நாணயம் ஜாப்: வேலையில் மன அழுத்தம்... இனி இல்லை டென்ஷன்..!

இன்றைய பரபரப்பான டென்ஷன் மிகுந்த வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. நாம் பணிபுரியும் இடத்தில் சுமூகமான சூழல் இருந்தாலே பெரும்பாலும் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். ஒருவருக்கு வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் பணியிடம் அமைந்துவிட்டால் போதும், ஒட்டுமொத்த வாழ்க்கையே இன்பமயமாக இருக்கும். ஆனால், எல்லோருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. மனஅழுத்தமே பணியில் தொய்வை உண்டாக்கி, தவறுகள் ஏற்படவும் காரணமாக அமைந்துவிடுவதோடு, வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடியாதபடிக்குச் செய்துவிடுகிறது. பணியில் உற்சாகத்தைக் குறைத்துவிடக்கூடிய இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி என்று விளக்கமாகச் சொல்கிறார் விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் கணேஷ்.

''மன அழுத்தத்துக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வேலைப் பளுதான் முக்கியமான முதல் காரணம். வேலைப் பளுவைத் தவிர்க்க முடியாதபட்சத்தில் சரியான திட்டமிடலே மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி. உங்களின் வேலை என்ன, அதை எப்போது முடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப வியூகம் வகுத்தாலே போதும். எதற்கு முன்னுரிமைக் கொடுத்து முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகளை பக்காவாக வரிசைப்படுத்தப் பழகிக்கொண்டாலே பாதி சுமை குறைந்துவிடும்.
ஒவ்வொரு வாரமும் முதல் வேலை நாள் அன்றே அந்த வாரத்துக்கு உங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலை என்ன, அதை எப்படி நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்பதைத் தெளிவாக வரையறை செய்துகொள்ளுங்கள். கூடவே, அந்த வாரத்தில் எதிர்பாராமல் நடக்கலாம் என கணிக்கப்பட்ட செயல்பாடுகள், பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் முன்கூட்டியே யோசித்து தயாராக இருக்க வேண்டும். ஸ்பெஷலாக ஏதாவது புதிய பணிகள் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கும் நேரம் ஒதுக்கிவிட வேண்டும்.
##~## |
பெரும்பாலான அலுவலகங்களில் குழுவாக வேலை பார்ப்பதுதான் வழக்கம். நீங்கள் வேலையை முழுமையாக முடிக்காதபோது அது மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பாதிக்கும். இதன் விளைவாக அவர்களின் பார்வையும், மேலதிகாரிகளின் கடுமையும் உங்களை காயப்படுத்தும். இதனால், மேற்கொண்டு சரியாக உங்களை இயங்கவிடாமல் மனம் தடுமாறும்.
நீங்கள் விடுப்பு எடுக்கும் நாட்களை முன்கூட்டியே அலுவலகத்தில் தெரிவித்துவிடுங்கள். விடுப்பு நாட்களில் நீங்கள் அவசியம் அருகில் இருந்து முடிக்க வேண்டிய வேலைகள் ஏதுமிருந்தால் அதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். அல்லது உங்களுக்கான வேலைகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட வாய்ப்புண்டு. இந்த பழக்கம் விடுப்பை டென்ஷன் இல்லாமல் பயன்படுத்திக்கொள்வதோடு, அலுவலகங்களில் இருந்துவரும் தொடர் அழைப்பிலிருந்து விடுபடவும் வழிவகுக்கும்.

அலுவலக வேலையை அலுவலகத்திலேயே செய்து முடிக்காமல், சிலர் வீட்டுக்கு எடுத்துச்சென்று முடிப்பார்கள். இது தவறு. இதனால் உங்கள் குடும்பச் சூழலும் பாதிக்கும்; எப்போதுமே வேலை செய்துக்கொண்டிருக்கும் ஃபீலிங் உருவாகி, வேலையில் அலுப்பும் தட்டிவிடும்.
சில வேலைகள் வருடத்தின் எல்லா நாட்களிலும் செய்கிற மாதிரி இருக்கும். அப்படிப்பட்ட வேலையில் சேரும் முன்பு, அந்த வேலை உங்களுக்குச் சரிவருமா என்பதை நன்கு யோசித்து சேருவதே நல்லது. அந்த மாதிரியான துறைகளில் விடுப்பு என்பதை எதிர்பார்க்கவே முடியாது. இந்த சூழலை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமும் தெளிவாகச் சொல்லி புரிய வைத்துவிடுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
வேலைக்குச் சேரும்போது கொடுக்கும் பயிற்சியில் முழுமையாக அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். வேலை சார்ந்த விஷயங்கள் தெளிவாகத் தெரிந்தால்தான் உங்களின் வேலையை எளிதாக முடிக்க முடியும். செய்யும் வேலையில் தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தவறுகள் அதிகமானால் வேலையை சிறப்பாகச் செய்ய மனம் ஒத்துழைக்காது. இதனால், வேலையில் தேக்கம் ஏற்பட்டு மனச்சுமையை உண்டாக்கிவிடும்.
வேலையில் பணியாளர்களிடம் ஏற்படும் சுமையை குழு தலைவர்கள் நினைத்தால் குறைக்க முடியும். யாருக்கு எந்த வேலையில் அனுபவமும், தெளிவும் அதிகம் என்பதை அறிந்து, வேலையைப் பகிர்ந்து தருவதால் வேலையும் எளிதாக முடியும்; மன அழுத்தத்தையும் ஓரளவுக்குக் குறைக்கலாம். பிடித்த வேலையோ, பிடிக்காத வேலையோ ரசித்து செய்ய பழகுங்கள். இப்படி ரசித்து செய்யும்போது வேலையிலும் கஷ்டம் தெரியாது; மனமும் இலகுவாக இருக்கும்.''
நிபுணர் சொன்ன யோசனைகளைப் பின்பற்றினால் இனி இல்லை டென்ஷன்!
- இரா.ரூபாவதி,
படம். த.ரூபேந்தர்.