்டம். 1. பரிசோதனைக் ( Inspection) காலம், 2. தரக் கட்டுப்பாடு (Quality Control) காலம், 3. தர உறுதிப்படுத்துதல் (Quality Assurance)  காலம், 4. முழு தர மேலாண்மை (Total Quality Management) காலம்.

அமெரிக்கா போன்ற நிர்வாகத் துறையில் முன்னணியில் நிற்கும் நாடுகள்கூட முதல் மூன்று நிலைகளைக் கடந்திருக்க, ஜப்பானோ, முழு தர மேலாண்மை என்கிற உச்சத்தைத் தொட்டுவிட்டது.

முழு தர மேலாண்மை பிற நிலைகளைவிட ஏன் மேலானது? முதல் மூன்று நிலைகளிலும் தரக் கட்டுப்பாடு தரப் பரிசோதனையாளர்கள் அல்லது உற்பத்தி நிர்வாகிகளின் பொறுப்பு. ஆனால், முழு தர மேலாண்மையில் தரம் என்பது முதலாளி தொடங்கி காபி, டீ வாங்கிவரும் ஆபீஸ் பையன் வரை அத்தனை ஊழியர்கள் மனதிலும் தவிர்க்க முடியாத விஷயமாகப் பதியப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஊழியரிடமும் தர உணர்வு, முயற்சி எடுக்காமல் அனிச்சைச் செயலாக வருகிறது.

முழு தர மேலாண்மையை கம்பெனிகளில் நிறைவேற்றுவது எப்படி? இதற்காக டெமிங் 14 கட்டளைகள் வகுத்தார். (பார்க்க பெட்டிச் செய்தியில்!) இந்த பதினான்கு கட்டளைகள் முகேஷ் அம்பானி முதல் மூலக்கடை முத்து வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய வேதபாடம். நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், ஜப்பானைப் போல் ஜெயித்துக் காட்டுவீர்கள்!

(கற்போம்)
படங்கள்: வி.ராஜேஷ், ரா.நரேந்திரன்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1. நமது தயாரிப்புகள்/சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது, போட்டியில் முன்நிற்பது, தொழிலில் நீடிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களிலிருந்து நாம் எப்போதும் விலகக்கூடாது.

2. இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட காலதாமதம், தவறுகள், குறைபாடான பொருட்கள், வேலைத்திறன் ஆகியவற்றை இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  

3. தரம் தயாரிப்பின் அங்கமாகட்டும்.

4. வாங்கும் மூலப் பொருட்களின் தரத்தை உயர்த்துவோம். விலையை மட்டும் அடிப்படையாக வைத்து மூலப் பொருட்கள் வாங்குவதை நிறுத்துவோம். விலை, தரம் ஆகிய இரண்டும் பொருட்கள் வாங்கும் அளவுகோல்கள் ஆகட்டும்.

5. பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடிப்போம். பொருட்கள்/சேவைகளின் தரத்தை தொடர்ந்து முன்னேற்றுவோம். விரயம் தொடர்ந்து குறைய வேண்டும்; ஒவ்வொரு செயல்பாட்டிலும் இவை வெளிப்பட்டு, உற்பத்தித் திறன் உயர்ந்து செலவுகள் குறைய வேண்டும்.

6. எல்லோருக்கும் பயிற்சி அவசியம். பயிற்சிக்கு நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் தன் வேலையைச் செம்மையாகச் செய்வதற்கான பயிற்சி தரப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கவேண்டும்.

7. நவீன மேற்பார்வை முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலதிகாரியின் கடமை, அவர் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் தம் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவுவது. தரம் உயர்ந்தால், உற்பத்தித் திறன் உயரும். மேலதிகாரிகள் சுட்டிக் காட்டும் குறைகள், இயந்திரச் சீர்கேடு, தவறான உபகரணங்கள், தவறான உற்பத்தி முறைகள் ஆகியவற்றில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. பயம், முன்னேற்றத்தின் முக்கிய எதிரி. தொழிலாளிகளும் அதிகாரிகளும் சுமூகமாகப் பழகுவதன் மூலம் பயத்தை ஒழிக்கலாம். நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் மாற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்.

9. கம்பெனியின் பற்பல துறைகளுக்குள்ளும் இருக்கும் பிரிவினைச் சுவர்களை அகற்ற வேண்டும். தயாரிப்புப் பொருட்கள்/சேவைகள் ஆகியவை தொடர்பான பிரச்னைகளை ஆராய்ச்சி, டிசைன், நிர்வாகம், உற்பத்தி ஆகிய எல்லாத் துறைகளும் ஓர் அணியாகத் தோளோடு தோள் கொடுத்து எதிர் மோத வேண்டும்.

10. தர உயர்வைச் செயல்படுத்தவும், விரயங்களைத் தடுக்கவும் தக்க முறைகளைத் தொழிலாளிகளுக்குக் கற்றுத் தரவேண்டும், இதைச் செய்யாமல், வெறும் கோஷங்கள், போஸ்டர்கள், வார்த்தை ஜாலங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவது பயனற்ற வேலை.  

11. இலக்குகளை எண்ணிக்கைகளில் மட்டுமே வைப்பது பலன் தராது. தலைமைப் பண்புகளை வளர்க்க வேண்டும்.    

12. ஒவ்வொரு தொழிலாளியும், அதிகாரியும் தங்கள் வேலை குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

13. பயிற்சியால் எல்லோரும் சுய முன்னேற்றம் பெறச் செய்ய வேண்டும். எல்லா நிறுவனங்களுக்கும் நல்ல ஊழியர்கள் இருந்தால் மட்டும் போதாது, இவர்கள் பயிற்சியால் தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

14. தரத்தைத் தொடர்ந்து உயர வைக்கும் நடவடிக்கைகளில் நிர்வாகத் தலைமை முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்